Monday, March 5, 2012

எளிய பொருட்களில் அரிய விஷயங்கள்!

ஒரு வயலின் கம்பியில் வடிவெடுத்தது முதல் டேப் ரிக்கார்டர். இரண்டு அடுப்புக் கரித் துண்டுகளில் உருவெடுத்தது முதல் மைக்ரோபோன். இவற்றையெல்லாம் கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், உலகின் எல்லாப் பெரிய கண்டுபிடிப்புகளும் இப்படித்தான் உருவாகின.
எண்ணத்தைச் செயலாக்கும் திறன் விஞ்ஞானிக்கு இன்றியமையாததாகும். ஒருவன் அறிவில் சிறந்தவனாக இருக்கலாம். சிறப்புக்குரிய பல கருத்துகளைக் கொண்டவனாக இருக்கலாம். ஆனால் அந்தக் கருத்துகள் நடைமுறையில் செயல்படுத்தப்படாத வரையில் வெறும் யோசனைகளாகவே இருக்கும். கண்டுபிடிப்புகள் ஆவதில்லை.
நம்மிடம் விஞ்ஞான யோசனைகள் இருந்தாலும் அவற்றைச் செயல்படுத்த நிறையப் பணம் வேண்டும், பெரிய ஆய்வுக்கூடத்தை நிறுவ வேண்டும் என்று நாம் நினைக்கலாம். ஆனால் விஞ்ஞான வரலாற்றைப் பார்க்கும்போது உலகில் தோன்றிய பல அரிய பெரிய கண்டுபிடிப்புகள் யாவும் சாதாரண விஷயங்களில் தோன்றியவையே என்பது விளங்கும். ஒருவருடைய திறமையும், சமயோசிதமுமே அவரது கருத்துக்கு உயிரூட்டும்.
கருத்துக்கு எளிதில் உருவளிக்கும் மதிநுட்பமே செயல்திறனாகும். டேப் ரிக்கார்டரின் கதை அத்தகையதே. டேப் ரிக்கார்டரின் தத்துவத்தை முதன்முதலில் கண்டவர் பால்சன் என்பவர். ஒருநாள் அவருக்கு ஓர் எண்ணம் உதித்தது. `உருக்குத் துண்டில் ஏற்றப்பட்ட காந்த சக்தி நிலையானதாக அமைகிறது. உருக்குத் துண்டை மின்சக்தி கொண்டு காந்தமாக ஆக்கலாம். அப்படியானால், ஏன் மாறுபடும் ஒலி மின்சாரத்தை (Voice currents) மாறுபடும் நிலைக்காந்தப் பகுதிகளாக ஓர் உருக்குக் கம்பியில் பதிக்கக் கூடாது? இதுதான் அவருடைய எண்ணம். ஆம்! ஒரு புதிய கருத்து.
கருத்தைச் செயல்படுத்த வேண்டாமா? அவரிடம் பெரிய சோதனைக்கூடம் இல்லை. அவர் பணக்காரரும் கிடையாது. ஆனால் அதுபற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை.
அவரது வீட்டில் உருக்கால் ஆன வயலின் கம்பி ஒன்று, கேட்பாரற்று ஒரு மூலையில் கிடந்தது.
அதை எடுத்து, இரண்டு ஆணிகளுக்கு இடையில் இறுகக் கட்டினார். தேனிரும்பு ஆணி ஒன்றின் மேல் செப்புக் கம்பி சுற்றிய நிலை மின்காந்தத் தலை (Temporary Electromagnetic Head) ஒன்றையும் தயாரித்தார். அந்த மின்காந்தத்தை ஒரு மைக்ரோபோன் பேட்டரி சர்க்யூட்டில் இணைத்தார். மைக்கின் முன் பேசியபடியே கம்பிச்சுருள் சுற்றிய ஆணியை வயலின் கம்பியின் மேல் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு நகர்த்தினார்.
பின்னர் பேட்டரியையும், மைக்கையும் எடுத்துவிட்டு அந்த இடத்தில் ஒரு பெல் ரிசீவரை பொருத்தினார். இப்போது ரிசீவரை தன் காதில் வைத்து திரும்பவும் ஆணியை வயலின் கம்பியின் மேல் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு இழுத்தார்.
என்ன ஆச்சரியம்! அவர் முதலில் பேசிய சொற்கள் ரிசீவரில் மெதுவாகக் கேட்டன. ஆம், கம்பியில் அவை நிலைக்காந்தப் பகுதிகளாகப் பதிந்துவிட்டன. பால்சனின் எண்ணம், செயல்முறையில் நிரூபணமானது. முதல் டேப் ரிக்கார்டரும் பிறந்தது.
அதே போல ஹயூ என்பவர் இரு கரித்துண்டுகளை ஒரு பலகையின் மேல் பதித்தார். கரித் துண்டுகளுக்கு இடையில் மற்றொரு கரித்துண்டை தளர்வாக இணைத்தார். அதை ஒரு பேட்டரி, ரிசீவர் சர்க்யூட்டில் இணைத்தார்.
நடுவில் இணைத்திருந்த கரித்துண்டுக்கு அசைவு ஏற்படும்போதெல்லாம் அது ஒலி அலையாக ரிசீவரில் பிரதிபலிப்பதைக் கண்டார். கரித்துண்டுகளுக்கு அருகில் ஒரு கடிகாரத்தை வைத்தார். `டிக்... டிக்...' என்று கடிகாரத்தின் ஓசை ரிசீவரில் துல்லியமாகக் கேட்டது. முதலாவது மைக்ரோபோனும் உருவானது.

No comments: