Monday, July 16, 2012

முள் இல்லாத மூங்கில் நாற்று உற்பத்தி

முள் இல்லாத மூங்கில் நாற்று உற்பத்தி:
===============================

நீண்ட காலம் வளரக்கூடிய, புல் இனத்தைச்சேர்ந்த தாவரம் மூங்கில். இதை பச்சைத்தங்கம், ஏழைகளின் மரம் என்றும் அழைப்பது உண்டு. இது சுற்றுப்புறச்சூழலை பாதுகாத்து மனிதனுடைய அன்றாட தேவையை பூர்த்தி செய்வதோடு, பல்வேறு தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் இடுபொருட்களை தொடர்ச்சியாக அளிக்கக்கூடிய பயிராகும்.

முள் இல்லா மூங்கில்:
-------------------------------
60 முதல் 120 ஆண்டுகள் வரை பயன் தரும் பயிர் மூங்கில். இதனால் மூங்கில் நாற்றுகளை நடவு செய்யும்போது அதிக கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகிறது. டெண்டிரோகிளாமஸ், ஸ்டிங்டஸ், பேம்புசா வல்காரிஸ், பேம்புசா பல்கோவா போன்றவகையான மூங்கிலில் முட்கள் இருக்காது. இதனால் அறுவடை செய்யும்போது கழிவுகளை வெட்டி எடுப்பது சுலபமாகிறது. தமிழ்நாட்டில் இன்றைய காலகட்டத்தில் தேசிய மூங்கில் இயக்கத்தின் மூலம் உழவர்கள் முள் இல்லா மூங்கில் இனங்களை பயிரிடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இவற்றை விதையில்லா இனப்பெருக்கம் மூலம் உற்பத்தி செய்யலாம்.

உற்பத்தி முறைகள்:
----------------------------
நன்கு வளர்ந்த தரமான மூங்கில் தூர்களில் இருந்து ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளான கழிகளை வேறோடு சேர்த்து வெட்டவேண்டும். பின்னர் பக்கக்கிளைகளை கழிகளில் இருந்து ஒரு அங்குலம் விட்டு வெட்டி எடுக்கவேண்டும். பின்னர் இந்த கழிகளை நீண்ட தாழ்வான பாத்திகளில் 1.2மீட்டர் அகலம், ஒரு அடி அகலம், நீளம் தேவைக்கு எடுத்து மணல், மண்ணை 2:1 என்ற அளவில் இட்டு, கழிகளை பதித்து கழிகள் மூடும் அளவிற்கு மண் கலவையைக்கொண்டு மூடவேண்டும். காலை, மாலை நேரங்களில் நீர்ப்பாய்ச்சவேண்டும். இவ்வாறு நட்ட கழிகளில் உயிர் மொட்டுகளிலிருந்து முதலில் புதிய தண்டுகள் 10 முதல் 20 நாட்களில் தோன்றும். பிறகு வேர் தோன்ற ஆம்பித்த இரண்டு மாதங்களில் கன்றுகளைப்பிடுங்கி நடுவதற்கு ஏற்ற நிலையை அடையும். இவ்வாறு வேறுடன் உள்ள தண்டுகளைக்கொண்ட கணுக்களை தனியாக வெட்டிப்பிரித்து பசுமைக்கூண்டில் வைத்து 5 அல்லது 6 மாதம் வயதுடைய நாற்றுகளை வயலில் நடலாம்.

நடவு முறைகள்:
--------------------------
இரண்டு ஆண்டுகள் வயதுடைய கழிகளில் பக்க கிளைகள் கழிகளுடன் இணையும்பகுதிகளில் கணுக்களின் வேர் முடிச்சுகள் காணப்படும். இந்த வேர் கொண்ட பக்கக்கிளைகளை கழிகள் அடிபடாமல் அகற்றி 1 அல்லது இரண்டு கணுக்கள் விட்டு வெட்டி 400 பி.பி.எம் முதல் 2000 பி.பி.எம் வரையிலான ஐ.பி.ஏ. என்ற கிரியா ஊக்கியில் மூங்கில் இனங்களுக்கு ஏற்ப ஊறவைத்து 1 மணி நேரத்திற்கு இரண்டு விழுக்காடு பெவிஸ்டினில் நனைத்து பாலித்தீன் பைகளில் நட்டு, நீர் ஊற்றி கன்றுகளை வளர்க்கலாம். விதை, விதையில்லா முறையின் மூலம் உற்பத்தி செய்த கன்றுகளை கொண்டு குறுகிய காலத்தில் அதிக அளவு கன்றுகளை உற்பத்தி செய்ய இந்த முறையை பயன்படுத்தலாம். தேர்வு செய்த கன்றுகளை ஊட்டச்சத்து மிக்க பாத்திகளில் 1.2 மீட்டர் அகலம், தேவைகேற்ற நீளம் மற்றும் ஆழம் 1 1/2 அடியில் அமைத்து அதில் மண், மணல், மக்கிய தொழு உரம் ஆகியவற்றை 2:1:1 என்ற விகிதத்தில் கலந்து 1 அடிக்கு 1 அடி என்ற இடைவெளியில் நடவு செய்யவேண்டும். பசுமைக்குடிலில் நாற்றங்காலில் வளர்க்கவேண்டும். மூங்கில் நாற்றுகளை வயலில் நடுவதற்கு குறைந்தது 6 மாதங்களாவது நாற்றங்காலில் வளர்க்கவேண்டும். 10-12 மாதங்கள் வளர்க்கப்பட்ட வாளிப்பான கண்றுகளை நடுவது மிகவும் நல்லது. எனவே விவசாயிகள் முள் இல்லா மூங்கில் நாற்றுகளை உறபத்தி செய்து அதிகம் லாபம் பெறலாம்.

தகவல்: தோட்டக்கலைத்துறை, தஞ்சாவூர்.

No comments: