இந்த
உலகத்தின் முதல் விஞ்ஞானி இயற்கைதான். இயற்கையின் குழந்தைகளான உயிர்களை
செயற்கையாக உருவாக்க உதவும் தொழில்நுட்பம்தான் ரோபோடிக்ஸ். தொடக்கத்தில்
பிரம்மாண்ட உருவங்களாக இருந்த ரோபோக்கள் சமீப காலங்களாக அளவில் மிக மிக
குறைந்து, நுண்ணிய மற்றும் நானோ அளவுகள் வரை வந்துவிட்டன.
இதனால்
ரோபோக்களின் பயன்பாடும் பெருமளவில் அதிகரித்திருக்கிறது. உதாரணமாக,
மனிதர்களை போன்று உருவாக்கப்படும் ரோபோக்கள் (எந்திரன்) செயற்கை மனிதர்கள்
என்று வர்ணிக்கப்பட்டு, பல தரப்பட்ட பணிகளை மேற்கொள்ளும் திறனுடன்
மனிதர்களின் தினசரி வாழ்க்கையில் உதவும் வகையில் தயாரிக்கப்படுகின்றன. இது
தவிர விலங்குகள், பூச்சிகள் போன்று உருவாக்கப்படும் பல்வேறு ரோபோக் களும்
மனித வாழ்க்கைக்கு பயனுள்ளவையாய் இருக்கின்றன.
இதுவரையிலான
ரோபோக்கள் அனைத்துமே `உயிரற்ற (செயற்கை) இயங்கும்' கருவிகளாகத்தான்
இருக்கின்றன. ஆனால், உலகின் முதல் உயிருள்ள ரோபோ ஒன்றை இங்கிலாந்து மற்றும்
அமெரிக்க விஞ்ஞானிகள் நியூ கேஸில் பல்கலைக்கழகத்தில் உருவாக்கிக்
கொண்டிருக்கிறார்கள்.
உயிருள்ள
இந்த மைக்ரோ ரோபோவுக்கு `சைபர் ப்ளாசம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
நுண்ணிய மின்னணுவியல் மற்றும் இயற்கையை பிரதிபலிக்கும் தொழில்நுட்பமான `பயோ
மிமிக்ரி' ஆகிய அதி நவீன துறைகளின் சங்கமத்தில் உருவாக்கப்படுகிறது இந்த
மைக்ரோ ரோபோ.
இந்த
முயற்சி முழுமையடையும் வேளையில், மனித உடலுக்குள் தடையின்றி நீந்திச்
சென்று உடலின் பல்வேறு நோய்களை கண்டறிவது உள்ளிட்ட பல நன்மைகள் சைபர்
ப்ளாசத்தினால் ஏற்படும் என்கிறார்கள் இதன் வடிவமைப்பாளர்கள்.
சைபர் ப்ளாசம் உருவாகும் விதம்
சைபர் ப்ளாசம் உருவாகும் விதம்
ஒரு
மின்னணு நரம்பு மண்டலம், பாலூட்டிகளின் உயிரணுக்களில் இருந்து
உருவாக்கப்பட்ட கண், மூக்கு சென்சார்கள் மற்றும் செயற்கை தசைகள் உடைய,
குளூக்கோசிலிருந்து கிடைக்கும் சக்தியை கொண்டு இயங்கும் ஒரு மைக்ரோ
ரோபோதான் இந்த சைபர் ப்ளாசம்.
ஒளி
மற்றும் ரசாயனங்களுக்கு உயிரினங்கள் எதிர்வினை செய்வது போலவே, எதிர்வினை
செய்யும் தன்மையுள்ள பகுதிகள் கொண்ட ஒரு ரோபோவை தயாரிப்பதுதான், சைபர்
ப்ளாசத்தை உருவாக்கும் என்ஜினீயர்களின் நோக்கமாகும். இன்னும் விளக்கமாகச்
சொல்வதானால், பரிணாமத்தில் மீன்களுக்கு முன்பு தோன்றிய கடல்வாழ் உயிரினமான
சீ லாம்ப்ரேவின் பண்புகளை சைபர் ப்ளாசத்தினுள் வடிவமைப்பதுதான் இவர்களின்
நோக்கம்.
இதன்மூலம்,
இந்த மைக்ரோ ரோபோவை ஒரு குறிப்பிட்ட சுற்றுச்சூழலில் வைக்கும்போது அந்த
சுற்றுச் சூழலின் தன்மையை உணர்ந்து செயல்படும் திறன் அதற்கு வந்துவிடும்
என்பது ஆய்வாளர்களின் கணிப்பு.
சீ
லாம்ப்ரேவின் நரம்பு மண்டலம் மிகவும் பழமையானது என்பதால் இதனை எளிதில்
மிமிக் செய்ய அல்லது காப்பியடித்துவிட முடியும். இது தவிர, சீ லாம்ப்ரே ஒரு
கடல்வாழ் உயிரினம் என்பதால் அது நீந்தும் திறனுள்ளது. இந்த காரணத்தினாலேயே
சைபர் ப்ளாசம் சீ லாம்ப்ரேவின் பண்புகளுடன் வடிவமைக்கப்பட்டது என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்த
உயிருள்ள மைக்ரோ ரோபோ ஆய்வு முயற்சி முழுமையடையும்போது ஒரு சென்டி
மீட்டருக்கும் குறைவான நீளமுள்ள சைபர் ப்ளாசம் உருவாக்கப்பட்டுவிடும். இதன்
எதிர்கால சந்ததிகள் ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான அல்லது நானோ
அளவிலும் கூட உருவாக்கப்படும் வாய்ப்புகள் இருக்கிறதாம்.
புறவெளியில்
இருக்கும் சமிக்ஞைகளை மின்னணு சமிக்ஞைகளாக மாற்றி, தன் உடலுக்குள்ளே
பொருத்தப்பட்டிருக்கும் அதி நவீன மைக்ரோ சிப்களாலான மின்னணு மூளைக்கு
அனுப்பும் திறனுள்ள சென்சார்களைக் கொண்டது இந்த சைபர் ப்ளாசம். மின்னணு
மூளைக்கு வரும் மின்னணு சமிக்ஞைகள் பின்னர் சைபர் ப்ளாசத்தின் செயற்கை
தசைகளுக்கு அனுப்பப்படும் போது அவை சுருங்கி விரிகின்றன. இதனால் சைபர்
ப்ளாசம் வளைந்து நெளிந்து செல்லும் திறனைப் பெறுகிறது.
மேலும்,
சைபர் ப்ளாசத்தை சுற்றியிருக்கும் சுற்றுச்சூழலில் உள்ள ரசாயன
விவரங்களையும் அதன் சென்சார்கள் மற்றும் மின்னணு மூளையானது சேகரித்து
வைத்து பதிவு செய்து கொள்கிறது. பின்னர், சேகரிக்கப்பட்ட விவரங்களை ரோபோவை
இயக்கும் பொறி யாளர்களால் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
`தன்னைச்
சுற்றிய சுற்றுச்சூழலைக் கண்டு, நுகர்ந்து அதனுள் என்ன நிகழ்கிறது என்பதை
உணரும் உயிரினங்களின் இயற்கையான திறனுக்கு ஈடு இணை வேறு எதுவும் இல்லை'
என்கிறார் சைபர் ப்ளாசத்தை உருவாக்கும் குழுவின் தலைவரான பயோ என்ஜினீயர்
டேனியல் பிராங்க்கெல்.
தற்போது,
பரிசோதனை நிலையில் இருக்கும் சைபர் ப்ளாசம் இன்னும் சில வருடங்களில்
முழுமையாக உருவாக்கப்பட்டு விடும். மேலும், இன்னும் 5 வருடங்களுக்குள்
சைபர் ப்ளாசமானது மக்கள் பயன்பாட்டுக்கும் வந்துவிடும் என்கிறார் டேனியல்
பிராங்க்கெல்.
-முனைவர் பத்மஹரி
No comments:
Post a Comment