மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை!
மனிதனுக்கும், மிக உயர்ந்த உறுப்பமைப்பு உள்ள பிராணிகளான பாலூட்டிகளுக்கும் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன.
மனித
உடலிலும், பாலூட்டிகளின் உடலிலும் ஒரே வகை உறுப்பு மண்டலங்களை நாம்
காண்கிறோம். அவை, இயக்க, ஜீரண, மூச்சு, ரத்த ஓட்ட, கழிவு வெளியேற்ற உறுப்பு
மண்டலங்களும், மூளையும், முதுகுத் தண்டும், உணர் உறுப்புகளும்.
மார்புக்
குழி, வயிற்றுக் குழி என்று உதரவிதானத்தால் இரண்டு பகுதிகளாகப்
பிரிக்கப்பட்டிருக்கும் உடற்குழியில் உள்ளுறுப்புகளின் அமைப்பும் ஒரே
மாதிரியாக உள்ளது.
மேலும்
பல ஒற்றுமைகளும் உள்ளன. உதாரணமாக, மனிதனுக்கும் பிற பாலூட்டிகளுக்கும்
இதயம் நான்கு அறைகள் கொண்டது, பற்களில் வெட்டுப் பற்கள், கோரைப் பற்கள்,
கடைவாய்ப்பற்கள் என அமைந்திருக்கின்றன. இனப்பெருக்கமும் பாலூட்டிகளுக்கும்
மனிதனுக்கும் ஒரே மாதிரியானது.
அதிலும்
மனிதனைப் பெரிதும் ஒத்திருப்பவை மனிதக் குரங்குகள். அவற்றுக்கு இந்தப்
பெயர் வந்ததற்குக் காரணமே அவை மனிதர்களுடன் கொண்டிருக்கும் ஒற்றுமைதான்.
மனிதக்
குரங்குகளுக்கு வால் இல்லை. முகம் முடியால் மூடப்பட்டிருப்பதில்லை. செவி
மடல்கள் மனிதனுடையதைப் போலவே இருக்கின்றன. விரல்கள் தட்டையான நகங்களைக்
கொண்டிருக்கின்றன. கை கட்டைவிரல் மற்ற விரல்களுக்கு எதிர்ப்புறம் உள்ளது.
இதைப் போன்ற பல ஒற்றுமைகள் உள்ளன.
மனிதக்
குரங்கின் மூளையும் மனிதனுடையதை ஒத்திருக்கிறது. மனிதக் குரங்குகள்
சுற்றிலும் நிகழ்பவைக்கு ஏற்ப துடிப்பாகச் செயல்படுகின்றன. மனிதனைப் போலவே
அவையும் திருப்தி, மகிழ்ச்சி, அச்சம், கோபம் போன்ற உணர்ச்சிகளை
வெளிப்படுத்துகின்றன. அழவும், சிரிக்கவும் செய்கின்றன. மனிதனைப் போல
கண்ணீரைப் பெருக்குவதில்லை, ஒலி எழுப்புவதில்லை என்பது மட்டும்தான்
வித்தியாசம்.
மனிதக்குரங்குகளை
பல விதங்களில் ஒத்திருந்த போதிலும் முக்கிய விஷயங்களில் அவற்றிடம் இருந்து
வேறுபடுகிறான் மனிதன். அவன் கால்களால் மட்டுமே நடக்கிறான். நடக்கும்போது
நெட்டுக்குத்தான நிலையை மேற்கொள்கிறான். மனிதக் குரங்குகள் அனாயசமாக
மரங்களில் தொற்றி ஏறிவிடுகின்றன. தரையில் கால்களால் நடந்தாலும் கூனிக்
கொண்டு கைகளைத் தாங்கலாக ஊன்றிக்கொள்கின்றன. மனிதனின் கால்கள் கைகளை விட
நீளமானவை, மனிதக் குரங்குகளுக்கோ கைகள் கால்களை விட நீண்டவை.
மனிதக்
குரங்குகளின் கைகளோடு பொதுவாக ஒற்றுமை கொண்டிருந்தாலும் மனிதனுடைய கைகள்
அவற்றிலிருந்து கணிசமாக வேறுபடுகின்றன. மனிதக் குரங்குகளின் கட்டை விரல்
மற்ற விரல் களுக்கு எதிராக அமைந்திருந்தாலும் வளர்ச்சி குன்றியிருக்கிறது.
அவற்றின் கைகள் மரக் கிளைகளைப் பற்றிக்கொள்வதற்கே முதன்மையாகப்
பயன்படுகின்றன. மனிதனுக்கோ கை கட்டைவிரல் நன்றாக வளர்ச்சி பெற்றிருக்கிறது.
கைகள் பல்வேறு வேலைகளைச் செய்து உழைப்பு உறுப்புகளாக விளங்குகின்றன.
ரோமப் போர்வை மனிதனின் உடலின் தனித்தனிப் பகுதிகளில் மட்டும் எஞ்சியிருக்கிறது. குரங்குகளுக்கோ அது நன்கு வளர்ந்துள்ளது.
மண்டையோட்டின்
கட்டமைப்பில் கணிசமான வித்தியாசம் காணப்படுகிறது. தாடைகளாக
உருவாகியிருக்கும் மண்டையின் முன்பகுதி குரங்கில் அதிக வளர்ச்சி
அடைந்திருக்கிறது. மனிதனுக்கோ மூளையை உள்ளடக்கிய கபாலமும் மிகுந்த வளர்ச்சி
அடைந்திருக்கிறது.
மூளையின்
கட்டமைப்பில் உள்ள வேறுபாடு இன்னும் முக்கியமானது. மனிதனின் பெருமூளை
அரைக்கோளங்கள் மிகவும் வளர்ச்சி அடைந்தவை. மனித மூளையின் எடை ஆயிரத்து 200
கிராமுக்குக் குறைவாக ஒருபோதும் இருப்பதில்லை. அதிகபட்சமாக 2 ஆயிரம் கிராம்
வரை இருப்பதுண்டு. குரங்கின் மூளையோ 400 முதல் 600 கிராம் வரைதான்
எடையுள்ளது.
தனது மூளை ஆற்றல் காரணமாகவே மனிதன், மனிதக் குரங்குகளை விட்டு பெரும் தாவாகத் தாவி உயர்ந்துவிடுகிறான்.
No comments:
Post a Comment