Saturday, August 11, 2012

காப்பீடு… கவனம்!

காப்பீடு… கவனம்!


நம்மில் சிலர், காப்பீட்டு விண்ணப்பப் படிவத்தில் கொடுக்கும் தகவல் குறித்து அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. அதனால் பெரிதாக என்ன பாதிப்பு ஏற்பட்டுவிடப் போகிறது என்ற அலட்சியம். அது சரிதானா?

உதாரணத்துக்கு இதைப் பாருங்கள்... 3 லட்ச ரூபாய் வருடாந்திர வருமானம் கொண்டவர் ராஜேஷ். இவர் பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களில் மொத்தமாக ரூ. 25 லட்சத்துக்குக் காப்பீடு செய்திருக்கிறார். மீண்டும் ரூ. 1 கோடிக்கு காப்பீடு பெறுவதற்கு ஒரு புதிய டெர்ம் இன்சூரன்ஸுக்கு ராஜேஷ் விண்ணப்பித்தார்.

அப்போது, மேலும் கூடுதலாக ரூ. 50 லட்சத்துக்கு மட்டுமே காப்பீடு பெற முடியும் என்று கூறி ராஜேஷின் விண்ணப்பத்தைக் குறிப்பிட்ட காப்பீட்டு நிறுவனம் நிராகரித்து விட்டது.

ஏன் அவ்வாறு செய்தது?

ராஜேஷ் தனது பணிவாழ்க்கைக் காலம் வரை (58 வயது) வாழ்வார் என்றால் அவர் மொத்தமாக ரூ. 75 லட்சம் சம்பாதிப்பார். அதாவது, ரூ. 3 லட்சம் * 25 ஆண்டுகள். ஆண்டுதோறும் ராஜேஷின் சம்பளம் உயரும் என்றாலும், வருடங்கள் குறையும் என்பது போன்ற காரணங்களால் உத்தேசமாகத்தான் இந்தக் கணக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ராஜேஷ் ஏற்கனவே ரூ. 25 லட்சம் காப்பீடு பெற்றிருக்கிறார். புதிதாக ரூ. 1 கோடிக்கு காப்பீடு பெற்றால் அவரது மொத்தக் காப்பீடு ரூ. 1.25 கோடியாக உயரும். ராஜேஷ் உயிரோடு இருந்தால் எவ்வளவு சம்பாதிப்பாரோ அதைவிட அதிகமாக அவரது மரணத்துக்குப் பின் பெறும் நிலை ஏற்படும்.

எளிமையாகக் கூற வேண்டும் என்றால், ராஜேஷின் வாரிசுதாரர்கள் அவர் உயிரோடு இருந்தால் எவ்வளவு பெறுவார்களோ, அதைவிட அதிகமாக அவர் இறந்தால் பெறுவார்கள். இந்த `லாஜிக்'கின் அடிப்படையில்தான் புதிய காப்பீட்டு நிறுவனம் ரூ. 1 கோடிக்கான அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது.

நீங்கள் லாபம் அடைவதற்கான அமைப்பல்ல, காப்பீட்டுத் திட்டம். ஒருவர் உயிரோடு இருப்பதைவிட, காலமானால் அதிகப் பயன் கிட்டும் என்ற கருத்து ஏற்பட்டால், காப்பீடு தவறாகப் பயன்படுத்தப்படலாம். காப்பீட்டுத் திட்டம் எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த அடிப்படை நோக்கமே அடிபட்டுப் போகும். ஏற்கனவே காப்பீடு தொடர்பான பல குற்றங்கள் உலகளவில் காணப்படுகின்றன.

ஒருவர் தான் ஏற்கனவே பெற்றிருக்கிற காப்பீடுகளை தெரிவிக்காமல் அல்லது ஒன்றிரண்டு காப்பீடுகளை மட்டும் தெரிவித்தால், அவர் காலமாகும்போது அவருக்கான `கிளெய்மை' நிராகரிக்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உரிமை உண்டு. புதிய காப்பீடைப் பெறுவதே பலனளிக்காமல் போகும்.

எனவே உங்களின் காப்பீட்டு முகவர், அனைத்துத் தகவல்களையும் அளிக்கும்படி வற்புறுத்தினால் எரிச்சல்பட்டு, `எனக்குக் காப்பீடே வேண்டாம்' என்று மிரட்டாதீர்கள். முழுமையான தகவல்கள் இல்லாமலே அவர் விண்ணப்பத்தை அனுப்பிவிடக்கூடும். ஆனால் அதனால் நஷ்டமடையப் போவது உங்கள் குடும்பம்தானே தவிர, முகவர் அல்ல.

No comments: