Saturday, July 21, 2012

எள்

தரமான எள் விதை உற்பத்தி முறைகள்
விதை நிலம் தயாரிப்பு
    
விதை நன்கு முளைக்க, பயிர் வீரியமாக வளர, இடப்படும் உரங்களை சரியான முறையில் பயிருக்குக்கொடுக்க, மற்றும் மண் ஈரம் காத்து பயிருக்கு அளித்திட நல்ல வளமான நிலம் தேர்வு செய்தல் மிக முக்கியமாகும். வண்டல் கலந்த செம்மண் மற்றும் கரிசல் மண் போன்ற நில வகைகள் விதை உற்பத்திக்கு உகந்ததாகும்.

மண்ணின் தன்மைக்கேற்ப பக்குவமான ஈரப்பதத்தில் நிலத்தை உழவு செய்து மண்ணை பட்டுமெத்தை போல் ஆக்கிவிடவேண்டும். எள்ளிற்கு ஏழுழவு என்பதை மறந்துவிடலாமா?
விதைப்புப் பருவம்
எள் பயிரின் வளர்ச்சியும் காய்பிடிப்புத்திறனும் தட்ப வெட்ப நிலைக்கும் சூரிய வெளிச்சத்திற்கு ஏற்ப பருவத்திற்கு பருவம் மாறுபடும். பூக்கும் தருணத்தில் பெரு மழை பெய்தால் பூப்பதில் பாதிப்பு ஏற்பட்டு மகசூல் குறையும். இளம் பருவத்தில் அதிக மழையினால் வளர்ச்சி குன்றும். தொடர்ச்சியான மேகமூட்டமும் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தால் காய்களின் பூச்சி தாக்குதல் அதிகமாகும். எனவே, தக்க பருவத்தில் பயிர் செய்தல் வேண்டும்.

எள்ளைப் பெரும்பாலும் மானாவாரியாகப் பயிரிட்டாலும் விதை உற்பத்திக்காக இறவைப் பயிராக விளைவிப்பதன் மூலம் நல்ல பயனைப் பெறலாம். விதை உற்பத்திக்கு உகந்த பட்டம் ஜனவரி - பிப்பரவரி மற்றும் மே-ஜ¤ன் மாதங்கள் ஆகும்.
பயிர் விலகு தூரம்

எள் பெரும்பாலும் தன் மகரந்தச் சேர்க்கை கொண்ட பயிராகும். விதைக்கெனப் பயிரிடப்படும் நிலம் முன் பருவத்தில் எள் பயிரிடப்படாததாகவும் தன்னிச்சையாக வளரும் எள் பயிரினங்கள் இல்லாததாகவும் இருக்க வேண்டும். மற்ற எள் இரகங்கள் பயிரிடப்படும் நிலங்களிலிருந்து சான்று விதை உற்பத்திக்கு 50 மீட்டரும் ஆதார விதை உற்பத்திக்கு 100 மீட்டர் தூரமும் தனித்து இருக்க வேண்டும். பூச்சிகளின் நடமாட்டம் அதிக அளவில் இருக்குமிடங்களில் விதை உற்பத்தியை தவிர்க்க வேண்டும். அயல் மகரந்தச் சேர்க்கைக்கு ஏதுவாகும் என்பதனால் இந்த தவிர்ப்பு முக்கியமானதாகிறது.
தான்தோன்றி பயிர்கள் என்றால் என்ன?
                               
வயலில் உள்ள மண்களில் கலந்துள்ள விதைகளிலிருந்து முளைக்கும் பயிர்களே தான்தோன்றி பயிர்களாகும். இவ்விதைகள் முந்தைய கால பருவ பயிர்களில் இருந்து கீழே விழுந்தவை ஆகும். விதைக்காமல் தானகவே முளைத்து வளரக்கூடியவை என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது.
விதை அளவு

அனைத்து இரகங்களுக்கும் ஏக்கருக்கு 2 கிலோ விதை போதுமானது.
விதை நேர்த்தி

எள் விதைப்புக்கு முன்பு விதை நேர்த்தி செய்து விதைத்திட வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் விதை நன்கு விளைந்த, திரட்சியான, பூச்சி நோய் தாக்காத, கலவன் இல்லாத விதையாக இருக்க வேண்டும்.
பூஞ்சாண விதை நேர்த்தி
  • விதையால் பரவும் நோயை தடுக்கவும் மண்மூலம் பரவும் நோயைக் கட்டுப்படுத்தவும் விதை நேர்த்தி மிக அவசியம்.
  • ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டைசிம் மருந்து அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி உலர் பூசணத்தை நன்கு கலக்க வேண்டும்.

  • விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
நுண்ணுயிர் விதை நேர்த்தி
  • விதையில் பூஞ்சாண மருந்து விதை நேர்த்தி செய்த பின்னர் அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • நுண்ணுயிர் நேர்த்தி செய்வதன் மூலம் பயிர்களுக்கு இயற்கையாகவே தழைச் சத்து கிடைக்க வழி ஏற்படுகிறது.
  • ஒரு ஏக்கருக்கு ஒரு பொட்டலம் அசோஸ்பைரில்லம், ஒரு பொட்டலம் பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றை ஆறிய ஆடை நீக்கிய கஞ்சி 500 மில்லியுடன் கலந்து கூழாக்கி பின்பு அதனை 2 கிலோ விதையுடன் கலக்க வேண்டும்.
  • நுண்ணுயிர் விதை நேர்த்தி செய்த விதையை நிழலில் உலர வைத்து பின் விதைக்க வேண்டும்.
  • நுண்ணுயிர் கலந்த 24 மணி நேரத்திற்குள் விதைப்பு செய்ய வேண்டும்.
உர அளவு

நிலத்தை நன்கு உழுது பண்படுத்திய பின்பு ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழு உரம் இடவேண்டும். விதைப்பதற்கு ஒரு வாரம் முன்பாகவே தொழு உரம் இட்டு உழவு செய்திட வேண்டும். கடைசி உழவில் 20:10:10 கிலோ ஏக்கருக்கு என்ற விகிதத்தில் தழை, மணி, சாம்பல் சத்து அடங்கிய கீழ்கண்ட இரசாயன உரத்தை அடியுரமாக இட வேண்டும்.
தழை மணி சாம்பல்
20 10 10
யூரியா சூப்பர் பாஸ்பேட் பொட்டாஷ்
44 கிலோ 60 கிலோ 16 கிலோ
மேற்கூறிய அடி உரத்துடன் மாங்கனீசு சல்பேட் 2 கிலோ கலந்து போட்டால் எள்ளில் அதிக மகசூல் கிடைக்கும்.
இலைவழி உரம்

அதிக திரட்சியான காய்கள் மற்றும் கூடுதல் மகசூல் பெற டிஏபி தெளிக்க வேண்டும். 2.5 கிலோ டிஏபியை 15 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் வடித்து தெளிந்த கரைசலை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரங்களில் கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.
உங்கள் கவனத்திற்கு    
பூ பூக்கும் தருணத்தில் ஒரு முறையும் 10 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை தெளிக்க வேண்டும்.
விதைப்பு

எள் விதையை மணலுடன் கலந்து சீராக தூவ வேண்டும். வரிசை விதைப்பு மேற்கொள்வது சிறந்தது. ஏறக்குறைய 3 செ.மீ ஆழத்திற்கு அதிகமாக விதை செல்லாமல் விதைக்க வேண்டும்.
இடைவெளி

வரிசைக்கு வரிசை ஒரு அடியும் செடிக்குச் செடி ஒரு அடி இடைவெளி இருக்குமாறும் பார்த்துக்கொள்ள வேண்டும். சதுரமீட்டர் பரப்பளவில் 11 செடிகள் இருக்க வேண்டும்.
செடி களைத்தல்

விதைத்த 15 நாளில் செடிகளை களைத்து நல்ல வீரியமான செடியைவிட்டு மற்ற செடிகளை பிடுங்கி விட வேண்டும். செடிகளை களைக்கும் போது வயலில் ஈரம் இருக்க வேண்டும். எள் பயிரில் பயிர் களைத்தல் ஒரு முக்கிய பணியாகும்.
நீர் நிர்வாகம்

விதைகள் விதைத்த உடனும் பிறகு மூன்று நாட்கள் கழித்து உயிர்த் தண்ணீரும் பாய்ச்ச வேண்டும். பின்பு 10 முதல் 15 நாட்கள் இடைவெளியில் நிலத்தின் ஈரத்தன்மையைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். செடிகள் பூத்து காய்கள் பிடித்து வரும் தருணத்தில் முக்கியமாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
களை நிர்வாகம்

விதை உற்பத்தியில் களை கட்டுப்பாடு மிகவும் முக்கியம். விதைப்பு செய்து 15 மற்றும் 30வது நாட்களில் களை எடுத்து மண்ணை கொத்திவிட வேண்டும் . விதைத்த 20வது நாளில் ஒரு ஏக்கருக்கு 500 மில்லி அளகுளோர் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத் தெளிப்பான் கொண்டு மாலை வேளையில் மண்மீது தெளிக்க வேண்டும். உடனடியாக நீர் பாய்ச்ச வேண்டும்.
கலவன்கள் அகற்றுதல்
     
செடிகள் வளர்ந்து வரும் பொழுதும், பூத்து காய்கள் பிடித்து முதிர்ச்சி அடைந்து வரும் பருவத்திலும் காய்கள் முதிர்ச்சி அடைந்த பின்பும் இனக்கலப்பும் களையினக் கலப்பும் இல்லாமலிருக்க ஆய்வு செய்து அவற்றை நீக்கிவேண்டும்.
கலவன் என்றால் என்ன?

பயிர் இரகத்தின் தன்மைகளிலிருந்து மாறுபட்டு இருக்கும் செடிகள் (அ) விதைகள் கலவன் என்று அழைக்கப்படுகின்றது. வீரியங்குன்றிய செடிகள் மற்றும் அதிக உயரமான மற்றும் களைச் செடிகளையும் வேறுடன் களைந்தெரிய வேண்டும். பூக்க ஆரம்பிக்கும் தருவாயிலும், காய்கள் பிடித்து முற்றி வரும் தருவாயிலும் செடிகளைக் கூர்ந்து கவனித்து விதைக்கென பயிரிடப்பட்டிருக்கும் அவற்றின் தண்டு, இலை, பூ ஆகியவற்றின் நிறம் வடிவம் ஆகியவற்றைக் கொண்டு நன்கு தெரிந்து அகற்ற வேண்டும்.

தரமான விதை உற்பத்தியில் கலவன்களை அகற்றுதல் மிக முக்கியமான பணி ஆகும்.எனவே, தக்க தருணத்தில் கலவன்கள் அகற்றி இனக்கலப்பற்ற தரமான விதைகளை உற்பத்தி செய்தல் வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
பூச்சிகள்
கொண்டைப்புழு

இப்புழுக்கள் இலைகள் ஒன்றோடு ஒன்றாக பிணைந்து கொண்டு அதனுள் இருந்து கொண்டு பூ, இளம் காய்கள் மற்றும் குருத்துக்களை உண்ணுகின்றன. இதனைக் கட்டுப்படுத்த விதைத்த 25, 35 மற்றும் 50 வது நாட்களில் கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதாவது ஒன்றை தெளித்து இப்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

எண்டோசல்பான் 35 இசி ஒரு ஏக்கருக்கு 400 மில்லி (அல்லது) பாசலோன் 35 இசி 400 மில்லி (அல்லது) குயினல்பாஸ் 25 இசி 400 மில்லி தெளிக்க வேண்டும்.
சாறு உறிஞ்சும் பூச்சிகள்
     
அசுவினி, தத்துப்பூச்சி ஆகியவை பயிரின் சாறை உறிஞ்சி செடிகளைப் பாதிக்கின்றன. இவற்றை ஒரு ஏக்கருக்கு டைமெத்தோயெட் 300 மில்லி அல்லது மிதைல்டெமட்டான் 250 மில்லி தெளித்து கட்டுப்படுத்தலாம்.
காய்துளைப்பான்
அறுவடை சமயத்தில் இது அதிக சேதம் உண்டாக்குகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த எண்டோசல்பான் 4 சதத்தூள் ஒரு ஏக்கருக்கு 10 கிலோ என்ற விகிதத்தில் அறுவடைக்கு 10 -15 நாட்களுக்கு முன் செடிகள் மீது தூவவும் (அல்லது) குனைல்பாஸ் 25 இசி 400 மில்லி (அல்லது) எண்டோசல்பான் 35 இசி 400 மில்லி தெளிக்கலாம். முக்கியமாக அறுவடை செய்து காய்களை போர் வைக்கும் போது போருக்கு அடியில் எண்டோசல்பான் 4 சதத்தூள் தூவி பிறகு குவிய விடவும்.
நோய்கள்
இலைப்புள்ளி நோய்

இந்நோய் தாக்கிய செடிகளின் இலைகளின் மேற்பரப்பில் கரும்பழுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும். இப்புள்ளிகள் இணைந்து பிறகு இலைகள் காய்ந்து விடுகின்றன. இதனைத்தடுக்க ஒரு ஏக்கருக்கு பெவிஸ்டின் 100 கிராம் என்ற அளவில் 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும். அதாவது 1 லிட்டர் தண்ணீருக்கு 1/2 கிராம் என்ற அளவில் கரைத்து தெளிப்பு நீர் தயார் செய்ய வேண்டும் (அல்லது) மான்கோசெப் ஒரு ஏக்கருக்கு 400 கிராம் என்ற அளவில் (ஒரு லிட்டருக்கு 2 கிராம் மருந்து) தெளிக்கலாம்.
சாம்பல் நோய்

இலைகளின் மேல்புறத்தில் வெளிறிய, சாம்பல் நிற பூஞ்சாண வளர்ச்சியைக் காணலாம். இந்நோய் தாக்கிய செடியின் இலைகள் சிறுத்து, சுருண்டு கீழே விழுந்து விடுகின்றன. இதனைக் கட்டுப்படுத்த நனையும் கந்தகம் 1 ஏக்கருக்கு 1 கிலோ என்ற அளவில் (1 லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம்) செடியின் மீது நனையும்படி தெளிக்கவும்.
பூவிலை நோய்
இந்நோய் தாக்கிய செடியின் பூவின் பாகங்கள் இலைக்கொத்து போல காணப்படும். இது ஒரு வகை (நச்சுயிரி) வைரஸினால் ஏற்படுகிறது.

பூவிலை தாக்கிய செடிகளை பிடுங்கி எரித்துவிட வேண்டும். தத்துப்பூச்சிகள் மூலம் இந்நோய் பரவுகிறது. மானோகுரோட்டோபாஸ் ஒரு ஏக்கருக்கு 300 மில்லி என்ற அளவில் தெளித்து இந்நோய் பரவுதலை தடுக்கலாம்.
அறுவடை மற்றும் சேமிப்பு
அறுவடை

தரமான உற்பத்திக்கு சரியான தருணத்தில் பயிரை அறுவடை செய்வது மிக முக்கியமானதாகும். அறுவடை இரகத்தின் வயதைப் பொருத்து அமையும். செடிகள் அறுவடைக்கு வரும் தருணத்தில் இலைகள் உதிர்ந்து பெரும்பான்மையான காய்கள் (75-80 சதம்) நிறம் மாறி மஞ்சள் நிறமாகத் தோன்றும். தண்டும் பழுப்பு நிறமாகக் காணப்படும். இத்தருணத்தில் முதலில் காய்த்த செடிகளின் கீழ் பாகத்திலுள்ள காய்களில் ஒன்றிரண்டு வெடித்து காணப்படும். மேலும் விதைகள் சாக்லெட் பிரவுன் கலரில் இருக்கும். இத்தருணத்தில் காய்களின் ஈரப்பதம் 40-50 சதம் இருக்கலாம். விதைகள் 25-30 சத ஈரப்பதத்தில் இருக்கும்.

அடிப்பகுதி பழுப்படைவதற்கு முன்பு அறுவடை செய்துவிட வேண்டும். இல்லாவிட்டால் காய்கள் அறுவடையின்போது நிலத்தில் உதிர்ந்துவிடும். உரிய காலத்தில் அறுவடை செய்யாவிட்டால் காய்கள் வெடித்து சிதறி மகசூல் மிகவும் பாதிக்கும்.
விதைகளைப் பிரித்தெடுத்தல்

அறுவடை செய்யப்பட்ட செடிகளை சுத்தமான களங்களில் முன்பகுதி உள்பக்கமாகவும் வேர்பகுதி வெளிப்பாகமாகவும் உள்ளவாறு வட்டவடிவங்களில் செங்குத்தாக நிறுத்தி வெய்யிலில் காய வைக்க வேண்டும். செடிகள் உலர உலர காய்கள் வெடித்து விதைகள் கீழே உதிரும். உதிர்ந்தது போக மீதி உள்ள காய்களை சிறிய மூங்கில் தப்பைகளின் மூலம் காய்ந்த செடிகளை லேசாக அடித்து விதைகளைப் பிரித்தெடுக்கலாம்.
விதை சுத்திகரிப்பு

இவ்வாறு பிரித்தெடுத்த விதைகளை நன்கு உலரவைத்து காற்றில் துற்றியோ அல்லது காற்று துருத்தி பொறுத்தப்பட்ட தூற்றும் இயந்திரத்தைக் கொண்டு பதர் நீக்கிச் சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்த விதைகளை 14X14 சதுரக் கண்கள் கொண்ட சல்லடையையோ அல்லது 4/64 அங்குல (1.6 மி.மி.) விட்டமுள்ள வட்டக்கண்கள் கொண்ட சல்லடையையோ உபயோகித்து விதைத் தரம் உயர்த்த வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட விதைகளை நன்கு காயவைத்து (6-7 சத ஈர அடக்கம் வரை) பிறகு சேமிக்க வேண்டும்.
விதை சேமிப்பு

ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் காப்டான் அல்லது திராம் 75 சதம் நனையும் தூளை 5 மில்லி தண்ணீருடன் சேர்த்து நன்கு கலந்து புதிய காடா துணிப்பைகளில் அடைத்து சுமார் 9 மாதங்கள் வரை முளைப்புத்திறன் அதிகம் பாதிக்கப்படாமல் சேமித்து வைக்கலாம். மேற்படி விதைகளை ஈரம்-நீராவி புகாத பாலிதீன் பைகள், தகரம், அலுமினியம், பிளாஸ்டிக் அடைப்பான்களில் சேமித்து வைத்தால் ஓராண்டு காலத்திற்கு மேல் சேமிக்கலாம்.
இடைக்கால விதை நேர்த்தி

உங்கள் தேவைக்கென சேமித்து வைத்திருக்கும் குறைந்த அளவு விதைகளை 5 மாத கால சேமிப்புக்குப் பின் “ஊறவைத்து உலர வைக்கும் முறை” மூலம் விதை நேர்த்தி செய்யுங்கள். இதற்கு டை-சோடியம் பாஸ்பேட் என்ற இரசாயன மருந்தை 100 லிட்டர் நீருக்கு 3.6 கிராம் என்ற விகிதத்தில் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த கரைசலில் (ஒரு பங்கு விதைக்கு இரு பங்கு கரைசல்) விதைகளை 2 மணி நேரம் ஊற வைத்து பின்பு விதைகளை பழைய ஈரப்பதத்திற்கு காய வைத்து விடுங்கள். இவ்வாறு செய்வதால் விதைகளின் சேமிப்புத்திறன் அதிகமாகிறது.
விதைச் சான்றளிப்பு

பாரம்பரியத்தூய்மையில் இருந்து சிறிதும் குறையாததும், பிற இனக் கலப்பு இன்றி, தூசு துப்பு இன்றி அதிக சுத்தத்தன்மை உடையதும், அதிக முளைப்புத்திறனும் வீரியமும், மற்றும் நோய் தாக்காத விதைகளையே நாம் தரமான விதைகள் என்று சொல்கிறோம்.

விவசாயிகளுக்கு விதையின் இனத்தூய்மை பற்றியும் விதைத் தரம் பற்றியும் உத்திரவாதம் அளிப்பதே விதைச் சான்றளிப்பு ஆகும். விதை உற்பத்திக்கு தரக்கட்டுப்பாட்டுக்கென்று சட்ட பூர்வமாக ஏற்படுத்தப்பட்ட முறையே விதை சான்றளிப்பு ஆகும். இதை “தரமான விதை விநியோகிப்பின் பாதுகாவலன்” என்று கூடச் சொல்லலாம். மிக உன்னதமான பயிர் இரகங்களின் விதைகளை மிகுந்த இனத்தூய்மையும், அதிக சுத்தத்தன்மையும், மிகுந்த முளைப்புத் திறனும் உள்ள விதைகளாக விவசாயிகளுக்குக் கிடைக்கச் செய்வதே விதைச் சான்றளிப்பின் முக்கிய நோக்கம் ஆகும்.

விதைச் சான்று பல்வேறு நிலைகளில் செய்யப்படுகின்றது. விதைப்புக்கு உபயோகிக்கும் விதைகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து வாங்கப்பட்டுள்ளதா என்பது முதல், விதைப் பயிருக்கு உரிய தனிமைப்படுத்தும் தூரம், பயிர் வளர்ச்சிப் பருவம், பூக்கும் தருணம், அறுவடை சமயம், விதைச் சுத்திகரிப்பு, மூட்டை பிடித்தல் முதலியவை சரியாக உள்ளனவா என்பன வரையும் ஆய்வு செய்யப்படுகிறது. மேலும் விதைகளை முளைப்புச் சோதனைக்கு அனுப்பி சோதனை முடிவுகளைக் கொண்டு சான்று அட்டைகள் வழங்கப்படுகின்றன. இவ்விதமாக விதை உற்பத்தியின் பல்வேறு நிலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

ஆய்வின் போது வயல் தரம் மற்றும் விதைத் தரம் குறித்து பரிந்துரைக்கப்பட்ட தரம் இருந்தால் மட்டும் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளுக்கு சான்றளிக்கப்பட்டு அவை விற்பனைக்குத் தயாராகின்றன.

எனவே, விதை உற்பத்திக்கான எள் வயல்களை விதைச் சான்றளிப்புக்கு உட்படுத்துவதன் மூலம் இனக்கலப்பற்ற, சுத்தத்தன்மை உடைய நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்ய முடியும்.

No comments: