Tuesday, August 21, 2012

பாவம், ஈமு கோழிகள்!

பாவம், ஈமு கோழிகள்!



சென்ற ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் ஓர் அறிவிப்பு செய்தார்: "ஈமு கோழி வளர்ப்பு தொடர்பாக நாசிக் வட்டாரத்தில் சுமார் 2,000 விவசாயிகள், ரூ.200 கோடி அளவுக்கு ஏமாற்றப்பட்டுள்ளதாக வந்த புகார்களை விசாரிக்க சிஐடி போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்பதுதான் அது.
இதேபோன்று சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு, ஈமு கோழி வளர்ப்பு தொடர்பான விளம்பரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களது படத்தைப் பயன்படுத்தியதாக, தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஈமு கோழி நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டது. இது தவறுதலாக நடந்துவிட்டதாக அந்த நபர் மன்னிப்புக் கோரிய செய்தியும் வெளியாகியது.
இந்த இரண்டு சம்பவங்களையும் பத்திரிகைகள் மூலம் அறியவந்தவர்களுக்கு, இதில் ஏதோ குளறுபடி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள அதிக அறிவும் ஆழ்ந்த அனுபவமும் தேவையில்லை. ஆனாலும் தமிழ்நாட்டில், பணம்படைத்த படித்தவர்களும் படிக்காத விவசாயிகளும் பல கோடி ரூபாயை ஈமு கோழி வளர்ப்பு திட்டத்தில் இழந்து நிற்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, ""……..மூடர் "விதிவசம்’ என்கிறார்கள். ஆமடா விதிவசம்தான். அறிவில்லாதவனுக்கு இன்பம் இல்லை என்பது ஈசனுடைய விதி”, என்கிற பாரதியாரின் வசனக் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.
தற்போது பெருந்துறை சுசி ஈமு கோழிப்பண்ணை விவகாரத்தில் மட்டும் 12,000 பேர் சுமார் ரூ.200 கோடி முதலீடு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. கூட்டம் கூட்டமாக வந்து புகார் மனுக்களைக் கொடுக்கிறார்கள். இவர்கள் ரூ.1.5 லட்சம் முதல், ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்துள்ளனர்.
முதலீடு செய்தவர்களுக்கு ஈமு கோழிகள் தரப்படும். அதை வளர்த்துக் கொடுக்க வேண்டும். இதற்காக மாதம்தோறும் கோழிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஊக்கத் தொகை, போனஸ் என்றெல்லாம் ஒவ்வொரு நிறுவனமும் ஒரு தொகையைச் சொல்லி, மக்களைக் கவர்ந்துள்ளன. இப்போது ஊக்கத்தொகை கிடைக்கவில்லை என்கின்றபோது முதலீட்டைத் திரும்பக் கேட்கின்றனர் பணம் கொடுத்தவர்கள். ஆனால், முதலீடு வாங்கியவர்களையும் காணோம், முதலீடாகப் பெற்ற தொகை எங்கே போனது என்பதும் தெரியவில்லை. பாவம்,
ஈமு கோழிகள் தீனி போடக்கூட ஆள் இல்லாத நிலையில் தவிக்கின்றன. ஆனால் கால்நடைத்துறை சொல்கிறது, அவை 20 நாள்களுக்கு வெறும் தண்ணீரை மட்டுமே அருந்தி வாழும் என்று!
இதேபோன்று மக்கள் ஏமாந்துபோன சூழ்நிலை, அதிக வட்டி தருவதாக வாக்குறுதி அளித்த நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது. உறுதி அளித்தபடியே அதிக வட்டியை தொடக்கத்தில் இந்நிறுவனங்கள் கொடுத்தன. ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் முதலீடு முழுவதையும் இழக்க நேரிட்டது. இந்த நிறுவனங்கள் வேறு தொழில்களில் முதலீடு செய்வதாகச் சொல்லிக்கொண்டாலும், உண்மையில் அவ்வாறு செய்யவில்லை. மக்கள் கொடுத்த பணத்தை அப்படியே அவர்களுக்கு வட்டிக்காகத் திருப்பிவிட்டன. கடைசியில் மொத்தமாகச் சுருட்டிக்கொண்டன.
ஈமு கோழி வளர்ப்பில், முதலீட்டுக்கு இணையான ஈமு கோழிகள் முதலீட்டாளர் வசம் இருந்தாலும், அதனால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. ஈமு கோழிக்கான சந்தை இந்தியாவில் இல்லை. இந்தியாவில் ஈமு கோழிக்கறி உண்பாரும் யாரும் கிடையாது.
ஈமு கோழியை உயிருடன் ஏற்றுமதி செய்வதோ அல்லது வெட்டுவதோ கூடாது என்று ஆஸ்திரேலிய அரசு தடை விதித்தபோது, ஈமு கோழி வளர்ப்பு வெளிநாடுகளில் நடைபெறத் தொடங்கியது. அமெரிக்காவிலும்கூட இந்த முயற்சிகள் நடந்தன. ஆனால், ஈமு கோழியை வளர்த்து அதன் இறைச்சியில் கிடைக்கும் பணத்தைவிட, மாட்டிறைச்சி மூலம் அதிக வருவாய் கிடைப்பதை நடைமுறையில் உணர்ந்த அமெரிக்கர்கள் இத்திட்டத்தைக் கைவிடத் தொடங்கினர். கடைசியாக இந்தியாவில் இந்தத் திட்டத்தை இறக்குமதி செய்தார்கள்.
ஈமு கோழியின் விலை அதிகம் என்பதும், இதன் இறைச்சி, எண்ணெய், நகங்கள் எல்லாமும் விலை போகும் என்பதும் உண்மைதான். ஆனால், இதை யார் வாங்குகிறார்கள், சந்தையின் தேவைஅளவு என்ன என்று எந்த உண்மைகளையும் தெரிந்துகொள்ளாமல், முதலீடு செய்தவர்களின் அறியாமைதான் மோசடி செய்தவர்களின் முதலீடு.
"விவசாயத்தில் நஷ்டம். ஆகவே இதிலாவது கொஞ்சம் பணம் பார்க்கலாம் என்றுதான் ஈமு கோழி வளர்ப்புக்கு ஆட்பட்டோம்’ என்று அப்பாவித்தனமாக மக்கள் சொல்கிறார்கள். விவசாயம் பொய்த்தது என்பதற்காக பொய்யான திட்டங்களில் முதலீடு செய்யலமா? வானம் ஒருமுறை பொய்த்தாலும் மறுமுறை அள்ளிக்கொடுக்கும். இந்த மோசடிக்காரர்கள் இருந்த அனைத்து முதலீட்டையும் அல்லவா துடைத்துச் சென்றுவிட்டனர்.
தேக்கு மரம் வளர்த்து, 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதை வெட்டிப் பணம் தருகிறோம் என்கிற திட்டத்தில் ஒரு கன்றுக்கு சிறிய தொகை செலுத்தினால் போதும் என்றார்கள். 20 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மரம் இருக்குமா, நாம் இருப்போமோ, அல்லது அந்த நிறுவனம்தான் இருக்குமா என்று எதையுமே யோசிக்காமல் முதலீடு செய்தார்கள் தமிழர்கள்.
வட்டியைக் காட்டி, மரத்தைக் காட்டி, தங்கத்தைக் காட்டி, இறைச்சியைக் காட்டி ஏமாற்றியவர்கள் இப்போது மண்ணைக் காட்டியும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இது வேளாண் நிலமா, வீட்டுமனைக்கான அங்கீகாரம் பெற்றிருப்பது உண்மையானதுதானா? என்கின்ற எந்தக் கேள்விமுறையும் இல்லாமல் மனைகளை விற்கிறார்கள். "மண்ணுல போட்டா வீண் போகாது’ என்பது விவசாயத்துக்கான பழமொழி. வீட்டுமனைக்கானது அல்ல.
ஆசைக்கோர் அளவில்லை என்பார்கள். அறிவும் இல்லை!

No comments: