`இந்திரப்ரஸ்த
நகரத்தின் கடைசி ஷத்ரிய அரசனான ப்ருதிவிராஜனுடைய சேனாதிபதிகளிலே
`சாமின்டராய்' என்று ஒருவன் இருந்தான். வட பக்கத்து முகம்மதிய
அரசர்க்கெல்லாம் அவன் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் நடுக்கம் உண்டாகும்படி
அவன் அத்தனை வீரமும், யுத்தத் திறமையும் கொண்டு விளங்கினான். அவனுடைய சரீர
வலிமையை நிகரற்றதாகக் கொண்டாடினார்கள்.
அவனுக்குச் சாமுண்டி உபாஸனை உண்டு. விரதங்கள், கண்விழிப்புகள், தியானங்கள், வியாயாமங்கள் இவற்றிலே தனது காலம் முழுவதும் கழித்தான்.
`அவன்
உணவு கொள்ளும்போது பீமனைப் போல் அளவில்லாத பசியுடன் உண்பான்' என்று
சந்தக்கவி `ப்ருதிவிராஜ் ராஸோ' என்னும் தமது காவியத்திலே
எழுதியிருக்கிறார்.
பீமனுடைய
பெயர்களில் `விருகோதரன்' என்பதொன்று; அதாவது `ஓநாய் வயிறுடையவன்'
என்றர்த்தம். இது அவனுக்கிருந்த நேர்த்தியான பசியைக் கருதிச் சொல்லியது.
இக்காலத்தில் குறைவாக உண்ணுதல் நாகரிகமென்று நம்மவர்களிலே சிலர்
நினைக்கிறார்கள்.
`பெருந்தீனிக்காரன்'
என்றால் அவமதிப்பு உண்டாகிறது. சிரார்த்தத்திலே சோறு தின்று முடிந்தவுடன்
எழுந்திருக்க முடியாமல் கஷ்டப்படும் சில பிராமணார்த்தக்காரர்களைப் போல்
சரியான பயமில்லாமல் உடம்பைக் கொழுகொழுவென்று வைத்துக் கொண்டு, நாக்கு
ருசியை மாத்திரம் கருதிப் பெருந்தீனி திண்பவனைக் கண்டால் அவமதிப்புண்டாவது
இயற்கையேயாம்.
புலிகளைப்
போல் உடல் வலிமையும், அதற்குத் தகுந்த தீனியும் உடையவனைக் கண்டால்
யாருக்கும் அவமதிப்பு உண்டாகாது. சாதாரணமாக பயம் உண்டாகும். நானாவிதமான
விலையுயர்ந்த உணவுப் பொருள்களைத் தின்றால்தான் உடம்பிலே பலம் வரும் என்று
சிலர் நினைக்கிறார்கள்.
இது
தவறு. காரஸாரங்களும், வாசனைகளும் உண்டாக்கி ருசியை அதிகப்படுத்தும்
வஸ்துகள் தேக பலத்திற்கு அவசியமில்லை. கேப்பைக்களி, கம்பஞ்சோறு இவற்றால்
பலமுண்டாவது போல் பதிர்ப்பேணியிலும், லட்டுவிலும், வெங்காயச் சாம்பாரிலும்
உண்டாகாது.
`சரீரத்தை
வியர்க்க வியர்க்க உழைத்தால் நல்ல பசியுண்டாகும். நல்ல
பசியாயிருக்கும்போது கேப்பைக்களியை வேண்டுமளவு தின்று சுத்த ஜலத்தைக்
குடித்தால் போதும். விரைவில் பலம் சேர்ந்து விடும்'.
`பிள்ளைகளை
இஷ்டப்படி நீஞ்சுதல், மரமேறுதல், பந்தாட்டம் முதலிய விளையாட்டுக்களிலே
போகவொட்டாத படி தடுக்கும் பெற்றோர், தம்மையறியாமலேயே மக்களுக்குத் தீங்கு
செய்கிறார்கள்'.
`மேலும்,
சரீர உழைப்பும் விளையாட்டுக்களும் மிகவும் வாலிபப் பருவத்திலேயிருக்கும்
பிள்ளைகளுக்கு மாத்திரந்தான் பொருந்துமென்று ஒரு தப்பெண்ணம் சிலரிடம்
ஏற்பட்டிருக்கிறது'.
`மனிதனுக்கு
இயற்கை வயது நூறு. ஆகையால், ஐம்பது வயதாகும் வரை ஒருவன் இளமை தீர்ந்தவனாக
மாட்டான். பிஞ்சிலேயே உடம்பை நாசப்படுத்தினால் சீர் கெட்டுக் குலைந்து
போய், இருபது வயதாகுமுன் கிழத்தன்மை வந்துவிடும்.
எனினும்
இயற்கை விதிப்படி ஐம்பது வயது வரை இளமை நிற்குமாகையால், அதற்குள்ளே
செயற்கைக் கிழத்தன்மை பெற்றோர், தமதுடம்பைத் திருத்தி நல்ல நிலைமைக்குக்
கொண்டு வர முயற்சி செய்யலாம்.'
மேலே நான் குறிப்பிட்டிருப்பது மகாகவி பாரதியாரின் கட்டுரையில் இருந்து ஒரு பகுதி.
மனிதனை அண்டி வரும் ரோகத்திற்கான அடிப்படையை இப்படி அவன் விவரிக்கின்றான்.
இதுபற்றி முன்பே நான் குறிப்பிட்டிருக்கிறேன்.
சிறு வயதில் இருந்தே, பெருந்தீனி தின்று பழக்கப்பட்டவன் நான்.
அந்நாளில், மணியாச்சியை அடுத்த ஓட்டநத்தத்தில் எங்களுக்கு ஒரு `ஜின்னிங் பாக்டரி' இருந்தது.
வாஞ்சிநாதன், ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற அந்த மணியாச்சி ஜங்ஷன், தென்னாட்டிலே பூரி கிழங்குக்குப் பிரசித்தமானது.
இரண்டாவது
உலக மகாயுத்தத்தின் போதுதான், பூரி, சப்பாத்தி சாப்பிட வேண்டிய கட்டாயம்
தென்னாட்டவர்க்கு வந்ததென்றாலும், அதற்கு முன்பாகவே ஹோட்டல்களில் பூரி
கிழங்கு என்பது ஒரு சுவையான உணவாகக் கருதப்பட்டது.
1933-இல் எனக்கு வயது சுமார் ஆறு.
அந்த வயதில் சுமார் பதினாறு பூரிகள் சாப்பிடுவேன். உறவினர்களே கூடத் திகைத்துப் போவார்கள்.
பாரதி சொல்வது போல், கம்பும் கேழ்வரகும், கோதுமையும், உடம்புக்குச் சக்தியூட்ட வல்லன.
ஆரம்ப சக்தியே, எனக்கு உணவில் இருந்து கிடைத்தது.
ஆனால்,
வெள்ளைக்காரர்கள் உணவையும் சீனத்து உணவையும், சுவை பார்க்கத் தொடங்கிய
பிறகு, நாக்கு ருசியேறி ஊளைச் சதைப்போடத் தொடங்கிற்று. கொழுப்புச் சத்தும்
ஏறி பத்துப் படியேறினால் மூச்சு வாங்குகிற நிலைமை வந்தது.
இப்போது என்னால் அதிகம் சாப்பிட முடியவில்லை. குறைந்தபட்ச உணவிலேயே திருப்தியடைய வேண்டியது இருக்கிறது.
அந்த உணவு, `புரதச் சத்து நிறைந்ததாக இருந்தால் போதும்' என்றே நான் நினைக்கிறேன்.
உடம்பும் அளவோடிருக்கிறது.
ஆனால், மூளை `சென்சிடி'வாகி விட்டது.
எந்த ஒலியையும் அது எதிரொலிக்கிறது.
திருமூலரும், போகரும், பதார்த்தகுண சிந்தாமணியும் உணவுக்குச் சொல்லும் குணங்களை, இப்போது என்னால் உணர முடிகிறது.
கிழங்கு வகைகள், பட்டாணி, முட்டை, நண்டு, இறால்- இவற்றில் வாயு அதிகமா?
மத்தியானம் சாப்பிட்டால், மாலையிலே எதிரொலி கேட்கிறது.
மாமிசக் கொழுப்பும், உப்பும் ரத்தக் கொதிப்பை ஏற்றுமா?
இருபத்து நான்கு மணி நேரத்தில் ரிசல்ட் தெரிகிறது.
புளியிலும், எலுமிச்சம் பழத்திலும் `திரவம்' உண்டா?
அந்தத் திரவம் இப்போது கண்ணை மயக்குகிறது; தலையைச் சுற்றுகிறது.
ரத்த அணுக்களின் தாங்கும் சக்தி ஒரு குறிப்பிட்ட காலத்தோடு முடிந்து விடுகிறது.
வெள்ளை அணுக்களும், சிகப்பு அணுக்களும் பலமிழந்து, போராடக் கூடிய வல்லமையை அவை இழந்து விடுகின்றன.
இரண்டு
மோட்டார் வைத்துத் தண்ணீர் இறைக்கும் கோயம்புத்தூர் கிணறு போல, ஏராளமான
மாத்திரைகளைப் போட்டே அந்த ரத்த அணுக்களை உயிர்ப்பிக்க வேண்டியிருக்கிறது.
வானைத் தொடும் அளவுக்கு கால் பந்து அடித்த கால்கள், சாதாரணமாக நடந்து போவதற்குத் துணை தேடுகின்றன.
பெரிய ரதத்தைக் கூட மளமளவென்று இழுத்த கைகள், ஒரு வாளித் தண்ணீரைத் தூக்குவதற்குப் பயப்படுகின்றன.
ஏழு மாடி ஏறினாலும் வராத பெருமூச்சு, ஏழு படி ஏறினாலே வருகிறது.
எனக்கல்ல; வயதானவர்களுக்கு!
இருபது வருஷங்களுக்கு முன் அரசியலிலும், இலக்கியத்திலும், கலையிலும் என்னோடு ஈடுபட்ட சிலரை இப்போது பார்க்கிறேன்.
சிலர், `சர்க்கரை' என்கிறார்கள். சிலர் `உப்பு' என்கிறார்கள்.
சாப்பாட்டைக்
கண்டால் பயப்படுகிறார்கள்; ஆஸ்பத்திரியைக் கண்டால், படுத்துக்
கொள்கிறார்கள்; ஆளுக்கு ஒரு மூட்டை மாத்திரை சாப்பிடுகிறார்கள்.
`என்ன வாழ்க்கை இது? இப்படி வாழத்தான் வேண்டுமா?' என்று அலுத்துக் கொள்கிறார்கள்.
போகம் ஒரு கட்டம் வரையில்தான்; `மறு கட்டம் ரோகம்' என்பதை தேகம் நினைவுபடுத்துகிறது.
சிறு வயதில் திட்டமிட்டு வாழாத யாரும், இதற்குத் தப்ப முடிவதில்லை.
மேல் நாடுகளிலும், கீழ் நாடுகளிலும் ஒருவர் இன்னொருவரைக் கண்டால் முதலில் விசாரிப்பதே, `உடல் நிலை எப்படி?' என்று தான்.
`நோயற்ற வாழ்வே நான் வாழ வேண்டும்' என்று பிரார்த்தித்தார், இராமலிங்க சுவாமிகள்.
நோயோடு நூறாண்டு வாழ்வதை விட, நோயின்றி ஐம்பது ஆண்டுகள் வாழ்வது போதுமானது.
`நித்திய கண்டம் பூரண ஆயுசு' என்றிருப்பதில் என்ன சுகம்?
அதிலும் இன்றைய உலகத்தில் வந்துள்ள நோய்கள் இருக்கின்றனவே, அனைத்துமே வேடிக்கையானவை.
மயிலை
கபாலீசுவரர் கோயிலில் ஒருநாள் பேசி விட்டு வந்தேன். அன்றிரவு
நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பிராமணரும், அவரது மனைவியும் என்னைத்
தேடி வந்து, `தேவர் மண்டபத்தில்' சந்தித்தார்கள்.
நானே உடல் நலமில்லாமல் தான் உட்கார்ந்திருந்தேன்.
தன்
மனைவிக்கு அதிசயமான ஒரு வியாதி இருப்பதாகவும், தன் மனைவியைக் கண் போல்
காத்து வந்த ஒரே மகள், திடீரென்று இரண்டு மாதங்களுக்கு முன் இறந்து
விட்டதாகவும், அந்த பிராமணப் பெரியவர் கண் கலங்கக் கூறினார்.
அவர் சொன்ன வியாதி என்ன தெரியுமா?
அந்த
அம்மையார் உட்கார்ந்திருக்கும் போது மெதுமெதுவாக மேலே போவது போல்
தோன்றுகிறதாம்! திடீரென்று தன் கணவனையோ, மற்றவர்களையோ கூப்பிட்டுத் தோள்களை
அமுக்கச் சொல்கிறாராம்; இப்படி அடிக்கடி தோன்றுகிறதாம்.
அவர் சொன்னார்:
`ஐயா!
நான் கடமை தவறாத பிராமணன். அரசாங்கத்தில் பெரிய அதிகாரி. பகவான் என்னை
இப்படிச் சோதிக்கிறான்! கடவுளுக்கு நான் என்ன துரோகம் செய்தேன்?'
நான் சொன்னேன்:
`இதைத்தான் இறைவனின் லீலை என்கிறார்கள். ஏற்றுக் கொண்டு அடுத்தக் கட்டத்தை எதிர்பார்ப்பதைத் தவிர நம்மால் ஆவதென்ன?'
அவர் திருப்தியடையவில்லை.
கடையிசியில் பூர்வ ஜென்ம பாவ புண்ணிய கர்மாவைக் கூறி, அவரை அமைதிப்படுத்தினேன்.
எனக்கும் என் நண்பர்கள் சிலருக்கும் ஒரு விசித்திரமான நோய் உண்டு.
பல மாடிக் கட்டடத்தில் ஏறிச் சுவரோரத்தில் நின்று பார்த்தால், கீழே குதிக்க வேண்டும் போல் தோன்றும்.
ஆங்கிலத்தில் `வெர்டிகோ' என்றும், தமிழில் `கிறுகிறுப்பு' என்றும் சொல்கிறார்களே அது அல்ல இது.
இது ஒருவகை மனநோய்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென்று அழுகை வரும்.
`தற்கொலை செய்து கொள்ளலாமா?' என்று தோன்றும்; சிலருக்கு அப்படி ஒரு நோய்.
ஆங்கிலத்தில் அதன் பெயர், `சிசோம்பிரினியா!'
நம்முடைய மூதாதைகளான ராஜராஜசோழன் காலத்திலோ, ராஜேந்திர சோழன் காலத்திலோ இந்த நோய்களெல்லாம் இருந்தனவா?
குதிரை
ஏற்றம், வாள் பயிற்சி, மல்யுத்தம், நூற்றைம்பது படிக்கட்டுகள் மலையில்
ஏறுதல், இயற்கையை வைத்தியனாகக் கொண்டு அவர்கள் வாழ்ந்தார்கள்.
இப்போதெல்லாம் அதிகக் கனமாக இருந்தால், `எடையைக் குறை' என்கிறார்கள்.
நம்முடைய மூதாதையர்கள் எல்லாம் குண்டாகத்தான் இருந்து, எண்பது வயது வரை வாழ்ந்தார்கள்.
இன்று பரவலாகக் காணப்படும் நோய், மாரடைப்பு.
ஆயிரத்தில் ஒருவருக்கு அபூர்வமாக அந்த நாளில் வரும் மாரடைப்பு, இப்போது சர்வசகஜமாகி விட்டது.
ஒவ்வொரு மனிதனும் தபால்காரனை எதிர்பார்ப்பது போல், `நமக்கு எப்போது வருமோ' என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான்.
விசித்திரமான நோய்கள் விபரீதமாகப் பெருகிவிட்ட காலம் இது.
காரணம், நாகரிகத்தின் வசதிகள் மட்டுமல்ல; தெய்வ பக்தி இல்லாமையுங் கூட.
இதைப் படிக்கின்ற உங்களில் எத்தனை பேர், தினசரி பூஜை செய்கிறீர்கள்?
எத்தனை பேர் கோயிலை நூற்று எட்டு முறை பிராகாரம் சுற்றி வருகிறீர்கள்?
எத்தனை பேர் மலை ஏறிச் சாமி கும்பிடுகிறீர்கள்?
எத்தனை பேர் குளத்தில் மூழ்கி நீராடி, ஈரத்துண்டோடு காட்டிலே நடக்கிறீர்கள்?
எந்தக் கோயிலின் அர்ச்சகராவது, சர்க்கரை வியாதிக்கு ஆளாகி இருக்கிறாரா?
உடம்பு வியாதி வந்து, கை, கால் வீங்கி இருக்கிறாரா?
எந்த அர்ச்சகராவது எழுபது வயதுக்கு முன்னால் செத்திருக்கிறாரா?
அவர்களில் எவராவது கொழுப்படைத்துச் செத்தது உண்டா?
இத்தனைக்கும் `அக்கார அடிசில்' என்னும் சர்க்கரைப் பொங்கலை, நெய் வடிய ஒரு படி சாப்பிடுகிறவர்!
நோய் இல்லாத காரணம் என்ன?
அவர்
தினசரி தெய்வத்தைச் சந்திக்கிறார் என்பது ஒன்று; காற்றில்லாத மூல
ஸ்தானத்தில் தினமும் நிற்பதால் உடம்பிலுள்ள உப்பும், சர்க்கரையும்
வியர்வையில் வெளியேறி விடுகின்றன என்பது மற்றொன்று.
இந்து மதத்தின் பக்தித் தத்துவத்தில் மருத்துவமும் கலந்திருக்கிறது.
நிவேதனப் பொருட்களை மட்டுமே சாப்பிட்டு ஒருவன் வாழத் தொடங்கினால், தெய்வம் வாழும் காலம் வரை அவனும் வாழ்வான்.
நாட்டில்
எவ்வளவோ மூலிகைகள் இருக்கின்றன. ஆனால், துளசி தலத்துக்கென்ன அவ்வளவு
மரியாதை? அதை ஏன் வீட்டிலே பூஜிக்கிறார்கள்? கோயிலிலே கொடுக்கிறார்கள்?
அது பல நோய்களைக் கண்டிக்கிறது.
அண்மையில்
ஒரு பத்திரிகையில் துளசியின் மகிமை பற்றி ஒரு கட்டுரை வந்தது. அது ஒரு
`சர்வரோக நிவாரணி' என்று அந்தக் கட்டுரை குறிப்பிட்டது.
மாரியம்மனை வணங்கும்போது, வேப்பிலை ஏன் பிரதானமாகிறது?
அது மற்றொரு நிவாரணி.
`அலர்ஜி' என்றொரு வார்த்தை ஆங்கிலத்தில் உண்டு.
சிலருக்கு வாசனை `அலர்ஜி,' சிலருக்கு காய்கறி அலர்ஜி என்று பலவகையான அலர்ஜிகள் உண்டு.
கோயிலுக்குள் எந்த வாசனை வந்தாலும், `அலர்ஜி' கிடையாதே ஏன்?
`அந்த நோயாளிக்கு இவர் விபூதி கொடுத்தார்; நோய் தீர்ந்து விட்டது' என்கிறோம்.
அது சாமியாரின் மகத்துவமல்ல; விபூதியின் மகத்துவம்.
நோய் வரக்கூடாது.
வந்த பின் என்ன செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் சொல்ல வேண்டியது.
வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதே நான் சொல்ல வேண்டியது.
முதலில் நடக்கப் பழகுங்கள்.
திருமலைக்குப் போனாலும் சரி; பழனிக்குப் போனாலும் சரி; நடந்தே மலை மீது ஏறுங்கள்.
`கார் போகுமா? விஞ்ச் கிடைக்குமா?' என்று கேள்வி கேட்காதீர்கள். நடக்க இயலாதவர்கள் அவற்றிலே போகட்டும்.
நடக்கக் கூடியவர்கள் நடந்து செல்லுங்கள்.
ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நமக்குக் கிடைத்த சுப்ரீம் டாக்டர், ஆண்டவனே.
இளைஞர்கள் எல்லாம் கோயில்களில் அங்கப் பிரதட்சணம் செய்ய வேண்டும்.
அதை விடவா ஒரு உடற்பயிற்சி யோகாசனம் உண்டு?
காவடி எடுத்து ஆடுகிறார்களே, ஏன்?
அவர்களுக்குப் பரத நாட்டியம் தெரியாது; உடம்பில் சகல அம்சங்களும் வளைவதில் ஒரு ஆரோக்கியம்.
உடம்பையும், ஆன்மாவையும் ஒரு சேரக் கவனிக்கும் மதம் இந்து மதம்.
அது நீராடச் சொல்லுவது, உடம்பைக் காக்க.
தெய்வத்தை நம்பச் சொல்லுவது, ஆன்மாவைக் காக்க.
ஆன்மாவுக்குள்ளே, ஆண்டவன் சுடர்விட்டுப் பிரகாசிக்கிறான்.
இருபது வயதில் இருந்தே ஒருவனுக்குக் கோயிலுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.
பணக்காரன் உடம்பு நாளுக்கு நாள் பலவீனமடைகிறது.
பரதேசியின் உடம்போ, எப்போதும் பாதுகாக்கப்படுகிறது.
பல வீட்டுச் சோறு செய்கிற வேலையை, திட்டமிட்ட சாப்பாடு செய்ய முடியவில்லை.
காரணம் என்ன?
பரதேசியின் உடம்பு நடக்கிறது; ஆன்மா ஆண்டவனை நினைக்கிறது.
பணக்காரன் உட்கார்ந்து உட்கார்ந்து கணக்கு எழுதுகிறான்; ஒப்புக்காகக் கோயிலுக்குப் போகிறான்.
மொத்தத்தில் நம்மிடமுள்ளது இரண்டே விஷயங்கள் தான்:
ஒன்று தேகம்.
இன்னொன்று ஆன்மா.
வடமொழியில் `புருஷன்' என்றால் ஆன்மா.
நீ உன் மனைவிக்கு மட்டுமே புருஷனல்ல; உன் தேகத்துக்கும் புருஷன்.
தேகம் என்று மனைவியையும், `ஆன்மா' என்ற புருஷனையும் ரோகம் இல்லாமல் காப்பாற்றுவது, இந்து மதம் ஒன்றே!