Monday, July 2, 2012

`காலடியில்’ மின்சாரம்!

`காலடியில்’ மின்சாரம்!

மின்சாரத்தின் மகத்துவத்தை நாம் முழுமையாக உணர்ந்திருக்கும் தருணம் இது. இந்நிலையில், நாம் நடந்தாலே மின்சாரம் உற்பத்தியாகும் என்றால் எப்படியிருக்கும்? `ஸ்வீட் ஷாக்'காக இருக்கிறதா? தொடர்ந்து படியுங்கள்...
நாம் காலடி வைக்கும்போது உருவாகும் பொறியியல் சக்தியை மின்சக்தியாக மாற்றக்கூடிய, ஒரு காகித அளவு கனமுள்ள `ஜெனரேட்டரை' விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கின்றனர். வைரஸ்களும் பயன்படுத்தப்படும் இந்த ஜெனரேட்டர்கள், உயிருள்ள ஜெனரேட்டர்கள் (லிவிங் ஜெனரேட்டர்ஸ்) எனப்படுகின்றன. இவை, ஒருவரின் காலணி அடிப்பகுதியில் (சோல்) இருந்து மின்சாரத்தை உருவாக்கி
விடும்.
இப்போதைக்கு இம்முறையின் மூலம் சிறிதளவு மின்சாரம்தான் உற்பத்தி செய்யப்படுகிறது என்றபோதும், வருங்காலத்தில் செல்போன் போன்ற சாதனங்கள் முதல் விளக்குகள் வரை இந்த மின்சாரத்தைக் கொண்டு இயக்கலாம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
இந்தத் தொழில்நுட்பத்தில் வைரஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பது உங்களுக்குக் கொஞ்சம் கவலையை ஏற்படுத்தலாம். ஆனால் இவை தீமையற்றவை என்று உறுதியளிக்கிறார்கள் ஆய்வாளர்கள். உடல்ரீதியான அழுத்தத்தை மின்சாரமாக மாற்றுவதற்கு ஏற்றவாறு இந்த வைரஸ்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
தற்போது இந்த தொழில்நுட்பம் ஆய்வக அளவில் சிறப்பாகப் பலன் கொடுத்து வருவதாக அமெரிக்க எரிசக்தித் துறையின் லாரன்ஸ் பெர்க்லி நேஷனல் லேப் தெரிவிக்கிறது.
இந்த ஆய்வக ஆய்வாளர்கள், தங்கள் தொழில்நுட்பத்தின் பலனை உறுதிப்படுத்தும்விதமாக தமது மிகச் சிறிய ஜெனரேட்டரால் `லிக்விட் கிரிஸ்டலால்' ஆன சிறிய எழுத்துகளை ஒளிர வைத்தனர். இதற்கான மின்சாரமானது, விசேஷமாக மாற்றியமைக்கப்பட்ட வைரஸ்களால் பூசப்பட்ட, தபால் தலை அளவுள்ள ஓர் எலக்ட்ரோடை விரலால் தட்டியபோது உற்பத்தியானது.
குறிப்பிட்ட வைரஸ்கள், தட்டும் சக்தியை மின்சக்தியாக மாற்றுகின்றன. ஓர் உயிருள்ள பொருளில் இருந்து, `பீசோஎலக்ட்ரிக்' அம்சத்தைப் பயன்படுத்தும் முதலாவது ஜெனரேட்டராகும் இது. `பீசோஎலக்ட்ரிசிட்டி' என்பது ஒரு திடப்பொருளில் பொறியியல் அழுத்தத்தால் சேகரமாகும் மின்சக்தியாகும்.
இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், கதவை மூடுதல், படிகளில் ஏறுதல் போன்ற அதிர்வை ஏற்படுத்தும் பல்வேறு அன்றாடப் பணிகள் மூலம் உருவாகும் மின்சாரத்தைக் கிரகித்துக்கொள்ளக் கூடிய சிறிய உபகரணங்களை உருவாக்க முடியும்.
``இந்த விஷயத்தில் இன்னும் அதிகமான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. ஆனால் தனிமனித ஜெனரேட்டர்கள், வைரஸ் அடிப்படையிலான மின்னணுப் பொருட்களை உருவாக்கும் முயற்சியில் இது ஒரு நம்பிக்கை அளிக்கும் முதல்படியாகும்'' என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்களில் ஒருவரான சியுங் வூக் லீ கூறுகிறார்.

No comments: