Friday, March 9, 2012

சூட்கேஸ் அளவில் ஒரு அணுமின் நிலையம்!

மனித வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளுள் மிக மிக முக்கியமானது வெளிச்சம் அல்லது ஒளி. பகல் நேரத்தில் அந்த வெளிச்சத்தை வாரி வழங்கிக்கொண்டிருக்கிறது சூரியன். அந்த சூரியனிடம் போய், `இதே வெளிச்சத்தை இரவிலும் கொஞ்சம் தரக் கூடாதா' என்றெல்லாம் கேட்க முடியாது!
ஆக, இரவுக்கான வெளிச்சத்தை நாம்தான் உற்பத்தி செய்துகொள்ள வேண்டும். இரவுக்கான வெளிச்சம் மட்டுமல்லாது, மனித வாழ்க்கைக்கு தேவையான பல வசதிகளை பூர்த்தி செய்கிறது மனித கண்டுபிடிப்பான மின்சாரம். இன்றைய நவநாகரீக உலகில் மின்சார உற்பத்திக்கு பல வழிகள் உள்ளன. உதாரணமாக, காற்றாலை, சூரிய ஒளி, தண்ணீர் மற்றும் அணுசக்தி போன்றவற்றை சொல்லலாம்.
நாம் வாழ்கின்ற பூமியில் மட்டுமல்லாமல், வாழப்போகின்ற எதிர்கால பூமியாக மாறக்கூடிய வேற்று கிரகங்களான செவ்வாய், நிலவு போன்ற இடங்களிலும் நமக்கு வெளிச்சம் தேவை. அதற்கு அங்கும் மின்சாரத்தை உற்பத்தி செய்தாக வேண்டும்.
முக்கியமாக, நிலவு, செவ்வாய் உள்ளிட்ட பல வேற்று கிரகங்களில் இரவு பகலாக உழைத்துக்கொண்டிருக்கும் விண்வெளி ஆய்வாளர்களுக்கு உடனடித் தேவையாக இருக்கிறது மின்சாரம். தற்போது சூரிய ஒளி மற்றும் பியூவல் செல்கள் (எரிபொருள் கலங்கள்) கொண்டுதான் விண்வெளி ஆய்வுக்கு தேவையான மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
ஆனால், மின்சாரம் தயாரிக்க உதவும் இவ்விரு தொழில்நுட்பங்களுக்கும், அணுசக்தி தொழில்நுட்பத்திற்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு. அதாவது, விண்வெளி மட்டுமல்லாமல் பிரபஞ்சத்தின் எந்த சுற்றுச்சூழலிலும், அணுசக்தியால் மட்டும்தான் தேவைக்கு அதிகமான மின்சாரத்தை தயாரிக்க முடியும்! ஆனால், சூரிய ஒளி மற்றும் பியூவல் செல்கள் மூலம் குறிப்பிட்ட அளவு மின்சாரம்தான் தயாரிக்க முடியும். அதேசமயம், சூரிய ஒளி இல்லாதபோது மின்சாரம் தயாரிக்க முடியாது!
ஆனால், விண்வெளியில் அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. காரணம், பல ஏக்கர் நிலப்பரப்பு வரை வியாபித்துக்கொள்ளும் மிகப்பெரிய எந்திரங்கள், கட்டிடங்கள், அணு உலைகள் மற்றும் கூலிங் டவர்கள்தான். இதனாலேயே அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது விண்வெளியில் இதுவரை சாத்தியப்படவில்லை!
அணுசக்தி தொழில்நுட்பங்களில் ஒன்றான `நியூக்ளியர் பிஷன்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வை கண்டுபிடித்திருக்கிறார் அமெரிக்க விஞ்ஞானியான ஜேம்ஸ் இ.வெர்னர்.
`நியூக்ளியர் பிஷன்' தொழில்நுட்பம் என்றால் என்ன?
ஒரு அணுவை விட சிறிய அளவிலான நியூட்ரானைக் கொண்டு ஒரு யுரேனியம் அணுவை உடைக்கும்போது, யுரேனிய அணுக்கருவிலிருந்து பல நியூட்ரான்களும், போட்டான்களும் வெளியாகும். இந்த வேதியியல் நிகழ்வின்போது அளவுக்கதிகமான அணு சக்தியும் வெளியாகிறது. இந்த வேதியியல் வினைக்கு நியூக்ளியர் பிஷன் அல்லது `அணுக்கரு பிளவு' என்று பெயர்.
அணுக்கரு பிளவின்போது வெளியாகும் அணுசக்தியை கொண்டு, ஒரு நீராவி எந்திரத்தை இயக்குவதன் மூலம் மின்சாரத்தை தயாரிக்க முடியும். தற்போது பல ஏக்கர் பரப்பளவுகளில் அமைந்திருக்கும் அணுமின் நிலையங்களை, ஒரு `சூட்கேஸ்' அளவிற்குள் அடைத்துவிடும் ஒரு அட்டகாசமான தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து அசத்தியிருக் கிறார் அணு விஞ்ஞானி ஜேம்ஸ் இ.வெர்னர்!
இந்த சூட்கேஸ் அணுமின் நிலையத்தின் அளவு ஒன்றரை அடியிலிருந்து இரண்டரை அடிகள் வரைதான். அளவில் மிக மிக சிறியதான இந்த சூட்கேஸ் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானதும் கூட என்பது குறிப்பிடத்தக்கது! இதனைக் கொண்டு நிலவு, செவ்வாய் அல்லது நாசா நினைக்கும் எந்த இடத்திலும் தொடர்ந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் என்கிறார் வெர்னர்.
இந்த சூட்கேஸ் அணுமின் நிலையத்தைக் கொண்டு நிலவில் சுமார் 40 kilo watts (அதாவது, சுமார் 8 வீடுகளுக்கு தேவையான மின்சாரம்) அல்லது அதற்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்! இதில் இன்னொரு முக்கியமான வசதி என்னவென்றால், எரிமலைவாய், மலைக்குன்றுகள் மற்றும் குகைகள் என பலதரப்பட்ட இடங்களில் இந்த சூட்கேஸ் அணுமின் நிலையத்தை பயன்படுத்தலாம்.
தற்போது ஆய்வுக்கூடத்தில் இருக்கும் இந்த அதி நவீன தொழில்நுட்பத்தின் `டெமான்ஸ்ட்ரேஷன் யூனிட்டை' இந்த ஆண்டின் இறுதிக்குள் உருவாக்கிவிடுவோம் என்கிறார் விஞ்ஞானி வெர்னர்!
இந்த சூட்கேஸ் அணுமின் நிலையம் ரெடியாகிவிட்டால் போதும். `சரி சரி, எல்லாரும் பொட்டியக் கட்டிக்கிட்டு சீக்கிரம் கிளம்புங்க. நிலவுக்கு போற விண்வெளி பஸ் வந்து ரொம்ப நேரமாச்சு' என்று நம்மவர்கள் நிலவுக்கு போகும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பது உண்மைதான்.

No comments: