
இந்திய மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று, வெற்றிலை. அது நல்ல தருணங்களின் சின்னம். திருமணம், வழிபாடு முதலியவற்றில் முக்கிய இடம் பெறுவது வெற்றிலை. சுபகாரியங்களில் வெற்றிலை `தாம்பூலம்' என்ற சிறப்புப் பெயர் பெறுகிறது.
மருத்துவ குணம் வாய்ந்த வெற்றிலை, வரலாற்றுக் காலத்திலேயே புகழ்பெற்றுத் திகழ்ந்திருக்கிறது. 1500 ஆண்டுகளுக்கு முன்பே வெற்றிலை போடும் பழக்கம் இருந்து வந்திருப்பதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. பண்டைக் காலத்துப் பெண்கள் தமது அழகுப் பொருட்களில் வெற்றிலைக்கு முக்கியமான இடத்தைக் கொடுத்தனர்.
அரசர்களும் வெற்றிலையைப் போற்றிப் பயன்படுத்தினர். உதாரணமாக, மொகலாய மன்னர்கள் இதற்கு ஏற்றம் தந்தனர். மொகலாய அரச பரம்பரையைச் சேர்ந்தவர்களுக்கு மொகலாய மன்னர்கள் வெற்றிலை போடுவதற்காகத் தனியாக மானியமே அளித்துவந்தனர்.
அழகான வெற்றிலைப் பேழையில் வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு மட்டுமின்றி கிராம்பும், வேறு வாசனைப் பொருட்களும் சேர்ந்திருக்கும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த தாம்பூலம், தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட இலைகளில் பொதியப்பட்டிருக்கும். அந்த மரியாதை, மொகலாய அரச பரம்பரையைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் கிடைக்கும்.
மொகலாய மன்னர்கள் வெற்றிலைப் பழக்கத்துக்காக பெரும் பணத்தைச் செலவு செய்தனர். ஷாஜகான் மன்னர் தனது மகளின் தாம்பூலச் செலவுக்காக சூரத் மாநிலத்தின் வருவாய் முழுவதையும் ஒதுக்கி வைத்தாராம்.
ராஜதந்திர விஷயங்களிலும் வெற்றிலை இடம்பெற்றது. பெர்ஷியாவின் ஷா மன்னர், இந்தியாவை தனது ஆட்சிக்கு உட்படுத்த எண்ணம் கொண்டிருந்தார். அதை அறிந்த மொகலாய மன்னர் அவுரங்கசீப், ஷா மன்னரைத் திருப்தி செய்யும்பொருட்டு அவருக்கு உயர்ந்த ரக வெற்றிலையை அனுப்பி வைத்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
புதிய கண்டங்களையும், நிலப்பகுதிகளையும் கண்டுபிடித்து வந்த மார்க்கோபோலோ, ஷான் மார்ஷ் போன்ற சர்வதேசப் பயணிகள் இந்திய மக்களின் வெற்றிலை போடும் பழக்கத்தைப் பற்றி சுவையான கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர்.
பல கவிஞர்கள் வெற்றிலையின் புகழைப் பாடியிருக்கின்றனர். ஆகவே இறவாத இலக்கியங்களிலும் வெற்றிலை இடம்பெற்றிருப்பது அதன் சிறப்பைக் காட்டுகிறது. வெற்றிலை கொடி வகையைச் சேர்ந்தது. அது படர்வதற்கு ஆதரவு வேண்டும். எனவே தென்னை, கமுகு போன்றவற்றுடன் வெற்றிலையைப் பயிரிடுகிறார்கள். வெற்றிலைச் சாகுபடி ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த தொழிலாகும்.
வெப்பப் பிரதேசங்களில் வெற்றிலை அதிகம் பயிராகிறது. இதற்கு எப்போதும் நிழலும், தண்ணீரும் தேவைப்படுகின்றன. வறட்சிப் பகுதிகளைத் தவிர இந்தியாவில் ஏறக்குறைய எல்லா மாநிலங்களிலும் வெற்றிலை பயிராகிறது.
No comments:
Post a Comment