Thursday, September 27, 2012

பலன் தரும் பழப் பண்ணை

பழத் தோட்டம் என்பது நெடுங்கால முதலீட்டுத் திட்டமாகும். இதற்கு சீரிய முறையில் திட்டமிடுதல் அவசியமானது. அதிகபட்ச உற்பத்தியைப் பெறுவதற்குத் தகுந்த இடம், நிலப் பரப்பு, நடவு முறை, நடவு தூரம், ரகங்கள், நாற்றுகள் ஆகியவற்றைக் கவனத்துடன் தேர்தெடுக்க வேண்டும்.



நிலப் பரப்பு:
பழத் தோட்டம் அமைப்பதற்கான இடத்தை முறையாகத் தேர்வு செய்ய வேண்டும். ஏற்கெனவே பழங்கள் சாகுபடி செய்யப்படும் இடத்தில் அமைப்பதன் மூலம் பிற சாகுபடியாளர்களின் அனுபவத்தைப் பெறலாம். இதன் மூலம், பிற சாகுபடியாளர்களுடன் இணைந்து கூட்டுறவு முறையில் உற்பத்தி, விற்பனைக்கான வாய்ப்புக் கிடைக்கும்.
சாகுபடி செய்யப்படும் இடத்துக்கு அருகில் சந்தை இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் பழங்களை சாகுபடி செய்வதற்கான கால நிலையை உறுதி செய்ய வேண்டும். ஆண்டு முழுவதும் போதுமான நீர்ப் பாசன வசதி செய்து தர வேண்டும்.
தோட்டம் அமைப்பதற்கு முன் செய்ய வேண்டியவை:
மண்ணின் பொருந்து திறன், வளம், அடி மண்ணின் இயல்பு, மண்ணின் ஆழம் ஆகியவற்றை மதிப்பிட வேண்டும். மண்ணில் முறையான வடிகால் வசதி மற்றும் மழைக் காலங்களில் நீர் தேக்கமற்றதாகவும் இருக்க வேண்டும். சிறந்த தரமான பாசன நீர் அவசியம். தரை வழியாகவோ, இருப்புப் பாதை வழியாகவோ பொருள்களை எடுத்துச் செல்லும் வசதி இருக்க வேண்டும்.
சாகுபடி செய்யப்படும் பழங்களுக்கு சந்தையில் நிலையான தேவை உள்ளதா என்பதை ஆராய்ந்து சாகுபடி செய்ய வேண்டும்.
முதல் கட்ட செயல்கள்:
சாகுபடிக்கேற்ற இடம், நிலப் பரப்பு ஆகியவற்றைத் தேர்வு செய்த பின்னர் நிலத்தில் உள்ள மரங்களை வேர்களுடன் அகற்ற வேண்டும். புதர்கள், களைகளையும் அகற்ற வேண்டும். நிலத்தை நன்கு உழுது சமன் செய்து எரு இட வேண்டும். நீர்ச் சிக்கனத்துக்கும், மண் அரிப்பைத் தடுக்கவும் நிலத்தை சமன் செய்ய வேண்டியது அவசியமானது. மலைப் பகுதிகளில் நிலத்தை அடுக்கு நிலங்களாகப் பிரித்து சமன் செய்ய வேண்டும். வளம் குன்றிய மண்ணாக இருந்தால் நடவு செய்வதற்கு முன் பசுந்தாள் எருப்பயிரை வளர்த்து நிலத்துடன் சேர்த்து உழுது மண்ணின் தரத்தை உயர்த்தலாம்.

பழத் தோட்டத்தை திட்டமிடுதல்:
ஓர் அலகு நிலத்தில் அதிக எண்ணிக்கை மரங்களை நடுவதற்கான போதுமான இடைவெளி அமைக்க வேண்டும். சேமிப்பு அறை மற்றும் அலுவலகக் கட்டடத்தை பழத் தோட்டத்தின் மத்தியில் அமைத்து முறையாகக் கண்காணிக்க வேண்டும். நான்கு ஹெக்டேர்களுக்கு இரண்டு என்ற விகிதத்தில் கிணறுகள் தேவையான ரகங்களில் அமைக்க வேண்டும்.
ஒவ்வொரு பழ வகையையும் தனித் தனி பகுதிகளில் நடவு செய்ய வேண்டும். ஒரே காலத்தில் கனியும் பழங்களை ஒரு குழுவாக இணைக்க வேண்டும். இலையுதிர் வகை பழ மரங்களுக்கு இடையே சில மகரந்தத்தைத் தருவிக்கும் மரங்களை நட வேண்டும். இந்த மரங்களை ஒவ்வொரு மூன்று வரிசையிலும் மூன்றாவது மரமாக நட வேண்டும்.
சாய்வு முறையில் பாசன வாய்க்கால்களை அமைப்பதால் நீரைச் சேமிக்கலாம். ஒவ்வொரு 30 மீட்டர் நீள வாய்க்காலுக்கும் 7.5 செ.மீ. சரிவு ஏற்படுத்த வேண்டும்.
போக்குவரத்துப் பாதைகள் குறைந்தபட்ச இடத்தையே ஆக்கிரமித்திருக்க வேண்டும். முதல் வரிசை மரங்களுக்கும் காற்றுத் தடுப்பு வேலிக்கும் இடையே உள்ள இடத்தைப் பாதையாகப் பயன்படுத்தலாம்.
முன்பக்கத்தில் குறுகிய வளர்ச்சியுடைய மரங்களையும், பின்பக்கத்தில் உயரமாக வளரும் மரங்களையும் வளர்ப்பதால் எளிதாகக் கண்காணிக்கப்படுவதோடு பார்வைக்கும் உகந்ததாக இருக்கும்.
பசுமை மாறா மரங்களை முன் பகுதியில் இடம் பெறச் செய்ய வேண்டும். பறவைகள் மற்றும் விலங்குகளை ஈர்க்கும் மர வகைகள் காவலாளியின் கொட்டகைக்கு அருகிலேயே இடம் பெற வேண்டும்.
ஒரு நல்ல வேலி அவசியம். உயிர் வேலியே சிறந்த பயன்தரும். வறட்சி எதிர்ப்புத் திறன் விதையின் மூலம் சுலபமான பயிர் பெருக்கம், விரைவான வளர்ச்சி, அடர்த்தியான இலைகள், கடும் கவாத்துக்கு தாங்கும் திறன் உடைய செடிகளை உயிர் வேலிக்கு தேர்வு செய்யலாம். கற்றாழை, கருவேல மரம், கொடுக்காப்புளி மரம், அலரி ஆகியவற்றை வரிசைகளில் நெருக்கமாக நட்டு சிறந்த உயிர் வேலியாகப் பயன்படுத்தலாம்.
உயிர் வேலி
உயிர் வேலி
காற்றுத் தடுப்பு வேலிகளைப் பழத் தோட்டத்தைச் சுற்றிலும் பல வரிசைகளில் நடுவதன் மூலம் காற்று அதிகம் வீசும் தருணங்களில் தோட்டத்துக்குச் சிறந்த பாதுகாப்பாக அமையும்.
காற்றுத் தடுப்பு வேலிக்குத் தேர்வு செய்யப்படும் மரங்களை செங்குத்தாகவும், உயரமாகவும், விரைவாக வளரக் கூடியதும் கடின வறட்சியை எதிர்க்கவல்ல உறுதியான மரங்களை தேர்வு செய்ய வேண்டும். சவுக்கு, வெண்ணாங்கு, அசோக மரம், தையில மரம், சவுக்கு, வேம்பு ஆகிய மரங்களைக் காற்றுத் தடுப்பு வேலியாகப் பயன்படுத்தலாம்.
இவை மட்டுமல்லாது பழத் தோடங்களின் வடிவமைப்புகளில் செங்குத்து வரி நடவு அமைப்பு, ஒன்று விட்டு ஒன்றான வரி நடவு அமைப்பு, நடவு இடைவெளி ஆகியவற்றையும் உரிய பரிந்துரைகளுக்கேற்ப கையாள வேண்டும். மேலும், விவரங்களுக்கு அந்தந்தப் பகுதியில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகங்களை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம்.


தினமணி செய்தி

No comments: