Friday, September 6, 2013

ஆஸ்துமாவுக்கு மாற்று மருந்து உட்கொள்ளலாமா?

ஆஸ்துமாவுக்கு மாற்று மருந்து உட்கொள்ளலாமா?

E_1376804003
"ஆஸ்துமாவுக்கு, அலோபதி மருந்துடன், மாற்று சிகிச்சையிலான மருந்தை சாப்பிடலாமா?' என, பலரும் என்னிடம் கேட்கின்றனர். இதற்கு, "சாப்பிடலாம்' எனச் சொல்வேன். அதே சமயம், அலோபதி மருந்தை நிறுத்தி விட்டு, மாற்று மருந்தை மட்டும் சாப்பிடலாமா எனக் கேட்டால், அந்தப் பரிந்துரையை நான் ஏற்க மாட்டேன்.
பிரதான மருந்தைப் பரிந்துரைக்கும், அலோபதி சிகிச்சை முறை என்பது வேறு; அதோடு கூடிய, துணை சிகிச்சை முறை என்பது வேறு; மாற்று மருத்துவ முறை என்பது வேறு. அவற்றை விளக்க, நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஒரு நோயை குணமாக்க, அலோபதி மருந்து சாப்பிடும்போது, நோயின் தீவிரத்தைக் குறைக்கவோ, உபாதையிலிருந்து விடுபடவோ, துணை சிகிச்சை முறைகள் பரிந்துரைக்கப்படலாம்.
ஆஸ்துமாவைக் குணப்படுத்த, பல மருத்துவ முறைகள் உள்ளன என்று கூறப்படுகிறது. ஆனால், அதன் பிரதான சிகிச்சை முறை, ஸ்டிராய்டு மருந்து பொடியை வாயால் உறிஞ்சி, நுரையீரலுக்கு நேராகச் செலுத்தும், "இன்ஹேலர்' முறை தான்.
மற்ற துணை சிகிச்சைகளான, பிராணாயாமம், நீராவி பிடித்தல் ஆகியவையும் உண்டு. ஸ்டிராய்டு பயன்படுத்தியபடியே, இந்த துணை சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம்; தவறில்லை. ஆனால், "இன்ஹேலர்' பயன்பாட்டை முற்றிலும் நிறுத்தி விட்டு, துணை சிகிச்சையில் மட்டும் ஈடுபடுவது, சரியான ஆலோசனை அல்ல; நோயும் குணமாகாது.
ஆஸ்துமாவை குணப்படுத்த, ஓமியோபதி, நேச்சுரோபதி உட்பட, பல சிகிச்சை முறைகள் உண்டு என, கூறப்படுகிறது. இவை அனைத்துமே, பிரதான மருந்துகளுடனேயே, எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்; தனியாக எடுத்துக் கொண்டால் பலன் இருக்காது.
மாற்று சிகிச்சை முறைகளில், சிலவற்றுக்கு மட்டும், நோய்கள் குணமாவது குறித்து, அறிவியல் ரீதியான ஆதாரங்கள் உள்ளன; பெரும்பாலானவற்றுக்கு, அடிப்படை ஆதாரங்கள் கிடையாது. உதாரணமாக, யோக சிகிச்சை முறையால், ஆஸ்துமாவை குணப்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.
ஆனால், அலோபதி மருந்து உட்கொண்டு, துணை சிகிச்சையாக, யோக பயிற்சியை மேற்கொண்டால் மட்டுமே, ஆஸ்துமாவிலிருந்து மீளலாம். ஆஸ்துமாவின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே, மருந்து ஏதும் உட்கொள்ளாமல், யோகா சிகிச்சையில், பலன் கிடைக்கக் கூடும். மற்ற நிலைகளில், யோகப் பயிற்சியை மட்டும் மேற்கொள்வது, பலன் தராது.
சில ஆண்டுகளுக்கு முன் வரை, ஆஸ்துமாவுக்கு, துணை மற்றும் மாற்று சிகிச்சைகளை யாரும் மேற்கொண்டதில்லை. ஓமியோபதி, அக்யூபங்சர், ஆஸ்டியோபதி மற்றும் சில சிகிச்சை முறைகள், நோய்க்கான அறிகுறியையும், உபாதையையும் ஓரளவு குறைக்கலாம்;
அலோபதி மருந்துடன் சேர்த்து பயன்படுத்தும்போது, பெரும்பாலான அளவு, உபாதைகளைக் குறைக்கும். ஆஸ்துமா தொடர்பான, துணை சிகிச்சை முறை, மாற்று சிகிச்சை முறை பற்றியும், அவற்றின் பலன் எத்தகையதாக இருக்கும் என்பதை பற்றியும் முற்றிலும் உணர்ந்த பிறகே, அவற்றை மேற்கொள்வது பற்றி, சிந்திக்க வேண்டும்.
அலோபதி டாக்டரின் பரிந்துரை இல்லாமல், நீங்களாகவே, அவர் கூறிய மருந்தை உட்கொள்வதை நிறுத்தி, துணை சிகிச்சை முறையையோ, மாற்று சிகிச்சை முறையையோ மேற்கொண்டு, நோயே குணமாகவில்லை எனக் கூறுவது, ஏற்புடையது அல்ல.
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொள்ளா விட்டால், உயிரையே பறித்து விடும். எனவே, ஆஸ்துமாவுக்கான சிகிச்சை மேற்கொள்வது குறித்து, உங்கள் அறிவைப் பயன்படுத்துங்கள்; பிரதான சிகிச்சை முறையைத் தவிர்த்து, மாற்று சிகிச்சையோ, துணை சிகிச்சையோ மட்டும் மேற்கொள்வதை தவிருங்கள்.
டாக்டர் ஆர்.நரசிம்மன்,
தலைவர், ரெஸ்பிரேட்டரி ரிசர்ச் பவுண்டேஷன் ஆப் இந்தியா.
நுரையீரல் சிகிச்சை மூத்த நிபுணர்,
அப்பல்லோ மருத்துவமனை, சென்னை.
நன்றி- தினமலர்

No comments: