Wednesday, August 8, 2012

நெற்பயிரில் பூச்சிகளை அழிக்க முட்டை ஒட்டுண்ணிகள்

நெற்பயிர்களில் தாக்கும் பூச்சிகளை அழிக்க டிரைக்கோகிராமா ஜப்பானிக்கம் எனும் முட்டை ஒட்டுண்ணிகள் பயன்படுத்தப்படுகின்றன.

புதுச்சேரி மாநில விவசாயிகள் ஆண்டுக்கு மூன்று பருவங்களில் (சொர்ணவாரி, சம்பா, நவரை) நெல் பயிடுகின்றனர்.
அதில் தோன்றும் குருத்துப் புழுவைக் கட்டுப்படுத்த டிரைக்கோகிராமா ஜப்பானிக்கம் எனும் முட்டை ஒட்டுண்ணிகளைப் பயன்படுத்தலாம் என்று புதுச்சேரி காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
 நெல் குருத்துப் புழு:
நாற்று நட்ட 20-30 நாள்கள் வயதுடைய நெல் வயலில் குருத்துப் புழுக்கள் அதிகம் காணப்படும். இதன் தாய்ப் பூச்சிகள் நடமாட்டமும் பரவலாக இருக்கும். ÷இவ் வகையான தாய் அந்துப் பூச்சிகள் இலைகளில் குவியல் குவியலாக முட்டைகளை இடுகின்றன. முட்டை குவியலிலிருந்து வெளிவரும் இளம் புழுக்கள் நெற்பயிரின் நடுக்குருத்தைத் துளையிட்டு உட்புகுந்து செல்கின்றன.
அவை மெதுவான தண்டுப் பகுதிகளைத் தின்று நடுக்குருத்தை செயலிழக்க செய்து விடுகின்றன. இந்த தாக்குதலுக்கு உள்ளான நடுக்குருத்துகள் காய்ந்து வெள்ளை சோகையாக மாறிவிடுகின்றன. கதிர் பிடிக்கும் பருவத்தில் கதிர்களை தாங்கி நிற்கும் தண்டுகளையும் இப்புழுக்கள் துளையிட்டு சேதப்படுத்துகின்றன. இதனால் நெற்கதிர்கள் நெல் மணிகளாக மாற இயலாமல் சாவிக் கதிர்களாக அல்லது வெள்ளைக் கதிர்களாக மாறிவிடுகின்றன.
 டிரைக்கோகிராமா:
இந்த டிரைக்கோகிராமா முட்டை ஒட்டுண்ணிகள் குளவி இனத்தைச் சார்ந்தவை. இவை எறும்பைவிட சிறியதாக இருக்கும். இக் குளவிகள் சேதம் விளைவிக்கும் குருத்துப் புழுவை முட்டை பருவத்திலேயே அழித்துவிடும்.
குறிப்பாக நெற்பயிரைத் தாக்கும் குருத்துப் புழுவின் தாய்ப்பூச்சிகள் இடும் முட்டைகளை டிரைக்கோகிராமா ஜப்பானிக்கம் குளவிகள் தேடிச் சென்று, அம் முட்டைகளுக்குள் தனது முட்டையை உட்செலுத்தி விடுகின்றன. இதனால் குருத்துப் புழுக்களின் முட்டை கருக்கள் அழிக்கப்டுகின்றன.
அதே நேரத்தில் அப் புழுக்களின் முட்டைகளில் ஒட்டுண்ணிகளின் சந்ததிகள் வளரும். அந்த ஒட்டுண்ணிகள் முட்டைகளை துளையிட்டு வெளிவந்து அக் கால கட்டத்தில் காணப்படும் மேற்கூறிய புழுக்களின் முட்டைகளையும் தேடிக் கண்டுபிடித்து அழிக்கும்.
இம் முறையை கையாண்டால் குறிப்பிட்ட அளவு ஒட்டுண்ணிகள் எப்போதும் வயிலில் காணப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த டிரைக்கோகிராமா ஜப்பானிக்கம் என்ற வீரிய ஒட்டுண்ணிகளின் முட்டைகள் டிரைக்கோ அட்டைகளில் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
 உபயோகிக்கும் முறை மற்றும் அளவு:
இந்த டிரைக்கோ ஒட்டுண்ணி அட்டைகளை ஒரு ஏக்கருக்கு 2 அட்டைகளை (72,000 ஒட்டுண்ணிகள்) நாற்று நட்ட 25, 40 மற்றும் 55-ம் நாட்களில் இலையின் கீழ்ப்பரப்பில் கட்டி உபயோகிக்க வேண்டும்.
இந்த ஒட்டுண்ணி அட்டையை 6 பாகங்களாக பிரித்துக் கொண்டு அவற்றை காகித டம்பளரினுள் தலைகீழாக வைத்து நூல் கட்டி பயிரில் பயன்படுத்தலாம்.
அவ்வாறு செய்யும்போது இந்த அட்டைகளிலிருந்து ஒட்டுண்ணிக் குளவிகள் 3-7 நாள்களுக்குள் வெளிவந்து குருத்துப் புழு முட்டைகளை அழிக்கும்.
டிரைக்கோ அட்டைகளைப் பயன்படுத்தும்போது ஒட்டுண்ணிகள் நிறைந்த பகுதியை அழுத்திப் பிடிக்காமல் வெற்றிடப் பகுதியை மட்டுமே கையால் பிடிக்க வேண்டும். மேலும் இந்த அட்டைகளை காலை அல்லது மாலை வேளைகளில் மட்டுமே கட்ட வேண்டும்.
டிரைக்கோ அட்டைகளை வயலில் கட்டியப் பின் 7-10 நாள்களுக்கு ரசாயனப் பூச்சி மருந்து தெளிக்கக் கூடாது. பூச்சி மருந்து தெளித்திருந்தால் 7-10 நாள்களுக்குப் பிறகே உபயோகிக்க வேண்டும்.
 நன்மைகள்:
இதைப் பயன்படுத்துவதால் பூச்சி மருந்துகளுக்கு ஆகும் செலவைவிட குறைவான செலவே ஆகும். உபயோகிக்கும் முறைகள் எளிதானது. சுற்றுப்புற சூழ்நிலைகளை மாசுப்படுத்தாது. பூச்சிகளைத் தவிர இதர உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்காது என்றார்.
தினமணி செய்தி
புதுச்சேரி காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பூச்சியல் வல்லுநர் நி.விஜயகுமார்

No comments: