Friday, September 28, 2012

சுழற்சி முறையில் பயிர் சாகுபடிக்கான தேர்வு முறைகள்!

விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான பயிரை சாகுபடி செய்வதைத் தவிர்த்து, சுழற்சி முறையில் பயிர்களைத் தேர்வு செய்து சாகுபடி செய்தால் கூடுதல் மகசூலும், அதிக லாபமும் பெறலாம்.
பயறு வகைகளுக்குப் பிறகு:
பயறு வகைகள் பயிரிடும் விவசாயிகள் அதன் பிறகு பயறு அல்லாது வேறு பயிர்களை தேர்வு செய்ய வேண்டும் கோதுமை, மக்காச் சோளம், முதலில் செய்த பயிர் அல்லது தானியங்களை ஊடுபயிராக பயிரிடலாம்.
சில வகைப் பயிர்கள் மண்ணில் உள்ள சத்துகள் அனைத்தையும் உறஞ்சிவிடும் தன்மை கொண்டவை. எள், கடலை ஆகியவை இத்தகையத் தன்மை கொண்டவை. எனவே, இத்தகையப் பயிர்களைப் பயிரிட்ட பிறகு பயறு வகைகளைப் பயிரிட்டால் சத்துக்களை மண்ணில் நிலை நிறுத்தும்.
இலைகள் மண்ணில் உதிர்வதற்கு:
அவ்வப்போது இலைகள் மண்ணில் உதிரும் வண்ணம் உள்ள செடிகளையும் பயிரிடலாம்.
  • பருத்தி,
  • நெல்,
  • கோதுமை,
  • பயறு வகைகள்
இதற்கு சிறந்த உதாரணமாகும்.
தானியப் பயிர்களுக்குப் பிறகு:
மானாவாரியாகவோ, இறவைப் பயிராகவோ தானியங்களை பயிரிடும் விவசாயிகள், தானிய விளைச்சலுக்குப் பிறகு பசுந்தாள் உரத் தாவரங்களைப் பயிரிடலாம். சனப்பை, நெல், துவரம் பருப்பு, பச்சைப் பயறு, மக்காச்சோளம் ஆகியவற்றைத் தேர்வு செய்யலாம். நல்ல அதிக ஊட்டச்சத்து தேவையுடைய பயிர்களுக்குப் பிறகு குறைந்த ஊட்டச்சத்து தேவையுடைய பயிர்களைப் பயிரிட வேண்டியது அவசியம். மக்காச் சோளம்,  உளுந்து, பூசணி வகைகளை சாகுபடி செய்யலாம்.
பருவம் சார்ந்தவை:
பருவம் சார்ந்த பயிர்களை பயிரிட்ட பிறகு ஓராண்டுக்கு தாவரங்களைப் பயிரிட வேண்டும். நேப்பியர், கரும்பு பயிரிட்ட பிறகு நிலக்கடலை, தட்டைப் பயறு பயிரிடலாம்.
காய்கறி சாகுபடி செய்த பிறகு:
காய்கறி வகைகளை சாகுபடி செய்த பிறகு தீவனப் பயிர்களைப் பயிரிடலாம்.
  • சோளம்,
  • தட்டைப் பயறு,
  • உருளைக்கிழங்கு,
  • முட்டைகோஸ்,
  • வெங்காயம்
என சுழற்சி முறையில் பயிர் செய்தால் கூடுதல் வருவாய் கிடைக்கும். விதைத் தவாரங்களுக்குப் பிறகு வேர்த் தாவரங்களைப் பயிரிடலாம்.
மறுதாம்புப் பயிர்களுக்குப் பிறகு:
மறுதாம்புப் பயிர்களுக்குப் பிறகு ஆழமான வேர்கள் செல்லக் கூடிய பயிர்களை சாகுபடி செய்யலாம்.
  • உருளைக் கிழங்கு,
  • மஞ்சள்,
  • பீட்ரூட்,
  • கேரட்,
  • நெல்,
  • வெங்காயம்,
  • காய்கறி
என சுழற்சி முறையை கடைப்பிடிக்கலாம்.
ஆழமான வேர்களைத் தொடர்ந்து:
ஆழமான வேர்களைத் தொடர்ந்து மேலோட்டமான வேருள்ன பயிர்களை விதைக்கலாம். இதற்கு
  • பருத்தி,
  • ஆமணக்கு,
  • துவரம்பருப்பு,
  • உருளைக் கிழங்கு,
  • பச்சைப் பயறுகள்
சிறந்தவை.
கோடை உழவுக்குப் பிறகு:
அதிக ஆழமான உழவு தேவைப்படும் பயிர்களை, கோடை உழவு முடிந்த பின்னர் சாகுபடி செய்வது அவசியம். சற்று இறுகிய மண்ணிலும் வளரக் கூடிய தாவரங்களைப் பயிரிடலாம்.
  • உருளைக் கிழங்கு,
  • முள்ளங்கி,
  • சர்க்கரைவள்ளிக் கிழங்கு,
  • கரும்பு,
  • உளுந்து,
  • பசுந்தாள் உரம்
என சுழற்சி முறையில் வகைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இரு விதையிலைத் தவார சாகுபடிக்குப் பிறகு:
இரு விதையிலைத் தவாரங்களை சாகுபடி செய்த விவசாயிகள் அடுத்தபடியாக ஒரு விதையிலைத் தாவரங்களைப் பியிரட வேண்டும். ஊடுபயிர் இல்லாத தனிப் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் அரிதாள் கட்டை விடும் பயிர்களை சாகுபடி செய்வது சிறந்தது.
பூச்சித் தாக்குதலில் இருந்து காக்க:
சில வகை பூச்சிகள்  குறிப்பிட்ட பயிர்களைத் தாக்கும் ஆற்றல் கொண்டவை. எனவே, அத்தகையப் பயிர்களைப் பயிரிடும் விவசாயிகள் அடுத்த முறை அதற்கு மாற்றாக உள்ள பயிர்களைத் தேர்வு செய்ய வேண்டும். சில பயிர்களில் குறிப்பிட்ட வகை களைச் செடிகள் தொர்ந்து முளைத்த வண்ணம் இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த சுழற்சி முறை பயிர் சாகுபடி அவசியமானது. மேய்ச்சல் பயிர்களுக்குப் பிறகு தீவனம் அல்லது விதைப் பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும்
  • பாராபுல்,
  • சோளம்,
  • அவரை,
  • நெல்
என வரிசைப்படுத்திக் கொள்ளலாம்.
சுத்தப்படுத்தும் தாவரங்களுக்குப் பிறகு:
சுத்தப்படுத்தும் தாவரங்களுக்குப் பிறகு விதைத் தாவரங்களை தேர்வு செய்ய வேண்டும். மக்காச் சோளம், நிலக்கடலை, வெங்காயம், அவரை, கம்பு என திட்டமிடல் வேண்டும். ஒரே வகை பயிர்களை சாகுபடி செய்யாமல் மேற்கண்டபடி சுழற்சி முறையில் பயிர்களை சாகுபடி செய்தால் விவசாயிகளுக்கு மிகுந்த லாபத்தை ஈட்டித் தரும். மண் வளமும் பாதுகாக்கப்படும். மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்தி

No comments: