நெற்பயிரைத்தாக்கும் இலைச்சுருட்டுப்புழு
நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகளில் முக்கியமானது இலைச்சுருட்டுப்புழு அல்லது இலை மடக்குப்புழுவாகும். சமீப காலங்களில் இதன் தாக்குதல் முக்கியமாக உயர் விளச்சல் ரகங்களில் அதிக மாகக் காணப்படுகின்றது. தமிழகத்தில் மட்டுமல்லாது நெல் பயிரிடப்படுகின்ற அனைத்து மாநிலங்களிலும், எல்லாப் பருவங்களிலும் இதன் தாக்குதல் காணப் படுகின்றது. கோடைப் பயிரில் தாக்குதல் சிறிதளவு குறைந்து காணப்படுகின்றது. முக்கியமாகப் புரட்டாசி முதல் தை மாதம் வரை இதன் தாக்குதல் மிக அதிகமாக இருக்கும்.தாக்குதல் ஏற்படுத்தும் விதம்:
தாய் அந்துப்பூச்சிகள் இடுகின்ற முட்டைகளில் இருந்து வெளிவரும் புழுக்கள் இலைகளை நீளவாட்டில் மடித்து சேதப்படுத்துகின்றது. இவ்வாறு சுருட்டப்பட்ட இலைச் சுருள்களுக்குள் புழுக்கள் இருந்துகொண்டு பச்சையத்தைச் சுரண்டி உண்பதால் இலைகளில் சேதம் அதிகமாகிறது. தாக்கப்பட்ட இலைகள் வெளிறித் தோன்றுவதுடன் பயிரின் ஒளிச் சேர்க்கை குறைந்து வளர்ச்சி குன்றிவிடுகிறது. வளர்ந்த பயிர்களிலும் புடைப்பருவத்திலும் தாக்குதல் ஏற்படுவதாலும் கண்ணாடி இலை பாதிக்கப்படுவதாலும் மகசூல் வெகுவாகக் குறைகிறது. வயல்களில் இலைகள் பச்சையம் சுரண்டப்பட்டு வெள்ளை வெள்ளையாகக் காணப்படும்.
மேலாண்மை முறைகள்:
- பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே உரம் அளிக்க வேண்டும்.
- இலைச் சுருட்டுப் புழுவின் அந்துப்பூச்சிகள் இரவு நேரத்தில் வெளிச்சத்திற்கு ஈர்க்கப் படுகின்றன. எனவே முன்னிரவு நேரங்களில் விளக்குப் பொறிகளுக்குக் கவரப்படுகின்ற பூச்சிகளின் எண்ணிக்கையைக் கணித்து, தேவைப்பட்டால் பூச்சிக் கொல்லிகளை உபயோகிக்கலாம்.
- தேவைக்கு ஏற்ப தழைச்சத்து இட்டும் இப்பூச்சி அதிகமாகத் தோன்றும் இடங்களில் ரசாயன உரங்களைத் தவிர்த்தும் இப்பூச்சியின் சேதத்தைக் குறைக்கலாம். தழைச்சத்தின் தேவையை தொழு உரம் அல்லது பசுந்தாள் உரமாக இடுவதன் மூலம் இப்பூச்சியின் பெருக்கம் தவிர்க்கப்படுகிறது.
- டிரைக்கோகிரம்மா போன்ற முட்டை ஒட்டுண்ணிகளும், பிராக்கிமிரியா, ஜேன்தோபிம்ப்ளா போன்ற கூட்டுப் புழு ஒட்டுண்ணிகளும் கோனியோசஸ், அப்பாண்டிலஸ் போன்ற புழுப்பருவ ஒட்டுண்ணிகளும் இப்புழுக்களைத் தாக்குகின்றன. முட்டை ஒட்டுண்ணி டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் எக்டருக்கு 5 சி.சி. என்ற அளவில் நட்ட 37, 44 மற்றும் 51ம் நாட்களில் விடவேண்டும்.
- பயிர் வளர்ச்சிக் காலத்தில் பத்து சத இலைச்சேதம், பூக்கும் தருணத்தில் கண்ணாடி இலைகளில் ஐந்து சத நிலையை அடையும்போதும் எக்டருக்கு மோனோகுரோட்டோபாஸ் 1000 மி.லி., புரோபனோபாஸ் 1000 மி.லி., குளோர்பைரிபாஸ் 1250 மி.லி., வேப்பெண்ணெய் 3 சதம் மற்றும் 5 சத வேப்பங்கொட்டை பருப்புச்சாறு (25 கிலோ பருப்பு) அல்லது நிம்பிசிடின் 500 மி.லி. இவற்றில் ஒன்றினைத் தெளித்து சிறந்த முறையில் கட்டுப்படுத்தலாம்.
No comments:
Post a Comment