Friday, February 24, 2012

தென்னாட்டுப் போர்க்களங்கள் வரலாற்று தொடர் பகுதி – 1

தென்னாட்டுப் போர்க்களங்கள் வரலாற்று தொடர் பகுதி – 1


“வீரம் செறிந்த தமிழ்நாடு!”
“புகழ் மண்டிக்கிடக்கும் தமிழ்நாடு”
“கல்வி சிறந்த தமிழ்நாடு”
“செல்வம் எத்தனை உண்டு புவிமீதே
அவை யாவும் படைத்த தமிழ்நாடு”
வீரம், புகழ், கல்வி, செல்வம் ஆகிய பண்டைத் தமிழகத்தின் மரபு வளங்களை எண்ணிப் பெருமைப்படுகிறார் கவிஞர் பாரதியார். இந்நான்கு கூறுகளிலுமே தமிழகம் இன்று அடைந்துள்ள நிலையை எண்ணினால் பாரதியார் உரைகளை நாம் கவிஞர்களுக்கு இயல்பான மிகை உரைகள் என்றோ, புனைந்துரைகள் என்றோதான் கருதவேண்டி வரும். ‘கொடுக்கிலாதானைப் பாரியே’ என்றும், போர்க்களம் காணாதவனைப் புலியேறு என்றும் புகழும் கவிராயர் மரபில் இவையும் சேர்ந்தவைதானோ என்று எண்ணத்தோன்றும்.
கவிஞர் பாரதியாருக்கே இத்தகைய ஐயங்கள் ஏற்பட்டிருந்தன என்னவோ, அவர் அவற்றை வரலாற்றுப் புலவன் மரபில் நின்று வகுத்துரைக்க முயன்றுள்ளார்.
கம்பன், இளங்கோ, வள்ளுவர் ஆகிய கலைச் சிகரங்களை அவர் நமக்கு எடுத்துக் காட்டுகிறார். அக் கல்விக் கடல்களைத் தந்த தமிழ்நாடு ‘கல்வி சிறந்த தமிழ்நாடே” என்பதை மெய்ப்பிக்கின்றார். இதுபோலவே ‘வீரம் செறிந்த தமிழ்நாடு’ ‘புகழ் மண்டிக்கிடக்கும் தமிழ்நாடு’ ‘செல்வம்….யாவும் படைத்த தமிழ்நாடு’ என்ற கூற்றுக்களையும் அவர் வகுத்து விளக்க முற்பட்டுள்ளார்.
புனைந்துரையன்று, வரலாறே!
தமிழகத்தின் வீரப்புகழ் வெறும் புனைந்துரையன்று, மிகையுரையன்று. வரலாறு காட்டும் செய்தியே ஆகும். கவிஞர் பாரதியார் அவ் வரலாற்றுச் செய்திகளைத் திரைப்படக் காட்சிகளைப் போல நம் முன் ஓடச் செய்கிறார்.
“விண்ணை இடிக்கும் தலை இமயம்-எனும்
வெற்பை அடக்கும் திறலுடையார்- சமர்
பண்ணிக் கலிங்கத்து இருள் கெடுத்தார்- தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு”
நில எல்லையில் தமிழர் பண்டைப் பெரு வெற்றிகள் இமயத்தை அடக்கின. தமிழ் மூவேந்தரும் வில், கயல், புலி ஆகிய முத்தமிழ்க் கொடிகளையும் இமயமலை உச்சியில் பொறித்தார்கள். நில உலகத்தின் கூரை எனப்படும் இமயம் தமிழ் வீரப் புகழை வானகத்துக்கு எடுத்துரைத்தது. அது தமிழர் தம் கொடி மரமாகவே அன்று நிலவிற்று. அத்துடன் இமயத்துக்கு அடுத்த வட நாடாகிய கங்கை நாட்டையும் இடை நாடுகளாகிய வங்கத்தையும், கலிங்கத்தையும் வென்று அவர்கள் போர்ப் பரணி பாடினார்கள்.
கரிகால சோழன் இமயம் கடந்து மேருமலையின் உச்சியையே தாக்கினான். அதைத் தன் தெண்டாயுதத்தால் அடித்து அதன் தருக்கை அடக்கினான். அதன் முன்புற நெற்றியில் மட்டுமின்றிப் பின்புறத்திலும் தன் புகழ் எழுதுவதற்காக அவன் அதன் தலையைத் திருகினான். இருபுறங்களிலும் தன் புலிக்கொடி பொறித்து, வடதிசைப் பெரு மன்னரிடம் பெரும் பொருள் திறைகொண்டு மீட்டான்.
சேரன் செங்குட்டுவன் கங்கைக் கரை கடந்து ஆரியர் அரசன் கனகன், விசயன் ஆகியவர்களை முறியடித்தான். அவர்கள் தலைகள் மீதே இமய மலையின் பெருங்கல்லொன்றை ஏற்றிக்கொண்டு தமிழகத்துக்கு வந்தான். தன் தலைநகராகிய வஞ்சியில் தமிழர் கற்புத் தெய்வமாகிய கண்ணகிக்கு அக் கல்லிலேயே சிலை செதுக்குவித்தான். இது தமிழ் பெரும் காப்பியமான சிலப்பதிகாரம் தரும் செய்தியாகும்.

கடல் கடந்த வெற்றிகள்
நில எல்லையில் தமிழர் வெற்றிகள் இவை. ஆனால் ஏனைய கீழ்த்திசை மன்னரைப்போல, அசோகன், அர்சன், அலாவுதீன், அக்பர் ஆகியவர்களைப் போலத் தமிழர் நிலப் பேரரசுடன் நின்றவரல்லர். அவர்கள் தமிழ்க் கொடிகள் கடல் அலைகள் மீதும் தவழ்ந்தன. பாரதியார் கவிதை மொழிகளிலே இந்த வெற்றிகளும் எதிரொலிக்கின்றன.
சிங்களம், புட்பகம், சாவகம் – ஆகிய
தீவுபலவினும் சென்றேறி – அங்கு
தங்கள் புலிக்கொடி, மீன்கொடியும் – நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு.
தமிழர் கைவரிசைகள் கடல் கடந்த நாடுகளாகிய இலங்கை, பர்மா, மலாயா, அந்தமான் – நிக்கோபார்த் தீவுகள், சுமத்ரா, ஜாவா, இந்து- சீனா ஆகிய தென் கிழக்காசியப் பகுதிகளிலும் பரவியிருந்தன.  அந்நாடுகளிலெல்லாம் பாண்டியர் தங்கள் மீன் கொடியையும்- சோழர் தங்கள் புலிக்கொடியையும் நாட்டி ஆட்சியும், வாணிகமும், கலையும் பரப்பியிருந்தனர்.
கிழக்கே சென்ற கை மேற்கேயும் செல்லத் தவறவில்லை. சேரரும், சோழரும், பாண்டியரும் மாலத்தீவங்கள், இலக்கத் தீவங்கள், கடம்பர் மூலதனமான வெள்ளைத் தீவு, யவனர் நாடு ஆகியவற்றில் தம் ஆணை பரப்பியிருந்தார்கள். அவர்கள், வாணிகமும், தொழிலும், குடியேற்றங்களும் இவ்வெல்லை கடந்து கிழக்கே சீனம், சீயம் (சயாம்) நாடுகளையும், மேற்கே சிந்துவெளி, ஏலம், சுமேரிய நாகரிகங்கள், பாபிலோனியா, அசிரியா, பாலஸ்தீனம், எகிப்து, உரோமகம் ஆகிய நாடுகளையும் அளாவி ஒளி வீசின, கவிஞர் பாரதியாரின் மொழிகள் இவற்றையும் சுட்டிக்காட்டுகின்றன.
சீனம், மிசிரம், யவனரகம் – இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் – கலை
ஞானம், படைத்தொழில், வாணிபமும் – மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு.
சிங்களம் இலங்கையையும், சாவகம் மலாயா, சுமத்ரா, ஜாவா ஆகிய நாடுகளையும், புட்பகம் பர்மாவையும் மிசிரம் எகிப்தையும், யவனரகம் உரோம நாடுகளையும் குறிப்பவை. தவிர, பண்டைத் தமிழ் இலக்கியத்தில் மலாயா நாடு கடாரம் என்றும், காழகம் என்றும், பர்மா அருமணம் என்றும் அழைக்கப்பட்டன. காழகம் கலிங்கம் என்ற நாட்டின் பெயர்கள் தமிழ் இலக்கியத்தில் அந் நாடுகளுக்குரிய துணி வகைகளின் பெயர்களாகவும் வங்க நாட்டின் பெயர் கங்கையாற்றில் செல்ல உதவிய தட்டையான கப்பல் வகையின் பெயராகவும் விளங்கின. இலங்கையின் பெயராகிய ஈழம் பொன்னின் பெயராக விளங்கிற்று. இவை தமிழரின் மிகப் பழமை வாய்ந்த கடல் கடந்த அயல் நிலத் தொடர்புகளுக்குத் தமிழ் மொழியே தரும் அகச் சான்றுகள் ஆகும்.
ஆரியர் இமயம் கடந்து வருவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்பே தமிழினத்தவர் எழுத்தும் கலையும் நாகரிகமும் உடையவராய், சிந்து கங்கை வெளியெங்கும் நாடு நகரங்களும் கோட்டை கொத்தளங்களும் நிறுவி வாழ்ந்தனர். கி.மு.3000 ஆண்டளவிலேயே அவர்கள் சிந்து வெளியிலும் ஏலம், சுமேர் ஆகிய இறந்துபட்ட நாகரிக வெளியிலும் வாணிகம் செய்தும் குடியேறியும் நாகரிகம் பரப்பியுமிருந்தனர். ஏலம், சுமேர் மக்களும் எகிப்தியரும் தமிழரின் பண்டைக் கிளையினங்களாகச் சென்று குடியேறியவர்கள் என்று பல அறிஞர்கள் கருதுகின்றனர். திருத்தந்தை ஈராஸ் தமிழினத்தவரில் ஒரு சாராரான திரையர் அல்லது திராவிடர் நடுநிலக் கடலெங்கும் பரந்து, இசுபெயின், பிரான்சு, இங்கிலாந்து முதலிய நாடுகளிலும், நடு அமெரிக்காவிலும் கூட வாழ்ந்து பண்டைப் பெரு நாகரிகங்கள் வளர்த்திருந்தனர் என்று கருதுகிறார். இப்போதுள்ள மனித இனம் நாகரிகம் அடையுமுன்பே உலகெங்கும் பரவியிருந்த மரபிழந்து போன ஒரு முன்னைய நாகரிக இனத்தின் உயிர்க்கால் வழியே வந்தது தமிழ் இனம் என்பார் ‘உலக வரலாறு’ எழுதிய எச்.ஜி.வெல்சு.
உள் வளர்ச்சி
மனித இன வரலாறு எங்கும் பொதுவாக வளர்ச்சியையே காட்டவேண்டும், வளர்ச்சியையே காட்டுகிறது. ஆனால் கீழை உலக வரலாறு பொதுவாகவும் தமிழக வரலாறு சிறப்பாகவும் இதற்கு மாறான போக்கைக் காட்டுகிறது. வாழ்ந்த தமிழகம், உலகாண்ட தமிழகம், உலகின் செல்வம் திறைகொண்ட தமிழகம் படிப்படியாகத் தாழ்வுற்று இன்றைய அவல நிலையை எட்டியுள்ளது என்பதையே வரலாறு காட்ட வல்லது. ஆனால் இது தமிழகத்தின் வரலாறு மட்டுமல்ல, தமிழகத்துடன் ஊடாடிய பண்டைப் பெரு நாகரிக இனங்கள் அனைத்தின் வரலாறுகளும் இதுவே. உண்மையில் அவ்வினங்களில் பல இன்று தடமற அழிந்துவிட்டன. பண்டை பினீசியா, கார்தேஜ், இட்டைட் பேரரசு, ஏலம், சுமேர் ஆகியவை இன்று புதைபொருள் ஆராய்ச்சியால் மட்டுமே அறியப்படவேண்டியவை ஆகியுள்ளன. எகிப்தியர், பாரசீகர், கிரேக்கர், உரோமர் ஆகியோர் தம் நாட்டில் பிற இனங்கள், பிற நாகரிகங்கள் சமயங்கள் வாழவிட்டு தம் புகழை மட்டும் நாகரிக உலகில் தடம் பொறித்துச் சென்றுள்ளனர். சீனரும் தமிழரும் மட்டுமே பண்டைப் புகழைத் தாமே தற்கால உலகிற்கு அளிக்கும் பழமைத் தூதுவராக இன்று தற்கால உலகிலே காட்சியளிக்கின்றனர்.
தமிழர் வரலாற்றுக்கும் சீனர் வரலாற்றுக்கும் ஒரு பெரிய வேற்றுமை உண்டு. சீனர் வரலாறு சீனத்தின் பழம் புகழை மட்டுமே காட்டுகிறது. தற்காலச் சீனம் அழியாது நின்று புது வாழ்வும் அவாவி நிற்பது உண்மையே. ஆனால் இன்றைய சீனத்தின் புது வாழ்வு இன்றைய உலகத்தின் புது வாழ்வில் ஒரு பகுதியே. அது தன் பண்டைப் புகழின் புது மலர்ச்சியாகப் புதிய வளர்ச்சி பெறவில்லை. ஆனால் தமிழக வரலாறு பழம் புகழை மட்டும் காட்டவில்லை, அந்தப் புகழ் படிப்படியாகத் தளர்ந்து அவல நிலையுற்று உலகப் புதுவாழ்வில் புதுப்பங்கு பெறுவதை மட்டும் காட்டவில்லை. பழம் புகழின் தளர்ச்சியுடன் ஒரு புது நிகழ்ச்சியாக, அந்தப் புகழின் புது மலர்ச்சியையும் நாம் அருகருகே வரலாற்றில் காணலாம். தமிழகம் இன்று உலகின் புது வாழ்வில் பங்கு கொள்வதுடன் அமையவில்லை. உலகுக்கு ஒரு புது வாழ்வும் புது மலர்ச்சியும் உண்டு பண்ணும் வகையில் அது தன் பழம் புகழைப் புதுப்பிக்க முனைந்துள்ளது. அதுவே தமிழகத்தின் உள்ளேயும் அதற்கு வெளியே அகல் உலகிலேயும் இன்று நாம் காணத் தொடங்கியிருக்கும் இரு திசைப்பட்ட மறுமலர்ச்சித் துடிப்பு ஆகும்.
தமிழகத்தின் வரலாறு இவ்வகையில் தமிழகத்தில் பற்றுடைய தமிழர்க்கு மட்டுமின்றி, புதிய உலகில் பற்றுக்கொண்ட உலக வாணருக்கும் தனி முக்கியத்துவம் உடையதாகும். வருங்காலத் தமிழகத்துக்கு எச்சரிக்கை தரும் முறையில் அது பண்டைப் புகழ் நலிந்த வகைகளையும் காட்ட வேண்டும். வருங்காலத் தமிழகத்துக்கும் உலகுக்கும் ஊக்கம் தந்து புதுவழி காட்டும் முறையில், அப்பழம் புகழ் அழியாது நீடித்து நின்ற வகைகளையும் அதன் நலிவிடையே உள் விரவி எழுந்து வளர்ந்து வரும் புது மலர்ச்சியின் வளர்ச்சிகளையும் நன்கு எடுத்துக்காட்ட வேண்டும். இவ்விரண்டுக்கும் மூலாதாரமாக உலகம் நெடுநாள் மறந்துவிட்ட, சிற்சில சமயம் உலகின் கண்களிலிருந்து மறைக்கப்பட்டுவிட்ட, அப்பழம் புகழின் பண்பையும், அளவையும் நாம் ஆராய்ந்து மதிப்பிட்டுக் கணித்தறிவது இன்றியமையாத முதற்படியாகும்.
தமிழர் தேசீயம், அண்மையில் அமையக்கூடும் தன்னுரிமையும் பெற்ற தமிழகம் இதில் முனைந்து முன்னேறும் பெரும் பொறுப்புடையது. தமிழர் பழைய வாழ்வை உள்ளவாறறிய விரும்புகிறவர்களுக்குத் தமிழ் இலக்கியம் பொதுவாக ஒரு திரையிட்ட பலகணியாய் உதவுகிறது. சங்க இலக்கியம் இத்திரையின் ஒளியார்ந்த பகுதியேயாகும். ஆனால் காணும் கண்ணொளிக்கு விளக்கமாகப் பழமை ஒளி வந்து திரையில் கூடும் பகுதி புறநானூறு எனலாம். அது தொடர்ச்சியுடைய ஒரே வீர காவியமல்ல. ஆனால் தமிழர் வீர காவியங்களுக்கெல்லாம் அதுவே தலையூற்று எனலாம். தமிழர் வீர காவியங்கள் பலவற்றின் சிறுவண்ணப் படிவங்களின் தொகுதியாக அது விளங்குகிறது.
புறநானூற்றுக் காலத் தமிழகம்: இரு கருத்துரைகள்
தமிழ் வெறியர், தமிழ்ப் பற்றாளர்களை மட்டுமின்றி ஆறியமைந்த தமிழ் ஆர்வலர்களைகூடத் தட்டிஎழுப்ப வல்லவை புறநானூறு பற்றிக் காலஞ் சென்ற ராவ் பகதூர் எஸ். வையாபுரி அவர்கள், குறிப்பிட்ட இரண்டு,கருத்துகள். புறநானூற்றுக் காலத் தமிழினமும் இக்காலத் தமிழினமும் பெயராலும் உடலாலும் ஒன்று, உயிராலும் பண்பாலும் வேறு என்று கருதுபவர் அவர். தம்ழார்வலர் இன்று அவ்வாறு கருத முடியாது. பழந் தமிழினமும் இன்றைத் தமிழினமும் உயிராலும் பண்பாலும் ஒன்று; உடலாலும் சூழலாலுமே வேறுபட்டது என்றுதான் நாம் கருதுகிறோம். ஆயினும் இந்நிலையிலும் இராவ்பகதூர் அவர்களின் கருத்துக்கள் புதுமையுடையன, புத்துயிரும் புத்தூக்கமும் எழுப்புவன என்றே கொள்ளத்தக்கவை. அவற்றில் கருத்துச் செலுத்துவது பெறும் பயனுடையதாகும் என்பதில் ஐயமில்லை.
அவர் முதல் கருத்து வரலாற்று முக்கியத்துவம் உடையது. மொழி ஆராய்ச்சியாளரின் தனிப்பட்ட கவனத்திற்குரியது.
“முதலாவது நாம் கவனிக்கத்தக்கது, திராவிட மொழிகள் பலவும் புறநானூற்றுக்குப்பின், இவ்விரண்டாயிரம் ஆண்டுகளில் தோற்றியவைகளே. மலையாளம் சுமார் கி.பி.1200-ல் தமிழிலிருந்து கிளைத்தது. இதற்கு நான்கு அல்லது ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னே கன்னடமும் தெலுங்கும் கிளைத்தன.
“தமிழுக்கும் இவற்றுக்கும் இடையேயுள்ள தொடர்பு தாய்மை (சேய்மை)த் தொடர்பா, அல்லது தமக்கை தங்கைத் தொடர்புதானா என்ற விவகாரம் இப்போது அவசியமில்லை” ஆசிரியர் சுந்தரம் பிள்ளை,
“கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளம் துளுவும்
உன்னுதிரத்து உதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்”
என்று கூறியது பெரும்பாலும் உண்மையே என நடுநிலையாளர் எவரும் ஒப்புக்கொள்வர்.
“இம்மொழிகள் எல்லாம் தோன்றுவதற்கு முன்பு புறநானூற்றுச் செய்யுட்கள் தோன்றின என்று அச்செய்யுட்களின் தொன்மையும், அத்தொன்மையின் அளவும் புலப்படுத்தற்கு மாத்திரமே இங்கு இச்செய்தி கூறப்பட்டதாகும்”
ஆசிரியர் இரண்டாவது குறிப்பு நாம் மேலே சுட்டிக்காட்டிய அவர் அடிப்படைக் கருத்தின் விளக்கமேயாகும். இன்று தென்னாட்டவரிடையே தமிழர் அறிவிலும், மலையாளிகள் கலையுணர்விலும், கன்னடியர் பண்பிலும், தெலுங்கர் வீரத்திலும் மேம்பட்டுள்ளனர் என்று எவரும் எளிதில் காணலாம். பண்டைத் தமிழினம் இவ்வெல்லா மொழியினங்களையும் உட்கொண்டிருந்தது போலவே, இவ்வெல்லாத் திறன்களையும் ஒருங்குடன் கொண்டிருந்தது. ஆனால் அதில் மேம்பட்டு முனைப்பாய் இருந்த பண்பு என்று உண்டென்றால் அது வீரப் பண்பே. ஆசிரியர் வையாபுரி இதைத் தெள்ளத் தெளியப் புறநானூற்றிலே காண்கிறார்.
புறநானூற்றில் காணப்படும் வீரத்துக்கு ஓரளவு இணையாகச் சொல்லத்தக்க வெளியுலக இனங்கள் இந்தியாவில் இராசபுத்திர இனமும், ஐரோப்பாவில் வடதிசையில் முன்பு வாழ்ந்த டேனிய வடஜெர்மனிய இனமுமேயாகும். இவ்வீர மரபின் ஒரு சிறு தடத்தைக்கூட தற்காலத் தமிழினத்தில் காண முடியவில்லையே என்று இராவ்பகதூர் பெரிதும் கவல்கின்றார்.
“நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நமக்கு நாட்டுப் பற்று என்பது போய்விட்டது. நாட்டுக்காக உயிர் விடுதல் என்பது பழங்கதையே! வீரம், தீரம் என்பவை எல்லாம் அகராதியில் காணும் சொற்களாய் முடிந்தனவேயன்றி, அவற்றுக்கும் இன்றுள்ள நமது வாழ்க்கைக்கும் யாதொரு தொடர்பும் இல்லாமல் சென்றோழிந்தது. நாடு நலம் பெற வேண்டுமாயின், இந்நல்லுணர்ச்சிகளை நாம் மீண்டும் பெறுதல் வேண்டும். இங்கனம் செய்வதற்குப் புறநானாற்றுச் செய்யுட்களைவிட உற்ற துணை நமக்கு வேறு யாதும் இல்லை”
புது மலர்ச்சி

புறநானூறு பற்றி ஆசிரியர் வையாபுரி அவர்கள் கொண்டுள்ள கருத்து, அவர் ஆர்வம் இரண்டும் யாவராலும் வரவேற்கத்தக்கவையே. ஏற்றுக்கொள்ளத்தக்கவையே. ஆனால் புறநானூற்றில் அவர் கொண்டுள்ள மட்டுமீறிய ஆர்வத்தால் அவர் அப்புகழ் மிக்க வீரத்தின் தேய்வு நலிவுகளை மட்டுமே தமிழினத்திலும் அதன் வரலாற்றிலும் காண முடிகிறது. தேய்விடையே புதுத் தளிர்விட்டு, நலிவிடையே வளர்த்தொடங்கியுள்ள புது மலர்ச்சியை அவர் காணவில்லை என்பது தெளிவு. ஏனெனில் தமிழின வரலாற்றில் நாம் இந்த வீரத்தின் தேய்வை மட்டுமல்ல, அதன் புது வளர்ச்சியையும் காணலாம்.

No comments: