Thursday, July 5, 2012

கொங்கு வேளாளர்கள் திருமண முறைகள்

கொங்கு வேளாளர்கள்
கொங்கு வேளாளர்கள்


கொங்கு வேளாளர்கள் அல்லது கொங்கு வேளிர்கள் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான கொங்கு நாட்டுப் பகுதிகளில் பெருமளவில் உள்ளனர். பொதுவில் இவர்களைக் கவுண்டர் என்றும் அழைப்பர். இவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளிலும் குடியேறி வசிக்கின்றனர்.

இவர்களின் மிக முக்கியமான தொழிலாக விவசாயத்தை அமைத்துக் கொண்டனர். கடும் உழைப்பாளிகளான இவர்கள், காடுகளை சீர் செய்து அருமையான விவசாய நிலங்களாக மாற்றி கொண்டனர். 1960ற்கு பிறகு விவசாயம் அல்லாது, தொழில் துறையிலும் சாதனைகள் புரிந்து வருகிறார்கள்.

கொங்கு வேளாளர் தங்களுக்குள் பல குழுக்களாகப் பிரிந்து, அந்த குழுக்களை குலங்கள் என்றும், கூட்டங்கள் என்றும் வகைப்படுத்திக் கொண்டனர். அவ்வாறு ஏற்படுத்திக் கொண்ட தங்கள் குலத்தை (கூட்டத்தை) சேர்ந்தவர்கள் பங்காளிகள் என்றும் அழைத்துக் கொண்டனர். இவர்களுக்குள், அதாவது பங்காளிகளுக்குள், திருமண உறவை ஏற்படுத்திக் கொள்வதில்லை.

கொங்கு வேளாளர் கூட்டப் பெயர்கள் மிகத் தொன்மையானவை
கொங்கு நிலம் பற்றியும் அப்பகுதி மக்கள் பற்றியும் சங்க இலக்கியக் காலம்தொட்டு கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் குறிப்புகள் உள்ளன. அகழ்வாய்வுத் தரவுகளும் இப்பகுதியின் வாழ்வியல் தொன்மைக்குச் சான்றளிக்கின்றன. இந்நிலையில் நமது பெயரியல் ஒப்பாய்வு வியக்கத்தக்க பல சான்றுகளை வெளிக்கொணர்கிறது. கொங்கு என்ற இடப்பெயர் மட்டுமன்றி தமிழ்நாட்டுக் கொங்கு மண்டலத்தின் வரலாற்று மரபு சார்ந்த நிலப் பிரிவுகளான ஆறை, கோவங்கம், கவைய, கவச, செம்ப, தணக்க, தலைய, அரைய, பழன, வாரக்க, முளசை, காங்கேய, தூர, அண்ட, மன்னி, மண, உருக்கா, வாழவந்தி, படி போன்ற பெயர்களை அப்படியே நினைவுறுத்தும் இடப்பெயர்களைச் சிந்து வெளியிலும் அதற்கு அப்பாலும் உள்ள வடமேற்குப் புலங்களிலும் காண முடிகிறது.

கொங்கு வேளாண் குடிகளின் சமூகவியல் வரலாற்றில் காணி ஊர்களுக்கு ஒரு சிறப்பிடம் உண்டு.களங்காணி, மானூர், பாப்பிணி, முளசி, தோளூர், பழனி, தூசி, ஆளியார், கொற்றை, கோக்கலி, கோட்டூர், கூகலூர், நவனி, திடுமல், மொஞ்சனூர், பட்டாலி, கத்தேரி மற்றும் இன்ன பிற காணியூர்ப் பெயர்களை முழுக்க ஒத்திருக்கும் பெயர்கள் அப்பகுதிகளில் பயன்பாட்டில் உள்ளன.

கொங்கு வேளாளர்களின் அடிப்படையான குழு அடையாளம் அவர்களது கூட்டம் ஆகும். சிந்து வெளிப்பகுதியிலும் அதற்கு அப்பாலும், கொங்கு வேளாண் குடியினரின் கூட்டப் பெயர்களை (Clan names) நினைவுறுத்தும் இடப்பெயர்கள் வழங்குகின்றன. அந்துவன், ஆதி, அடகர், அழகன், ஆவன், ஆடர், ஓதாளன், கண்ணர், செங்கண்ணி, சேரன், பாண்டியர், பில்லன், ஆடை, ஆவலன், மணியன், மாடை, ஆந்தை, மூலன், மூத்தன், மேதி, வாணி, தூரன், கல்வி, காமன், காடை, கொடியன், கொற்றன், கோவன், சேகன், நாகன், நீலன், பதரி, உண்ணகர், ஓசை, கம்பன், காவலன், காரை, கீரை, கொள்ளி, சோமன், தட்டை, நந்தர், நாரை, நேரியன், பாசை, வேந்தர், வெளியன், ஈஞ்சர், ஒழுக்கர், குழாயர், கூறை, செம்பர், சேடர், பனையர், அவுரியன், பூச்சந்தை, பூசர், பெரியன், பொன்னன், மயிலர், மழவன், வண்ணக்கர், தனஞ்செய், தோடை, பவளர், அவுரியன், ஊரியன், காவூரி, குங்கிலி, கொம்மையர், கோரக்கர், சாத்தந்தை, செழியன், தோயன், நெய்தலி, பணகன், வல்லி, தழிஞ்சி, பயிரன், பதுமன், கொண்டரங்கி, செல்லன், நீருணி போன்ற கொங்கு வேளாளர் கூட்டப் பெயர்களை நினைவுறுத்தும் இடப் பெயர்கள் இதற்குச் சான்றாகும்.

இந்தக் கூட்டப் பெயர்கள் மிகத் தொன்மையானவை. சங்க கால அரசர் பெயர், குறுநிலத்தலைவர் பெயர், புலவர்களின் பெயர்கள், பழங்காலக் கல்வெட்டுகள், மட்பாண்ட ஓடுகளில் குறிக்கப்பட்டுள்ள தனி மனிதர்களின் பெயர்களில் கொங்குக் கூட்டப் பெயர்களில் சிலவற்றின் பயன்பாட்டைக் காண முடிகிறது. இதைக் கொண்டு, இப்பெயர்களின் பயணத்தின் தொன்மையை அளவிட முடியும். இது ஒரு பதச் சான்றாய்வே (Sample Study) ஆகும். பிற தமிழ்க்குடிகள் பற்றிய ஆய்வுகள் இது போன்று மேலும் சான்றளிக்கக் கூடும்.

குலதெய்வம்
கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் தனது குலத் தொழிலான விவசாயத்தை பெருக்க பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லவேண்டி இருந்தது, ஆகையால் அண்ணன் தம்பி மற்றும் அக்காள் தங்கை உறவுகள் மாறிவிடாமல் இருக்க அதாவது உறவு மாறி தனது தங்கையை அல்லது அண்ணன் போன்ற உறவு முறை உள்ளவர்களை திருமணம் செய்யாமல் இருக்கவும் உரிய உறவுமுறை அடையாளம் தெரிந்து கொள்வதற்கு கூட்ட முறையை உருவாக்கினர். இதற்கு தங்களது தந்தையர் பெயரை வைத்தனர். அதாவது செல்லன் கூட்டத்தார் செல்லன் வழிவந்தவர்கள். உலகத்தில் உள்ள அனைத்து செல்லன் கூட்டத்தை சேர்ந்தவர்களும் அண்ணன் தம்பி உறவு முறை உள்ளவர்கள். இவர்கள் அனைவரும் செல்லன் என்ற ஒருவரின் வழிதோன்றல் ஆகும். ஆகவே ஒரே கூட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் பெண்ணெடுத்து கொள்ள மாட்டார்கள். ஒரே கூட்டத்தை சேர்த்தவர்களே பங்காளிகள் ஆவர். கவுண்டர்கள் மற்ற இனத்தினரைப் போல் பொதுவான தெய்வத்தை மட்டும் வணங்காமல் தாங்கள் எவ்வழி வந்தனரோ - அதாவது தங்கள் ஆதி தாய் தந்தையரை மட்டுமே குலதெய்வமாக வணங்குகின்றனர். இதுவே இவர்களுக்கு குலதேய்வமாகும். இங்கு வருடம் ஒருமுறையேனும், ஒரே கூட்டத்தை சேர்ந்தவர்கள், தங்கள் குலதெய்வ கோவிலுக்கு வந்து ஆதி தாய் தந்தையரை வணகுவதுடன் தனது உறவுகளை சந்தித்து செல்கிறார்கள்.

கொங்கு வேளாளர் திருமண முறைகள்...

கொங்கு வேளாளரின் திருமண சடங்கின் முதற்படி பொருத்தம் பார்த்தல் தான்..... கம்பரின் மங்கள வைத்து பாடலில் கூட ஒன்பது பொருத்தம் என்று கூறப்பட்டுள்ளது.

பிறப்பு குடிமை ஆண்மை ஆண்டோடு

உருவு நிறுத்தகாம வாயில்

நிறையே அருளே, உணர்வோடு திருவென

முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே..

என தொல்காப்பியர் பத்து வகை பொருத்தம் பற்றி கூறுகிறார். பிறப்பு என்பது குலம், குடிமை என்பது குடிப்பாடு, நற்குடி பிறத்தல், ஒத்த குலம் என்பது ஒரே குளத்தில் எடுத்தல் இல்லை. ஒரு தகுதியான மற்ற குளத்தின் கண் என்பதாகும். ஆணிற்கு ஆள்வினையும், வலிமையுமாம், பெண்ணிற்கு பெண்நீர்மையாம், ஆண்டேன்பது ஆணிற்கு இருபதும், பெண்ணிற்கு பதினாறுமாம். சிலம்பில் கண்ணகிக்கு ஈராறு வயது, கோவலனுக்கு ஈரெட்டு வயது பொருத்தமற்றது. குலவிப்பருவம் நான்காண்டு கழித்து ஈராறும், ஈரெட்டும் எனக்கொள்ள வேண்டும். இதுவே சரியான உறவு. உறவு என்பது உடல் பொருத்தம். நிருத்தகாம வாயில் என்பது இருவர் மாட்டுத் தோன்றும் அன்பு. நிறை என்பது அடக்கம். அருள் என்பது கருணை, உணர்வு என்பது அறிவு....


கொங்கு வேளாளர் திருமண முறைகள்.
கொங்கு வேளாளர்கள், திருமணத்திற்க்காக பல்வேறு நிலைகளிலும் ஆலோசனை செய்வர், காரணம் இது ஆயிரம் காலத்து பயிர் என்பது அவர்களது கொள்கை, இன்றைய நாகரிக உலகில் திருமணம் என்பது மூன்று மாத குறுவை சாகுபடி போல ஆகிவிட்டது, ஆனால், கொங்கு வேளாளர்களின் திருமணங்கள் அப்படிப்பட்டவை அல்ல... முதலில் குறு பலன் பார்ப்பர், பின்னர் ஜாதகம் பார்ப்பர், இருவரின் பிறந்த ஜாதகம், அல்லது பெண்ணின் பூப்பெய்திய குறிப்பையும் வைத்து பார்ப்பர். செவ்வாய் தோஷம் மிகவும் முக்கியாமாக பார்த்து தான் திருமணம் செய்வர். அவற்றிற்கு பின்னர், சகுனம் பார்த்தலும், தடம் வழி பார்த்தலும் முக்கியம் ஆகும்.

பெண் பார்க்கும் படலம்:

கொங்கு வேளாளர் பெண் பார்த்தலை ஆடம்பரமாக, விமரிசையாக நடத்துவதில்லை. முதல் முறை பெண்ணை நேரில் பார்க்கும்போது, பெண்ணிற்கே தெரியாமல், கோவில், பிற விசேஷ இடங்கள்...திருமண நிகழ்சிகள் ஆகிய இடங்களில் பார்த்து விடுவர். "காட்டுக்கு களை வெட்டினது போலவும் இருக்கணும், வீட்டுக்கு பெண் பார்த்தது போலவும் இருக்கணும்" என்பது இவர்களது பழமொழி... இப்படி, ஒருவருக்கொருவர் அறியாமல் பார்த்துவிட்ட பிறகு, முறைப்படி பெண் பார்த்தல், ஒரு சம்பிரதாயத்திற்காக நடைபெறும், அதை தடம் வழி பார்த்தல் என்பர்...

கொங்கு வேளாளர்கள் திருமண முறைகள் நிச்சயதார்த்தம் :

வண்ணாத்தி வெண்மையான துணியை விரிப்பாக போட்டு வைப்பார்கள், நடுவில் இரண்டு முக்காலி வைக்கப்பட்டு இருக்கும். ஒன்றில் அருமைக்காரர் அமர்ந்திருப்பார், இன்னொன்றில், பெரிய தாம்பாளத்தில், தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, சந்தானம், குங்குமம், போவோடு, நிச்சய புடவை, மோதிரம் ஆகியன இருக்கும். நிறைநீர் செம்பு அருகில் இருக்கும். அருமைகாரருக்கு இடது பக்கம் பெண் வீட்டாரும், வலது பக்கம் ஆண் வீட்டாரும் அமர்வர். பெண்ணின் தாய் மாமன் சம்மதம் சொன்ன பிறகு தான் நிச்சயம் செய்யப்படும். அங்கேயே தாலிக்கு பொன் கொடுத்தல் நடைபெறும். வெற்றிலை பாக்கு மாற்றிக்கொள்வர். மாப்பிள்ளை வீட்டார் கொடுத்த நிச்சய புடவையை பெண்ணிற்கு அருமைக்காரர் கொடுப்பார். பெண் அதை அணிந்து கொண்டு வந்ததும், அருமைக்காரர், பெண்ணிற்கு, சந்தானம், குங்குமம் வைத்து, ஒரு தேங்காய், ஐந்து பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள் ஆகியவற்றை கொடுப்பார்.பெண் அதை வாங்கி மடியில் பத்திரமாக கட்டிக்கொள்ள வேண்டும். அதன் பின், பெரியவர்களை அப்பெண் வணங்க வேண்டும். இதன் பின்னர் அனைவருக்கும் விருந்து அளிக்கப்படும். இவை அனைத்தும் பெண் வீட்டில் தான் நடைபெறும்.

கொங்கு வேளாளர்கள் திருமண முறைகள்: தடம் வழி பார்த்தல் நிகழ்ச்சி,

உற்றார், உறவினரோடு மிக சிறப்பாக நடைபெறும். காலையில் பெண் வீட்டிலும், மதியம் மாப்பிள்ளை வீட்டிலும் விருந்து நிகழ்ச்சி நடைபெறும். இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கான உறவினர்கள் கலந்து கொள்வர்... திருமணதிற்கு தேதி குறிப்பது அன்று நடைபெறும்...
" இருபெருங்குரவரும் ஒருபொருநாளால்
மண அணிகான மகிழ்ந்தனர்"
என்று சிலப்பதிகாரமும், நல்ல நாளில் திருமண உறுதி செய்தலை கூறுகிறது.

கொங்கு வேளாளர்கள் திருமண முறைகள்: சகுனம் பார்த்தல்:

கொங்கு வேளாளர்கள், கோவிலில், வீட்டு வாசலில், பள்ளி சகுனம் பார்ப்பர், திருமணம் பற்றி புறப்படும் போது, பறவை, பூனை ஆகிய சகுனங்களையும், எதிரில் விறகு சுமை, அமங்கல மகளிர், ஆசாரி, நாவிதர் ஆகியவர்கள் எதிரில் வந்தால் ஆகாது என்பர். நிறைகுட மகளிர், வண்ணான் துணி கொணர்தல், நல்லது என எண்ணுவர். புறப்படும் போது பிறர் உரையாடலில் நற்சொல் கேட்டால் நல்லது என எண்ணுவர். கோவிலில் பூ கேட்பதும் உண்டு....

கொங்கு வேளாளர்கள் திருமண முறைகள்:

நிச்சயதார்த்ததிற்கு பிந்தைய நிகழ்வுகள்:

கொங்கு வேளாள மக்கள் எந்த ஒரு காரியத்தையும் குலமரபு மாறாமல் தான் செய்வார்கள். எல்லா காரியங்களிலும் உற்றுழி உதவும் குணம் தெற்றென தெரியும். முகூர்த்த நாள் குறித்த பின்னர், விறகு வெட்டுதல், நெல் வேக வைத்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும். அன்றைய நாளில், இதற்க்கெல்லாம் கூலி ஆள் வைக்க மாட்டார்கள். உறவினர்கள் இதற்க்கெல்லாம் உற்றவாறு உதவி செய்வார்கள். ஊருக்கு அருகில், பெரும்பாலும் அவரவர் நிலத்திலேயே, பால் வரும் மரத்திற்கு பூச்சி செய்து முதற்கிளை வெட்டுவார்கள். அருமைக்காரர் தேங்காய், பழம் வைத்து, சூடம், சாம்பிராணி, ஊதுபத்தி மனத்துடன் பூசை செய்து கொடுவாள் எடுத்து கொடுப்பார். இதில் மூன்று கிளை உடைய ஒரு குச்சியை வெட்டி எடுத்து மண வீட்டிற்கு கொண்டு வருவார்கள். இது தான் முகூர்த்த கால். பெண் வீட்டு உறவு முறை ஒரு கிளை, மாப்பிள்ளை வீட்டு உறவு முறை ஒரு கிளை, இது இணைந்து இந்த குடும்பம் மூன்றாவது கிளை விட்டு வளர வேண்டும் என்பதால் தான் மூன்று கிளை உடைய பால் மரம் முகூர்த்த காலாக வைத்தனர்.

இதன் பின்னர் விறகுக்கு வேண்டிய அளவு மரங்களை வெட்டி வருவார்கள். பின்னர் நெல் வேக வைக்கும் நிகழ்வு நடைபெறும். இதனை எழுதிங்கள்கார பெண்மணி தொடங்கி வைப்பார். முதலில் இவர் ஐந்து வள்ளம் நெல் அளந்து அண்டாவில் போட்டு, பூசை செய்து தொடங்கி வைப்பார். கோபகு வேளாளர்கள் எதையும் செய்யும் முன்னர் சகுனம் பார்த்து, பூசை செய்து தொடங்கி செய்வார்கள். "பைய சென்றால் வையம் தாங்கும்" என்ற முதுமொழிக்கு உதாரணமாக செயல்பட்டனர். ஆனால், இன்றைய காலங்களில் இது போன்ற சடங்குகள் நடைபெறுவது இல்லை. மூட பழக்கம் என்று விட்டுவிட்டனர். ஆனால், அன்றைய காலத்தில், ஆலைகள் அதிகம் இல்லாத நாட்களில், திருமணதிற்கு தேவையான நெல்லை தயார் செய்ய, இந்த நெல் குத்தும் சீர் என்ற ஒன்றை வைத்தனர்.

No comments: