Tuesday, September 18, 2012

காய்கறி பயிர்களுக்கான நாற்றங்காலை பராமரிப்பது எப்படி?

காய்கறி பயிர்களுக்கான நாற்றங்காலை பராமரிப்பது எப்படி?

காய்கறி பயிர்களைப் பயிரிடும்போது நாற்றங்காலை முறையாக பராமரிப்பதன் மூலம் அவற்றை பூச்சி தாக்குதல்களில் இருந்து கட்டுப்படுத்த முடியும்.
விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகள் பசுமையாகவும், தரமாகவும் இருக்க வேண்டும்.
இதற்கு ரசாயனத் தன்மையுள்ள உரங்களையும், பூச்சிக் கொல்லி மருந்துகளையும் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
அதற்கு பதிலாக, அங்கக உரங்களையும், உயிரக பூச்சிக் கொல்லிகளையும், தாவர பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்தி காய்கறி பயிர்களை சாகுபடி செய்ய கற்றுக்கொள்வது விவசாயிகளுக்கு அவசியமானதாகும்.
“ஆடிப் பட்டம் தேடி விதை’ என்ற பழமொழிக்கு ஏற்ப விவசாயிகள் ஆடி மாதத்தில் காய்கறி விதைகளை விதைத்து வருகின்றனர்.
தற்போது நாற்றங்கால் நிலையில் உள்ள காய்கறி பயிர்களை பூச்சி மற்றும் நோய்களில் இருந்து காக்கும் முறைகள் பற்றியும், மகசூலை அதிகரிக்க வேர் வளர்ச்சியின் அவசியத்தையும் விவசாயிகள் அறிந்து வைத்திருப்பது நல்லது.
காய்கறி பயிர்களில் கத்தரி, மிளகாய், தக்காளி போன்றவற்றை நாற்று விட்டும், வெண்டை, அவரை மற்றும் கீரை வகைகளை விதை விதைத்தும் பயிர் செய்யப்படுகிறது.
கத்தரி, மிளகாய், தக்காளி போன்ற காய்கறி பயிர்களை சாதாரணமாக மண்ணில் நாற்றுவிட்டு நாற்றங்காலை பராமரிக்கலாம்.
அவ்வாறு பராமரிக்கும்போது ஒரு சதுர மீட்டர் நாற்றங்கால் பரப்பளவுக்கு 10 கிலோ தொழு உரம், 50 கிராம் வேப்பம் புண்ணாக்கு, 5 கிராம் “அசோஸ்பைரில்லம்’, 5 கிராம் பாஸ்போ பாக்டீரியா மற்றும் வேம் என்று சொல்லக்கூடிய “மைக்கொரைசா’ என்ற பூஞ்சாணத்தையும் இட்டு நாற்றங்காலை பராமரிக்கலாம்.
இதனால், நாற்றங்காலில் உள் பயிரின் வேர் வளர்ச்சி நன்கு தூண்டுவதோடு மட்டுமன்றி வேரில் தோன்றக் கூடிய வேர் பூச்சிகள், வேர் அழுகல் நோய்களும் கட்டுப்படும்.
விதைத்த 20 நாள்களுக்குள் நாற்றங்காலில் ஒரு சதுர மீட்டர் பரப்பளவுக்கு ஒரு கிலோ டிரைக்கோடெர்மா என்ற நன்மை தரும் பூஞ்சாணத்தை 10 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் வேர்பகுதிகளில் இடுவதால் “பித்தியம்’ என்ற வேர் அழுகல் நோய் வராமல் தடுக்கப்படுகிறது.
நாற்றங்காலில் தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்துக் கொள்வது மிக அவசியமானது. தண்ணீரை பூ வாளி மூலம் நாற்றங்கால் மீது தெளிப்பது சிறந்தது.
நாற்றங்காலின் வளர்ச்சிக்கு ஒரு சதுர மீட்டர் பரப்பளவுக்கு சூப்பர் பாஸ்பேட் 100 கிராம் மற்றும் கார்போபியூரான் மூன்று சத குருனை மருந்தினை 10 கிராம் என்ற அளவில் இடுவதால் வேரில் நூற்புழுக்களின் தாக்குதலை தவிர்க்கலாம்.
குழித் தட்டு மற்றும் நிழல் வலை முறையில் வளர்க்கப்படும் நாற்றாங்கால்.
குழித் தட்டு மற்றும் நிழல் வலை முறையில் வளர்க்கப்படும் நாற்றாங்கால்.
குழித்தட்டு முறை:
நாற்றங்காலை குழித்தட்டு முறையிலும் உருவாக்கலாம். இந்த முறையில் அனைத்து நாற்றுக்களும் நோய் மற்றும் பூச்சிகளின் தாக்குதலில் இருந்து எதிர்ப்புத் தன்மையோடு காணப்படும்.
ஒரு குழித்தட்டில் 98 குழிகள் இருக்கும். இந்த குழித்தட்டானது பிளாஸ்டிக்கால் ஆனது. இதை எளிதில் மக்கச் செய்ய முடியும். மேலும் குழித்தட்டு நாற்றங்காலை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.
குழித்தட்டு நாற்றங்காலை நிழல் வலைகளில் தேவையான வெப்பநிலைகளில் சீராக நீர் தெளிப்பு முறையின் மூலம் அதிக அளவில் ஆரோக்கியமாக உருவாக்கலாம்.
ஒவ்வொறு குழித்தட்டிலும் நன்கு சலித்த மண் இரண்டு பங்கு, கம்போஸ்ட் உரம் ஒரு பங்கு, தேங்காய் நார் கழிவு உரம் ஒரு பங்கு ஆகியவற்றை கலந்து இட வேண்டும்.
இவைகளுடன் ஒரு கிலோ டிரைக்கோடெர்மா என்ற உயிரக பூஞ்சாண மருந்தையும் சேர்க்க வேண்டும்.
அங்கக உரங்களில் தேங்காய் நார் கழிவு உரம் காய்கறி நாற்றங்கால் பராமரிப்புக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில், மற்ற அங்கக உரங்களை ஒப்பிடும்போது தேங்காய் நார் கழிவு உரத்தில் அதிக அளவில் கரிம சத்து உள்ளது. தேங்காய் நார் கழிவு உரம் கிடைக்காத தருணத்தில் மண்புழு உரம் அல்லது தொழு உரம் அல்லது சர்க்கரை ஆலை கழிவு உரம் போன்றவற்றை பயன்படுத்தலாம் என்றார் அவர்.
தினமணி தகவல் – புதுச்சேரி காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் வல்லுநர் நி.விஜயகுமார்

No comments: