Wednesday, June 6, 2012

தீவிரவாதத்துக்கு எதிரான காப்பீடு!

தீவிரவாதத்துக்கு எதிரான காப்பீடு!

நாட்டில் அவ்வப்போது நடைபெறும் தீவிரவாதச் செயல்கள் மக்கள் மனதில் பீதியைக் கிளப்புகின்றன. தீவிரவாதத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்து வருகிறது. அதனால் இதுபோன்ற பாதுகாப்பை அளிக்கும் காப்பீட்டுத் திட்டங்களுக்கான பிரீமியத் தொகையும் அதிகரிக்கலாம். காரணம் நாட்டின் பல்வேறு காப்பீட்டு நிறுவனங்கள், தீவிரவாதத்துக்கு எதிராகப் பாதுகாப்பு அளிக்கும் காப்பீட்டுத் திட்டங்களுக்கான பிரீமியத் தொகையை அதிகரிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன.
தற்போதைக்கு, தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்புக்கு என்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் எதுவும் இல்லை. ஆனால் ஒருவர் வீட்டுக் காப்பீட்டுத் திட்டத்தில் தீவிரவாதக் காப்பீடு பெறலாம். அந்தக் காப்பீடு உங்கள் வீட்டுக்கும், அதில் அடங்கியுள்ளவற்றுக்கும் தீ விபத்து, நிலநடுக்கம், இடி-மின்னல், புயல், வெள்ளம் ஆகியவற்றுடன் தீவிரவாதத்தால் ஏற்படும் இழப்புக்கும் பாதுகாப்பு அளிக்கிறது.
இதில் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய் காப்பீட்டுக்கும் கூடுதல் பிரீமியத் தொகை செலுத்த வேண்டும். நீங்கள் செலுத்தும் இந்த பிரீமியத் தொகை, எல்லா காப்பீட்டு நிறுவனங்களும் பராமரிக்கும், தீவிரவாதத்துக்கு எதிரான பிரீமியத் தொகை நிதிக்குப் போகும். இழப்பீடு கோரப்படும்போது அது அந்தப் பொதுத் தொகையிலிருந்து அளிக்கப்படுவதால் ஒரே காப்பீட்டு நிறுவனம் அந்தச் சுமையைச் சுமக்க வேண்டியதில்லை.
முன்பு கூறியபடி, தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக எந்தத் தனிப்பட்ட காப்பீடும் இல்லை என்பதால், `உங்களுக்கு நீங்களே' என்ற அணுகுமுறையில் காப்பீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்ய வேண்டும். ஆயுள், மருத்துவம், விபத்து, வீடு, கார் என்று தனித்தனியாகக் காப்பீடு பெறுங்கள். அவற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான பாதுகாப்பு என்ற `ஆப்ஷன்' இருக்கிறதா என்று கவனித்துப் பார்த்து தேர்வு செய்துகொள்ளுங்கள்.
அந்தவகையில், ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைப் பொறுத்தவரை எளிமையானதும், மலிவானதுமான `டெர்ம் பிளானை' தேர்வு செய்துகொள்ளலாம். மருத்துவக் காப்பீடு உங்களுக்கான மருத்துவச் செலவுகளை அளிக்கும். தாக்குதலில் உங்களின் சம்பாதிக்கும் திறன் பாதிக்கப்படும்போது தனிநபர் விபத்துக் காப்பீடு உதவும். அதேபோல தீவிரவாதத் தாக்குதலால் வீட்டுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு வீட்டுக் காப்பீடும், வாகனத்துக்குச் சேதம் ஏற்பட்டால் வாகனக் காப்பீடும் இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தரும்.
தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிரான தனிக் காப்பீடு வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், இந்தக் காப்பீட்டுக்கு எதிர்காலத்தில் பிரீமியத் தொகை அதிகரிக்கலாம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

No comments: