Saturday, May 26, 2012

பூலாம்வலசு சேவல்கட்டு

பூலாம்வலசு சேவல்கட்டு




இந்த முறை பொங்கலன்று அரவக்குறிச்சி அருகில் இருக்கும் பூலாம்வலசு சேவல்கட்டு பார்க்க வேண்டும் என போன வருடமே திட்டமிட்டு இருந்தேன். சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த சேவல் கட்டு தமிழ் நாட்டில் மிகவும் பிரசித்தம். இப்பொழுது உலக அளவில். உபயம் சன் மற்றும் விஜய் டிவி.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே அவர்கள் வந்து பார்க்கும் அளவிற்கு நடந்துள்ளதாக அறிந்தேன். தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்தும் இந்த போட்டிகளை காணவும் பங்கேற்கவும் மக்கள் வருகிறார்கள். ஒரு வாரம் நடக்கும் இந்த போட்டிகள் வருடாவருடம் பொங்கல் சமயத்தில் மட்டுமே நடக்கிறது. ஒரு நாளைக்கு சுமார் 30000 முதல் 40000 சேவல்கள் வரை போட்டியில் பங்கேற்கின்றன. இதனை காண வரும் கூட்டம் ஒரு நாளில் மட்டும் லட்சத்தை தாண்டுகிறது என்பது சிறப்பம்சம். வாகன நிறுத்துமிடம் 4 இடங்களில் பிரித்து வைக்கப்படுகிறது. ஒரு வண்டிக்கு 15 ரூபாயும் காருக்கு 50 ரூபாயும் வாங்குகிறார்கள். ஒரு நாளைக்கு 2 இலட்சத்திற்கும் மேல் வருமானம் வருகிறது. இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு மட்டும் 5 இடங்களில் பார்க்கிங் வசதி.

ஒரு சேவல் போட்டியில் பங்கேறக 2 ரூபாய் கட்டணம். போட்டியில் வெல்லும் சேவலின் முதலாளிக்கு தோற்றுப்போன இறந்த சேவலே பரிசு. பணமெல்லாம் இல்லை. சூதாட்டமும் பெரிய அளவில் இல்லை. மறைமுகமாக நடக்கிறதா தெரியவில்லை.

இதிலும் நிறைய ரூல்ஸ் இருக்கிறது. எந்த ஒரு சேவலையும் எந்த ஒரு சேவலுடனும் மோத விட முடியாது. ஜாதிக்கு ஜாதிதான். பொறிச்சேவல், வல்லூறு, செவலை, பேடை (அலிச்சேவல்) என ஜாதி பிரித்து வைத்திருக்கிறார்கள். சேவல் சண்டை ஆரம்பிக்கும் முன்பு கத்தி வைக்காமல் ஒரு முறை மோதிப்பார்க்கிறார்கள். இரண்டும் மோத முனைந்தால் போட்டிக்கு ரெடி. பின்பு சேவலின் பின்னாங்காலில் ஒரு கத்தியை வைத்து கட்டிவிடுகிறார்கள் .மிகவும் கூரான கத்தியில் இரண்டு முறை அடிபடும் சேவல் இறப்பது சர்வ நிச்சயம். அதிக பட்சம் 10 நிமிடத்தில் ஒரு சேவல் வெற்றி பெற்று விடுகிறது. ஒவ்வொரு சேவலும் சுமார் 6லிருந்து 7கிலோ வரை இருக்கிறது! கிட்டத்தட்ட ஒரு குட்டி ஆட்டின் எடை!

ஒரு போட்டியாளர் 4 அல்லது 5 சேவலுக்கு மேல் ஜெயித்துவிட்டால் இறந்த அந்த சேவல்களை விற்றுவிடுகிறார். ஒரு சேவலின் விலை ஜஸ்ட் 2000ம் தான். 4000 ரூபாய் வரை விலையும் போகும். இத்தனை லட்சம் பேர் இருக்கும் இந்த ஏரியாவில் வெரும் 10 போலீஸ்தான் என்பது சுவராசியமான விசயம். மொத்த கூட்டத்தையும் விழா அமைப்பினரே சமாளிக்கின்றனர். ஒரு சிறு சண்டை கூட நடக்காமல் போட்டி நடக்கிறது என்பது கலியுலக ஆச்சரியம்! சேவலுக்கு சாரயம் கொடுப்பது இல்லை. கத்தியில் விஷம் வைப்பதும் இல்லை. ஒரு சிறு சண்டை வருவது போல் இருந்தாலும் போட்டி அமைப்பாளர்கள் சொல்வதை நாட்டாமை தீர்ப்பு போல் அனைவரும் கேட்டுக்கொள்கிறார்கள். சுருக்கமாக சொல்வதானால் போலீஸுக்கு அங்கு பெரிய அளவில் வேலையே இல்லை.

30 குழுக்களுக்கும் மேலாக பிரிந்து போட்டி நடக்கிறது. குழுவிற்கு 100 பேருக்கும் மேல் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். வேடிக்கை பார்க்கும் நபரில் 10ல் 7 பேரிடம் போட்டிக்கு ரெடியாக ஒரு சேவலை கையில் வைத்திருக்கிறார்கள். இதுபோல ஒவ்வொரு போட்டி நடக்கும் பகுதியிலும் கூட்டம் இருக்கிறது. சபரி மலைக்கு வருவதுபோல் கூட்டம் வருவதும் போவதுமாகவே இருக்கிறது. வேடிக்கை பார்க்க வருபவர்கள் 3 மணி நேரத்திற்கு மேல் நிற்பதில்லை. அவ்வளவு புழுதிப்படலமாக இருக்கிறது. மேலும் சாப்பாட்டுப் பிரச்சனை.

பஸ் வசதி கூட இல்லாத இந்த குக்கிராமத்தில் இப்படி ஒரு போட்டி பிரபலமாகி இருப்பது என்னை பெரிதும் யோசிக்க வைக்கிறது. கரூர் மாரியம்மன் பண்டிகை மற்றும் வீரப்பூர் திருவிழாவிற்க்கு வரும் கூட்டத்தை விட இங்கு வரும் கூட்டம் அதிகம். ஆனால் பெண்கள் சிறுமிகள் கூட்டம் மிகக்குறைவு. ஆண்களின் சாம்ராஜ்யம் இது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் நடுத்தர ஆண்களே அதிகம். இந்த பூலாம் வலசில் சாப்பிட உணவகங்கள் இல்லை. குச்சி ஐஸும் போண்டா வடையும் மட்டுமே கிடைக்கிறது .அருகில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அரவக்குறிச்சிக்குதான் சாப்பிட வரவேண்டும்.

நான் பார்த்தவரை கரூர் தவிர திருச்சி, புதுக்கோட்டை, சேலம், பொள்ளாச்சி, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, வத்தலகுண்டு, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, முசிறி வண்டிகள் அதிகம் இருந்தன. நிறைய போட்டியாளர்கள் யூனிபார்மில் இருந்தார்கள். உதாரணம் “வத்தலகுண்டு சேவல் பாய்ஸ்”.

முறையான குடிநீர் வசதிகள் இல்லை. கழிப்பிட வசதிகளும் இல்லை. இதை எல்லாவற்றையும் முறையாக செய்து கொடுத்து சரியான விளம்பரம் கொடுத்தால் பூலாம்வலசு இன்னுமொரு அலங்காநல்லூர் என்பதில் ஐயமில்லை.

No comments: