Saturday, May 19, 2012

வானியலும் சோதிடமும்


வானியலும் சோதிடமும்

நாம் வாழுமிடம் இந்தப் பூமியாக இருந்தாலும் அந்தப் பூமியும் எல்லையற்ற வானின் ஒரு பகுதிதான் என்பது அறிவுத்திறன் மிக்கோருக்குத் தெரியும்.

எல்லையற்ற அண்டவெளியில் பெருவெடிப்பன் மூலம் ஒரு புள்ளியில் இருந்து வெடித்துச் சிதறி எல்லாத் திக்குகளிலும் விரிவடைந்துகொண்டிருக்கும் இந்தப் பிரபஞ்சத்தின் எல்லையையே இன்னும் யூகிக்க முடியவில்லை. 

மனித அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் எட்டிய வரையான எல்லையில் காணும் அனைத்தின் இயக்கங்களையும் வரையறுத்து அதன் அடிப்படையில் ஆய்வின் மூலம் உறுதிசெய்யப்படுபவற்றை அறிவியல் கோட்பாடுகளாகக்கொண்டு இன்னும் மனித அறிவால் அறியமுடியாத பலவிஷயங்களைப் புரிந்துகொண்டு முன்னேற முயன்று கொண்டு உள்ளோம்.

அதே நேரத்தில் மனிதனின் அறிவுக்கும் ஆய்வுக்கும் இணையாகவே ஆய்வு செய்யப்படாமலேயே ஆரம்ப அறிவைக்கொண்டு இப்படித்தான் என்று யூகித்துச் சொல்லப்பட்ட சில விஷயங்களையும் உண்மை என்று நம்பும் மக்கள் கூட்டமும் என்னாளும் இருந்துகொண்டுதான் வந்துள்ளது. அதுதான் மக்களில் பெரும்பான்மையாகவும் இருந்துவந்துள்ளது. இப்போதும் வலிமையாக இருக்கிறது. 

அவர்கள் அறிவியல் சிந்தனை வளரவளர தங்களின் வாழ்க்கையைப் பற்றிய தத்துவ விளக்கங்களை மாற்றிவந்த வண்ணமே உள்ளனர். அதுமட்டுமல்ல அறிவியல் சிந்தனைகளுக்கு அடிப்படை அல்லது அதைவிட நம்பகமானதும் அறிவியலுக்கு மூலமானதும் தங்களின் அடிப்படை இல்லாத நம்பிக்கையே என்று வாதித்து வந்தனர் இன்றும் வாதித்து வருகின்றனர்.

அதில் ஒன்றுதான் வானஇயலுக்கும் மனித வாழ்வுக்கும் உள்ள தொடர்பு என்பது.

பூமிக்கு வெளியே தோன்றும் வான்காட்சிக்கும் மனித வாழ்வில் நேரும் சம்பவங்களுக்கும் நெருங்கிய பிரிக்கமுடியாத உறவு இருப்பதாக அடித்துச் சொல்கிறார்கள். இவர்களின் வாதத்துக்கு அடிப்படை ஆதாரமே அதை அப்படியே மக்கள் நம்புகிறார்கள், அப்படி நம்பும் மக்கள் பகுதி வலிமையான பெரும்பகுதி என்பதுதவிர வேறொன்றும் இல்லை.

வானத்தில் நாம் காணும் நட்சத்திரங்களும் நட்சத்திரக்கூட்டங்களும் கோள்களும் அவற்றுக்கும் நமது பூமியில் வாழும் உயிர்களுக்கும் அதிலும் மனித உயிர்களுக்கும் நிறையத் தொடர்பு இருக்கிறது என்கிறார்கள்.

 அவற்றின் இயக்கங்களும் நிலை மாற்றங்களும் ஒவ்வொரு மனித உயிரும் பிறந்த நேரத்தை அடிப்பைடயாகக்கொண்டு அவர்களின் வாழ்க்கையில் விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று அடித்துக்கூறுகிறார்கள்.

அதற்கு ஆதாரம் என்னவென்றால் முன்னோர்கள் அல்லது அவர்களுள் பேர் பெற்ற சிலரின் பெயரைச் சொல்கிறார்களே தவிர நடைமுறை வாழ்வில் காணும் அனுபவங்களை ஆதாரமாக முன்வைப்பதில்லை.

ஆனால் இவர்கள் நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளால் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் அனுபவித்துக்கொண்டே அதன்வழி வெளிப்படும் தத்துவங்களைமட்டும் ஏற்றுக்கொள்வதில்லை. 

ஒரு வேலையாக வெளியே போகும்போது ஒரு நரி குறுக்கே வந்தால் நல்லது முயலோ விதவைப் பெண்ணோ குறுக்கே வந்தால் அது தப்பு. போகும் காரியம் விளங்காது. 

வெள்ளிக்கிழமை ஆண்குழந்தை பிறந்தால் கெட்டது பெண்குழந்தை பிறந்தால் நல்லது.

வெள்ளிக்கிழமை பிறருக்குப் பணம் கொடுத்தால் கெட்டது. பிறந்த வீட்டுக்கு வரும் பெண் புகுந்த வீட்டுக்குப்போனால் கெட்டது.

பேசிக்கொண்டிருக்கும்போது நாய் தன் உடலைக்குலுக்கினால் நல்லது. யாராவது தும்மினால் கெட்டது. 

பல்லி தலைமேல் விழுந்தாலோ அதன் சத்தம்  சூரியன் இருக்கும் திசையில் கேட்டாலோ கேடுவரும். எதிர்த் திசையில் கேட்டால் நல்லது நடக்கும்.

இறக்கைகள் வெட்டப்பட்டுப் பழக்கப்படும் கிளி ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும் அட்டையை எடுத்துக்கொடுத்தால் அதில் கண்டுள்ளபடி நடக்கும். குடு குடுப்பைக்காரன் எந்தவீட்டுப்பக்கம் நின்று ஐயோங்கிற சப்தம் கேட்பதாகச் சொல்கிறானோ அந்த வீட்டில் கேடு நடக்கும் அவனுக்கு வேண்டியதைக் கொடுத்துவிட்டால் அப்படி நடக்காது.

இப்படிப்பட்ட நம்பிக்கைகளுக்கும் ஒரு குழந்தை பிறக்கும்போது இன்னராசியில் இன்ன நட்சத்திரம் அல்லது இன்ன கிரகம் தனித்தோ வேறு சிலவற்றுடன் சேர்ந்தோ அல்லது பிரிந்தோ இருந்தால் அந்தக் குழந்தையின் வாழ்க்கையில் இன்னதெல்லாம் விழையும் என்று நம்புவதற்கும் என்ன வேறுபாடு?

அப்படியெல்லாம் விளையும் என்று எந்தச் சோதனையின் மூலம் நிரூபிக்கப்பட்டது?

பெரியவர்கள் சொன்னார்கள் நம்பினார்கள் என்று சொன்னால் பெரியவர்கள் சொன்ன அத்தனையையும் நம்பி எல்லாவற்றிலும் அவர்கள் சொல்படிதான் நடந்துகொண்டு உள்ளோமா?

இவ்வளவு நவின கணினி யுகத்தில் வாழ்ந்துவரும் நம்மால்கூட முடியாத நிகழ்வுகளை அவர்கள் எப்படிக் கண்டறிந்திருக்கமுடியும்? அவர்கள் அந்தக்காலத்தில் கற்ற அறிவில் இருந்தும் நேர்ந்த நிகழ்வுகளிலிருந்தும் சில நம்பிக்கைகளை சொல்லியிருப்பார்கள். அது எப்படி எல்லாக்காலத்துக்கும் பொருந்தும். 

எல்லாக்காலத்து;ககும் பொருந்தக்கூடிய வரையறுக்கப்பட்ட என்றென்றும் நிரூபிக்கப்படக்கூடிய கருத்துக்கள்தான் நிரந்தரமாக நிலவமுடியும் பொருத்தமில்லாதவை காலவெள்ளத்தில் கரைந்துவிடும்.

அப்படியிருக்க நிரூபிக்கமுடியாத காலவெள்ளத்தில் கரைந்துபோகவேண்டியவ வழக்குகளையெல்லாம் பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பது எதனால்? 

வேறொன்றும் ரகசியம் இல்லை. அந்த நம்பிக்கைகளைக் கொண்டு நிறையப்பேர் வாழ்க்கை செழிப்பாகப் போய்க்கொண்டிருப்பதுதான்.

அப்படியில்லாவிட்டால் அந்த நம்பிக்கைகள் வெறும் நம்பிக்கைகள் அல்ல உண்மைகள்தான் என நீரூபிக்க முயலவேண்டும்.

சரி! அப்படி கிரகங்களும் நட்சத்திரங்களும் ராசிகளும் மனித வாழ்வில் பிரதிபலிக்குமென்றால் மனித நாகரிகமே தோன்றாமல் காட்டுமிராண்டிக்காலத்தில் அவை எந்த வகையில் பாதித்துக்கொண்டிருந்தன?  இப்போது சொல்லப்படும் பலாபலன்கள் எல்லாம் அப்போதும் நடந்திருக்கவேண்டுமல்லவா? அது எப்படி சாத்தியம்?

சரி வானவெளியில் நடக்கும் அனைத்து அசைவுகளும் இயக்கங்களும்    பூமியில் உயிர்களும் மனிதனும் தோன்றுவதற்கு முன்பிருந்தே நடந்துகொண்டுதானே இருக்கின்றன?

அப்போதெல்லாம் அவை எந்த உயிர்களைப் பாதித்தன?

நாம் அறிந்த வான எல்லை மிகவும் குறுகியது. அறிந்ததைவிட அறியாததும் அறியமுடியாததுமான வான் எல்லை கோடானுகோடி மடங்கு அதிகம். அப்படியிருக்க அதன் ஒரு சின்னஞ்சிறு பகுதியான நமது வெறுங் கண்களுக்குத் தெரியும் கிரக நட்சத்திரங்கள் மட்டும் இவ்வளவையும் செய்யுமென்றால் தெரியாத அதைவிடப் பிரம்மாண்டமான அண்டவெளி சங்கதிகள் எல்லாம் ஏன் நமது வாழ்வில் குறுக்கிடுவது இல்லை?

சரி நமக்குக் கண்களுக்குத்தெரியும் கோள்கள் வெறும் ஐந்தாக இருக்க அத்தோடு பூமியைச் சேர்க்காமல் விட்டுவிட்டு சூரியனையும் சந்திரனையும் கிரகங்களாகச் சேர்த்துக் கொண்டது ஏன்? அத்தோடு ராகு கேது என்று இல்லாத இரண்டையும் சேர்த்து ஒன்பதாகச்சொல்வது எந்த அறிவுக்குப் பொருந்தும்? அவை நான்கும் கிரகங்களா? ஆய்வின் மூலம் ஒன்பது கிரகங்கள் அறியப்பட்டபோது நமது சோதிடர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னாலேயே ஒன்பது கிரகங்களைக் கண்டறிந்து விட்டார்கள் என்று வெட்கமின்றி அறியாத மக்களை நம்பவைத்தது என்னநியாயம்? விஞ்ஞானிகள் கண்டறிந்த கிரகங்களும் நமது சோதிடர்கள் சொன்ன கிரகங்களும் ஒன்றா? அறியா மக்களை நம்பவைக்க என்னென்ன தில்லுமுல்லுகள் எல்லாம் செய்யப்பட்டுள்ளன!

புவியை மையமாகக்கொண்டு வான்வெளியை அடையாளப்படுத்திவந்த காலத்தில் அறிந்ததையும் அறியாத கற்பனைகளையும் கொண்டு புனையப்பட்ட சோதிடசாஸ்திரத்தை காக்கைக்கூட்டில் குயில் முட்டையிட்டகதையாக வானஇயலோடு சேர்த்து வியாக்கியானப்படுத்தி மக்களை நம்பவைத்து வந்திருக்கிறார்கள். இன்று புவிமையக் கோட்பாடே பொய் என்று நிரூபிக்கப்ட்டபின்னும் சூரியமையக் கோட்பாடுதான் சரி என்று நிரூபிக்கப்பட்டபின்னால் நூற்றுக்கண்ககான ஆண்டுகள் பழைய பொய்யையே சொல்லி மக்களை நம்பவைத்து வந்தது எவ்வளவு பெரிய வரலாற்றுத் துரோகம் என்று சிந்திப்பதற்குப் பதிலாக இன்னும் அதை மெய்ப்பிக்கத் துடித்துக்கொண்டிருக்கும் சுயநலத்தையும் நம்பும் அறியாமையையும் என்னவென்பது?

இன்றளவும் ஒரு பொய்யை மக்களும் நிறையப் படித்தவர்கள்கூட நம்பும் ஒரு கொடுமை நடந்துகொண்டுள்ளது. அது என்னவென்றால் வெளிவரும் பஞ்சாங்கங்களில் உள்ள வானவியல் கணிதங்கள் எல்லாம் சோதிடர்களின் மூளையில் உதித்த விஷயங்களாக நம்பிக் கொண்டிருப்பதுதான்! அந்தப் பஞ்சாங்கங்களை எழுதிச் சம்பாதித்துக் கொண்டுள்ளவர்களை வெறும் கையுடன் உட்காரவைத்து அடுத்த வருடப் பஞ்சாங்கத்தை எழுதச் சொன்னால் அல்லது எந்தெந்த நாட்களில் கிரகணங்கள் வருகிறது என்று எழுதிக்கொடுக்கச்சொன்னால் அவர்களால் முடியுமா? முடியாது. காரணம் வானவியல் கண்டுபிடிப்புகளையும் வானியல் அறிஞர்கள் கணக்கிட்ட நேரக் கணக்குகளையும்  எடுத்து இவர்களின் சரக்குகளுடன் சேர்த்துக்கொண்டதுமல்லாமல் அந்தக் கண்டுபிடிப்புகளையே இவர்களைப்போன்ற சோதிடர்களின் கண்டுபிடிப்புகளாகச் சொல்லி இன்றளவும் எமாற்றி வருகிறார்கள்.

போகட்டும் மனித நாகரிகம் உச்சத்தில் இருக்;கும் இந்தக் காலத்தில்கூட இதை நம்புகிறார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும் இந்த சோதிடத்தை உலகில் உள்ள அனைவரும் நம்புகிறார்களா? ஏன் நம்புவதில்லை? ஏன் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொருவிதமாக நடைமுறைக்குப் பொருந்தாத மூடநம்பிக்கைகளை இப்படி ஒவ்வொரு வடிவத்தில் அந்தந்தப் பகுதி மக்களுக்குத் தகுந்த விதத்தில் சொல்லி அறியாமையைப் பயன்படுத்தித் தவறுகளை நிலைநாட்ட வேண்டும்?

சில சுயநல சக்திகளின் தேவை என்பதைத் தவிர வேறு நியாயமான காரணம் எதுவும் இல்லைதானே!

சாம்பலுக்காக வீட்டை எரிப்பதுபோல் சிலரது வாழ்க்கைக்கு இத்தகைய மூடநம்பிக்கைகள் பயனள்ளவையாக இருப்பதால் மக்களை என்றென்றும் அதைக்கொண்டே கட்டிவைத்து அறியாமை இருளில் என்றென்றும் மூழ்கடித்துக்கொண்டு உள்ளார்கள். 

இவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவனோ பரம்பொருளோ ஆன்மிகமோ எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அதன் பெயரைச் சொல்லிக்கொண்டே அதனை மக்களிடம் காட்டிக்கொண்டே மக்களை எமாற்றுகிறார்கள். அவ்வளவே!

அது ஆன்மிகத்துக்கும் இறைநம்பிக்கைக்கும் சுத்த அறிவிற்கும் இயக்க விதிகளுக்கும் முழுக்கமுழுக்க எதிரான செயலே ஆகும்!

No comments: