Thursday, May 31, 2012

உடல் வெப்பத்திலிருந்து மின்சாரம்

தற்போது பல்வேறு விதங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலும், நமது மின்சார தேவை மட்டும் இன்னும் முழுமையாக பூர்த்தி அடையவே இல்லை. காரணம், மின்சார உற்பத்தி ஆமை வேகத்தில் செல்கிறது. ஆனால் மக்கள் தேவையோ அசுர வேகத்தில்!
மனிதனின் இந்த தலையாய பிரச்சினைக்கு, மனிதனின் உடலில் இருந்தே ஓர் அட்டகாசமான வழியை கண்டுபிடித்து அசத்திவிட்டார்கள் வேக் பாரஸ்ட் பல்கலைக்கழகத்தின் நானோடெக் விஞ்ஞானிகள்.
மனிதனின் உடல் வெப்பத்திலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனுள்ள அந்த அதிசய கண்டுபிடிப்புக்கு `பவர் பெல்ட்' என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
நானோ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த புதிய வெப்ப மின்சார கருவி, வளையும் தன்மையுள்ள பிளாஸ்டிக் பைபர்களுள் அடைக்கப்பட்ட நுண்ணிய நானோ குழாய்களால் ஆனது.
இந்த தொழில்நுட்பம் இரு அமைப்புகளுக்கு இடையிலான வெப்ப அளவு (டெம்பரேச்சர்) வித்தியாசங்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
உதாரணமாக, ஓர் அறையின் வெப்பத்துக்கும் ஒரு மனித உடலின் வெப்பத்துக்கும் இடையிலான வெப்ப அளவு வித்தியாசத்தை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது பவர் பெல்ட்.
இந்த பவர் பெல்ட்டில் சுவாரசியம் என்னவென்றால், இது நாம் உடுத்திக் கொள்ளும் ஆடைகள் போன்ற உணர்வை ஏற்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது என்பதுதான்.
சாதாரணமாக, உடலிலிருந்து வெப்பமாக வெளியேறி விரயமாகும் சக்தியைக் கவர்ந்து, மின்சாரம் தயாரிக்கும் பவர் பெல்ட்டின் பலன்கள் ஏராளம் என்கிறார் ஆய்வாளர் கோரீ ஹெவிட்.
உதாரணமாக,
(1) வாகனங்களின் சீட்களில் பவர் பெல்ட்டை பொருத்தி அதிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தைக் கொண்டு பாட்டரிகளை சார்ஜ் செய்யலாம்.
(2) கூரையின் டைல்ஸ்களில் பொருத்தி அதில் இருக்கும் வெப்பத்திலிருந்து மின்சாரம் தயாரித்து வீட்டின் கரண்ட் பில்லை குறைக்கலாம்.
மேலும், பவர் பெல்ட்டை பயன்படுத்தி ஒரு வானிலை ரேடியோவை இயக்கலாம், ஒரு பிளாஷ் லைட்டில் சுற்றி அதனை இயக்கலாம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, `பவர் பெல்ட்'டைக் கொண்டு ஒரு செல்போனை சார்ஜ் செய்யலாம்' என்று ஆச்சரியப்படுத்துகிறார் நானோ தொழில்நுட்ப மையத்தின் இயக்குனரான டேவிட் கேரோல்.
முக்கியமாக, மின் விபத்துகள் மற்றும் மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படும் வேளையில் பவர் பெல்ட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் கேரோல்.
மிகவும் அதிக விலை காரணமாக, தற்போது குறைவான எண்ணிக்கையில் பயன்படுத்தப்படும் வெப்ப மின்சாதனங்கள் பவர் பெல்ட்டின் வருகைக்கு பின்னர் மிக மிக மலிவாகக்கூடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
உதாரணமாக, தற்போதுள்ள தரமான வெப்ப மின்சாதனங்களில் வெப்பத்தை மின்சாரமாக மாற்றப் பயன்படுத்தப்படும் பிஸ்மத் டெல்லூரைடு எனும் வேதியியல் பொருளின் விலை ஒரு கிலோவுக்கு 1000 டாலராம். அதாவது சுமார் 50 ஆயிரம் ரூபாய்.
ஆனால், பவர் பெல்ட் பயன்பாட்டுக்கு வரும்போது, உடல் வெப்பத்தை கொண்டு ஒரு செல்போனை சார்ஜ் செய்யும் செல்போன் கவருக்கு தேவையான பவர் பெல்ட்டின் விலை வெறும் ஒரு டாலராகக்கூட மாறிவிடலாம் என்கிறார்கள்.
தற்போது 72 நானோ குழாய் அடுக்குகளைக் கொண்ட பவர் பெல்ட், சுமார் 140 நானோ வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
ஆனால், ஆய்வாளர் கோரீ ஹெவிட்டின் ஆய்வுக்குழு, தற்போதுள்ள பவர் பெல்ட்டில் மேலும் பல நானோ குழாய் அடுக்குகளை சேர்த்து, அதன் மின் உற்பத்தியை அதிகப்படுத்த முயற்சித்துக் கொண்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
`தற்போது தொடக்க நிலையில் இருக்கும் பவர் பெல்ட் சந்தைக்கு வர மேலும் ஆய்வுகள் செய்ய வேண்டி இருக்கிறது.
இந்த ஆய்வு முயற்சிகள் வெற்றியடையும் பட்சத்தில், ஒரு பவர் பெல்ட்டை கொண்டு ஒரு ஐ பாடை சார்ஜ் செய்து இயக்கலாம். நீண்ட தூர ஓட்டம் செல்பவர்களுக்கு பயனுள்ள இது மிக விரைவில் சாத்தியமே' என்று உறுதியாகச் சொல்கிறார் ஆய்வாளர் கோரீ ஹெவிட்.

No comments: