Thursday, July 12, 2012

ரத்தத்தில் இருந்து நோயகற்ற புதிய வழி!

ரத்தத்தில் இருந்து நோயகற்ற புதிய வழி!

நமது உடலின் ரத்தத்தில் இருந்து தீங்கு செய்யும் மூலக்கூறுகளை ஈர்த்து அகற்றக்கூடிய காந்தப்புலம் வாய்ந்த நுண்ணிய துகள்களை (நானோ பார்ட்டிக்கிள்கள்) விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கின்றனர்.
இவற்றின் பிரம்மாக்களான சுவிட்சர்லாந்து ஜூரிச் நகர ஆராய்ச்சியாளர்கள், ரத்தத்தைச் சுத்தப்படுத்த இது ஒரு நல்ல வழியாக இருக்கும் என்கிறார்கள். நச்சுப் பாதிப்பு, ரத்த ஓட்டத் தொற்று மற்றும் சில குறிப்பிட்ட வகை புற்றுநோய் களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் மிகவும் கைகொடுக்கும் என்பது இவர் களது கருத்து.
இந்த `நானோ பார்ட்டிக்கிள்கள்', கார்பன் பூச்சு செய்யப்பட்டு, ரத்தத்தில் இருந்து அகற்றவேண்டிய பொருட்களுக்கு ஏற்ற `ஆன்டிபாடிகள்' சேர்க்கப்பட்டதாக இருக்கின்றன. இந்த நுண்ணிய காந்தங்களை ரத்த ஓட்டத்தில் செலுத்தி, பின்னர் டயாலிசிஸ் செய்வதன் மூலம் இன்டர்லியூகின்ஸ் போன்ற தீங்கு தரும் புரதங்கள், காரீயம் போன்ற அபாயகரமான உலோகங்களை அகற்றலாம் என்கிறார்கள்.
``ரத்தத்தில் குறிவைக்கப்பட்ட பொருட்களை இந்த நானோ மேக்னட் ஈர்க்கும், பின்னர் அவை மறுபடி ரத்த ஓட்டத்தில் சுழலாமல் ஒரு செப்பரேட்டர் தடுக்கும்'' என்று இந்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் ஜூரிச் பல்கலைக்கழக வேதிப் பொறியாளர் இங்கே ஹெர்மான் கூறுகிறார்.
இதய நோய்க்குக் கொடுக்கப்படும் மருந்து, `டிகோக்ஸின்'. இதன் அளவு அதிகமானால் மரணத்தை ஏற்படுத்தும். இந்த மருந்தை, மேற்கண்ட நானோ பார்ட்டிக்கிள்கள் ஒரே சுற்றில் 75 சதவீதம் அகற்றியுள்ளன. சுமார் ஒன்றரை மணி நேரம் பயன்படுத்திய பிறகு 90 சதவீதம் அகற்றியிருக்கின்றன.
இந்த நுண்ணிய துணுக்குகள் உடம்புக்கும் வேறு தீமை பயக்காது,
ரத்தத்தின் பிற பணிகளிலும் குறுக்கிடாது என்று விஞ்ஞானிகள் உறுதியளிக்கின்றனர்.

No comments: