Friday, May 18, 2012

குஜராத்தின் `மின்சார’ பாடம்!



குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி பற்றி எதிர்மறையான செய்திகள் நிறைய வந்தாலும் தனது மாநிலத்தை `ஒளிர' வைத்துக் கொண்டிருக்கிறார் அவர். ஆம், இந்தியாவில் பல மாநிலங்கள் மின்வெட்டில் தவித்துக் கொண்டிருக்க, உபரியாகக் கையில் மின்சாரத்தை வைத்துக்கொண்டிருக்கிறது குஜராத்.
நீர் மின்சாரம், அனல் மின்சாரம், சூரிய சக்தி மின்சாரம் என்று முடிந்தவகைகளில் எல்லாம் மின்சாரம் உற்பத்தி செய்து, `மின் வெட்டு'க்கு நிரந்தர விடுமுறை கொடுத்திருக்கிறார்கள்.
குஜராத்தின் 18 ஆயிரம் கிராமங்களுக்கும் 24 மணி நேரமும் தடையில்லாத `த்ரீ பேஸ்' மின்சாரம். அப்படியும் மிஞ்சும் 2 ஆயிரம் மெகா வாட்டை வெளி மாநிலங்களுக்கு விற்கிறார்கள்.
பத்தாண்டுகளுக்கு முன்பு வரை குஜராத்தும் நம்மை மாதிரி மின்தட்டுப்பாட்டால் தடுமாறிய மாநிலம்தான். அப்புறம் எப்படி இன்றைய மாயாஜாலம்? ஒவ்வொரு ஆண்டும் மின் உற்பத்தியை அதிகரித்துக்கொண்டே இருந்த திட்டமிட்ட தொலைநோக்குப் பார்வைதான் காரணம்.

பத்தாண்டுகளுக்கு முன் குஜராத்தின் ஒட்டுமொத்த மின்சார உற்பத்தித் திறன் 8 ஆயிரம் மெகா வாட்டுகளாக இருந்தது என்றால், இன்று அது 18 ஆயிரம் மெகா வாட்களாக அதிகரித்திருக்கிறது என்கிறார், குஜராத் மாநில எரிசக்தி மற்றும் பெட்ரோகெமிக்கல் துறை முதன்மைச் செயலாளர் டி.ஜே. பாண்டியன்.
``விவசாயிகளுக்கு நாங்கள் முழுமையான அளவில் மின்சாரம் வழங்குகிறோம். அப்படியும் 2 ஆயிரம் மெகா வாட் உபரியாக உள்ளது. எனவே அந்த மின்சாரத்தை விலை கொடுத்து வாங்கத் தயாராக உள்ள மாநிலங்களுக்கு விற்கிறோம்'' என்கிறார் பாண்டியன்.
குஜராத்தின் தற்போதைய மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு, அனல் மின்சாரத்தின் (13,500 மெகா வாட்) வழியாக வருகிறது என்றாலும், தற்போது மரபுசாரா முறைகளில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதிலும் அதிகக் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
முன்பெல்லாம் குஜராத்தில் காற்றாலை மின்சார உற்பத்தி என்பதே அபூர்வம். ஆனால் தற்போது, மாநிலத்தில் கடலோரத்தில் தொடர்ந்து வீசும் காற்றைப் பயன்படுத்தி 2 ஆயிரத்து 800 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
அதோடு, 605 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் சூரிய சக்தி மின்நிலையங்களை சமீபத்தில் தொடங்கிவைத்தார், முதல்வர் நரேந்திர மோடி.
`மழையில்லை... அதனால் அணைக்கட்டுகளில் தண்ணீரில்லை... மின் உற்பத்தியும் குறைந்துவிட்டது' என்ற பேச்சுக்கெல்லாம் குஜராத்தில் இடமில்லை. ஏற்கனவே தேவைக்கு அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்துகொண்டிருப்பதால், பருவ மழை பொய்த்தாலும் கவலையில்லை, விவசாயிகளுக்கு எப்போதும் போல் மின்சாரம் வழங்கலாம் என்று தெம்பாகக் கூறுகிறார்கள். மொத்த மின் உற்பத்தியில் 5 சதவீதம் மட்டுமே நீர் மின் நிலையங்கள் மூலம் வருகிறது என்பதும் ஒரு காரணம். (நான்கில் ஒரு பங்கு, கியாஸ் மின் நிலையங்கள் மூலம் வருகிறது.)
`ஜோதி கிராம் யோஜனா' திட்டத்தின் கீழ், குஜராத் கிராமங்கள் அனைத்தும் ஒரு நிமிடம் கூட தடையில்லாத மின்சாரத்தால் ஜொலிக்கின்றன.
குஜராத்தின் மின்சார மகுடத்தில் இன்னொரு சிறகாக, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத மின்சார உற்பத்தி முயற்சி அமைந்திருக்கிறது. அதன்படி, பெரிய கட்டிடங்களின் உச்சியில் `சோலார் பேனல்களை' நிறுவி, மின்சார உற்பத்தியை தொடங்கியிருக்கிறார்கள். தலைநகர் ஆமதாபாத்தில் இதற்குப் பிள்ளையார் சுழி போடப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, பிற பெருநகரங்களிலும் இத்திட்டத்தை அமல்படுத்த விருக்கிறார்கள்.
`சூரிய சக்தி மின்சார அமைப்புகளை நிறுவுவதற்கு இந்தியாவில் நல்ல சந்தை வாய்ப்பு இருக்கிறது. அதை குஜராத் பயன்படுத்திக்கொள்ளப் போகிறது' என்கிறார், முதன்மைச் செயலாளர் பாண்டியன்.

No comments: