விவசாயிகள் நிலை குறித்து பேசாதோர் யாரும் இல்லை... ஆனால் பேசும் அவர்களே விவசாயிகளை மதிக்கிறார்களா? அதுதான் இல்லை.. ஏன் இந்த நிலை.. ? இந்த நிலைப்பாடு மாற என்ன செய்யலாம்... இங்கே விவசாயிகள் மதிக்கப்படுகிறார்களா எனபது மட்டும் அல்ல பேச்சு... அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள்.... இதற்கு நம்மால் முடிந்த அளவு செயல் வடிவில் என்ன செய்ய முடியும்,,, சொல்லுங்கள்........
Tuesday, July 31, 2012
கல்விக் கடன்: `ஏ டூ இசட்’ தகவல்கள்!
கல்விக் கடன்: `ஏ டூ இசட்’ தகவல்கள்!
ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை, கல்வி. கல்வி கற்ற மனிதனே முழு மனிதனாகிறான்.
ஆனால் குடும்பப் பொருளாதார நிலைமையால் படிப்பைத் தொடர முடியாமல் பலரும் தடுமாறி நிற்கிறார்கள். அவர்களின் கவலை போக்க உருவானதே, கல்விக் கடன் திட்டம்.
இந்தக் கல்விக் கடன், எல்லா மாணவர்களுக்கும் கிடைக்குமா, இதற்கான அடிப்படைத் தகுதிகள் என்ன, அதிகபட்சம் எவ்வளவு கடன் கிடைக்கும், கடனை எப்போது திருப்பிச் செலுத்த வேண்டும் என்பன போன்ற மாணவர்களின் மனதில் எழும் அனைத்துக் கேள்விகளுக்கும் விடை அளிக்கிறது, இத்தொடர்...
மருத்துவம், பொறியியல், இளநிலை, முதுநிலை, ஆசிரியர் பயிற்சி உள்ளிட்ட அனைத்து வகைப் படிப்புகளுக்கும் மத்திய அரசின் மூலம் கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், தனியார் வங்கிகளும் ஆண்டுதோறும் எண்ணற்ற மாணவர்களுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு கல்விக் கடனை அளித்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த அளவு அதிகரித்துதான் வருகிறது.
யாரெல்லாம் கடன் பெறலாம்?
மருத்துவம், பொறியியல், நர்சிங், பி.எட்., ஆசிரியர் பயிற்சி ஆகிய படிப்புகளுக்குக் கல்விக் கடன் கொடுக்க வங்கிகள் சில தகுதிகளை நிர்ணயித்துள்ளன. அதன்படி, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பி.எட்., ஆசிரியர் பயிற்சி மற்றும் நர்சிங் பயிலும் மாணவர்கள் வங்கிகளில் கல்விக் கடன் பெறத் தகுதி உடையவர்கள் ஆவார்கள். திருத்தப்பட்ட கல்விக் கடன் திட்டம் 2011-ன்படி மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் மட்டுமே இந்தக் கல்விக் கடனைப் பெற முடியும்.
மெரிட் அடிப்படையில் `சீட்' பெறும் மாணவர்கள் கல்விக் கடன் பெறலாம். கல்விக் கடன் பெறும் மாணவர்கள் தாங்கள் பெறும் கடனுக்கு `செக்யூரிட்டி' கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் நிர்வாக ஒதுக்கீட்டில் (மானேஜ்மென்ட் கோட்டா) மருத்துவம், பொறியியல், ஆசிரியர் படிப்பு, நர்சிங் படிப்புகளில் சேரும் மாணவர்கள் வங்கியில் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தால் அவர்களுக்கும் கடன் வழங்கப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு, கல்விக் கடன் திட்டத்தில் வழங்கப்படும் சலுகைகள் கிடைக்காது. `செக்யூரிட்டி'யும் அளிக்க வேண்டும்.
தகுதியான மதிப்பெண்கள் பெற்றால்...
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்குத்தான் கல்விக் கடன் அளிக்க முடியும் என்று வங்கிகள் கூற முடியாது. மானேஜ்மென்ட் கோட்டாவில் சேரும் மாணவர்கள் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள தகுதியைப் பெற்றிருப்பவர்கள்தான் `கவுன்சலிங்' மூலம் கல்லூரியில் சேருவார்கள். எனவே அவர்கள் அனைவருக்கும் கல்விக் கடன் வழங்க வேண்டும். கல்விக் கடனைப் பெறும் மாணவரின் பெற்றோருக்கு நிரந்தர வருமானம் இல்லாவிட்டாலும் அவருடைய மகன் அல்லது மகளுக்கு வங்கிகள் கட்டாயம் கல்விக் கடன் வழங்க வேண்டும். கல்விக் கடனை மாணவர் திருப்பிச் செலுத்துவாரா என்றுதான் வங்கிகள் பார்க்க வேண்டுமே தவிர, அவரது பெற்றோரின் தகுதியைப் பார்க்கக் கூடாது.
ஒரே குடும்பத்தினர் பெற முடியுமா?
ஒரே குடும்பத்தில் உள்ள 2 பேர், சொத்து அடமானம் இல்லாமல் கல்விக் கடன் பெற முடியுமா என்ற குழப்பம் பலரிடம் உள்ளது. கல்விக் கடன் பெறும் மாணவர்கள் எதிர்காலத்தில் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தும் வகையில் அவர்கள் படித்து வேலை பெறுவார்களா என்பதைப் பொறுத்துத்தான் கல்விக் கடன் அளிக்கப்படுகிறது. எனவே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிப்பதற்குத் தடை ஏதும் இல்லை.
திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிக்க...
கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்கள், கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் இடம் கிடைக்காமல் வெளியே தனியாகத் தங்கியிருந்தால் அவர்களுக்கும் வங்கிகள் கடன் வழங்க வேண்டும். மாணவரின் தங்குமிடம் மற்றும் சாப்பாட்டுச் செலவுக்கு ஒரு குறிப்பிட்ட வரையறையை வங்கிகள் வைத்துள்ளன. எனவே கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் இடம் கிடைக்கவில்லை என்ற காரணத்துக்காக மாணவரின் கல்விக் கடன் விண்ணப்பத்தை வங்கிகள் நிராகரிக்க முடியாது. அவருக்குத் தகுதிகள் இருந்தால் தாராளமாகக் கடன் வழங்கலாம்.
கல்விக் கடன் பெற்ற ஒரு மாணவர், அதைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று விரும்பினால் அதுகுறித்து குறிப்பிட்ட வங்கிக்குக் கோரிக்கை விடுக்கலாம். ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி அநëத மாணவரின் வேண்டுகோளை வங்கிகள் பரிசீலிக்க வேண்டும்.
கல்விக் கடன் பெற்ற மாணவர் ஒருவர் படித்து முடித்துவிட்டு மேற்படிப்பு படிக்க விரும்பினால் படிக்கலாம். அந்த மாணவருக்கு கல்விக் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை 6 மாதம் முதல் ஓராண்டு வரை வங்கிகள் தள்ளி வைக்கலாம். படிப்புக்கு ஆகும் செலவில் ஒரு பகுதிக்கு கல்விக் கடன் வேண்டும் என்று கேட்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இதுபோன்ற விண்ணப்பங்களையும் வங்கிகள் பரிசீலனை செய்கின்றன. வெளிநாடு வாழ் இந்தியரின் (என்.ஆர்.ஐ.) மகன் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தால், அவர்களுக்கும் கடன் வழங்குவது குறித்து வங்கிகள் பரிசீலிக்கும். ஆனால் அந்த மாணவரின் தந்தை இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். மேலும் அந்த மாணவருக்கு வழங்கப்படும் கடனுக்கு `செக்யூரிட்டி' கொடுக்க வேண்டும்.
கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்த மாணவரின் மனு ஏற்கப்பட்டதா, ஏற்கப்படவில்லையா என்ற தகவலை அந்தந்த வங்கிகள் மாணவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்த வேண்டும். ஒருவேளை கல்விக் கடன் விண்ணப்ப மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணத்தை வங்கிகள் தங்கள் ஆவணங்களில் பதிவு செய்ய வேண்டும்.
வட்டியில்லா கல்விக் கடன்
வட்டியில்லா கல்விக் கடனையும் வங்கிகள் வழங்குகின்றன. வட்டியில்லா கல்விக் கடனைப் பெற இரண்டு தகுதிகள் வேண்டும்.
ஒன்று, வங்கியில் கடன் கோரும் மாணவர், கவுன்சிலிங் மூலம் கல்லூரியில் தொழிற்கல்வி (புரொபஷனல்) படிப்புகள், அதாவது என்ஜினீயரிங், மருத்துவம், பாலிடெக்னிக் போன்ற படிப்புகளில் சேர வேண்டும். பி.ஏ., பி.எஸ்சி. போன்ற கலை, அறிவியல் படிப்புகளுக்கு வட்டி ரத்துச் சலுகை கிடையாது.
மற்றொன்று, மாணவரின் தந்தையின் ஆண்டு வருமானம் நான்கரை லட்சத்துக்கு மேல் இருக்கக் கூடாது. அதற்கான சம்பளச் சான்றிதழை, கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது இணைத்து அனுப்ப வேண்டும்.
இந்தத் தகுதிகள் இருந்தால், மாணவர்கள் கல்விக் கடனாகப் பெறும் தொகைக்கு வட்டி கிடையாது. உதாரணமாக, என்ஜினீயரிங் பயிலும் மாணவர் 4 ஆண்டுகள் படிக் கிறார் என்றால், அந்த 4 ஆண்டுகளுக்கும் அவர் வட்டி செலுத்த வேண்டியதில்லை. ஆனால் அவர் படித்து முடித்து 6 மாதங்களுக்குப் பின்னர் கல்விக் கடனுக்கான மாதத் தவணை செலுத்தும் போது, 4 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ள கல்விக் கடன் அசல் தொகை மற்றும் வட்டியைச் சேர்த்துச் செலுத்த வேண்டும்.
தந்தையின் மாத வருமானம் நான்கரை லட்சத்துக்கு மேல் உள்ள மாணவருக்கு வட்டி ரத்துச் சலுகை கிடையாது. அந்த மாணவர், என்ஜினீயரிங் படிக்கும் 4 ஆண்டுகளுக்கான வட்டியையும் சேர்த்து, படித்து முடித்த 6 மாதங்களுக்குப் பிறகு செலுத்த வேண்டும்.
கல்விக் கடன் பெறுவதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்?
வங்கிகளில் மாணவர்கள் கல்விக் கடன் பெறுவதற்கு கீழ்க்கண்ட தகுதிகள் வேண்டும்...
* இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. இந்தியாவில் படிப்பதற்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சமும், வெளிநாடுகளில் படிப்பதற்கு ரூ. 20 லட்சமும் கடன் வழங்கப்படுகிறது.
* கல்விக் கடனுக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதனுடன் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி சேர்க்கைக்கான அனுமதிக் கடிதம், கட்டணம் பற்றி கல்லூரி அளிக்கும் கடிதம், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாணவரின் 6 மாதத்துக்கான வங்கிக் கணக்கு ஸ்டேட்மென்ட், மாணவரின் தந்தையின் வருமானச் சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து அளிக்க வேண்டும்.
* கல்விக் கடனுக்கான வட்டி விகிதம், வங்கிக்கேற்ப மாறுபடுகிறது. 11.5 சதவீதம் முதல் 13.5 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. ரூ. 4 லட்சம் வரை கடன் பெற்றால் `செக்யூரிட்டி' தேவையில்லை, அதற்கு மேல் கடன் பெற்றால் `செக்யூரிட்டி' கொடுக்க வேண்டும். அதாவது சொத்து ஆவணங்களை வழங்க வேண்டும்.
* கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் 5 ஆண்டுகள் முதல், 7 ஆண்டுகள் வரை ஆகும். சில வங்கிகள் 60 சதவீத மதிப்பெண் இருந்தால்தான் கல்விக் கடன் கொடுக்க முடியும் என்று தெரிவிக்கின்றன. மேற்படிப்பில் சேருவதற்கான தகுதிகள் இருந்தாலே அந்த மாணவருக்கு வங்கிகள் கடன் அளிக்க வேண்டும்.
* படித்து முடித்த 6 மாதத்தில் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். அதன்பின்னர் வேலை கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் கல்விக் கடனுக்கான மாதத் தவணையை கட்டாயம் திருப்பிச் செலுத்த வேண்டும்.
* என்ஜினீயரிங் படித்துவிட்டு மேற்கொண்டு எம்.இ. போன்ற பட்ட மேற்படிப்புப் படிக்க விரும்பினால் அதுபற்றி அவர் வங்கிக்குத் தெரியப்படுத்தினால் அதற்கும் கல்விக் கடன் பெறலாம். ஆனால் பட்ட மேற்படிப்பு முடித்து 6 மாதங்கள் கழித்து இரண்டு கல்விக் கடனையும் சேர்த்துத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
* டியூஷன் கட்டணம், நூலகக் கட்டணம், லேபரட்டரி கட்டணம், புத்தகங்கள், உபகரணங்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் வாங்குவதற்கான செலவு, திரும்பக் கிடைக்கும் டொபாசிட் தொகை, இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கான தொகை ரூ. 50 ஆயிரம் உள்பட பல்வேறு வகையான கட்டணங்களுக்கும் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். எவ்வளவு கட்டணம் வழங்குவது என்பது ஒவ்வொரு வங்கிக்கும் வேறுபடும்.
`பான் கார்டு' வேண்டும்
இந்தக் கல்வியாண்டு முதல், வங்கிகளில் கல்விக் கடன் பெறும் மாணவர்கள் கண்டிப்பாக `பான் கார்டு' வைத்திருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
`பான் கார்டு' ஏன் கேட்கிறார்கள்? இரண்டு காரணங்களுக்காக இது கேட்கப்படுகிறது. ஒன்று, வட்டி ரத்துச் சலுகை கேட்கும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானத்தைச் சரிபார்த்துக் கொள்வதற்காகக் கேட்கப்படுகிறது. மற்றொன்று, கடன் வாங்கிய மாணவர் வங்கியை ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக.
ஒரு மாணவர் ஒரு பான் கார்டு தான் வைத்திருக்க வேண்டும். இரண்டு கார்டுகள் வைத்திருப்பது குற்றம்.
ஒரு மாணவர் பான் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும்போது அவரைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் அந்த பான் கார்டில் இடம்பெற்றிருக்கும். ஒருவேளை வங்கியில் கல்விக் கடன் பெற்று படித்து முடித்துவிட்டு அவர் குடும்பத்தோடு வேறு ஊருக்குச் சென்றுவிட்டால், கடன் கொடுத்த வங்கி அவரைத் தேடிப் பிடிப்பது கடினம். எனவேதான் மாணவர்கள் பான் கார்டு வாங்க வேண்டும் என்று வங்கிகள் கட்டாயப்படுத்துகின்றன.
பான் கார்டு வாங்கிய பின்னர் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றும் எண்ணத்துடன் அந்த மாணவர் வேறு ஊருக்குச் சென்றுவிட்டால் அவரை எங்கிருந்தாலும் கண்டுபிடித்து விடலாம். வேறு ஊரில் சென்று அந்த மாணவர் வங்கியிலோ அல்லது தனியார் நிதி நிறுவனத்திலோ எந்தக் கடன் கேட்டாலும் சிக்கிக்கொள்வார்.
கடன் கொடுக்கும் தனியார் நிறுவனங்கள் கூட தற்போது கட்டாயம் `பான் கார்டு' கேட்கின்றன. அப்படி அந்த மாணவர் கொடுக்கும் பான் கார்டு எண்ணை `கிரெடிட் இன்பர்மேஷன் இந்தியா பியூரோ லிமிடெட்' என்ற இணையதளத்தில் கொடுத்தால் அவர் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்பது தெரிந்துவிடும்.
வங்கிகளை ஏமாற்றும் நபர்களை அடையாளம் காண்பதற்காகவே அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இணைந்து `கிரெடிட் இன்பர்மேஷன் இந்தியா பியூரோ லிமிடெட்' என்ற அமைப்பை நடத்துகின்றன. இதன் மூலம், இந்தியாவில் ஒருவர் எங்கு கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்தாலும், அவருடைய `செக்' திரும்பி வந்தாலும் அது பற்றிய விவரம் குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுவிடும்.
இதன் காரணமாகத்தான் வங்கிகள் பான் கார்டு வேண்டும் என்று மாணவர்களை வற்புறுத்துகின்றன.
கல்விக் கடனுக்கு வங்கிகள் தயங்குவது ஏன்?
கடைசியாக...
கல்விக் கடன் கொடுக்க வங்கிகள் மறுக்கின்றன என்று அதிக புகார்கள் வருகின்றன. உண்மையில் கல்விக் கடன் கொடுக்க வங்கிகள் தயங்குவது
ஏன்?தாங்கள் அளிக்கும் கடன்களில் அதிகம் திரும்பி வராத கடன் கல்விக் கடன் தான் என்கிறார்கள் வங்கி அதிகாரிகள்.
கல்விக் கடன் பெறும் பல மாணவர்களுக்கு அதைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் இருப்பதில்லை என்பதே நிதர்சனம். பொதுவாக, வீடு, கார், வீட்டு உபயோகச் சாதனங்கள் என்று எதற்குக் கடன் வாங்கினாலும் அதைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் இருக்கிறது. ஆனால் கல்விக் கடனை மட்டும் திருப்பிச் செலுத்த பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை.
உண்மையில், கல்விக் கடனைப் பெற்றவர்களில் 40 சதவீதம் பேர்தான் கடனை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்துகின்றனர். மற்ற 60 சதவீதம் பேரின் கடன் நிலுவையில் உள்ளது. பலர் படிப்பு முடிந்தும், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர் என்பதும் உண்மை. கல்விக் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாதவர்களை கண்டுபிடிப்பதும் கடினமாக உள்ளது.
படிக்கும் மாணவ- மாணவியருக்குத்தான் கல்விக் கடன் கொடுக்கப்படுகிறது. அவர்களது பெற்றோருக்கு அல்ல. என் பெற்றோர் தான் கல்விக் கடன் வாங்கினர். நான் வாங்கவில்லை, எனவே கடனைத் திருப்பிச் செலுத்துவது எனது பொறுப்பல்ல என்று ஒரு மாணவர் கூறினால் அதை ஏற்க முடியாது. கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தும் கடமை அந்த மாணவருக்குத்தான் என்று வங்கிகள் கூறுகின்றன.
கல்விக் கடன் வசூல் சதவீதம் குறைவாக இருப்பதால்தான் வங்கிகள் கல்விக் கடன் வழங்கத் தயங்குகின்றன. கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தாங்கள் யோசிப்பது, தங்களுக்குப் பின்னால் வரும் தம்மைப் போன்றவர்களைப் பாதிக்கும் என்று உணர்ந்து மாணவர்கள் நடப்பது நல்லது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment