Thursday, September 13, 2012

சொத்து அடமானக் கடன் பற்றித் தெரியுமா?

நமது நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்பவை கடன்கள். சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் நமது அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், பொருளாதார இறக்க நிலையில் இருந்து மீள்வதற்கும் கடன்கள் கைகொடுக்கும்.
அந்த வகையில்தான் வருகிறது, சொத்து அடமானக் கடன். இதுவும் வீட்டுக் கடன் வாங்குவது போலத்தான்.
உயர்கல்வி பயில்வது, தனக்கு அல்லது பிள்ளைகளுக்குத் திருமணம் செய்வது, வீட்டைப் புதுப்பிப்பது, மருத்துவச் சிகிச்சை மேற்கொள்வது, தொழிலை விரிவாக்கம் செய்வது, வாகனம் வாங்குவது என பல்வேறு தேவைகளுக்கு வீட்டை அடமானம் வைத்துக் கடன் பெற்றுக்கொள்ளலாம்.
வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பு, வர்த்தகக் கட்டிடங்களுக்கான கிரயப் பத்திரங்களை அடமானமாக வைத்து இக்கடனைப் பெறலாம். மாதச் சம்பளக்காரர்கள், சுயதொழில் செய்பவர்கள் என அனைவருக்கும் இக்கடன் கிடைக்கும்.

http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120901/House0109.jpg

நீங்கள் அடமானம் வைக்கும் சொத்து, அது அமைந்திருக்கும் பகுதியின் உள்ளாட்சி அமைப்பின் அங்கீகாரத்தைப் பெற்றதாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
இன்னொரு விஷயம், சொத்து மதிப்பு முழுமைக்கும் கடனை எதிர்பார்க்கக் கூடாது. சொத்து மதிப்பில் 50 முதல் 70 சதவீதம் வரை கடன் கிடைக்கும்.
சொத்து அடமானக் கடன் வழங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனம், பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு இக்கடனை வழங்கும். அதாவது கடன் கோருபவரின் மாத வருமானம், திரும்பச் செலுத்தும் திறன், சொத்தின் மதிப்பு ஆகியவை கடன் தொகையை நிர்ணயிக்கும் காரணிகளாக அமையும். சொத்து அடமானக் கடனை அதிகபட்சம் 15 ஆண்டுகளில் திரும்பச் செலுத்தலாம். இந்தக் காலம் வங்கிக்கு வங்கி வேறுபடும்.
இந்த வேளையில் உங்களுக்கு இன்னொரு சந்தேகம் எழக்கூடும். அது, பூர்வீகச் சொத்தை அடமானமாக வைத்துக் கடன் பெற முடியுமா என்பது. அந்த வகையிலும் தாராளமாகக் கடன் பெற முடியும். ஆனால் அந்தச் சொத்தில் உங்களுக்கு உரிமை இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை அளிக்க வேண்டியது அவசியம். மேலும், சொத்து பிரிக்கப்படவில்லை என்றால், இதர சட்டப்படியான வாரிசுகளும் சேர்ந்து கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

No comments: