Friday, March 9, 2012

அன்று சொன்னவை..! அர்த்தமுள்ளவை!!



தொலைக்காட்சி ஒன்றில், நகைச்சுவை நடிகர் ஒருவர், ஒரு துணுக்கினைச் சொல்லிவிட்டு, அவரே சிரித்துக் கொண்டிருந்தார். தற்செயலாக அதைப் பார்க்க நேரிட்டபோது, நகைச்சுவையை விட, ஆழமான ஒரு செய்தி அந்தத் துணுக்குக்குள் மறைந்திருப்பதாகவும், அது நகைச்சுவை என்னும் நீரில் கரைந்து போவதாகவும் பட்டது.
அதை நம் பார்வையில் பார்க்கலாம். கணவன், மனைவி இருவருக்கிடையில் எப்போதும் ஓயாத சண்டை. ஒருவர் சொல்வது மற்றவருக்கு ஆகாது. ஒருவர் செய்வது மற்றவருக்குப் பிடிக்காது. எந்த நேரமும் ஒருவரை மற்றவர் குறை கண்டு கொண்டிருந்தனர். =திருமணம் ஆன கொஞ்ச நாட்களுக்கு இருந்த அன்பு, அரவணைப்பு, உண்மை, கவனிப்பு போன்றவை இப்போது இல்லாமல் போய்விட்டது.
சுயநலமாக நடந்து கொள்கிறாய்…+ என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டார்கள்.
இதற்குத் தீர்வுதான் என்ன? மணமுறிவுதான் என்று இருவருக்குமே தோன்றியது. ஆனால், உறவினர்களும், நண்பர்களும் =அவசரப் பட வேண்டாம்… எதற்கும், இருவருக்கும் பொதுவான பெரியவர் ஒருவரிடம் அறிவுரையும், ஆலோசனைகளும் பெற்றுக் கொள்ளுங்கள்…+ என்றனர். அதற்குத் தகுதியான ஒரு பெரியவரை கணவன் மனைவி இருவரும் பார்க்கச் சென்றார்கள்.
பொறுமையாக அவர்களின் பிரச்சனை களைக் கேட்டார் பெரியவர். மனைவி சொன்னதை விட அதிகமாகக் கணவன் சொன்னான். உடனே பெரியவர் =எனக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது; உனக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள்… அதுதான் எல்லா சிக்கல்களுக்கும் காரணம்+ என்றார். கணவன் அதிர்ந்து போனான். =சிக்கல்கள் தீரும் என்று இவரை நாடி வந்தால், இந்த மனிதர் ஒன்றுமில்லாததைச் சொல்லி, பிரச்சனைகளைப் பெரிதாக்குகிறாரே…+ என்று கோபத்துடன் அதனை மறுத்தான்.
அவனைவிட அவன் மனைவி வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்தாள். =எனக்கு அப்போதே தெரியும்… இந்த ஆளுக்கு அப்படி ஏதோ ஒரு தொடர்பு இருக்கும் என்று… வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பா…? கல்யாணம் வரை போய் விட்டதா…? அதனால்தான் என்னுடன் இப்படி சண்டையா…? கோர்ட்டுக்கு இழுத்து அசிங்கப்படுத்தாமல் விடமாட்டேன்…+ என்று கத்தினாள்.
அந்தப் பெரியவர், கோபத்தில் பொங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் மிக அமைதியாகச் சொன்னார்; =அம்மா… உங்களிடமும் அதே சிக்கல்தான்… நீங்களும் இரண்டு கணவருடன் வாழ்கிறீர்கள்… அதனால்தான் இவ்வளவு கோபப் படுகிறீர்கள்…+
கணவன் மனைவி இருவரும் அதிர்ச்சியில் உறைந்தார்கள். சிரித்தபடி பெரியவர் சொன்னார். =அம்மா… தவறாக நினைக்காதீர்கள். உங்கள் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று ஓர் அளவுகோலை மனத்தில் நீங்கள் வைத்திருக் கிறீர்கள். மனத்தில் இருக்கும் அந்தக் கணவரைத் தான் உங்களுக்கு நிரம்பப் பிடித்திருக்கிறது. ஆனால், இவர் அப்படி இல்லை. உங்கள் மனத்தில் இருப்பவர் வேறாகவும், இவர் வேறாகவும் இருக்கிறார்கள். எனவே, இவர் எப்படி நடந்து கொண்டாலும் உங்களுக்கு எரிச்சல் வருகிறது…+
கணவனிடம் திரும்பி சொன்னார்; =உங்களுக்கும் சிக்கல் அதுதான். உங்கள் மனத்துக்குள் நீங்கள் விரும்பும் மனைவி ஒருத்தி குடியிருக்கிறார்… அவர் மாதிரி இவர் இல்லை… எனவே எப்போதும் சலிப்பு… கோபம்… வெறுப்பு… இவருடன் சண்டை… என்றார்.
மறுக்க இயலாத உண்மை இல்லையா இது? குடும்பத்தில் அமைதி இல்லாமல் வாழும் எவரை எடுத்துக் கொஞ்சம் உரசிப் பார்த்தாலும் இந்த நிலைதான் இருக்கும். மணமுறிவு கேட்டு நீதிமன்றத்தின் வாசலில் நிற்கும் எந்தக் கணவன் மனைவிக்கும் இந்தக் கதை நிச்சயம் பொருந்துகிறது.
எதிர்பார்ப்பு வேறு; இருப்பது வேறு என்ற இரட்டை மனப்பான்மையுடன் வாழ்ந்து வாழ்க்கையில் அமைதியைத் தொலைத்து, வெற்றிகளை இழந்து, வறண்ட மனநிலையுடன் வாழ்வது, கணவன் – மனைவி என்னும் உறவு மட்டும் தானா? நம்மையும் சரி, நம்மைச் சுற்றி வாழ்பவர்களையும் சற்று உற்றுப் பார்த்தால், பல் வேறு சிக்கல்களுக்குக் காரணமே இந்த இரட்டை மனப்பான்மைதான் என்பது தெரிகிறது.
=நான் நினைச்சா மாதிரி அவன் இல்ல…+ =அவன் இப்படி மாறுவான்னு நான் நினைக்கல+ பழகின, நெருக்கமான நண்பர் பற்றி இப்படி எண்ணாதவர்கள், நம்மில் எத்தனை பேர்…? அல்லது, நம்மைப் பற்றிய இந்த வருத்தத்தை நம்மிடமே பிறர் சொல்லிக் கேட்கிறோமா இல்லையா…? காரணம் என்ன…?
நமக்குள் வாழும், எப்படியெல்லாம் ஒரு நண்பர் நமக்கு இருக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படும் நண்பர் வேறு… நாம் பழகும் நண்பர் வேறு. நமக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும், நாம் விரும்பும் நண்பனின் சாயல் கொஞ்சம் யாரிடம் தெரிகிறதோ, அவருடன்தான் நாம் நட்பே பாராட்டுகிறோம். அப்படி இல்லாதவரிடம் பழகவே முடிவதில்லை. நாம் மனத்துக்குள் விரும்பும் நண்பனின் சாயல் சற்றும் இல்லாதவரை நம்மால் ஏற்றுக் கொள்ளவே முடிவதில்லை. சிலரைப் பார்த்தாலே பிடிக்காமல் போவதன் காரணமும் இதுதான்.
விரும்பிப் பழக ஆரம்பித்த பின்னர், அந்த நண்பரின் வேறு சில சாயல்கள் தெரியத் தொடங்கும்போது, நமக்குள் வாழும் நமக்குப் பிடித்த நண்பருடன் அவர் முரண்படுகிறார். எனவே, நட்பில் பிரிவு அல்லது பிளவு தோன்றி விடுகிறது.
வீடுகளிலும் அப்படித்தான். ஒரு குழந்தை இருக்கும் வீடுகளில், உண்மையில் மூன்று குழந்தைகள் வாழ்கின்றன. அப்பா மனத்துக்குள், அவர் விரும்பும் குழந்தை ஒன்று வாழ்ந்து கொண்டிருக்கும். அம்மா மனத்துக்குள், அவர் விரும்பும் குழந்தை ஒன்று வாழ்ந்து கொண்டிருக்கும். பிறந்த குழந்தை ஒன்று வீட்டுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும்.
அப்பாவும் அம்மாவும் தங்களுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் இரண்டு குழந்தைகளையும் தங்களுக்குப் பிறந்த வாரிசின் மேல் திணிப்பார்கள். தாத்தா, பாட்டி இருவரும் இருக்கும் வீடு என்றால், இந்தக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிடும். அம்மா வழி தாத்தா, பாட்டி, அப்பா வழி தாத்தா பாட்டி என எல்லோரும் வீட்டுக்கு வந்து போக இருக்கும் வீடுகளில், இந்தக் கற்பனைக் குழந்தைகள், கண்ணில்படும் இடங்களில் எல்லாம் திரியும். அந்த வீட்டில் பிறந்து வாழும் குழந்தையின் நிலை என்னாகும்? அப்புறம், வீட்டில் எப்படி மகிழ்ச்சி இருக்கும்?
அவ்வைக்கு சுட்ட பழம் கிடைத்த மாதிரி, ஒரு முறை சிறுவன் ஒருவன் எனக்குச் சூடு வைத்தான். வறுமையிலும், அறியாமையிலும் சிக்கிக் கிடந்த குடும்பத்திலிருந்து அவன் பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தான். அவனது குடும்பச் சூழல் தெரியும் என்பதால், சில ஊக்க வார்த்தைகளும், சிறு உதவிகளும் கொடுத்து வந்தேன். மதிப்பெண் மிகக் குறைவாக ஒருமுறை வாங்கி இருந்ததால், அவன் தாய் அவனை அழைத்து வந்து முறையிட்டார்.
=அவனைத் திட்டாதீர்கள்…+ என்று தாயிடம் சொல்லிவிட்டு, சிறுவனிடம் திரும்பி… =என்னப்பா… இவ்வளவு குறைவாக மதிப்பெண் வாங்கி இருக்கிறாயே… நீ ரொம்ப நல்லா படிக்கிறவன்னு நான் உன்னை நினைச்சிக்கிட்டிருந்தால், நீ இப்படிப் பண்ணிட்டியே…+ என்றேன். முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு அவன் சொன்னான். =நீங்க ஏன் அண்ணே! என்னப் பத்தி அப்பிடியெல்லாம் நினைச்சிக்கிறீங்க?+
=பளார்+ எனக் கன்னத்தில் விட்டது போலிருந்தது எனக்கு. =நல்லா படியப்பா…+ என்று அவனிடம் சொல்வது வேறு… =அவன் நல்லா படிப்பான்…+ என்று நானாக நினைத்துக் கொள்வது வேறுதானே..?
நாமாக மனத்துக்குள் ஒன்றை நினைத்துக் கொள்வதுதான், பல நேரங்களில் நமக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. எது எதுவாக இருக்கிறதோ, அதை அதுவாகவே பார்ப்பதும், அதை அதுவாகவே ஏற்றுக் கொள்வதும்தான், மன அமைதிக்கான வழி.
மரத்தை மறைத்தது மாமத யானை;
மரத்தில் மறைந்தது மாமத யானை.
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்;
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்
என்று திருமூலர் சொன்னது, பரம் பொருளுக்கு மட்டுமா பொருந்துகிறது…? நம்மைப் போன்ற பாமரர்களுக்கும்தான்!

No comments: