Thursday, September 27, 2012

சூரியக் குடும்பத்தை விட்டு விலகும் `வாயேஜர்’!

satilight
`வாயேஜர் 1′ விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு 35 ஆண்டுகளாகிவிட்டன. இவ்வளவு காலம் சமர்த்துப்பிள்ளையாக சூரியக் குடும்ப வட்டத்தில் வலம் வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த வாயேஜர், இவ்வட்டத்தை விட்டு விலகப் போகிறது. அப்படி நடந்தால், சூரியக் குடும்பத்தைத் தாண்டிச் செல்லும் மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் பொருள் என்ற பெருமையை வாயேஜர் பெறும்.
1977-ம் ஆண்டு நாசாவால் வாயேஜர் 1, வாயேஜர் 2 விண்கலங்கள் விண்ணுக்குச் செலுத்தப்பட்டபோது, அவை உத்தேசமாக எவ்வளவு ஆண்டுகள் செயல்படும் என்று யாருக்கும் தெரியாது. தற்போது வெவ்வேறு திசைகளில் இருந்தபடி பூமியை வலம் வரும் இந்த இரு விண்கலங்களும், மிக நீண்டகாலம் செயல்படும் விண்கலங்கள் என்ற பெருமையைப் பெற்றிருக்கின்றன. பூமியிலிருந்து மிகத் தொலைவில், அதாவது லட்சக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இவை இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இம்மாதம் 5-ம் தேதி, வாயேஜர் விண்ணில் ஏவப்பட்ட 35-ம் ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது. தற்போது சூரியக் குடும்பத்தின் விளிம்பில் உள்ள வாயேஜர் 1 விண்கலம், அந்த எல்லையைக் கடந்து செல்லக்கூடும் என்கிறார்கள் விண்வெளி விஞ்ஞானிகள். அதற்கு நாட்கள், மாதங்கள் ஏன், வருடங்கள் கூட ஆகலாம்.
`வாயேஜர் 1′ விண்கலம் சூரியனில் இருந்து 17.7 பில்லியன் கிலோமீட்டர் தொலைவிலும், `வாயேஜர் 2′ விண்கலம் 14.4 பில்லியன் கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளன.
உண்மையில் வியாழன் மற்றும் சனிக் கோள்களை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட வாயேஜர் விண்கலங்கள், பல முக்கியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளன.

No comments: