Saturday, May 26, 2012

கொங்கு வேளாளர் திருமண சீர்கள்

கொங்கு வெள்ளாளர் இல்லத் திருமணச்சீர்கள்

கொங்கு வெள்ளாளர் இல்லத் திருமணம் தொடர்ச்சியாக மூன்று நாள் விழாவாக நடைபெறும்.

முதல் நாள்

"நாள் விருந்து" இதை சோறாக்கி போடுதல் என்றும் கூறுவர். இன்று மணமக்களின் உறவினர்கள் மணமக்கள் வீடுகளுக்கு வந்து விருந்து வைப்பார்கள். இச்சடங்கு மணமகன் மற்றும் மணமகள் இருவர் வீட்டிலும் நடக்கும். விருந்துக்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் உறவினர்களே வாங்கி வருவர். நாள்விருந்தன்றே வீட்டில் பந்தலிடுவார்கள்.

இரண்டாம் நாள்

"கலியாண நாள் அல்லது முகூர்த்த கால்"
.

இன்று நாள் விருந்தன்று கட்டிய பந்தலில் வாழை, தென்னங்குருத்தோலை முதலியவற்றை கட்டுவர். அருமைப்பெரியவருடன் மூவர் சென்று முகூர்த்த கால் வெட்டி வருவர். முகூர்த்த காலாகப் பால் மரத்தில் முக்கொம்பு கிளை வெட்டப்படும். பொதுவாக ஆல மரம், அரச மரம், பாலை மரங்களில் இது வெட்டப்படும். காலை முதல் மாலை வரை விருந்து நடைபெரும் ஆனால் மணமக்கள் அன்று காலை முதல் விரதம் இருப்பர்.

இரவில் மங்கல நீராடிய பின்னரே மணமக்கள் விரத உணவு உண்பர். இரவு விருந்துக்குப் பின் பச்சைப் பந்தலில் சனி மூலையில் காலையில் வெட்டி வந்திருந்த முகூர்த்தக்காலை நடுவார்கள். நவதானியங்களை காசுடன் சேர்த்து அதில் முடிச்சிட்டு செஞ்சாந்து, மஞ்சள் பூசி முகூர்த்தக்காலில் வைப்பர். முகூர்த்தக்காலிட்டப்பின்னரே மற்ற சடங்குகளை செய்வர்.

"கங்கணம் கட்டுதல்"

அருமைப்பெரியவர் கணுவில்லாத விரலி மஞ்சளை எடுத்து அதை மஞ்சள் தோய்த்த நூலில் கட்டி விநாயகர் முன்பு வைத்து அதற்கு தூப தீபம் காட்டி மணமக்களின் வலது கையில் கட்டி விடுவார்.

"நிறைநாழி செய்தல்"

வட்ட வடிவிலான இரும்புப் படியில் நெல்லை நிறைத்து, நூல் சுற்றிய இரட்டைக்கதிரை அதில் பதித்து வைப்பர். இது நிறைநாழி எனப்படும். இதனை ஒரு பேழையில் வைப்பர், அருமைக்காரர் செய்யும் ஒவ்வொரு பூசையின் போதும் இதனை எடுத்து சுற்றிக்காட்டுவார்.

"இணைச்சீர்"

இது மணமகன் வீட்டில் மட்டும் நடைபெறும் முக்கியச் சடங்காகும். மணமகனின் சகோதரி இதில் முக்கிய பங்கு வகிப்பவர். இவர் மணப்பெண் போல அலங்கரிக்கப்பட்டிருப்பார், இவர் சும்மாட்டின் மீது மூங்கில்களால் வேயப்பட்ட பேழைமூடியை சுமந்து வருவார். இதனுல் தாலியும் குழவிக்கல்லும் இருக்கும். சொம்பு நீரைக் கொடுத்து அருமைக்காரி இவரை அழைத்து வருவார். அருமைக்காரர் வெற்றிலை பாக்கு கொடுத்து மடியில் கட்டிக்க சொல்லுவார். பின் கூறைச்சேலையை கொசுவ மடிப்பில் மடித்து ஒரு புறத்தை மணமகன் கக்கத்திலும் மறுபுறத்தை சகோதரி கையிலும் அருமைக்காரர் கொடுப்பார். பின் இருவருக்கும் அருகு மணம் செய்து வைத்து இருவரையும் திருமண வீட்டிற்குள் அனுப்பி வைப்பார். இணைச்சீரின் போது இணைச்சீர்காரி (சகோதரி) கொண்டு வரும் கூறைப்புடவையை தான் முகூர்த்தத்தின் போது மணப்பெண் அணிந்து வரவேண்டும்.

மணமகன் மணமகள் வீடு செல்லும் முன் நாட்டார் கல்லை மேள தாளங்கள் முழங்க வலம் வந்து மரியாதை செலுத்துவார். தாயை வணங்கி சீர் கூடையுடன் சுற்றம் சூழ ஊர்வலமாக மணமகள் ஊரை அடைந்து அங்குள்ள பிள்ளையார் கோயிலில் தங்குவர். மணமகன் வீட்டார் பிள்ளையார் கோயிலில் தங்கியிருப்பதை அறிந்த மணமகள் வீட்டார் தங்கள் சுற்றம் சூழ மேள தாளங்களுடன் சென்று மணமகன் வீட்டாரை வரவேற்று, மணவீடு அருகே அமைந்துள்ள மணமகன் அறையில் மணமகனை தங்க வைப்பர்.

மூன்றாம் நாள்

"முகூர்த்தம் இதை தாலி கட்டு" என்றும் அழைப்பர். அருமைக்காரர் வாழ்த்து பாடி தாலியை எடுத்துக் கொடுக்க மணமகன் மணமகள் கழுத்தில் 3 முடிச்சுப்போட்டு மங்கல் நாணை கட்டுவார்.



தம் மக்களுக்கு மணம் முடிக்க பெற்றோர் பருவம் பார்த்தல்

மணமக்களுக்கு பொருத்தம் பார்த்தல்
வாசல் கவுலி குறிப்பு கேட்டறிதல்
மாப்பிள்ளை வீட்டார் நிச்சயார்த்தம் மூலம் பெண்ணை உறுதி செய்தல்
அருமைப் பெரியவர்களுக்கு தாம்பூலம் வழங்குதல்
திருமணநாள் குறித்து பெண் மடியில் வெற்றிலை கட்டுதல்
தட்டார் பூட்டும் தாலிக்கும் பொன்னோட்டம் பார்த்தல்
மணநாள் குறித்து தேன்பனை ஓலை எழுதல் (பத்திரிக்கைக் அச்சடித்தல்)
முகூர்த்த நெல் போட்டு வைத்தல்
விறகு வெட்டி பிளந்து மூன்று கத்தையாகக் கட்டுதல்
சம்மந்திகள் உப்புச்சக்கரை மாற்றி சிகப்பு பொட்டு வைத்தல்
மாப்பிள்ளை வீட்டில் பருப்பும் சோறும் விருந்துண்ணல்
பதினெண் கட்டுக் கன்னிகளுக்ளூக்குத் தாம்பூலம் கொடுத்தல்
பெண்ணெடுக்கும் மாமனுக்குத் தாம்பூலம் வழங்குதல்
இணைச்சீர் செய்யும் சகோதரிக்கும் தாம்பூலம் வழங்குதல்
பெண் கூரைச்சேலை சோமான் உருமாலை வாங்குதல்.
பெண் வீட்டில் பந்தல் போடுதல்
மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்குப் புறப்படுதல்.
எழுதிங்கள்காரர், மூத்தோர் வீடுமெழுகுதல்.
எழுதிங்கள் சீர்சாமான்கள், நிறைநாழி, முக்காலி, மண்மேல்பலகை பேழைக்கூடைசீர், படி விநாயகர்பூஜை சேகரித்து வைத்தல்
விரதவிருந்து
மணமகள் வீட்டார் சீர்தண்ணீர் கொண்டுவருதல்
முகூர்த்தக்கால் வெட்டி வர மணமக்களின் வீட்டார்கள் பால் மரத்திற்கு பூஜை செய்தல்
வினாயகர் பூஜையுடன் மாப்பிளை வீட்டார் முகூர்த்தக்கால் போடுதல்
பசுமாட்டு சாணத்தில் தரைமெழுகி பிள்ளையார் பிடித்து அருகு சூடுதல்
மணமகன் வீட்டில் வெற்றிலை மூட்டை கட்டுதல்
மணமகள் வீட்டில் சீர்தண்ணீர் கொண்டு வருதல்
கணபதி பூஜையுடன் பெண் வீட்டார் முகூர்த்தக்கால் போடுதல்
வெற்றிலைக் கூடையை பேழைக்கூடையில் வைத்து பூஜை செய்து பெண் மடியில் 30 வெற்றிலை கட்டி கணபதியை கும்பிடுதல்
மணமக்கள் வீட்டார் மணநாள் குறித்தல்
மாலை வாங்கல்
சிறப்பு வைத்தல், கரகபானை புடச்சட்டி வாங்குதல்
மேல்கட்டு கட்ட கட்டுக்கன்னிக்குத் தாம்பூலம் வழங்குதல்
பிரமன் பூஜை செய்து மணமக்களை வீட்டிற்கு அழைத்து வருதல்
மணமகளுக்குத் தண்ணீர் வார்த்தல்.
மணமகனுக்கு முகவேலை செய்ய குடிமகனுக்கு தாம்பூலம் வழங்குதல், மணமகனுக்கு முகம் வழித்துத் தண்ணீர் வார்த்தல்
மணமகனுக்கு ஆக்கைப் போட்டு தண்ணீர் வார்த்தல்
மணமக்களுக்கு பட்டினி சாப்பாடு போடுதல்
குலதெய்வத்திற்கு குப்பாரி போடுதல்
கங்கணம் கட்டுதல்
நாட்டுக்கல் சீர் செய்தல்
மணமகனுக்கு செஞ்சோறு சுற்றி எரிதல்
இணைச்சீர் மணவறை அலங்காரம் மடியில் வெற்றிலை கட்டுதல்
மங்கள வாழ்த்தை குடிமகன் சொல்லுதல்
அருகுமணம் எடுத்து வாழ்த்துதல்
தாயார் மகனுக்கு தயிர் அன்னம் ஊட்டுதல்
மகன் தாயை வணங்கி, ஆசிபெற்று பூங்கொடிக்கு மாலை சூடல்
மணமகன் குதிரைமேல் செல்ல மடத்தான் குடைபிடித்தல்
நாழி அரிசிக்கூடை
மாப்பிள்ளையை விடுதி வீட்டிற்கு அழைத்துச் செல்லல்
பொன்பூட்ட வந்தவருக்கு பூதக்கலம் தான் படைத்தல்
தாய்மாமன் பால்பழம் உண்ணல்
மாமன் பொட்டிட்டு பொன்முடித்து பட்டம் கட்டி பெண் எடுத்தல்
வாசல் படியில் நெல் போடுவது
மணவறை அலங்காரம்
மணமக்களை அலங்கரித்தல்
மணமக்களை மணவறைக்கு அழைப்பது
சூரிய நமஸ்காரம் செய்து மணமகள் மணமகனின் கால் கழுவுதல்
மண்மேல் பணம்
ஓமம் வளர்த்தல்
மாங்கல்யத்திற்கு கணபதி பூஜை செய்தல்
வெண்சாமரம் வீசுதல்
தாசி சதுராடுதல்
மணமகன் மணமகளுக்கு மாங்கல்யம் அணிவித்தல்
பெரியோர்கள் ஆசிகூறல்
மைத்துனர் கைகோர்வை
மங்கள வாழ்த்து குடிமகன் சொல்லுதல்
அருகுமணம் எடுத்து வாழ்த்துதல்
மணமகளுக்கும் மணமகனுக்கும் கங்கணம் அவிழ்த்தல்
பாத பூஜை
தாரை வார்த்தல்
குங்குமம் இடுதல்
ஆரத்தி எடுத்தல்.
மணமக்கள் மணவறையைச் சுற்றி வருதல்
மணமக்களை இல்லத்திற்கு அழைத்தல்.
உள் கழுத்துதாலி அணிதல்.
மொய்காரி.
பரியம் செல்லுதல்.
ஊர்பணம்.
கூடைச்சீர்.
பந்தல்காரி செலவு.
மணமகனுக்கும் மணமகளுக்கும் தண்ணீர் வார்த்தல்.
மணமக்களுக்கு புதுப்புடவை, சோமன் உருமாலை தரல்.
மணமகனுக்குச் மணமகள் தட்டுவாச்சாதம் போடுதல்.
மணமன் மோதிரத்தை மைத்துனன் பிடுங்குவது.
கரகம் இறக்குதல்
மாப்பிள்ளை வீட்டில் பெண் காண்பது.
மணமக்களு தாயார் பால் அன்னம் ஊட்டல்.
மணமக்கள் விநாயகர் கோயிலில் வழிபடல்.
மணமக்களுக்கு மிதியடி அணிவித்தல்.
பெரியோர்களை தம்பதிகள் கும்பிட்டு மஞ்சள் நீராடுதல்.
வினாயகருக்கு மடக்கில் பானைப்பொங்கள் வைத்தல்.
வினாயகர் கோயிலில் சம்மந்தம் கலக்குவது.
மணமகள் எடுத்தமாமனுக்கு விருந்து வைத்தல்.
புலவர் பால் அருந்துதல்
மாமன் சீர்வரிசை.
பெற்றோர் மணமக்களுக்கு சீர்வரிசை
மணமக்களை மணமகன் வீட்டிற்கு அழைத்துச்செல்லல்
மணமகள் ஊர் கிணற்றில் தாம்பூலம் விட்டு தண்ணீர் கொண்டு வருதல்
மணமக்களுக்குத் தண்ணீர் வார்த்தல்
மணமகள் விளக்கு ஏற்றுதல்
மணமக்களை பெண்வீட்டிற்கு அழைத்து வருதல்
சாந்தி முகூர்த்தம்
மாக்கூடை கொண்டு செல்லுதல்
மணமகன் சகோதரி மணமக்களை மணமகன் வீட்டிற்கு அழைத்து வருதல்
குலதெய்வ கோயிலுக்கு கல்யாணபடி கொண்டு செல்லுதல்
மணமகள் வீட்டில் மணமகனுக்கு எண்ணெய் நீர் குளிப்பாட்டி விருந்து வைத்தல்
மணமகன்
சகோதரி மணமக்களுக்கு விருந்து வைத்தல்

கொங்கு வேளாளர் திருமண சீர்கள்

திருமணம் என்பது ஒருவர் வாழ்வில் நடைபெறும் மிக முக்கியமான நிகழ்வாகும். திருமணம் ஆனவர்கட்கு மாங்கிலிய வரி வாங்கும் கொங்குச் செப்பேடு ஒன்று திருமணம் ஆகாதவர்களைப் ‘பயலாள்’ என்று குறிக்கிறது. திருமணமே ஒருவரை முழுமையாக்குகிறது. சமூகத்தில் அவர்களுக்கு மதிப்பை அளிக்கிறது.

தொன்மையான கொங்கு வேளாளர் சமூகத்தின் திருமணச் சீர்கள் தனித்தன்மை வாய்ந்தது என்றும், மிகப் பழமையான பண்பாட்டுக்கு உரியது என்றும் மானிடவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வேகமாகச் செல்லும் இயந்திரமயான உலகில் இன்று மூன்று நாள் திருமணம் மிக அருகி வருகிறது. நெருங்கிய உறவினரை அழைத்துக் கோயிலில் திருமணத்தை முடித்து ஒரு மண்டபத்தில் மூன்று மணி நேர வரவேற்போடு திருமணத்தை முடித்து ஒரு மண்டபத்தில் மூன்று மணி நேர வரவேற்போடு திருமணத்தை முடித்து விடுகின்றனர்.

காதல் மணத்துடன், பெற்றோர் சம்மதத்தோடு நடைபெறும் பிற மத, இன, மொழி, சாதித் திருமணங்கள் பெருகி வருகின்றன. எனவே, திருமணச் சீர்கள் குறைந்தாலும், மறைந்தாலும் சமுதாயப் பண்பாட்டைக் காக்கும் எண்ணத்தோடு சீர்களின் சிறப்புக்கள் இங்கு தொகுத்து வழங்கப்படுகின்றன. இன்னும் விரிவாக இவைகளைப் படத்துடன் ஆவணப்படுத்த வேண்டும். அதற்கு முன் முயற்சியே இச்சீர்கள் பற்றிய தொகுப்பாகும்.

சீர்கள் தொடக்கம்

சங்க அகப்பொருள் இலக்கணங்களில் கூறப்பெறும் ‘களவு’ மணத்தில் சீர்கள் இல்லை. தொன்மை ஆய்வாளர்கள் பண்டைச் சமுதாய வாழ்வில் சீர்கள் இல்லை என்றே கூறுகிறார்கள். முல்லை நில ஆயர் மகள் காளையை அடக்கியவனுக்கு மாலையிட்டார். அங்கும் சீர்கட்கு இடம் இல்லை.

முன்பு வாழ்ந்த இல்லற வாழ்வில் நாளடைவில் ‘பொய்’ ‘வழு’ இவை தோன்றின. எனவே, சமூகப் பெரியவர்கள் அவை ஏற்படா வண்ணம் பலர் சாட்சியோடு, பலர் கூடிச் செய்யும் சில சீர்களை ஏற்படுத்தினர் என்று கூறுகிறார் தொல்காப்பியர்.

‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப’

என்பது தொல்காப்பிய நூற்பா. ஐயர் என்பது சான்றோராகிய பெரியவர்களைக் குறிக்கும். கரணம் என்பது சீர்களாகும்.

திருமண முன் ஏற்பாடு

மணமகன், மணமகளின் பெற்றோர் தங்கள் மக்களுக்குத் திருமண வயது வந்தவுடன் திருமணம் செய்வதற்கு ஏற்ப ‘குருபலன்’ வந்துவிட்டதா? என்று தெரிந்து கொள்வர். முன்பு பெரும்பாலும் கொங்கு வேளாளர் சமுதாயத்தில் மணமகன் அத்தை, தாய்மாமன் வீட்டுப் பெண்களையே திருமணம் முடிப்பது வழக்கம். அப்பெண்ணை ‘உரிமைப் பெண்’ என்று அழைப்பர்.

அந்நாளில் சாதகப் பரிவர்த்தனை நிறுவனங்கள் எதுவும் கிடையாது. மணமகன்-மணமகள் வீட்டாரிடையே செய்திகள் பரிமாறிக் கொள்ள இடையில் இருப்பவரை ‘தானாவதிக்காரர்’ என அழைப்பர். அவர் மூலம் சாதகம் பெற்றுப் பொருத்தம் பார்க்கச் செல்லும் போதே நல்ல நாள், நல்ல நேரம் பார்த்துச் ‘சகுனம்’ வழியில் நன்றாக இருக்க வேண்டும் என விரும்புவர். பூனை குறுக்கே போகக் கூடாது. விறகுக்கட்டு எதிரே வரக்கூடாது. வண்ணான் அழுக்கு மூட்டை எதிர்வருவது, கழுதை கத்துவது நல்லது; பறவை- விலங்கு வலம் போக வேண்டும் என பலவற்றை எதிர்கொண்டு அதன்படி நடப்பர்.

ஒரே குலத்தில் பெண் எடுக்கும் ‘அகமணம்’ கொங்கு வேளாளரிடை இல்லாத காரணத்தால் முதலில் கூட்டத்தை (குலத்தை) விசாரித்து அறிவர். பொருத்தம் பொருந்தி வந்தால் கூடச் சிலர் குலதெய்வக் கோயிலில் ‘பூவாக்கு’ கேட்டோ அல்லது ‘பல்லி சகுணம்’ கேட்டோதான் மேற்கொண்டு செயல் செய்யத் தொடங்குவர்.

‘பல்லியும் பாங்கொத்து இசைத்தன

நல்எழில் உண்கண ஆடுமால் இடனே’

என்று சங்க இலக்கியத்திலேயே சகுணம் பற்றிய குறிப்பு வருகிறது.

பெண் பார்த்தல்

சாதகம் பொருந்தியவுடன் பெண் பார்க்கும் நிகழ்வை கொங்குச் சமுதாயம் அண்மைக்காலம் வரை வெளிப்படையாகச் செய்வது இல்லை. பத்துப்பேர் கூடிக் சென்று பெண்ணை சிற்றுண்டி, காப்பி கொடுக்கச் செய்து, நடக்கச் செய்து, பாடச் சொல்லிப் பின்னர் பெண் பிடிக்கவில்லை என்று கூறுவதைக் கொங்குச் சமுதாயம் நாகரிகமுடையதாகக கருதவில்லை என்பதே இதற்குக் காரணம் ஆகலாம்.

கோயிலுக்கு அழைத்துச் சென்றோ, கிராமம் ஆயின் தண்ணீர் எடுக்கச் செல்லும்போதோ அல்லது ஏதாவது திருவிழவின்போதோ பெண்ணை செய்யும்போதோ பெண்ணைப் பார்க்குமாறும் செய்வர்.

‘காட்டுக்குக் களை வெட்டினது போலவும் இருக்கணும்

வீட்டுக்குப் பெண் பார்த்தது போலவும் இருக்கணும்’

‘ஆடு மேச்ச மாதிரி

அண்ணனுக்குப் பெண் பார்த்த மாதிரி’

என்ற பழமொழிகளும் இதனை விளக்கும். இருவீட்டார் சம்மதம் ஆனவுடன் அருமைக்காரருக்குச் சொல்லச் செல்வர்.

நிச்சயதார்த்தம்

ஒரு நல்ல நாளில் நிச்சயதார்த்தப் புடவை, நகை, மங்கலப் பொருள்களுடன் மணமகன் வீட்டார் தங்கள் நெருங்கிய சுற்றமுடன் மணமகள் வீடு செல்வர். மாத்து விரிக்கப்பட்ட தரையின் இடையில் மங்கலப் பொருள் முன் அருமைக்காரர் அமர்ந்திருப்பார்.

அவர் முன் எதிர் எதிராக இரு வீட்டாரும் அமர்வர். மணமகன் வீட்டுச் சார்பில் பெண் கேட்க வந்ததாகக் கூறப்படும்.

பெண் வீட்டார் சார்பில் சம்மதம் தெரிவித்தபின் இரு வீட்டாரும் வெற்றிலை-பாக்கு மாற்றிக் கொள்வர்.

அருமைக்காரர், பெண் வீட்டு மங்கலப் பெண்களிடம் நீர் விளாவி தூபம் காட்டி மணமகன் வீட்டுத் தட்டத்தைக் கொடுப்பார். மணப்பெண் மணமகன் வீட்டார் கொண்டு வந்த நகையை அணிந்து சேலையை உடுத்தி வெற்றிலை, பாக்கு, மஞ்சள், எலுமிச்சம் பழம் இவைகளை மடியில் கட்டி வந்து சபையில் அமர்ந்து எல்லோரையும் கும்பிடுவாள். பெரியவர்களை வணங்குவாள். மணமகன் வீட்டுப் பெண்கள் மணமகளுக்குச் சந்தனம் பூசிப் பூ வைப்பர். முடிவு செய்த திருமணத் தேதியை சபையில் அனைவருக்கும் அறிவிப்பர்.

இப்போது சிலர் மேற்கண்ட நிகழ்வை ‘உறுதிவார்த்தை’ என்று சுருக்கமாக முடித்து விட்டு அழைப்பிதழ் அச்சிட்டு திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்தத்தை நடத்துகின்றனர். இது ‘நிச்சய தாம்பூலம்’ என்றும் கூறப்படும்.

நிச்சயதார்த்தத்தில் திருமண நாள் குறித்து அறிவிப்பது மிக முக்கியம். நிச்சயம் முடிந்து உறுதியாகும்வரை ஒருவர் வீட்டில் மற்றவர் சாப்பிட மாட்டார்கள். ‘உறுதியாகும் வரை கை நனைக்கக் கூடாது’ என்பர். நிச்சயதார்த்தத்தில் விருந்து உவசாரம் முதலில் நடைபெறுவதால் ‘பருப்புச்சாத விருந்து’ என்றும் அழைப்பர். மங்கல வாழ்த்தில் இந்நிகழ்ச்சி

‘உரியவர் வந்திருந்து உங்களுக்கு என்று சொல்லி

நாளது குறித்து நல்விருந்து உண்டு’

என்று கூறப்படுகிறது. நிச்சயதார்த்தத்திற்கு மணமகன் செல்வது முன்பு வழக்கம் இல்லை.

மாங்கல்யத்திற்குப் பொன் கொடுத்தல்

நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் மணமகன் வீட்டார் கொண்டு வந்த மாங்கல்யம் செய்வதற்குரிய தங்கத்தை மங்கலப் பொருள்களோடு அழைக்கப்பட்டுள்ள ஆசாரியாரிடம் கொடுப்பர். சில இடங்களில் ஆசாரியார் அங்கேயே உலை வைத்துப் பணியைத் தொடங்குவதும் உண்டு. ஆசாரியார்க்குப் பால் கொடுத்து அருந்தச் செய்வர். பால் சாப்பிட்ட வீட்டுக்குப் பாதகம் செய்யக் கூடாது என்பது பழமொழி அல்லவா?.

இதனை மங்கல வாழ்த்து ‘பூட்டு தாலிக்குப் பொன்னது கொடுத்து’ என்று கூறுகிறது. கொங்கு வேளாளர் தாலி முப்பிரிவு உடையதாய் நடுவே உயர்ந்திருக்கும். முப்பிரிவு சிவன், திருமால், பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளைக் குறிக்கும் என்பர். நிச்சயதார்த்தம் முடிந்தபின் இரு வீட்டாரும் அமங்கல நிகழ்ச்சிகட்குச் செல்ல மாட்டார்கள்.

உப்புச் சர்க்கரை மாற்றுதல்

நிச்சயதார்த்தம் முடிந்தபின் சில நாட்களில் இரு வீட்டாரும் கூடைகளுடன் கடைக்குச் சென்று தனித்தனியாக உப்பும், சர்க்கரையும் வாங்கி இருவரும் பரிமாறிக் கொள்வர். ‘நன்மையிலும், தீமையிலும் நாம் இனிமேல் ஒருவருக்கொருவர் பங்கு கொள்ள வேண்டும்’ என்பது இதன் குறிப்பாகும். ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பது பழ மொழியல்லவா? இதனை ‘உப்பு சத்தியம்’ என்றும் சில இடங்களில் அழைப்பர். உப்பு சர்க்கரை வாங்கி வந்து பிள்ளையார் கோயிலிலும் பரிமாறிக் கொள்வது உண்டு.

விறகு வெட்டல்

அருமைக்காரருடன் அருகில் உள்ள காட்டுக்குச் சென்று ஆல், அரசு, பாலை முதலிய பால் உள்ள மரத்திற்குப் பூசை செய்து ஒரு கிளையை வெட்டி மூன்று சிறு கட்டுக்களாகக் கட்டி எடுத்து வந்து வீட்டுக் கூறைமேல் வைப்பர். இதனை எரிக்கப் பயன்படுத்தக்

கூடாது. இதன் பின்னர்தான் சமையலுக்கு வேண்டிய பிற மரங்களை விறகுக்காக வெட்டுவர். பூசை செய்து வெட்டுவது, வெட்டுவதால் மரத்தினிடம் மன்னிப்புக் கேட்பதற்குச் சமம் என்பர்.

நெல் குத்துதல் அல்லது நெல் போடுதல்

மணமகள் வீட்டில் எழுதிங்கள் செய்த பெண்கள் ஒரு மிடாவில் 5 வள்ளம் நெல்போடுவர். அந்நெல்லை மணமகள் தந்தை வழிப் பெண்கள் வேக வைத்துக் காய வைத்துக் குத்தி அரிசி யாக்கி வைப்பர். இது சீர் அரிசி என்று கூறப்படும்.

கூறைப்புடவை எடுத்தல்

இரு வீட்டுப் பெண்களும் சில ஆடவர்களும், கூட்டமாக ஜவுளிக் கடைக்குச் சென்று மணமகளுக்கு மணமகன் வீட்டுச் செலவில் கூறைப்புடவை எடுப்பர். மணமகனுக்குரிய ஆடைகளை மணமகள் வீட்டார் எடுப்பர். இணைச்சீர், மாமன்மார், கைக்கோர்வைக்காரர் போன்ற சீரோடு தொடர்புடைய அனைவருக்கும் உரியவற்றை எடுப்பர். கூட்டமாகச் செல்லுவது இப்போது குறைந்து விட்டது.

திருமண அழைப்பு

முன்பு பனை ஓலையில் திருமண அழைப்பை கணக்கர் அல்லது புலவரைக் கொண்டு எழுதி அதன் மூலம் நேரில் அழைப்பவர்களையும், மங்கலன் (நாவிதர்) மூலம் அழைப்பவர்களையும் அழைப்பர். முக்கியமானவர்களை நேரில் அழைப்பர். இதனை மங்கல வாழ்த்து

‘கற்றோர் புலவர் கணக்கரை அழைத்து

தேன்பனை ஓலை சிறக்கவே வாரி

திசைதிசை எங்கும் தென்னவரை அனுப்பி

கலியாண நாளைக் கணித்து அறிவித்தார்’

என்று கூறுகிறது.

விருந்து அல்லது சோறாக்கிப் போடுதல்

திருமணத்திற்கு முதல் நாள் நடைபெறும் விருந்து புதுவிதமானது. திருமணத்தன்று திருமண வீட்டார் இருவரும் எல்லோருக்கும் விருந்தளிப்பார்கள். இந்த விருந்து மணமகளின் சகோதரிகளும், சகோதரி முறை ஆகின்றவர்கள் அனைவரும் மணமகன் வீட்டாருக்கும், மணமகளின் அத்தை, மாமன் முறை ஆகின்றவர்கள் மணமகள் வீட்டாருக்கும் அளிக்கும் விருந்தாகும். விருந்தின் எல்லாப் பொருள்களையும் அவர்கள் வாங்கி வருவர்; அல்லது எல்லாச் செலவுகளையும் ஏற்றுக் கொள்வர். பெரிய கூட்டத்தை ஒருவரே சமாளிக்க முடியாது என்று உறவினர் செய்யும் உதவியாகும். இந்த விருந்தை ‘சோறாக்கிப் போடுதல்’ என்றும் குறிப்பர்.

பட்டினிச் சாதம்

மேற்கண்ட விருந்தின் போது மணமகன், மணமகள் உண்ணும் உணவை ‘ஒரு சந்திச் சாப்பாடு’ என்று கூறுவர். முகூர்த்தத்திற்கு முன் இந்த ஒரு வேளை உணவே அவர்கட்கு வழங்கப்படும். இதைப் ‘பட்டினிச்சாதம்’ ‘விரத விருந்து’ என்றும் கூறுவர். அவர்கள் விரதத்தின் பயனை அறியவும் திருமண நாளில் வயிற்றுக்கோளாறு எதுவும் ஏற்படாதிருக்கவும் இவ்வழக்கம் அவசியமானதாகும். இந்த நிகழ்விற்குப் பின் அவர்கள் வெளியில் வேறு எங்கும் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தோழனும், தோழியும்

திருமண நாட்களில் மணமகன், மணமகள் இருவரும் தோழன், தோழி பொறுப்பில் இருப்பர். மணமகனின் சகோதரி கணவன்மார்களும், மணப்பெண்ணின் நங்கை, கொழுந்திமார்களும் பெரும் பாலும் தோழன், தோழியாக இருப்பர். மணமகன், மணமகளின் எல்லாத் தேவைகளையும் இவர்களே கவனித்துக் கொள்ளுவார்கள். இது சங்க காலத் தலைவி, தலைவர்மார்களின் பாங்கி, பாங்கன் பாத்திரத்தை நினைவூட்டுகிறது.

முகூர்த்தக்கால் போடுதல்

திருமண நாளின் முதல் நிகழ்ச்சி முகூர்த்தக்கால் போடுவதாகும். அருமைக்காரருடன் மூன்று பேர் சென்று பால்மரமான ஆல், அரசு, பாலை, பாச்சான் ஆகிய மரங்களில் ஏதாவது ஒன்றுக்குப் பூசை செய்து முக்கவர் (கிளை) உள்ள சிறு கொம்பை வெட்டி வந்து தோலைச்சீவி மஞ்சள் பூசி வைத்திருப்பர். அதை மணப்பந்தலில் நீர் மூலை அல்லது ஈசானிய மூலை எனப்படும் வடகிழக்கில் பந்தல்காலில் ஆண்களும், பெண்களுகமாக ஐந்து அல்லது ஏழுபேர் பிடித்துக் கொள்ள மஞ்சள் தோய்ந்த துணியில் நவதானியத்தைக் கட்டி அருமைக்காரர் பால் வார்த்துப் பூசை செய்து கட்டுவார்கள்.

படைக்காலம் வைத்தல்

முன்பே வெற்றிலை பாக்கு வாங்கி உறுதி பெற்று மண் பாண்டங்கள் செயது குயவர் திருமண வீட்டு முற்றத்தில் கொண்டு வந்து வைப்பார். மதுக்கரைப் பட்டயம் மிடா 4, தண்ணீர்ச்சால் 1, பெரிய சால் 2, தண்ணீக்குடம் 4, தாளி 4, கரிச்சட்டி 4, உரிச்சட்டி4, நெய்க்கலயம் 2, பெரிய தடச்சட்டி 1, தண்ணீர்க் கலயம் 4 என்று கூறுகிறது.

குருவர்கட்கு 2 வள்ள அரிசி, 1 வள்ளம் பருப்பு, 8 வட்டுக் கருப்பட்டி, 1/2 படி நெய், 1 பணம் அளிக்க வேண்டும்.

மடைக்கயப் பானைப் பொங்கலுக்கும் தேவையான மண்பாத்திரமும் அளிப்பர். சுண்ணாம்பு, செஞ்சாயம் பூசி அலங்கரிக்கப்பட்ட அவை ‘எழுத்துப்பானை’ எனப்படும்.

ஆசாரிமார்களும் தேவையான இரும்புப் பாத்திரம், கருவிகள் கொடுப்பர். இவை படைக்காலம் வைத்தல் எனப்படும்.

பிறைமண் எடுத்தல் – பேய்க் கரும்பு நாட்டல்

குலதெய்வக் கோயிலுக்குச் சென்று புற்றுமண் கொண்டு வர இயலாது ஆகையால் அருகில் உள்ள புற்றுக்கு அருமைக்காரருடன் சென்று பால்வார்த்ததுப் பூசை செய்து மூன்று கூடைகளில் மண் எடுத்து வருவர். மங்கலன் ஆகிய குடிமகன் கல்நீக்கி மேடை போல அமைப்பான். அதில் பச்சை மூங்கிலையும் பேய்க்கரும்பு என அழைக்கப்படும் வேர்க்கரும்பினையும் நடுவான். அரசு இலையும் நவதானிய முடிச்சும் கட்டி அதற்குப் பூசை செய்வர். இது மண மேடையில் அமைக்கப்படும்.

நாற்சதுர மேடை படைப்புக் கடவுளாகிய நான்முகனைக் குறிக்கும் என்பர். அதனால் இதனை பிரமத்தானம் – அல்லது பிரம்மாவை எழுந்தருளச் செய்தல் என்பது பொருளாகும். கரும்பு வான் பயிர் எனக்குறிக்கப்பெறும் நன்செய்ப் பயிர்களில் முக்கியமானது, இனிமையுடையது.

ஒரு காலத்தில் கொங்கு மன்னன் அதியமான கரும்புப் பயிரைத் தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்தினான் என்பது புறநானூற்றுச் செய்தி. அது மட்டுமல்ல கரும்பு மன்மதனின் வில்லாகவும் பயன்படுகிறது என்பர். இதற்காகவே கரும்பு நடப்படுகிறது.

மங்கல வாழ்த்து, ‘பேய்க்கரும்பை நாட்டிப் பிறை மண்ணும் தான்போட்டு’ என்று கூறுகிறது. புற்று வணக்கத்திற்கு உரியது மாரியம்மன் தோற்றத்திலும் புற்று இடம் பெறுகிறது. வால்மீகி புற்றிலிருந்து வெளிப்பட்டார் என்பது வரலாறு. சில இடங்களில் சிவ பெருமான் புற்றிடங்கொண்டீசுவரர் என அழைக்கப்படுகிறார்.

காப்புக் கட்டுதல்

மணமகனுக்கும், மணமகளுக்கும் காம்பு இல்லாத சிறு விறலி மஞ்சளை மஞ்சள் தோய்த்த நூலில் இணைத்து அருமைக்காரர் மண மகனுக்கு வலக்கையிலும், மணமகளுக்கு இடக்கையிலும் கட்டுவார். எந்த இடையூறு ஏற்படினும் மண நிகழ்வை இனிதே முடிப்பேன் என்பதற்காகவும், ஏற்படும் இன்னல்களிலிருந்து பாதுகாப்புக்காகவும் காப்புக் கட்டப்படுகிறது. மங்கல நாண் பூட்டிய பின்னரே இவை அவிழ்க்கப்பெறும். ‘காப்புடன் கங்கணம் கனமதாய்க் கட்டி’ என்பது மங்கல வாழ்த்துத் தொடர். ‘முங்கையில் கடிகை நூல் கட்டுதல்’ என்று நெடுநல்வாடையில் காப்புக் கட்டுதல் குறிக்கப்படுகிறது. மஞ்சள் கிருமி நாசினியாகும்.

சீர்த்தண்ணீர் கொண்டு வருதல்

எழுதிங்கள் சீர் முடித்த பெண்களோ அல்லது சுமங்கலிப் பெண்களோ ஐந்து அல்லது ஏழுபேர் குடங்களுடன் அருமைக்காரரை வணங்கித் தாம்பூலம் பெற்றுக் குடங்களுடன் பெண் வீட்டின் அருகில் உள் நீர்நிலைக்கு மேள தாத்துடன் சென்று சீர்த்தண்ணீர் கொண்டு வரச் செல்வர். தண்ணீர்க் குடங்களைப் பிள்ளையார் கோயிலில் வைத்து பூசை செய்து நடைபாவாடையில் நடந்து வீட்டுக்கு எடுத்து வருவர்.

அத்தண்ணீரைக் கொண்டு முகூர்த்த நெல்லைக் குத்திய அரிசியைச் சமைத்து மணமக்களுக்கு அளிப்பர். மீதித் தண்ணீரைச் சீருக்குப் பயன்படுத்துவர். மணமகன் இல்லத்துப் பெண்களே சீர்த் தண்ணீர் கொண்டு வரும் சடங்கைச் செயவதால் ‘பெண்வீட்டுத் தண்ணீருக்குப் போகுதல்’ என்றும் இது அழைக்கப்பெறும். பெண் வீட்டு நீர் நிலையை அறிந்து கொள்வதும், புதிய தண்ணீரைப் பயன்படுத்துவதும் இதன் நோக்கமாக இருக்கலாம்.

மங்கலன் முகம் துடைத்தல்

அருமைக்காரர் பூசை செய்து கொடுத்த பாலைப் பெற்றுக் கொண்டு நாவிதர் மணமகனை முக்காலியில் அமர வைத்து முகச் சவரம் செய்வார். மணமகன் வீட்டு நாவிதர் செய்யும் இந்தச் சடங்கைப் பிரமச்சரியம் கழித்தல் என்று கூறுவர். இதன் பின்னர் மணமகன் உப்பில் பல் துலக்குவார். இதனை மங்கலவாழ்த்து ‘தெள்ளிய பாலால் திருமுகம் துடைத்து அரும்பு மீசையை அழகுற ஒதுக்கி’ என்று கூறுகிறது.

ஆக்கை சுற்றிப் போடுதல்

ஆக்கை என்பது புளிய மரத்து விளார். மூன்று ஆக்கைகளைக் கொண்டு வந்து இரண்டிரண்டாகப் பிளப்பர். பிளந்த ஆக்கையின் முனையை இருவர் பிடித்துக் கொள்ள இடையில் மணமகனை கிழக்கு நோக்கி நிறுத்துவர். அந்த இரண்டு ஆக்கைகளையும் சீர் செய்யும் பெண் தலையைச் சுற்றி எறிவார். மூன்றாவது ஆக்கையை மணமகன் காலடியில் போட்டு மிதித்து நிற்பார். இச்சீரை ‘ஆக்கை சுற்றிப் போடுதல்’ என்று கூறுவர்.

ஆக்கையின் இடையில் மணமகனை நிறுத்துவது இனி அவர் ஒரு கட்டுக்கோப்புக்குள் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கும். புளிய மரத்து விளார் மிக உறுதியானதாகும். ‘பிடித்தாலும் புளியங் கொம்பாகப் பிடித்தார்’ என்பது பழமொழி. அதனால், உருதியாக இருக்க வேண்டும் என்பதனையும் குறிப்பதாகலாம். ஆககையைத் தாண்டச் செய்வதும் உண்டு.

செஞ்சோறு அஞ்சடை கழித்தல்

குளிக்கும் போது முக்காலியில் அமர்ந்துள்ள மாப்பிள்ளைக்கு செஞ்சோறு அஞ்சடை கழிக்கும் சீரைச் செய்வது. சுண்ணாம்பு, மஞ்சள் கலந்துள்ள சோற்றைப் பிசைந்து, நாவிதன் ஐந்து அல்லது ஏழு உருண்டைகளாகச் செய்து வைத்திருப்பான். சீர்க்காரப் பெண் அதனை வாங்கி மணமகன் தலை, இரு தோள், இரு பாதம் ஆகிய ஐந்து இடங்களில் வைத்து நிறைநாழியில் உள்ள தார்க்கருது மூலம் எடுத்து எறிவாள். இது திருஷ்டி கழிப்பதாகும். மங்கல வாழ்த்து செஞ்சோறு அஞ்சடையும் சிரமதைச் சுற்றி திட்டிக் கழித்து சிவசூரியனைத் தொழுது என்று கூறுகிறது. மணமகளுக்கும் இவ்வாறு செய்வர்.

உருமால் கட்டுதல்

நீராடல் முடிந்த மணமகனுக்குத் தாய்மாமன் புத்தாடைகள் கொடுப்பதுடன் தலையில் உருமால் குஞ்சம் விட்டுக் கட்டி விடுவார். மோதிரம், சங்கிலி போன்ற அணிகலன்கள் ஏதேனும் கொடுப்பார். மணமகன் வேறு இடத்தில் பெண் எடுத்தாலும் தாய் மாமனின் உறவைக் காட்ட இச்சீர் செய்யப்படுகிறது எனலாம்.

கோயில் மாலை பெறுதல்

மணமகனின் காணி ஊரைச் சேர்ந்த சிவங்கோயில், பெருமாள் கோயில், குலதெய்வக் கோயில், பிற கோயில்கள் ஆகியவற்றில் அர்ச்சகர்களான சிவாச்சாரியார்களும், பண்டாரங்களும், பிற பூசாரிகளும் அந்தந்தக் கோயிலுக்குரிய மாலையைக் கொண்டு வந்து அளிப்பர். காணித் தெய்வங்கள் அனைத்தும் மணமக்களை வாழ்த்துகின்றன என்பது இதன் அடையாளமாகும்.

குப்பாரி கொட்டல்

மணமகன் தான் மணமகளை மணக்கப்போகும் செய்தியை ஊரார் அனைவரும் அறிய முழ்ங்கும் கருவிகளாகிய பெரிய மேளம், தப்பட்டை ஆகியவற்றைக் கொட்டி அறிவித்தல் குப்பாரி கொட்டல் எனப்படும். இந்நிகழ்ச்சிக்கு இலக்கியச் சான்றுகளும் உண்டு. குலதேவதையை வணங்கி இச்சீர் செய்வர். மங்கல வாழ்த்து ‘குப்பாரி கொட்டிக் குலதேவதையைத் தான் அழைத்து’ என்று கூறுகிறது.

நிறைநாழி

ஒரு இரும்பு வட்டப் படியில் நிறைய நெல்லை நிரப்பி தக்கிளி போன்ற ஒரு கம்பியில் வெண்மையான நூலைச் சுற்றி வட்டப்படியில் உள்ள நெல்லில் குத்தி வைத்திருப்பர். அநேகமாக எல்லாச் சீர்களிலும் சீர்க்காரிப் பெண் அதை எடுத்து மணமக்களின் தலையை மூன்று முறை சுற்றுவாள். அவ்வப்போது செய்யும் நிறைநாழிச் சீரில் நெல் மாற்றப்படும்.

நெல் வட்டப்படியில் நிறைந்திருப்பது போல் அவர்கள் வாழ்வு நிறைவாக இருக்க வேண்டும் என்பதும். கதிரும், நூலும் இரண்டறக் கலந்து சுற்றியிருப்பது போல் மணமக்களும் இணை பிரியாமல் இருக்க வேண்டும் என்பதும் அதன் கருத்தாகும். ‘நீர்மை பொருந்த நிறைநாழி வைத்து’ என்று மங்கல வாழ்த்துக் கூறுகிறது.

கணபதி வணக்கம்

பல சீர்களின் தொடக்கத்தில் விநாயகரை வழிபட்டுச் சீரைத் தொடங்குவர். மஞ்சள் பொடியில் பிள்ளையாரைப் பிடித்து அருகம் புல்லையோ அல்லது மலரையோ சூட்டினால் அங்கு விநாயகர் எழுந்தருளிவிடுவார். சில சந்தர்ப்பங்களில் மஞ்சளுக்குப் பதிலாகப் பசுஞ்சாணத்தைப் பயன்படுத்துவதும் உண்டு. இதனை மங்கல வாழ்த்து ‘சாணாங்கி கொண்டு தரைதனை மெழுகி கணபதி தன்னைக் கருத்துடன் நாட்டி அறுகது சூட்டி’ என்று கூறுகிறது.

குலதெய்வ வழிபாடு

குல தெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருவது இயலாது. குல தெய்வக் கோயில் தூரமாக இருக்கலாம். அதற்காகக் குழவிக் கல்லை ஓரிடத்தில் வைது நீர் வார்த்து வெற்றிலை வைத்துக் கட்டி விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து குல தெய்வமாக வழிபடுவர். மங்கல வாழ்த்திலும் இது இடம் பெற்றுள்ளது.

நாட்டுக்கல் வழிபாடு

திருமணச் சீர்களில் நாட்டுக்கல் வழிபாடு என்பது மிக முக்கியமான சீராகும். மேளதாளம் முழ்ங்க மணமகனும், மணமகளும் தனித்தனியாக நாட்டுக் கல்லுக்கு வழிபட வருவர். கொங்கு 24 நாடுகளின் தலைவர்கள் ‘நாட்டார்’ எனப்படுவர். திருமணத்திற்கு அவர்கட்கு அழைப்பு அனுப்பப் பெறும். ஆனால், நாட்டார் எல்லாத் திருமணங்கட்கும் வர இயலாது.

எனவே, திருமண வீட்டின் அருகில் சாலையில் ஒரு கல்லை நட்டு மஞ்சள் பூசிய நூலில் வெற்றிலையைக் கட்டுவர். அந்தக் கல்லில் 24 நாட்டார்களும் எழுந்தருளிருப்பதாக ஐதீகம். மணமகனும், மணமகளும் மேள தாளத்துடன் அங்கு வந்து வழிபடுவர். நாட்டார் கல்லுக்கு வழிபாடு நடத்தி மணமக்களுக்கும் ஆலாத்தி சுற்றி அதைப் பாதகத்தின் அருகில் ஊற்றுவர். எனவே, 24 நாட்டார் வழிபாடே நாட்டுக்கல் வழிபாடு என்பர். இது ஒரு கருத்து.

வேறு சிலர் நாட்டுக்கல் வழிபாட்டுக்கு வேறு காரணமும் கூறுகின்றனர். நடுகல் அல்லது வீரக்கல் (Hero Stone) என்பதை இப்போது நினைவுக்கல் என்று கூறுகின்றனர். அக்கல் பெரும்பாலும் வீதி ஓரங்களில்தான் நடப்பட்டிருக்கும்.

நடுகல் வழிபாட்டுக்கு உரியது. நடுகல் வழிபாடு மட்டுமே தமிழநாட்டில் முன்பு இருந்தது என்று இலக்கியம் கூறுகிறது.

‘நெல் உகுத்துப் பரவும்

நடுகல் அல்லது தெய்வம் இல்லை’

என்பது புறநானூற்றுத் தொடர்களாகும். நடுகல் வழிபாடு முன்னோர் வழிபாடு. வள்ளுவர் உபசரிக்க வேண்டியவர்களைக் கூறும்போது ‘தென்புலத்தார்’ என்று முன்னோர்களைத்தான் முதலாவதாகக் கூறுகிறார். எனவே, மணமக்கள் தங்கள் முன்னோர்களை நடுகல் வடிவில் வழிபடுகின்றனர். அதுவே நாட்டுக்கல் வழிபாடாகும். உயிர்ரோடு இருப்பவர்கட்குக் கல் நடுவது வழக்கம் இல்லை. ஆதலால் இது 24 நாட்டார் கல் அல்ல. முன்னோர் வழிபாடான நடுகல் வழிபாடு என்று கூறுவர்.

வெற்றிலை கட்டுதல்

மணப்பந்தலில் அருமைக்காரர் அமர்ந்துள்ள நிலையில் அவர் முன் மணமகன் வீட்டார் அமர்ந்திருப்பர். அருமைக்காரர் முன் முக்காலி ஒன்று போடப்பட்டிருக்கும். அதன்மீது போடப்படும் வண்ணான் மாத்தில் வெற்றிலை 15 கட்டு, 4 படிபாக்கு, தேங்காய் ஐந்து, பழம் ஒரு சீப்பும் வைத்துக் கட்டுவார். அதனோடு கூறைப் புடவை, கண்ணாடி, சீப்பு, பூ, சந்தனம், எலுமிச்சம்பழம், விரலி மஞ்சள் உள்ள கட்டையும் வைத்துக் கட்டுவார். நிறை செம்பில் நீர் இருக்கும். பூசை செய்வார்.

மேற்கண்டவைகள் அடங்கிய மூட்டையை மேள தாளத்தோடு விநாயகர் கோயிலுக்கு எடுத்துச் சென்று வழிபாடு செய்து கொண்டு வருவர். அருமைக்காரர் ஐந்து பேருடன் அவைகளை மணமகள் வீட்டுக்கு எடுத்துச் செல்வார். அருமைக்காரர் இரு வீட்டாருக்கும் வெற்றிலை, பாக்கு அளிப்பார். மூட்டையை அவிழ்த்துச் சரிபார்த்து மீண்டும் கட்டுவார். அப்போது முகூர்த்த நேரம் அறிவிக்கப்படும்.

வெற்றிலைக் கட்டும், மூட்டையும் இணைத்துக் கூறப்புடவை, நகை ஆகியவைகளும் இணைத்துக் கட்டப்படும். சீருக்குப்பின் வெற்றிலை கட்டிய முட்டையைப் பெண் வீட்டார் பெறுவர். நகை அணிவிக்கக் கொண்டு வந்த மாப்பிள்ளை வீட்டாருக்குப் புதுக் கலங்களில் விருந்தளிப்பர். தாம்பூலம் அளிப்பார். ‘பொன்பூட்ட வந்தவர்க்குப் பூதக்கலம் தான் அனுப்பி அன்பாக வெற்றிலை அடைவாகத் தான் கொடுத்தார்’ என்று மங்கல வாழ்த்துக் கூறுகிறது. புதுக்கலம் என்பது ‘பூதக்கலம்’ என ஆகிவிட்டது என்பர்.

இணைச்சீர்

திருமண நிகழ்ச்சிகளில் மிக முக்கியமானது ‘இணைச்சீர்’ என்பதாகும். ‘இணை உடுத்துதல்’ என்றும் கூறுவர். திருமணத்திற்கு இணையான சீர் என்றும், மணமகனுக்கும், மணமகன் சகோதரிக்கும் இணைப்பை உறுதிப்படுத்தும் சீர் என்றும், மணமகன், மணமகளோரு இணைவதற்குச் சகோதரி அனுமதியளிக்கும் சீர் என்றும் பலவாறாகக் கருதலாம்.

சில இடங்களில் மணமகன் அமரும் இருக்கையில் சகோதரி முன்னர் வந்து அமர்ந்து கொள்வார். ‘உனக்குப் பிறக்கும் பெண்ணை என் பையனுக்குத் திருமணம் செய்து கொடுப்பதாக உறுதியளித்தால் தான் உனக்கு இடம் கொடுப்பேன்’ என்பாள். மணமகன் உறுதியளித்தவுடன் எழுந்து மணமகன் அமர இடம் கொடுப்பாள்.

திருமணப் பந்தலின் ஒரு பகுதியில் மணவறை போலவே அலங்கரிக்கப்பட்ட இடத்தில் மாப்பிள்ளை அலங்காரத்துடன் மணமகன் வந்து அமர்வார். மணமகனின் சகோதரிக்கு மணப்பென் போலவே அலங்காரம் செய்து அழைத்து வருவர். பேழை ஒன்றைச் சகோதரி சுமந்து வருவாள். அதில், கூறைப்புடவை, வெற்றிலை பாக்கு, மஞ்சள், தேங்காய், பழம், கண்ணாடி, சீப்பு ஆகியன இருக்கும். இடக்கை பேழையைப் பிடித்துக் கொண்டிருக்க வலக்கையில் ஒரு செம்பு நீர் எடுத்து வருவாள். மணமகனையும், மண அறையையும் சுற்றி வந்து பேழையை மணமகனுக்கு வலப்புறம் வைப்பாள். பேழையில் உள்ள பொருள்கலை அகற்றி அதனுள் சகோதரியை நிறுத்துவர். பேழையில் இருந்த கூறைப் புடவையில் ‘இணைப்பவுன்’ அல்லது தன் சக்திக்கு ஏற்றதை சகோதரி முடிந்து வைத்திருப்பாள்.

இணைச்சீர் மண அறையில் மண் கலசத்தின்மேல் தேங்காய் வெற்றிலை பாக்கு வைத்து அதன் முன் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்திருப்பர். நவதானிய முளைப்பாரியும், அணையா விளக்கும் இருக்கும். பிள்ளையாருக்கு முன் தட்டில் அரிசி நிரப்பி அதன்மேல் வெற்றிலை பாக்கும், வெல்லமும் வைக்கப்பட்டிருக்கும். அருமைக்காரர் மணமகனின் சகோதரிக்கு வெற்றிலை பாக்குக் கொடுத்து அதனை மடியில் கட்டச் சொல்வார். பின் கூறைப்புடவையைக் கொசுவமாக மடித்து ஒரு முனையை மணமகன் கககத்திலும் மறுமுனையைச் சகோதரி கையிலும் கொடுப்பார்.

அருமைக்காரர் மணமகனின் கையை அரிசியில் பதிய வைப்பார். விநாயகருக்குப் பூசை செய்து அரிசியை அள்ளி வெற்றிலையில் வைத்து நாவிதரிடம் கொடுத்து மங்கல வாழ்த்து இசைக்கக் கூறுவார். அருமைக்காரர் பிள்ளையார், மணமகன், சகோதரி ஆகியோருக்கு அருகு மணம் எடுத்துபின் பேழையைத் தலையில் வைத்துத் திருமண வீட்டுக்கு அனுப்பி வைப்பார். இணைச்சீர் பற்றி மங்கல வாழ்த்தி விரிவாகக் கூறுகிறது. ‘ஆடையாபரணம் அழகுபெறத் தான்பூண்டு கூறை மடித்து வைத்தார் குணமுள்ள தங்கையரும் பிறந்தவரைச் சுற்றிப் பேழை மூடி சுமந்து இந்திரனார் தங்கை இணையோங்க வந்த பின்பு பின்னே ஒரு தரம் பிறந்தவர்க்கு இணையோங்கி மின்னனையார் முன்னே விநாயகர்க்கு இணையோங்கி’ என்பது மங்கல வாழ்த்து.

மணமகன்- சகோதரி தொடர்பு திருமணத்தால் குறையாது; சீர்வரிசையில் சம பங்கு அளிப்பேன் என்பதைக் குறிக்கவே இணைச் சீர் செய்யப்படுகிறது. பெண்ணுக்குச் சம உரிமை இல்லாத அந்தக் காலத்திலேயே கொங்கு வேளாளர்கள் பெண்களுக்குச் சம உரிமை கொடுத்தனர். ஆணிற்கு இணையாகப் பெண்ணுக்கும் உரிமையுண்டு என்பதை உணர்த்தும் சடங்கே – சட்ட விதியே இணைச்சீர் எனலாம்.

தாயுடன் உண்ணல்

முன்பு இணைச்சீர் வரை அனைத்துச் சீர்களும் மணமகன் இல்லத்திலேயே நடைபெறும். பின் திருமணத்திற்கு வேண்டிய பொருள்களுடன் தன் உறவினர், குடிபடையுடன் மணமகன் மணமகள் இல்லம் செல்வார். இப்படிச் செல்வதைக் ‘கட்டிலேற்றிச் செல்லுதல்’ என்பர். அப்படிச் செல்லும் மணமகன் தாயுடன் ஒரே கலத்தில் உணவு உண்பார். மணமகளை மணம் முடிக்கச் செல்ல மணமகனுக்குத் தாயார் அனுமதியளித்து ‘பூங்கொடிக்கு மாலையிடப் போய்வா மகனே’ என்று அனுப்பி வைப்பாள். தாயார் ‘கட்டளை ஏற்றுச் செல்லல்’ என்பது கட்டிலேற்றிச் செல்லல்’ என மாறிவிட்டது. தாயோடு உண்ணலைத் ‘தயிர்ச் சோறு உண்ணல்’ என்றும், தாயார் கையால் உண்ணும் கடைசி உணவு என்றும் சிலர் கூறுவர்.

‘மாதாவுடனே மகனாரும் வந்திருந்து

போதவே பால்வார்த்துப் போசனமும் தான்அருந்தி’

என்று மங்கல வாழ்த்துக் கூறுகிறது.

கூடைச்சீர் அல்லது நாழியரிசிக் கூடை

திருமாங்கல்யம், கூறைப்புடவை, பிற அணிகலங்கள், நெல், அரிசி, பழம், வெல்லம், தேங்காய், வெற்றிலைபாக்கு, விளக்கெண்ணெய், நெய், எலுமிச்சம்பழம், விறலி, மஞ்சள், சீப்பு, கண்ணாடி, பொட்டு, குங்குமம், திருநீறு, சந்தனம், பூக்கள் இவை போன்ற திருமணத்திற்கு இன்றியமையாமல் வேண்டப்படுகின்ற அனைத்துப் பொருள்களையும் ஒரு கூடையில் வைத்து மணமகன் இல்லத்தார் மணமகள் இல்லத்திற்கு நாவிதர் தலையில் வைத்து எடுத்து வருவர். இவர்கள் அனைவரும் மணமகள் இல்லத்திற்கு அருகேயுள்ள பிள்ளையார் க�

No comments: