Monday, September 3, 2012

தானிய வகைகளை புரடீனியா புழு தாக்குதல் இருந்து பயிர்களை காப்பது எப்படி?

பயறு வகை பயிர்களை புரடீனியா எனப்படும் புழுக்கள் தாக்கி அழிக்கின்றன.
இவ்வகை புழுக்களிடமிருந்து பயிர்களை பாதுகாக்கும் முறைகள் குறித்து இங்கு காணலாம்.
புதுச்சேரி மாநில விவசாயிகள் பெரும்பாலானோர் நிலக்கடலை, உளுந்து, பச்சைப்பயிறு, காராமணி, சோயா மொச்சை, பருத்தி, ஆமணக்கு, பச்சைமிளகாய், வாழை மற்றும் கனகாம்பரம் போன்ற பயிர்களை பயிரிடுகின்றனர்.
இப்பயிர்களில் புரடீனியா புழுக்கள் அனைத்து பருவங்களிலும் தாக்கி சேதத்தை உருவாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்துகின்றன.
மேலும், புரட்டீனியா புழுக்கள் காலிப்ளவர், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு மற்றும் புகையிலை போன்ற பயிர்களையும் தாக்கி அழிக்கின்றன.
புரொடனியா புழுக்கள்
புரொடனியா புழுக்கள்
இவ்வாறு பயிர்களில் தோன்றும் புரடீனியா புழுவினை கட்டுப்படுத்த “என்.பி.வைரஸ்’ எனும் உயிர் ரக பூச்சிக்கொல்லியை பயன்டுத்தலாம்.
புரடீனியா புழுக்கள், கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பயிர்கள் மற்றும் இயற்கையாக வளரும் தாவர இனங்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை.
இவற்றை புகையிலை புழு, ஆமணக்கு புழு என்றும் அழைக்கிறோம்.
இந்த வகை புழுக்கள் தமது ஒரு மாத கால வாழ்க்கை சுழற்சியில், 30 முதல் 35 நாட்கள் வயதுடைய பயிர்களை தாக்கி சேதப்படுத்தும்.
புரடீனியா புழுக்கள் ஆறு பருவ நிலைகளைக் கொண்டவை. அதன்பின், இவைகள் கூட்டுப் புழுக்களாக பூமியில் அல்லது மண்ணில் தென்படுகின்றன. பருத்தியில் காய்களையும், கனகாம்பரத்தில் கதிர்களையும் கூட வளர்ந்த நிலையில் உள்ள புழுக்கள் தாக்கும் திறன் கொண்டவை.
என்.பி.வைரஸ் நச்சுயிரி:
என்.பி.வைரஸ் உயிர் ரக பூச்சிக் கொல்லிகள் என்பது கண்ணுக்கு புலப்படாத வைரஸ் நுண்கிருமிகளால் ஆன நன்மை செய்யும் உயிரின கட்டுப்பாடு காரணியாகும்.
“வைரியான்’ என்ற உட்கருவினை கொண்ட அறுகோண வடிவமைப்பில் உள்ள இந்த வைரஸ் கிருமிகள் புரடீனியா புழுக்களை மட்டும் கொல்லக்கூடிய ஆற்றல் பெற்றவை ஆகும்.
என்.பி. வைரஸ் உயிர் ரக பூச்சிக்கொல்லியினை பயிர்களில் தெளிக்கும் போது அப்பயிர்களின் பாகங்களை உண்ணும் புரடீனியா புழுக்களின் வயிறு, குடல் பகுதிகளுக்கு வைரஸ் கிருமிகள் செல்கின்றன.
அங்கு அவை அதிகமாக உற்பத்தியாகி ரத்தத்தில் கலந்து 5-7 நாட்களில், புழுக்களின் அடிப்பாகத்தில் நோயை உண்டாக்கி அழித்துவிடும்.
இவ்வாறு நன்மை பயக்கும் என்.பி.வைரஸ் உயிர் ரக பூச்சிக்கொல்லி திரவ வடிவில் பிளாஸ்டிக் குடுவைகளில் 100 மி.லி. மற்றும் 250 மி.லி. அளவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
தற்போதைய சூழ்நிலையில் இப்பூச்சிகளின் தாக்குதல் அதிகம் இருப்பதால் இதனை பயன்படுத்தலாம். பூச்சிகளின் தாக்குதலுக்கு தகுந்தாற்போல் இதனுடன் கலக்க வேண்டிய வேறு சில பொருள்கள் குறித்து அருகில் உள்ள விவசாயத்துறை வல்லநர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம்.
கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்:
என்.பி. வைரஸ் உயிரக பூச்சிக்கொல்லியை மாலை வேளைகளில் மட்டுமே தெளிக்க வேண்டும். மேலும் பயிர்களின் அனைத்து பாகங்களிலும் படுமாறு தெளிக்க வேண்டும்.
நல்ல தண்ணீரை தெளிப்பதற்கு பயன்படுத்தவேண்டும். இது தெளித்தால் ரசாயண பூச்சிக்கொல்லிகளின் உபயோகத்தை 10 நாள்களுக்கு தவிர்க்க வேண்டும்.
உயிரிகளை பயன்படுத்தி பூச்சிகளை நிர்வகிப்பதன் மூலம் சுற்றுப்புறச் சூழலுக்கு பாதுகாப்பு அளிப்பது மட்டுமின்றி நன்மை பயக்கும் பூச்சி இனங்கள் அழியாமலும் பாதுகாக்கலாம்.
மேலும் பயிர் பாதுகாப்பு செலவினை குறைத்து விவசாயிகள் தங்கள் வருமானத்தை இழப்பின்றி பெருக்க முடியும்.
தினமணி தகவல் புதுச்சேரி காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் வல்லுநர் நி.விஜயகுமார்

No comments: