Saturday, June 2, 2012

பான் கார்ட்

நம்மில் பலரிடமும் பான் கார்ட் உள்ளது (Permanent Account Number-PAN). ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் தெரிவதில்லை. பான் கார்ட் பற்றிய சில விளக்கங்கள் இதோ...

பான் கார்ட் என்பது 10 இலக்க எழுத்து-எண் கொண்ட அட்டை. இதை வழங்குவது வருமான வரித்துறை. இந்த அட்டை கோரி விண்ணப்பித்து இதைப் பெறலாம். சிலருக்கு வருமான வரித்துறை தானாகவே இந்த அட்டையை வழங்கும்.

ஒரு தனிப்பட்ட நபர் வரி செலுத்தினாரா, வரிப் பிடித்தம் நடந்ததா, அவரது வங்கிக் கணக்கில் நடந்த பரிமாற்றம் உள்ளிட்ட விவரங்களை வருமான வரித்துறை பெற பான் கார்ட் உதவுகிறது.

பான் கார்டில் உள்ள எண்-எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு குறியீடாகும். அதைத் தெரிந்து கொள்வோம். உதாரணத்துக்கு பான் கார்ட் எண் AFZPK7190K என்று வைத்துக் கொள்வோம்.

முதல் 3 எழுத்துக்கள் வரிசை எண்களாகும். 4வது எழுத்து தனிப்பட்ட நபரின் கார்டா அல்லது ஒரு தொழில் நிறுவனத்தின் கார்டா என்பதை குறிக்கிறது.

“P” என்றால் அது தனிப்பட்ட நபருடையது. “F” என்றால் Firm, “C” என்றால் Company, “T” என்றால் டிரஸ்ட் (அறக்கட்டளையுடையது) என்று பொருள்.

5வது எழுத்து பான் அட்டை வைத்திருப்பவரின் கடைசி பெயரின் முதல் எழுத்தாகும்.

அடுத்து வரும் எண்கள் வரிசை எண்களாகும். இது 0001ல் ஆரம்பித்து 9999 வரை செல்லும். கடைசி எழுத்தும் வரிசை எண் தொடர்புடையது தான்.

பான் கார்ட் வைத்திருப்பது கட்டாயமா?

ஆமாம். பான் கார்ட் மிக மிக அவசியமானதே. வங்கியில் பணப் பரிமாற்றத்துக்கும், வருமான வரித்துறைக்கு நமது கணக்குகளை சமர்பிக்கவும் இது கட்டாயமாகும்.



எப்படி இதைப் பெறுவது?

வருமான வரித்துறையின் Form 49 விண்ணப்பத்தில் இதைக் கோரி விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்தை www.incometaxindia.gov.in, www.utiisl.co.in or tin-nsdl.com ஆகிய இணையத்தளங்களின் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

மேலும் வருமான வரித்துறையின் ஐடி பான் சர்வீசஸ் மையத்திலும், டிஐஎன் மையங்களிலும் இதைப் பெறலாம்.

உங்களிடம் பான் கார்ட் இருந்து அது குறித்த மேலும் விவரங்களைப் பெற
https://incometaxindiaefiling.gov.in/portal/knowpan.do என்ற இணையத்தளத்தை நாடலாம்.

இந்திய குடிமகன்கள் தான் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு கீழ்கண்ட அடையாள சான்றிதழ்களில் சில அவசியம்.

1. பள்ளி டிசி
2. பிளஸ் டூ சான்றிதழ்
3. கல்லூரி் சான்றிதழ்
4. வங்கிக் கணக்கு விவரம்
5. கிரடிட் கார்ட் ஸ்டேட்மென்ட்
6. வாட்டர் பில்
7. ரேசன் கார்ட்
8. வீட்டு வரி ரசீது
9. பாஸ்போர்ட்
10. வாக்காளர் அட்டை
11. ஓட்டுனர் உரிமம்
12. எம்பி அல்லது எம்எல்ஏ அல்லது கவுன்சிலர் அல்லது கெஜட்டட் அதிகாரியிடம் பெறப்பட்ட Certificate of identity கடிதம்

அதே போல விலாசம் தொடர்பாக கீழ்கண்ட சான்றிதழ்களில் சிலவும் அவசியம்.

1. மின் கட்டண ரசீது
2. தொலைபேசி கட்டண ரசீது
3. வங்கிக் கணக்கு விவரம்
4. வீட்டு வாடகை ரசீது
5. பணியாற்றும் நிறுவனத்திடம் பெறும் கடிதம்
6. பாஸ்போர்ட்
7. வாக்காளர் அடையாள அட்டை
8. வீட்டு வரி ரசீது
9. ஓட்டுனர் உரிமம்
10. ரேசன் கார்டு
11. எம்பி அல்லது எம்எல்ஏ அல்லது கவுன்சிலர் அல்லது கெஜட்டட் அதிகாரியிடம் பெறப்பட்ட Certificate of identity கடிதம்

விண்ணப்பிப்பவர் 18 வயதுக்குக் குறைவான மைனராக இருந்தால், அவரது பெற்றோர் அல்லது கார்டியனின் சான்றிதழ்களே போதுமானவை.

No comments: