வர்மக்கலை
என்பது ஒருவரது உயிரை சேதமில்லாமல் மீட்டு, அவருக்கே மீண்டும் திருப்பி
கொடுக்கும் அதி அற்புத தெய்வீக கலையாகும். இந்த உன்னத கலை அகத்திய
முனிவரால் உருவாக்கப்பட்டது. அதை யாருக்கு கற்றுக்கொடுப்பது என்ற கேள்வி
அவருக்குள் எழுந்தபோது, அன்றைய சமுதாயத்தில் வீரத்திலும், விவேகத்திலும்
சிறந்து விளங்கிய 18 இளைஞர்களை தேர்ந்தெடுத்தார். அர்ப்பணிப்பு
எண்ணம்கொண்டு எதையும் சாதிக்கும் துணிவுடனும், துடிப்புடனும் விளங்கிய அந்த
இளைஞர்களுக்கு ``அடவு வர்மம்'' என்று சொல்லக்கூடிய தடுத்து தாக்குதல்
முறைகளையும், வர்ம நிலைகளில் அடிபட்டு அதன் மூலமாக ஏற்படும் பாதிப்புகளை
நீக்கும் உடல் இயக்க ரகசிய முறைகளையும் பற்றி பயிற்சி கொடுத்தார். இந்த
வர்ம சிகிச்சை, குருகுல வழி முறையில் கொடுக்கப்பட்டது. அதற்காக அகத்தியர்
"வர்மக் குடில்'' என்பதை உருவாக்கிவைத்திருந்தார்.
அகத்தியரின்
தன்னலம் கருதாத சேவையின் காரணமாக அவரின் வர்மக் குடில் பயிற்சி மக்கள்
மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அகத்தியரின் மருத்துவ சேவையை கண்டு
உணர்ந்த பாண்டிய மன்னர் வீரத்தளபதிகளுக்கும், இளவரசர்களுக்கும்
வர்மக்கலையின் ரகசியங்களை கற்றுக் கொடுக்கும்படி கேட்டு கொண்டார். இதன்
மூலமாக தமிழகத்தின் தென்பகுதியில் அகத்தியரின் தமிழ் வர்மக்கலை கொடி கட்டி
பறந்தது.
நமது உடலில் 7 விதமான சக்கரங்கள் இயங்குவது போல் நம்முடைய நாடி, நரம்புகளில் 126 சக்கரங்கள் அதாவது வர்ம நிலைகள் உள்ளன.
அவை:
* தொடுவர்மம் - 96
* படுவர்மம் - 12
* தட்டுவர்மம் - 8
* அடங்கல்வர்மம் - 6
* நக்குவர்மம் - 4
இந்த
வர்ம நிலைகளை மூளை பகுதியில் உள்ள நியூரான்கள் இயக்குகின்றன. மனிதர்களின்
உடல் பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் அடிபட்டு அந்த இடத்தில் உள்சதை முறிவு
ஏற்பட்டால் வலி உருவாகும். இந்த வலியை நீக்குவதற்கு முதல் கட்டமாக அடிபட்ட
வர்ம நிலையை கலைக்கவேண்டும். பின்பு இளக்கு முறை செய்து விறைப்பாக
இருக்கும் தசை பகுதியை தளர்த்தி விடவேண்டும். அதன் பிறகு ஒரு துண்டு
சுக்கு, வெற்றிலை, 5 மிளகு ஆகியவைகளை வாயில் போட்டு மென்று, அடிபட்டவரின்
மூக்கு துவாரங்களிலும், காது துவாரங்களிலும் ஊதவேண்டும். இப்படி செய்வதன்
மூலமாக மூளை பகுதியில் உள்ள நியூரான்கள் இயக்கப்பட்டு, மின் அஞ்சல் செய்தி
போல் சமிக்ஞை பெறப்பட்டு, அடிபட்ட இடத்தில் தேங்கி நிற்கும் ரத்தம் வாயு
மூலமாக தள்ளப்படும். அதனால் பாதிக்கப்பட்ட இடம் சீராகி, பாதிக்கப்பட்டவர்
வலியின் பிடியில் இருந்து விடுபடுவார்.
``வர்மம்''
என்ற நான்கு எழுத்துக்குள் பல்வேறு மர்மங்கள் பொதிந்துள்ளன. வர்மம்
என்பது, நமது உடலில் உள்ள 126 உயிர் நிலைகளை குறிக்கிறது. மூளைப்பகுதியில்
உள்ள நியூரான்களின் கட்டளைப்படி இயங்கும் இந்த உயிர்நிலைகள் தான் மனிதர்களை
நோய்களில் இருந்து பாதுகாத்து மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது.
மொத்தமுள்ள
ஐந்து வகை வர்மங்களில், படுவர்மம் என்பது நமது உடலில் மிகவும் ஆழமாக
குடியிருக்கிறது. தொடு வர்மம் மனித உடலில் மிகவும் மேலோட்டமாக இருக்கிறது.
மேற்கண்ட இரண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் தட்டுவர்மம் குடி கொண்டுள்ளது.
வர்மக்கலையில்
மிகவும் மர்மமானது, அடங்கல் வர்மமாகும். சாலையில் ஒருவர் சென்று
கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். எதிரே போதை ஆசாமி ஒருவர்
வருகிறார். அவர், அந்த அப்பாவி மனிதரை மூர்க்கத்தனமாக தாக்குகிறார் என
வைத்துக்கொள்வோம். வர்மப் பகுதியில் அவருக்கு அடிபட்டிருந்தால், அந்த
அப்பாவி உடனே மயங்கிவிழுந்துவிடுவார்.
இந்த
நிலையில் அடங்கல் வர்மங்களின் குணநலன்கள் தெரிந்த வர்மக்கலை நிபுணர்
ஒருவர் அங்கு வந்தால், அவரால் அந்த அப்பாவியின் உடலில் உள்ள உயிர் அடங்கல்
வர்மங்களில் ஏதாவது ஒருவர்மம் தூண்டப்படுமானால் அவர் மயக்கம் நீங்கி
எழுந்துவிடுவார். இந்த செய்கையைத்தான் வர்ம ஆசான்மார்கள் உயிர் அடங்கல்
வர்மம் என்று குறிப்பிடுகின்றனர். உயிர் அடங்கியிருக்கும் வர்மம் அடங்கல்
வர்மம் எனப்படுகிறது.
மனித
உடலில் விரல்கள் பட்டால் கூட மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வர்ம
நிலைகளும் அனேக இடங்களில் உள்ளன. அந்த மாதிரி இடங்களில் உள்ள பாதிப்பை
நக்கு வர்மம் மூலமாக இளக்கி குணப்படுத்த வேண்டும். இது மிக மென்மையான
மருத்துவ அணுகுமுறையாகும்.
மணிபந்த
வர்மம் என்ற தொடுவர்மப்புள்ளி நமது கைகளில் மணிக்கட்டு பகுதியிலிருந்து 2
விரல் அளவு தள்ளி கையின் உள்பக்கம் உள்ளது. ஆண்களுக்கு வலது கையிலும்,
பெண்களுக்கு இடது கையிலும் இந்த வர்மப்புள்ளி குடி கொண்டுள்ளது. இந்த வர்ம
புள்ளிகளில் மிதமான முறையில் அடிபட்டால்கூட உளைச்சல் எடுத்து வலி பரவும்.
இதே வர்ம புள்ளியில் முழு மாத்திரை அளவு அடிபடுமானால், அடிபட்ட கை அப்படியே
கீழே தொங்கி விடும். மேலும் விரல்களில் இருந்து முழங்கை வரை பயங்கரமாக
உளைச்சல் எடுக்கும். மயக்கமாகி கீழே விழுந்து விடுவார்கள்.
பாதிக்கப்பட்டவரின் முகத்தில் அப்போது வியர்வை கொட்டும். உடம்பெங்கும்
ஒருவிதமான சூடு பரவி காய்ச்சல் அடிப்பது போல் இருக்கும்.
அந்த
வர்ம புள்ளிகளில் அடிபடுவதால் இதயத்திற்கு செல்லும் ரத்தம் தடைப்படும்.
அப்போது இதய பகுதியை 10 விரல்களால் பிசைவது போல் தோன்றும். அதனால்தான்
பாதிக்கப்பட்டவருக்கு மயக்கமும், வியர்வை வழிதலும் அறிகுறியாகிறது.
இப்படி
வர்ம நிலையில் அடிபட்டு மயங்கி கிடப்பவரை எழுப்புவதற்கு அவரது சிரசு
பகுதியில் வர்மக்கலை நிபுணர் நின்றுகொள்வார். அவரது, இடது கையால்
பாதிக்கப்பட்டவரின் உச்சி முடியை பிடித்து தூக்கி உட்கார வைத்து, மிக பலமாக
3 முறை அவரது உச்சி முடியை பிடித்து உலுக்குவார். பின்பு இன்னொருவரை
பிடித்துக் கொள்ள சொல்லிவிட்டு, சிகிச்சை அளிப்பவர் அவரது முன்பக்கமாக
வருவார். வந்து அவரது இடது உள்ளங்கையை பாதிக்கப்பட்டவரின் உச்சந்தலையில்
தட்டையாக விரித்து வைத்து, முஷ்டி பிடித்த மறுகையால் 3 முறை மிதமான
முறையில் தட்டுவார். இப்படி தட்டிவிட்ட பின்பு, சிரசின் கீழ்ப்பகுதியில்
சிறிய குழி போல் உள்ள இடத்தில் வலது கையின் பெருவிரலின் முனைப்பகுதியில் 5
தடவை வட்டமான முறையில் தடவி சரி செய்ய வேண்டும்.
மேற்கண்ட
முறையில் வர்ம அழுத்தம் செய்த உடன் மயக்கத்தில் இருப்பவர் அதிலிருந்து
விடுபட்டு விழிகளை திறப்பார். வர்மத்தால் பாதிக்கப்பட்டவர் சுய நினைவுக்கு
வந்தவுடன் அவரின் விரல்கள் அனைத்தையும் நெட்டி (சொடக்கு) வாங்கி விட்டு,
அடிப்பட்ட பகுதியில் காயத்திருமேனி தைலத்தாலோ, நல்லெண்ணெய்யாலோ
பூசவேண்டும். பின்பு மேலிருந்து கீழாக வலக்கையின் கட்டை விரலால் 18 தடவை
அழுத்தமான முறையில் நீவவேண்டும்.
நீவி
முடித்த உடன் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து தீ மூட்டி, அது நன்கு சூடான
பின்பு ஒரு காட்டன் துணியை சதுரமாக மடித்து எடுத்துக்கொண்டு தோசைக்கல்லில்
ஒற்றியெடுத்து அடிப்பட்ட இடத்தில் ``அனல் சிகிச்சை'' என்ற வறத்துணி ஒத்தடம்
கொடுக்க வேண்டும். இந்த சிகிச்சை முறையை 6 நாட்கள் கடைப்பிடித்து வந்தால்
வர்மம் இளகி குணம் கிடைக்கும். இதற்கு கூடுதலாக சில மருத்துவ சிகிச்சை
முறைகளும் உள்ளன.
தெய்வீக
கலையான வர்மக்கலையை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை
கொடுக்கும் அதே நேரத்தில் அதை பயன்படுத்தி, வாழ்க்கையை இன்பமாக அனுபவிக்
கவும் முடியும். தாம்பத்ய சிக்கல்களை வர்மக்கலை மூலம் குணப் படுத்தி,
மகிழ்ச்சியாக இளமை உணர்வோடு வாழலாம்.
இதன்
மூலம் ஆரோக்கியமும் பெருகும். அதுபோல் பெண்களும், ஆண்களும் வர்மக்கலையின்
அடிப்படையை கற்றுக்கொண்டால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும்போது, வர்மப்
புள்ளிகளில் தாக்குதல் தொடுத்து தங்கள் உயிரையும், உடமையையும்
காப்பாற்றிக்கொள்ளவும் செய்யலாம்.
கட்டுரை: டிராகன் டி.ஜெய்ராஜ், வர்மக்கலை நிபுணர், கோவை.
No comments:
Post a Comment