Monday, August 6, 2012

ஸ்டெம் செல்லில் இருந்து உருவான `துடிக்கும்’ இதய தசைகள்!

ஸ்டெம் செல்லில் இருந்து உருவான `துடிக்கும்’ இதய தசைகள்!

Graphic illustration of a human heart

 

Graphic illustration of a human heart

ஸ்டெம் செல்கள் மருத்துவத்துறைக்கு கிடைத்துள்ள ஒரு `அட்சயப் பாத்திரம்' அல்லது `அமுதசுரபி' என்றே சொல்லலாம்.
ஏனென்றால் மருத்துவத்துறை இதுநாள் வரையில் சந்தித்து வரும் எண்ணற்ற சவால்களை ஒவ்வொன்றாக குறைத்துக்கொண்டே வருகின்றன புதிய வகையான ஸ்டெம் செல் தொழில் நுட்பங்கள்.
உடலின் எல்லா வகையான உயிரணுக்களாகவும் மாறும் அசாத்திய திறன் கொண்ட ஸ்டெம் செல்கள் மூலம், இதுவரையில் புற்றுநோய், எய்ட்ஸ் உள்ளிட்ட தீராத நோய்களுக்கான தீர்வுகள் ஒவ்வொன்றாக வந்தவண்ணம் இருக்கின்றன.
இந்த வரிசையில், ஸ்டெம் செல்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ள, இயற்கையான இதயத்தைப் போலவே துடிக்கும் திறனுள்ள இதய தசைகள்தான் அட்டகாசமான புது வரவு.
வருடா வருடம் லட்சக் கணக்கான உயிர்களை பலிகொண்டு வரும் இதய நோய்களுக்கும் ஸ்டெம் செல்கள் மூலம் தீர்வு உண்டு என்பதை சுட்டிக்காட்டும் இந்த சாதனைக்கு சொந்தக்காரர்கள் அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.
இந்த பிரத்தியேகமான இதய தசை உயிரணுக்களின் துடிக்கும் வேகம், ஓய்வாக உள்ள மனிதர்களின் இதய துடிப்பின் வேகத்தை ஒத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது, ஒரு நிமிடத்துக்கு 60 துடிப்புகள்.
ஸ்டெம் செல்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட இதய தசைகளின் இந்த துடிக்கும் வேகம், இதற்கு முந்தைய ஸ்டெம் செல் ஆய்வுகளில் அறிவிக்கப்பட்ட அளவுகளை விட சுமார் 10 மடங்கு என்பது கவனிக்கத்தக்கது.
இந்த ஸ்டெம் செல் ஆய்வு, இதயத்தின் ரத்தத்தை வெளியேற்றும் திறனை பாதிக்கும் குறைபாடான `அரித்மியா' நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 25 லட்சம் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டது என்கிறார்கள் மிக்சிகன் பல்கலைக் கழக ஆய்வாளர்கள்.
மேலும், தோல் மாதிரிகளில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்களைக் கொண்டு, ஒரு குழுவாக இயங்கும் தன்மையுள்ள இதய தசை உயிரணுக்களை ஒரு புதிய உயிர்ப்பொறியியல் யுக்தி மூலம் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்வதே இந்த ஆய்வின் இலக்காகும்.
தூண்டப்பட்ட ஸ்டெம் செல்களை பயன்படுத்தி, இதய தசை உயிரணுக்களை உற்பத்தி செய்ய முயன்ற இதுவரையிலான பல ஆய்வுகள், தனி உயிரணுக்களின் இயங்கு திறனை பரிசோதனை செய்வதிலேயே கவனம் செலுத்தின.
ஆனால், `ஒன்றாக சேர்ந்து துடிக்கும் தன்மையுள்ள பல உயிரணுக்கள் கொண்ட ஒரு திசு போன்ற உயிரணு அமைப்புகளை உருவாக்குவதே, ஸ்டெம் செல்களை பயன்படுத்தி இதய மறுவளர்ச்சியை தூண்டும் சிகிச்சைகளின் நோக்கமாக இருக்க வேண்டும்' என்கிறார் இந்த ஆய்வின் மூத்த விஞ்ஞானி டாட் ஜெ.ஹெரான்.
இதய நோயாளிகளின் இருட்டடிக்கப்பட்ட எதிர் காலத்தில் புதிய நம்பிக்கை ஒளியை பாய்ச்சியிருக்கும் இந்த ஸ்டெம் செல் ஆய்வில், மேலதிக ஆய்வுகள் மூலம் தீர்க்க வேண்டிய ஒரு சிக்கலும் எஞ்சியிருக்கிறது.
உயிர்ப் பொறியியல் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இதய தசை உயிரணுக்கள் முந்தைய ஆய்வு முயற்சிகளில் உருவாக்கப்பட்ட உயிரணுக்களை விட 10 மடங்கு வேகமாக இயங்கினாலும், ஒரு ஆரோக்கியமான மனிதருடைய துடிக்கும் இதயத்தை விட குறைவான வேகத்திலேயே துடிக்கிறது என்பதுதான் அந்த சிக்கல்.
ஆக, இந்த இதய தசை உயிரணுக்களை இதய மறுவளர்ச்சி சிகிச்சைகளுக்காக உடனே பயன் படுத்த முடியாது. ஆனாலும் இதனால் எதிர்காலத்தில் நிறைந்த பலன் உண்டு.
அது எப்படி என்கிறீர்களா?
மனித இதயத் துடிப்பின் வேகத்தை விட குறைவான வேகத்தில் துடிக்கும் இந்த இதய உயிரணுக்கள், அதிர்ஷ்டவசமாக எலிகளின் இதய துடிப்பின் வேகத்துடன் ஒத்துப் போகின்றன. அதனால், இதுவரையில் எலிகளைக் கொண்டு நடத்தப்பட்ட மனித நோய்கள் தொடர்பான ஆய்வுகளை, இனி ஸ்டெம் செல்லில் இருந்து பிறந்த இதய தசைகளைக் கொண்டு மேற்கொள்ளலாம்.
இதன்மூலம், இதய ஆய்வுகளின் முடிவுகளை, இனி சிகிச்சைகளை வடிவமைப்பதற்கும், அது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கும் நேரடியாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

முனைவர் பத்மஹரி

No comments: