Wednesday, September 12, 2012

அறுவடையான நெல்லை பாதுகாப்பாக சேமிக்கும் நுட்பம்

டினமாக உழைத்து உற்பத்தி செய்யப்பட்ட உணவுதானியங்களை பூச்சிகளும், எலிகளும் தின்று சேதப்படுத்தி விடுகின்றன. அறுவடைக்கு பின்னர் போதிய பாதுகாப்பில்லாமல் சேமித்து வைக்கப்படும் தானியங்களை தான் இந்த உயிரினங்கள் குறிவைக்கின்றன. எனவே, களத்திலிருந்து அறுவடை செய்து கொண்டு வந்த தானியங்களை தகுந்த வழிகளில் பாதுகாப்பாக சேமிக்க வேண்டும்.

நெல்மணிகள் அறுவையின் போது 62 சதவீதம் கிடைக்க நெல் அறுவடையை உரியநேரத்தில் செய்ய வேண்டும். நெல் தானியத்தை பொறுத்தமட்டில் நெல் மணியானது 80 சதவீதம் மஞ்சள் நிறமாக இருக்கும் போது அறுவடை செய்யலாம். அப்போது ஈரப்பதம் 19.23 என்ற அளவில் இருக்க வேண்டும். நெல்மணிகளை அதிக சூரிய வெப்பத்தில் காய வைக்க கூடாது. காய வைத்த நெல்லின் ஈரப்பதம் 12 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும்.

அதிக ஈரத்துடன் காணப்படும் நெல்லை சேமிக்க கூடாது. சரியான நிலையில் இருக்கும் நெல்லை கோணிப்பையில் நிரப்பி, தரை மீது மரச்சட்டங்களை அல்லது காய்ந்த வைக்கோல் பரப்பி, நெல் மூடைகளை அடுக்க வேண்டும். அதே போல் சுவரிலிருந்து ஓரடி இடைவெளி விட்டு அடுக்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் 10 மிலி மாலத்தியான் மருந்தைக்கலந்து தரைப்பகுதி மற்றும் மூட்டைகளின் மீது தெளித்தால், அந்துப்பூச்சி தாக்காமல் இருக்கும்.

ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் உள்ள வணிக முறை தரம்பிரிப்பு மையங்களில் நான்கு ரகங்களாக பிரிக்கப்படுகிறது. விவசாயிகள் நெல்லின் தரத்தையும், ஈரப்பதத்தையும் அங்கு தெரிந்து கொள்ள முடியும்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருட்களில் பூச்சிகளால் 2.55 சதவீதமும், எலிகளால் 2.5 சதவீதமும், பறவைகளால் 0.85 சதவீதம், ஈரப்பதத்தால் 0.68 சதவீதம், கதிரடிக்கும் இயந்திரங்களால் 1.68 சதவீதம், போக்குவரத்தின் போது 0.15 சதவீதமும் இழப்பு ஏற்படுவதாக வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்:கி.சுருளிபொம்மு, வேளாண் உதவிஇயக்குநர்(தரக்கட்டுப்பாடு).மதுரை.

No comments: