Monday, May 28, 2012

400 கோடி ஆண்டு விண்கல் துணுக்குகள்!

400 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் மோதிய விண்கல் துணுக்குகளை அமெரிக்காவில் ஒரு விண்கல் ஆய்வாளர் கண்டுபிடித்திருக்கிறார்.
இந்த 30 சிறிய விண்கல் துணுக்குகள், கலிபோர்னியாவின் சியரா மலை அடிவாரத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
யதேச்சையாக இவற்றைக் கண்டுபிடித்த கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் வேஸன், ஒவ்வொரு துணுக்கும் தலா 10 கிராம் எடை இருப்பதாகக் கூறுகிறார். மேலும், இவை கார்பனேசியஸ் காண்ட்ரைட் என்ற அரியவகை விண்கற்களின் பகுதிகள் என்று தான் பார்த்தவுடனே புரிந்துகொண்டதாகவும் கூறுகிறார். இவை எல்லாம் ஒரே விண்கல்லின் பகுதிகளாக இருக்க வேண்டும் என்பது இவரது கருத்து.
எரிந்துகொண்டு வந்து பூமியில் மோதிய ஒரு விண்கல்லின் பகுதிகளான இவை, சூரியக் குடும்பம் உருவான 400 முதல் 500 கோடி ஆண்டு காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்பது விண்வெளி ஆய்வாளர்களின் எண்ணம். குறிப்பிட்ட விண்கல் பூமியில் மோதியபோது, ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டைப் போல மூன்றில் ஒரு பங்கு தாக்கத்தை ஏற்படுத்தி யிருக்கக்கூடும் என்கிறார்கள்.
தற்போது ஒவ்வொரு விண்கல் துணுக்கும் தங்கத்தை விட பத்து மடங்கு மதிப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்த விண்கல் துணுக்குகள், விஞ்ஞானிகளின் சிந்தனையை புதிய திசை நோக்கித் திருப்பியுள்ளதால், ஆய்வுகள் சூடு பிடித்துள்ளன.

No comments: