`மூன்று
வேளையும் நன்றாக மூக்குப் பிடிக்க சாப்பிட வேண்டும். அதேசமயம் நடிகர்
சூர்யா போல சிக்ஸ் பேக் உடலும் வேண்டும். இதற்கு எதாவது சுலபமான வழி
இருக்கிறதா?' என்று கேட்பதைப் போலத்தான் இருக்கிறது இன்றைய மக்கள் பலரின்
செயல்பாடுகள். விளைவு, கனவில் மட்டும்தான் சிக்ஸ் பேக் உடலமைப்பு எல்லாம்.
நிஜத்தில் தொப்பையும் தொந்தியும்தான்.
உணவுக்
கட்டுப்பாடு இல்லாமை, உடற்பயிற்சி செய்யாமை மற்றும் மிகவும் குறைவான
உடலுழைப்பு போன்றவை உடல்பருமனுக்கான முக்கியமான காரணங்களுள் சில. இவற்றில்
உடற்பயிற்சி மற்றும் உடலுழைப்பு இல்லாமைக்கு சோம்பேறித்தனம் போன்ற வாழ்க்கை
முறை சார்ந்த செயல்பாடுகள் கூட காரணமாக இருக்கலாம். ஆனால், உணவுக்
கட்டுப்பாடு இல்லாமைக்கு மரபியல் சார்ந்த காரணங்கள் இருக்கலாம் என்றும்,
இதன் காரணமாக உடல் பருமன் ஏற்படலாம் என்றும் இதுவரை சந்தேகிக்கப்பட்டது.
`பி.டி.என்.எப்'
எனும் ஒரு குறிப்பிட்ட மரபணுவில் நிகழும் `மியூட்டேஷன்' எனும் மரபியல்
மாற்றம் காரணமாக, உடலில் இருந்து மூளைக்கு செல்லும் `பசியை
கட்டுப்படுத்தும்' சமிக்ஞைகள் மூளைக்கு சரியாக செல்வதில்லை. இதனால் பசி
அதிகமாகி, கட்டுப்பாடு இல்லாமல் உணவு உண்ணப்படுவதால் உடல் பருமன்
ஏற்படுகிறது என்னும் ஓர் ஆச்சரியமான தகவலை முன்வைக்கிறது அமெரிக்காவின்
சமீபத்திய ஆய்வு ஒன்று.
எலிகள்
மீதான இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வுக்குழுவின் தலைமை ஆய்வாளர் பாவோஜி சு,
பி.டி.என்.எப் மரபணுவை பல ஆண்டு காலமாக ஆய்வு செய்து வருகிறார்.
நரம்புகளுக்கு இடையே வேதியியல் தகவல் பரிமாற்றம் செய்யும் நுண்ணிய
நரம்பிழைகளுக்கு சினாப்ஸ் என்று பெயர். சினாப்ஸ்கள் உருவாகி முதிர்ச்சி
அடைவதற்கு பி.டி.என்.எப் மரபணுவின் செயல்பாடு மிகவும் அவசியம்.
ஆனால்
பி.டி.என்.எப் மரபணுவில் மியூட்டேஷன் நிகழும்போது, அதில் இருந்து
உருவாகும் புரதங்கள் ஒரு நரம்பின் உடல் பகுதியில் மட்டுமே உற்பத்தி
யாகின்றன. மரம் போன்று (நரம்பு) கிளைகள் கொண்ட `டெண்ட்ரைட்' எனும் நரம்பு பகுதியில் பி.டி.என்.எப் புரதம் உற்பத்தியாவதில்லை. இதனால், நரம்பிலிருந்து உருவாகும் சினாப்ஸ்கள் முதிர்ச்சியடைவதில்லை. இதன் விளைவாக எலிகளின் கற்கும் திறனும், நினைவுத் திறனும் பாதிப்படைகின்றன என்பது தெரியவந்தது.
யாகின்றன. மரம் போன்று (நரம்பு) கிளைகள் கொண்ட `டெண்ட்ரைட்' எனும் நரம்பு பகுதியில் பி.டி.என்.எப் புரதம் உற்பத்தியாவதில்லை. இதனால், நரம்பிலிருந்து உருவாகும் சினாப்ஸ்கள் முதிர்ச்சியடைவதில்லை. இதன் விளைவாக எலிகளின் கற்கும் திறனும், நினைவுத் திறனும் பாதிப்படைகின்றன என்பது தெரியவந்தது.
முக்கியமாக,
பி.டி.என்.எப் மியூட்டேஷன் உள்ள எலிகள் மிகவும் மோசமான உடல்பருமனால்
பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதற்கான காரணத்தை கண்டறிய சில
பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், ஒருவர் போதுமான உணவு உண்ட பிறகு,
`தேவையான உணவு கிடைத்துவிட்டது. உண்பதை நிறுத்து' என உடலைக் கட்டளை இடும்
வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள, லெப்டின் மற்றும் இன்சுலின் எனும் இருவகையான
ஹார்மோன்கள் பி.டி.என்.எப் உற்பத்தியை தூண்டுவது தெரியவந்தது.
மேலும்,
இவ்விரு ஹார்மோன்கள் தங்களின் வேதி யியல் சமிக்ஞைகளை ஒரு நரம்பிலிருந்து
மற்றொரு நரம்புக்கு கடத்திச் செல்லவே, பி.டி.என்.எப் புரத உற்பத்தியை
தூண்டுகின்றன என்பதும் கண்டறியப்பட்டது.
ஆனால்,
பி.டி.என்.எப் மரபணுவில் ஏற்படும் மியூட்டேஷன் காரணமாக, லெப்டின் மற்றும்
இன்சுலின் ஹார்மோன்கள் இடும் கட்டளை (வேதி யியல் சமிக்ஞை), உணவு உண்ட
திருப்தியை உடலுக்குச் சொல்லும் மூளைப் பகுதியான ஹைப்போதலாமசுக்கு சரியாக
சென்றடைவது இல்லை. இதன் விளைவாக உண்பது மேலும் தொடர்ந்து கொண்டே
இருக்கிறது. இதனால் உடல் பருமன் ஏற்படுகிறது.
ஆக,
பி.டி.என்.எப் மரபணுவில் ஒரு பிரச்சினை ஏற்பட்டால், நரம்புகள்
தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்ய முடியாது. இதனால் லெப்டின் மற்றும்
இன்சுலின் ஹார்மோன் தகவல் பரிமாற்றமும் தடைபடுகிறது. இவற்றின் காரணமாக பசி
உணர்வு கட்டுப்படுத்தப்படுவது இல்லை. இது உடல் பருமனில் சென்று முடிகிறது!
இப்படித்தான், உடல் பருமனுக்கு பி.டி.என்.எப் காரணமாகிறது என்கிறது ஆய்வாளர் பாவோஜி சுவின் ஆய்வு.
சரி,
ஒருவழியாக பி.டி.என்.எப் மரபணு எப்படி உடல் பருமனை ஏற்படுத்துகிறது என்பதை
கண்டுபிடித்தாயிற்று. இனி பி.டி.என்.எப் மரபணுவினால் ஏற்படும் நரம்பு
தகவல் பரிமாற்ற கோளாறினை எப்படி சரி செய்வது என்பதை கண்டறிய வேண்டும்.
இதற்கான
ஒரு வழி, அடினோ வைரஸ் அடிப்படையிலான ஜீன் தெரபி மூலம் பி.டி.என்.எப்
புரதத்தை உடலில் உற்பத்தி செய்வது. இந்த வகையான ஜீன் தெரபி பாதுகாப்பானது
என்று நிரூபிக்கப்பட்டு இருந்தாலும், மூளையிலுள்ள ரத்த மூளை இடைவெளியை
கடந்து ஜீன் தெரபியை மேற்கொள்வது என்பது மிகவும் கடினமானது. இது தவிர,
மூளையிலுள்ள ஹைப்போதலாமஸ் பகுதியில், பி.டி.என்.எப் புரத உற்பத்தியை
தூண்டும் திறனுள்ள ஒரு மருந்தை கண்டறிவது மற்றொரு யுக்தி என்கிறார்
ஆய்வாளர் சு.
இம்மாதிரியான
மேலும் பல யுக்திகளை கண்டறிந்து, கட்டுப்பாடின்றி உணவு உண்பதால் ஏற்படும்
உடல் பருமனுக்கான மரபணு சிகிச்சையை, பாவோஜி சு போன்ற விஞ்ஞானிகள் விரைவில்
கண்டுபிடித்துவிடுவார்கள் என்று நம்புவோம்.
முனைவர் பத்மஹரி
முனைவர் பத்மஹரி
No comments:
Post a Comment