Tuesday, April 10, 2012

இலை, தழைகளிலிருந்து சத்து நிறைந்த மட்கிய உரம் தயாரிக்கலாம்


கடந்த வாரத்தில் ஒரு நாளிதழில் வந்த செய்தி: கலப்பின மாடுகளின் பாலை நாம் அருந்துவதால் தான் சர்க்கரை மற்றும் இதய நோய்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளதாக என்பதை குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக கால்நடை பல்கலைக்கழகம் அறிவித்தது.
பொதுவாக இன்றைக்கு, இது போல் பால் மட்டுமல்ல, உணவிற்காக பயிரிடப்படும் பயிர்களுக்கு தாராளமாக ரசாயன உரங்களை இடுவதால் மனித உடலில் கடுமையான விஷம் மறைமுகமாக கலந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. என்டோசல்பான் என்னும் கொடிய ரசாயனத்தை தடை செய்ய சொல்லி சமீபத்தில் இந்தியாவின் பல மாநிலங்களிலும் பேரணிகள், ஊர்வலங்கள் நடைபெற்றன. இது போல் தடை செய்யப்பட வேண்டிய ரசாயனங்கள் நிறைய இருக்கின்றன. இப்படி இவற்றையெல்லாம் தடைசெய்தால் எதை தான் பூச்சிக்கொல்லியாகவும், உரமாகவும் பயன்படுத்துவது என்ற கேள்வி எழுகிறது. 

இயற்கையாக நாமே தயாரிக்கும் உரங்களை பயன்படுத்த முடியும். காடுகளில் இருக்கும் மரங்கள் எல்லாம் செழிப்பாக பச்சைபசேல் என்று தழைக்கின்றன. காரணம், அவற்றில் இருந்து விழும் இலைகள் மக்கி அந்த தாவரங்களுக்கே உரமாகி விடுகின்றன. இந்த எளிதான செயல்முறையை நாமும் செய்து இயற்கை உரத்தை தயாரிக்கலாம். பொதுவாக இப்படி மரங்களிலிருந்தும், செடிகளிலிருந்தும் கிடைக்கும் கழிவுகளை பண்ணைக்கழிவுகள் என்கிறோம்.
கழிவுகளை சேகரித்தல்
பல்வேறு இடங்களிலிருந்து கிடைக்கும் இலை, தழைகளை சேகரம் செய்து, ஏதாவது ஒரு மூலையில் குவித்து வைக்க வேண்டும். கழிவுகளை மட்குவிப்பதற்கு முன்பாக அவற்றை சிறு சிறு துகள்களாக்கும் இயந்திரத்தினை (சிறிய அளவில் இலை, தழைகளை வெட்டும் எந்திரம்)பயன்படுத்துவன் மூலம், துகள்களாக்குவது சுலபம்.வீட்டில் இது போன்ற கழிவுகளை மக்க வைக்க ஒரு கம்பி போன்றதடியை கொண்டு கிளறலாம்.
பச்சை மற்றும் பழுப்பு நிறக்கழிவுகளை கலக்குதல்
இந்த கழிவுகளில் இருக்கும் கரிமச்சத்து மற்றும் தழைச்சத்து விகிதம் தான் மட்கும் முறையை நிர்ணயிக்கும் காரணிகளாகும். இவை இரண்டிற்கான விகிதம் அதிகமாக இருந்தால், மட்கும் முறை நடைபெறாது. விகிதம் குறைவாக இருந்தால் மட்டுமே, மட்கும் முறை நடைபெறும். சாதகமான விகிதம் கிடைப்பதற்கு கரிமச்சத்து மற்றும் தழைசத்து அதிகமுள்ள கழிவுகளை நன்கு கலக்க வேண்டும். அதாவது பச்சை மற்றும் காய்ந்த கழிவுகளை சேர்த்து கலக்க வேண்டும்.
உதாரணத்திற்கு, பச்சை கழிவுகள்-கிளைசிரிடியா இலைகள், பார்த்தீனியம் களைகள், அகத்தி இலைகள்.வீட்டில் உரம் தயாரிக்கும் போது சமையல் அறை காய்கறி கழிவுகள்.
பழுப்பு கழிவுகள்- வைக்கோல், காய்ந்த இலைகள் மற்றும் காய்ந்த புற்கள்
 இவ்விரண்டையும் கலந்து வைப்பதன் மூலம் குறைந்த காலத்தில் மட்க வைக்க முடியும்.
கம்போஸ்ட் குழிகள்
திறந்த வெளியில் இது போல் உரம் தயாரிக்கும் போது அதற்காக மட்க வைக்கும் இடம் ஒன்றை தயார் செய்ய வேண்டும். இந்த குழிஎன்பது  உயரத்திலும், நல்ல நிழற்பாங்கான இடமாக இருப்பதும் அவசியம். இந்த இடத்தில் மேலே சொன்ன கரிமச்சத்து மற்றும் தழைச்சத்து நிறைந்த கழிவுகளை பச்சை மற்றும் பழுப்பு கழிவுகளை ,சுமார் 4 அடி உயரத்திற்கு மாற்றி மாற்றி இட்டு இடையிடையே கால்நடைக்கழிவுகளையும் கலக்கி சமப்படுத்திய பின் அவற்றை நன்கு ஈரமாக்க வேண்டும். இந்த அமைப்புக்கு பெயர் தான் 'கம்போஸ்ட் குழிகள்'.
மட்குவதற்கு தேவையான உயிர் உள்ளீடுகள்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நுண்ணுயிர் கூட்டுக்கலவையை இடுவதன் மூலமாக கழிவுகளை மட்குவதை துரிதப்படுத்தலாம். 1 டன் பயிர்க்கழிவிற்கு 2 கிலோ நுண்ணுயிர் கூட்டுக்கலவையை 20 லிட்டர் நீரில் கலந்து கரைசலாக்கி, குவித்து வைக்கப்பட்டுள்ள பயிர்க்கழிவில் நன்றாக தெளித்து கலக்க வேண்டும்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நுண்ணுயிர் கூட்டுக்கலவை கிடைக்காத பட்சத்தில், தழைச்சத்திற்கும் நுண்ணுயிர்க்கும் சிறந்த ஆதாரமாக விளங்கும் பசுஞ்சாணக்கரைசலை பயன்படுத்தலாம். 1 டன் பயிர்க்கழிவிற்கு, 40 கிலோ பசுஞ்சாணத்தை 100 லிட்டர் நீரில் கரைத்து பயிர்க்கழிவில் நன்றாக தெளிக்க வேண்டும்.
கம்போஸ்ட் படுக்கையில் காற்றோட்டம் ஏற்படுத்துதல்
'கம்போஸ்ட் குழிகளில்' ஆக்சிஜன் அதிகமாக இருந்தால் தான் நுண்ணுயிர்க்களின் செயல்பாடுகள் தூண்டப்படும். எனவே, குழியில் காற்றோட்டம் ஏற்படுத்த பூமியில் உள்ள குழியின் பக்கவாட்டில் இருந்து அல்லது செங்குத்தான நிலையில் குழாய்களைப் பொருத்தலாம். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இந்த குழியில் இருக்கும் கழிவுகளை கிளறி விடுவதன் மூலம் கீழுள்ள கழிவுகள் மேலும், மேலுள்ள கழிவுகள் கீழும் செல்வதால், இந்த கழிவை மக்க வைக்க உருவாகி இருக்கும் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் துரிதப்படுத்தப்படுகிறது.
ஈரப்பதம் நிலைநிறுத்துதல்
எந்த சூழ்நிலையிலும் கம்போஸ்ட் குழிகளில் ஈரப்பதம் குறையாமல்பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு குறையும் பட்சத்தில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து மட்கும் தன்மை வெகுவாக பாதிக்கப்படும்.
மட்கிய உரம் முதிர்வடைதல்
மேல் கண்டவாறு 30 நாட்கள் கம்போஸ்ட் குழிகளில்  வைக்கப்படும் இந்த கழிவானது முதிர்வடையும் நிலையை எட்டும். முதிர்வடைந்த மட்கிய உரமானது, அளவு குறைந்தும், கருப்பு நிறமாகவும், துகள்களின் அளவும் குறைந்து காணப்படும். முதிர்வடைந்த மக்கிய உரத்தினை கலைத்து தரையில் விரித்து, மறுநாள் 4 மி.மீ சல்லடை கொண்டு சலித்து எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
செறிவூட்டப்பட்ட மட்கிய உரம்
அறுவடை செய்யப்பட்ட மட்கிய உரத்தினை,நிழலில் கடினமான தரையில் குவித்து நுண்ணுயிர்களான அசோடோபேக்டர், சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா 0.02 சதவீதம், ராக்பாஸ்பேட் 0.2 சதவீதம் ஆகியவற்றை 1 டன் மக்கிய உரத்துடன் கலந்து, 60 சதம் ஈரப்பதம் இருக்கும்படி 20 நாட்கள் வைப்பதன் மூலம் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம். இவ்வாறு தயாரிக்கப்பட்ட உரமானது செறிவூட்டப்பட்ட உரமாகும். 

இந்த உரமானது சாதாரண மக்கிய உரத்தை விட ஊட்டச்சத்து அதிகமாகவும், நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிர்கள் அதிகமாகவும், தாவர வளர்ச்சியை தூண்டுவதற்கும் உதவும். வீட்டில் இருக்கும் உடைந்த பிளாஸ்டிக் வாளிகளில் கூட இது போன்ற இலைக்கழிவுகளை போட்டு மக்கிய உரம் தயாரிக்கலாம். அதாவது இந்த பிளாஸ்டிக் வாளியானது மட்க வைக்கும் பயிர்க்குழி போல் பயன்படும்.

No comments: