Sunday, May 6, 2012

வாழை நார் ஆடைகள்: 'துணி'ந்தால் லாபம்தான்!

பொதுவாக பருத்தி, பட்டு, பாலியஸ்டர் போன்றவற்றைக் கொண்டுதான் ஆடைகள் தயாரிப்பது நமக்குத் தெரியும்.  ஆனால், வாழை நாரி லிருந்து துணிகளை தயாரித்து வருவது பலருக்கும் தெரியாது.






சென்னை பல்லாவரத்துக்கு அடுத்த அனகாபுத்தூரில் வாழை நாரை வைத்து ஆடை நெய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது ஒரு நிறுவனம். ஆசியாவிலேயே இங்குதான் வாழை நார், மூங்கில், கற்றாழை என இயற்கை பொருட்களைக் கொண்டு ஆடைகள் தயாரிக்கப்படுவது எக்ஸ்ட்ரா ஆச்சரியத் தகவல்.
வாழை நாரிலிருந்து ஆடைகள் தயாரிக்கும் சேகரை சந்தித்தோம். ''ஆரம்பத்தில் எல்லாரையும் போலவே நாங்கள் பருத்தி, பட்டு போன்றவற்றைக் கொண்டு ஆடைகள் தயாரித்து வந்தோம். கடந்த 2006-ம் ஆண்டுதான் முதன் முதலாக வாழை நாரை வைத்து ஆடை செய்ய முயற்சி செய்தோம். அது நன்றாகவே வந்தது. இதை பயன்படுத்திய பலரும் நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள். அது எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. இயற்கைக்கு உகந்த, நம் உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத இந்த வாழை நார் ஆடை தயாரிக்க ஆகும் செலவு மிக மிகக் குறைவு'' என்ற சேகர் தொடர்ந்து பேசினார்.
''பருத்தி நூல் ஆடைகளைப் போன்றதுதான் வாழை நாரிலிருந்து தயார் செய்யப்படும் ஆடைகளும். பொதுவாக, பருத்தி நூல் நீளமாக வரும். ஆனால், வாழை நாரிலிருந்து எடுக்கப்படும் நூல் நீளமாக இருக்காது. பல வாழை நார் நூல்களை ஒன்றாக இணைத்துதான் ஆடைகளைத் தயாரிக்க முடியும்.
இப்படி வாழை நூல் பயன்படுத்தி ஆடைகள் தயாரிப்பதால் இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது. தவிர, பருத்தி ஆடைகளைப் போல இந்த ஆடைகளையும் நன்கு சாயமேற்ற முடியும். இதனால் நாம் விரும்பிய வண்ணத்தில் சேலை, சட்டை துணி போன்றவற்றை உருவாக்கலாம். பருத்தி நூலைவிட குறைந்த செலவே இதற்கு ஆவதால், இது குறைந்த விலையிலும் கிடைக்கிறது'' என்றார்.
இந்த வாழை நார் ஆடை களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறதா என்று கேட்டோம். ''தமிழகம், குஜராத் பகுதிகளில் இந்த புடவைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அங்குள்ள பெரிய கடைகள் இதற்கான ஆர்டர்களை தந்து வாங்கிச் செல்கிறார்கள். தவிர, வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் மட்டும்  மாதத்திற்கு பத்தாயிரம் ஆடைகள் வேண்டுமென எங்களிடம் கேட்கிறார்கள். ஆனால், இவ்வளவு பெரிய ஆர்டரை சப்ளை செய்கிற அளவுக்கு எங்களிடம் இடவசதி இல்லை.
தவிர, பருத்தி நூல் போல இதனை எளிதில் தயாரித்துவிடவும் முடியாது. ஒவ்வொரு இழையாகப் பிரித்து, காய வைத்து, அதை நீளமான நூலாக மாற்றி, நெய்வதற்கு நீண்ட காலம் பிடிக்கும். நீளமான நூலை உருவாக்கும் டெக்னாலஜி மட்டும் வந்து விட்டால், இன்னும் வேகமாக இந்த ஆடைகளை தயாரிக்க முடியும்'' என்றவர், இந்த தொழில்நுட்பத்துக்கான பேடன்ட் உரிமையையும் வாங்கி வைத்திருக்கிறார். டெல்லியில் உள்ள ஐ.ஐ.டி.-யில் சான்றிதழ் வாங்கி இருக்கிறார்.
''எங்களுக்கு போதிய இடவசதியை அரசாங்கம் ஏற்படுத்தித் தந்தால், இன்னும் அதிக அளவில் இந்த ஆடை களை உற்பத்தி செய்து உலகம் பூராவும் ஏற்றுமதி செய்வோம்'' என்று கோரிக்கை வைத்தவர்,  தேங்காய் நார், மூங்கில், கடல் புல் போன்ற 25 வகையான இயற்கை பொருட்களைக் கொண்டு ஆடைகளை தயாரித்து, லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார்.
''அடுத்து, மூலிகைகளைக் கொண்டு புடவை தயாரிக்கும் எண்ணத்திலும் இருக்கிறோம். வாழை நார் மூலம் புடவைகள் மட்டுமல்லாமல் சுடிதார், சர்ட்டு கள் தயாரிக்கும் வேலையிலும் கூடிய விரைவில் இறங்கப் போகிறோம்'' என்றார் சேகர்.
இயற்கைக்கு உகந்ததாக இருக்கும் இத்தொழில் வருங் காலத்திற்கு ஏற்றது என்பதில் சந்தேகமே வேண்டாம்!

No comments: