பருத்தியில் தண்டு கூன்வண்டு கட்டுப்பாடு
கோடையில் தென்மாவட்டங்களில் பயிரிடப் பட்டுள்ள பருத்தி பயிர்களை தண்டுக்கூன்வண்டு என்ற பூச்சி அதிகம் தாக்கி சேதம் விளைவித்து வருகிறது.கூன்வண்டின் அதகளம்:
3-5 மி.மீ. அளவில் கறுப்பு நிறத்தில் இருக்கும் இக்கூன்வண்டு பருத்திச்செடியின் இளம் பருவத்தில் தண்டுப்பகுதியில் முட்டையிடுகின்றன. தண்டுப்பாகத்தின் உட்பகுதியில் புழு தின்று வளர்வதால் தரைமட்டத்திற்கு மேல் உள்ள தண்டுபாகம் வீங்க ஆரம்பிக்கிறது. இதனால் செடிகளின் வளர்ச்சி குன்றி காய்ந்துவிடுகின்றன. மேலும் வீங்கிய பகுதி வலுவிழந்து பலமான காற்று வீசும்போதும் மண் அணைப்பு செய்யும்போதும் ஒடிந்துவிடும். பருத்தி நட்டு 30-40 நாட்களுக்குள் தாக்கப்பட்டால் அந்த செடிகள் இறந்துவிடும். ஒரு செடியில் ஒன்றுக்கும் மேற்பட்ட புழுக்கள் இருக்கலாம். அப்போது செடியில் அடுத்தடுத்து வீக்கம் ஏற்படும். இவ்வாறு பாதிக்கப்பட்ட செடிகளின் காய்பிடிப்பு பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படும். மேலும் பஞ்சு மற்றும் நூலின் தரம் குறைந்துவிடும். வயலில் 15-20 சத தாக்குதல் இருக்கும்போது பெரும் நஷ்டம் ஏற்படும்.
கூன்வண்டின் வாழ்க்கை சுழற்சி:
இக்கூன்வண்டுகள் ஒரு செடிக்கு 7 முதல் 8 முட்டைகள் வீதம் 120 முட்டைகள் வரை இடுகின்றன. பத்து நாட்களில் வெளிவரும் புழுக்கள் இரண்டுமாத காலம் வரை தண்டினுள் வளரும். இறுதியில் 10 நாட்களுக்கு கூட்டுப் புழுக்களாக இருந்துவிட்டு தாய் வண்டாக வெளிவருகின்றன. பருத்தியின் 6-7 மாத பருவ காலத்தில் 3 தலைமுறைகள் வரை உற்பத்தியாகிப் பெருகுகின்றன.
ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகள்:
- கூன் வண்டிற்கு எதிர்ப்புதிறன் வாய்ந்த எம்சியு3 போன்ற ரகப் பருத்திகளை பயிரிடலாம்.
- நெருக்கமான நடவும் செடிகளுக்கு சரியான மண் அணைப்பு பராமரிப்பு முறைகளையும் கடைபிடிக்க வேண்டும்.
- பழைய பருத்திக் கட்டைகளை வயலிலிருந்து அப்புறப் படுத்தி அழித்துவிட்டு புதிய நடவு செய்ய வேண்டும்.
- ஏக்கருக்கு தொழு உரம் 10 டன் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு கடைசி உழவில் இடவேண்டும்.
- கார்போபியூரான் 3 சத குருணை 12 கிலோ/ஏக்கர் நட்ட 20 நாட்கள் கழித்து இட்டு, மண் அணைக்க வேண்டும்.
- தாக்கப்பட்ட செடிகளை சேகரித்து அழிக்க வேண்டும்.
- வேப்பங் கொட்டைச்சாறு 5 சதத்தை நட்ட 20வது நாள் முதல் 10 நாட்கள் இடைவெளியில் 5 முறை தண்டினைச் சுற்றி ஊற்ற வேண்டும்.
- விதைத்த 3வது வாரத்திலிருந்து 15 நாட்கள் இடைவெளியில் குளோர்பைரிபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5 மி.லி. என்ற அளவில் கலந்து தூர்பகுதி மற்றும் தூர் பகுதியை சுற்றியுள்ள மண் பரப்பும் நன்குநனையுமாறு ஊற்ற வேண்டும்.
தினமலர் செய்தி – ஜெ.ஜெயராஜ், என்.முத்துகிருஷ்ணன், பெ.நிலவழகி, க.முரளிபாஸ்கரன்,
பூச்சியியல் துறை, வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை-625 104.
பருத்தியில் காணப்படும் தரைக் கூண்வண்டை கட்டுப்படுத்த, 20-25 கிலோ வெங்காயத்தை சணல் பையில் இட்டு, ஒரு மரக்கட்டைக்கொண்டு நசுக்கி, அப்படியே அந்த சணல் பையை நீரோட்டத்தில் போட்டால் போதும் (குஜராத்).
-வேளாண்மை பல்கலை, கோவை
No comments:
Post a Comment