Friday, September 14, 2012

வறட்சியிலும் வளம் தரும் சந்தனம், குமிழ், மலைவேம்பு

வறட்சியிலும் வளம் தரும் சந்தனம், குமிழ், மலைவேம்பு

சந்தன மரங்களை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் சுதந்திரமாக வளர்க்க அரசின் அனுமதி உண்டு. தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் சந்தன மரங்களை அறுவடை செய்திட மாவட்ட வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். அறுவடை செய்த சந்தன மரக்கட்டைகளை வனத்துறையினர் நடத்தும் ஏலத்தின் மூலம் நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம். தனியாருக்கும் விற்பனை செய்யலாம். 20% தொகையை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டும். எனவே விவசாயிகளும் பொதுமக்களும் விவசாய நிறுவனங்களும் ஆர்வமுடன் சந்தன மரங்களை வளர்க்க முன்வந்துள்ளனர்.


 
சந்தன மரங்கள் வேலிகளிலும் தரிசு நிலங்களிலும் இயற்கையாகவே வளர்ந்து வறட்சியிலும் பசுமையாக காட்சிதரும் அழகிய தெய்வீக மரமாகும். இந்தியாவின் அனைத்து நிலப்பகுதிகளிலும் அனைத்து தட்பவெப்ப நிலைகளிலும் வளம் குன்றிய பாறை நிலங்களிலும் செழிப்புடன் வளரும் தன்மை கொண்டது. சந்தன மரங்களை வீடுகளிலும் பூங்காக்களிலும் விவசாய நிலங்களிலும் பள்ளி, கல்லூரி, தொழிற்சாலை, கோயில் வளாகங்களிலும் வளர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மேம்பாடு அடைவதுடன் 12 ஆண்டுகளுக்குப் பின் பலகோடி ரூபாய் அன்னியச் செலாவணியை ஈட்ட முடியும்.
விவசாயமாகச் செய்வதெனில் 3 மீட்டர் இடைவெளியில் சிறு குழிகள் அமைத்து ஏக்கருக்கு 450 சந்தன மரங்களை வளர்க்க முடியும். சந்தன மரங்கள் மற்ற வகை மரங்களுடன் இணைந்து வளரும் தன்மை கொண்டது. எனவே இரண்டு சந்தன மரங்களின் மையப்பகுதியில் குமிழ், மலைவேம்பு, மகோகனி, சவுக்கு, செடிமுருங்கை என வேறு வகையான மரங்களை ஏக்கருக்கு 450 மரங்கள் வளர்க்க முடியும். தென்னை, பெருநெல்லி, சப்போட்டா, பேரீட்சை, முந்திரி, மா என பல வகையான தோப்புகளில் ஊடுபயிராகவும் வளர்க்கலாம்.
ஒரு கிலோ சந்தன மரக்கட்டை 6000 ரூபாய் வரை வனத்துறையினர் நடத்தும் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. 15 ஆண்டுகள் வளர்ந்த ஒரு சந்தன மரத்தின் மூலம் 30 ஆயிரத்திற்கு மேல் வருமானம் கிடைக்கும். ஊடுபயிராக வளர்க்கப்படும் மரங்களின் மூலம் தனி வருமானம் பெறலாம்.
எனவே இனி சந்திலும் பொந்திலும் சந்தனம் வளர்ப்போம். முடிந்தால் சந்திர மண்டலத்திலும் சந்தனம் வளர்ப்போம். இந்நாள் இதனை செய்திடுவோம். 2020ல் அதனை நறுமணமாய்ப் பெற்றிடுவோம். ஒரு மனதாய் வளர்த்திடுவோம் சந்தனத்தை, சுகவனமாய் அமைத்திடுவோம்… இந்தியத் திருநிலத்தை, கலாமின் கனவை நனவாக்குவோம். தரிசு நிலங்களையும் தங்கம் விளையும் பூமியாக்குவோம்.
சந்தனம், குமிழ், மலைவேம்பு, மகோகனி, ஈட்டி, சில்வர் ஓக், சிவப்பு சந்தனம், அசோலா மற்றும் பலவகையான வன மரக்கன்றுகளும், விதைகளும் வளர்ப்பு முறை ஆலோசனைகளும் ஆய்வக முகவரியில் தொடர்பு கொண்டு பெறலாம். 98429 30674.
தினமலரில்  ஏ.சந்தனமோகன், சந்தன வளர்ச்சி ஆய்வு பண்ணை கந்தன்பாளையம், காமநாயக்கன்பாளையம், பல்லடம், கோயம்புத்தூர்-641 658.

No comments: