Tuesday, August 21, 2012

`டிசைனர்' தக்காளி ரெடி!

`டிசைனர்' தக்காளி ரெடி!



Tomato
`வாரக் கணக்கில் வைத்திருந்தாலும் அழுகிப்போகாத, காய்ந்து சுருங்கிப்போகாத, பார்ப்பதற்கு அழகான, சுவை மிகுந்த பழங்களும், காய்கறிகளும் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்' என்று நம்மில் பலரும் கற்பனை செய்து பார்த்திருப்போம். ஆனால் யதார்த்தத்தில் கடைகளில் கிடைக்கும் பழங்களும் காய் கறிகளும் பரவாயில்லை ரகம்தான்.
உதாரணமாக, தக்காளியை எடுத்துக்கொள்ளலாம். இயற்கையில் தக்காளிகள் காய் பருவத்திலிருந்து பழமாக மாறும்போது சமமாக முற்றுவது இல்லை. அதனால் ஒரு தக்காளி பழத்தில் அங்கங்கு திட்டு திட்டாக பச்சை நிறம் மீதமிருக்கும். அதாவது ஒரு பழத்தில் சில பகுதிகள் காயாகவே இருக்கும்.
தக்காளிகளில் உள்ள இந்த பிரச்சினை கடந்த 1920 களில் ஒரு முடிவுக்கு வந்தது. சமமாக முற்றி பழம் முழுவதும் சிவப்பாக, ஒரே வண்ணமாக இருக்கும் ஒரு வித்தியாசமான, ஆனால் இயற்கையான தக்காளி ரகத்தை வியாபாரிகள் கண்டறிந்தனர். அதன்பிறகு அந்த ரகத்தை மட்டுமே உற்பத்தி செய்தனர்.
இந்த தக்காளி ரகம் சமமாக முற்றி ஒரே வண்ணத்தில் இருப்பதற்கு, இதில் உள்ள ஒரு மரபணு மாற்றம் (மியூட்டேஷன்) தான் காரணம் என்று தாவரவியல் விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள். இதற்கு காரணமான மரபணு `சமமாக முற்றும்' மரபணு என்று அழைக்கப்பட்டது.
சமமாக முற்றி, பழம் முழுவதும் சிவப்பாக, அழகாக இருக்கும் இந்த தக்காளியில் ஒரு முக்கியமான பிரச்சினையும் இருக்கிறது. அதாவது நன்றாக முற்றி, சிவப்பாக, அழகாக இருந்தாலும் இந்த தக்காளி ரகம் ஏனோ சுவையாக இருப்பதில்லை. இந்த பிரச்சினைக்கான காரணத்தையும், தீர்வையும் கண்டறிய முற்பட்டார்கள் அமெரிக்க மற்றும் ஸ்பெயின் நாட்டு தாவரவியல் ஆய்வாளர்கள்.
`பொசிஷனல் குளோனிங்' என்னும் பிரத்தியேகமான மரபணுவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, `சமமாக முற்றும்' மரபணு இந்த தக்காளியின் மரபணுக் கோப்பில் உள்ள 10-வது குரோமோசோமில் இருப்பதை கண்டறிந்தார் முனைவர் பட்ட மாணவர் குவாங் கையென். அதன்பிறகு தக்காளியின் உணவு உற்பத்தியை கட்டுப் படுத்தும் புரதத்துக்கு காரணமான மரபணுவையும் கண்டுபிடித்தது இந்த ஆய்வுக்குழு.
பொதுவாக, ஒரு தாவரத்தின் உணவு உற்பத்தி அல்லது ஒளிச் சேர்க்கை முழுவதையும் அதன் இலைகளே கவனித்துக்கொள்கின்றன. ஆனால் தக்காளியை பொறுத்தவரை, அதன் உணவு உற்பத்தியில் சுமார் 20 சதவீதம் வளரும் தக்காளி பழத்தி லிருந்து கிடைக்கிறது. இதனால் தக்காளி பழத்தில் அதிக அளவு சர்க்கரையும், ஊட்டச் சத்துகளும் உற்பத்தி ஆகின்றன.
ஆனால், சமமாக முற்றும் மரபணுவில் ஏற்படும் மரபணு மாற்றம் காரணமாக தக்காளியில் உள்ள அதிகமான சர்க்கரை மற்றும் ஊட்டச் சத்துகளை உற்பத்தி செய்யும் புரதம் அழிக்கப்படுகிறது. அதனால் தான், சமமாக முற்றும் மரபணுவில் மாற்றம் உள்ள தக்காளி ரகத்தில் குறைவான அளவு சர்க்கரையும், ஊட்டச் சத்துகளும் உள்ளன என்கிறார் ஆய்வுக்குழுவின் தலைவர் ஜியோவானோனி.
சமமாக முற்றும் மரபணு மாற்றம் உள்ள தக்காளி ரகத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் சுவையான மற்றும் ஊட்டச் சத்து நிறைந்த தக்காளிகளை வியாபாரிகள் இழந்து விடுகிறார்கள். இதன் காரணமாக, தக்காளியின் சிவப்பழகில் மயங்கி அதனை வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்களும் பெரிதாக பயனடைவது இல்லை. மிகவும் பயனுள்ள இந்த அறிவியல் உண்மையை தக்காளி தொடர்பான இந்த புதிய ஆய்வு வெளிக்கொண்டு வந்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
இந்த கண்டுபிடிப்பின் மூலம் பல நன்மைகள் உண்டு என்கிறார் கள் ஆய்வாளர்கள். உதாரணமாக, கண்ணைக் கவரும் சிவப்பு வண்ண பழங்கள்தான் எங்களுக்கு வேண்டும் என்று அடம்பிடிக்கும் வியாபாரிகள், முற்றிய தக்காளி பழம் வரும்வரை தாவரங்களை வளரவிட்டு பின்னர் அவற்றை தேர்ந்தெடுத்து பயிர் செய்ய வேண்டியதில்லை. மாறாக, தக்காளி செடிகள் முளை பருவத்தில் இருக்கும்போதே அவற்றில் சமமாக முற்றும் மரபணு மாற்றம் இருக்கிறதா என்பதை டி.என்.ஏ பரிசோதனை மூலம் கண்டறிந்து மரபணு மாற்றமுள்ள செடிகளை தேர்ந்தெடுத்துவிடலாம்.
மற்றொருபுறம், `தக்காளியின் சிவப்பழகைப் பற்றியெல்லாம் எங்களுக்கு கவலையில்லை. அவற்றில் அதிக சுவையும், ஊட்டச் சத்துகளும் இருந்தால் போதும்' (அதாவது சமமாக முற்றும் மரபணு மாற்றம் இருக்கக் கூடாது) என்று விரும்புபவர்கள், சமமாக முற்றும் மரபணு மாற்றம் இல்லாத தக்காளி பயிர்களை தேர்ந்தெடுத்து பயிர் செய்துகொள்ளலாம்.
அடடா இதுவல்லவோ தொழில்நுட்பம், இனி தக்காளிகளில் நாம் எந்த தரத்தை விரும்புகிறோமோ அதை தேர்ந்தெடுத்து பயிர் செய்துகொள்ளலாம். புதுயுக டிசைனர் தக்காளி ரெடி, பயிர் செய்து பயனடைய நீங்க ரெடியா என்கிறார்கள் தாவரவியலாளர்கள்.

No comments: