சிறியதாக
இருந்தாலும் இதயத்துக்கு நன்மை பயக்கக்கூடியது நெல்லிக்கனி. அதியமான் இதை
உணர்ந்தே நீண்டநாள் வாழத் தனக்கு அற்புதமான நெல்லிக்கனி கிடைத்தும்,
பெருந்தன்மையோடு அதை அவ்வைப் பிராட்டிக்கு அளித்து அவரை உண்ணச் செய்தான்.
இதயத்துக்கு இனிய அமுதமாக விளங்கும் நெல்லிக்கனியைப் பற்றி பல உண்மைகள்
மறைந்துள்ளன.
நெல்லிக்கனியை இந்தியில் `ஆம்லா' என்கிறார்கள். இதன் தாவரவியல் பெயர் `எம்பிலிகா அபிசினாலிஸ்'.
முதிர்ந்த
நெல்லிக்கனி பச்சை, மஞ்சள் கலந்த நிறத்தில் பளபளப்போடு ஆறு அழகிய
துண்டுகள் அடங்கிய உருண்டைக் கனியாகக் காட்சியளிக்கும். சற்றுத் துவர்ப்பாக
இருந்தாலும் இதன் சதைப்பற்றைச் சுவைத்துச் சாப்பிட்டதும் ஒரு குவளை
தண்ணீர் அருந்தினால் இதன் இன்சுவையை உணரலாம்.
இதயக்
கோளாறு உள்ளவர்கள் அலோபதி இதயநோய் நிபுணர்கள் கூறும் அறிவுரைகளைக் கவனிக்க
வேண்டும். நெல்லிக்கனிக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் கூறும்
உண்மைகள் நமக்கு வியப்பை அளிக்கும்.
நெல்லிக்கனிச்
சாற்றில் `வைட்டமின் சி' சத்து அதிகம். அதாவது, ஆரஞ்சு பழத்தில் இருப்பதை
விட 20 மடங்கு. ஒரு சிறு நெல்லிக்கனியை உண்பது இரண்டு ஆரஞ்சுப் பழங்களைச்
சாப்பிடுவதற்குச் சமம். தொற்றுநோய் தடுப்புச் சக்தியைப் பெற நெல்லிக்கனிச்
சாற்றைப் பருகலாம். கொழுப்புப் பொருளைக் கரைக்கும் தனித்தன்மையும் இதற்கு
உண்டு என்று தெரிவிக்கப்படுகிறது. ரத்தம் சீராகப் பாய்வதைத் தடுக்கும்
கொழுப்புப் பொருளை நெல்லிக்கனிச் சாறு கரைத்துவிடுவதால் இதயத்துக்குப் பலம்
சேர்ப்பதாக இது அமைகிறது.
ரத்த
சோகையைக் குணப்படுத்தும் அருங்கனியான நெல்லி, ஆறாத ரணத்தை ஆற்றுவதுடன்,
எலும்பு முறிவைச் சீராக்கி, குடல் ரணத்தையும் குணப்படுத்தும்.
தாய்ப்பால்
சுரக்க நெல்லிக்கனி வகை செய்கிறது. அதன் அமிலச்சத்து மலச்சிக்கலை
நீக்கும். `ஹெமரேஜ்' என்ற ரத்தப் போக்குக்கும், அஜீரணத்தால் ஏற்படும்
வயிற்றுப் போக்குக்கும் ஏற்ற கனி இது.
ரத்த சோகை, மஞ்சள் காமாலை, உணவில் வெறுப்பு நிலை, தீராத இருமல் ஆகியவற்றுக்கு நெல்லிக்கனி விடை கொடுக்கும்.
திரிபலா
சூரணத்துக்கு நெல்லிக்கனியை அவசியம் உபயோகிக்க வேண்டும். கல்லீரலைப்
பலப்படுத்திச் சரிவர இயங்கச் செய்யும் சக்தி பெற்றது நெல்லி.
ஆசியாவில் அதிகம் விளையும் நெல்லிக்கனியின் மகத்துவத்தை மேலை நாட்டினரும் உணர்ந்து மருத்துவத் துறையில் பயன்படுத்துகிறார்கள்.
இளநரையைக்
குணப்படுத்தும் அற்புத சக்தி நெல்லிக்கனிக்கு இருக்கிறது. கூந்தல் தைலம்,
ஷாம்பூ ஆகியவற்றைத் தயாரிப்பதற்கும் இது பயன்படுகிறது. அச்சுத் துறைக்கான
மை வகைகள் தயாரிக்கவும், `ஹேர் டை' தயாரிக்கவும் நெல்லி ஏற்றது.
மருத்துவர்கள் ஆஸ்துமா நோயைக் குணப்படுத்த இதன் விதைகளைப் பொடி செய்து உண்ணச் சொல்கிறார்கள்.
நெல்லியின்
கனியும், கொட்டையும் பயன்படுவதோடு, பட்டையையும், இலையையும் தோலைப்
பதனிடும் தொழிற்சாலைகளும் அதிகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன.
நெல்லிக்கனியை
இந்து மதத்தினர் மிகவும் போற்றுகிறார்கள். நெல்லி மரத்தை வழிபடுவதும்
உண்டு. அக்சய நவமி அன்று வன போஜனம் செய்பவர்கள் நெல்லி மரத்தின் அடியில்
அமர்ந்து கூட்டமாக உணவு உண்பதைப் புனிதமாகக் கருதுகிறார்கள். இதற்கும்
மேலாக, முதல்நாள் உண்ணா நோன்பு இருந்தவர்கள், மறுநாள் விரதம் முடித்து உணவு
உண்ணத் தொடங்கும்போது முதலாவதாக நெல்லிக்கனியையோ அல்லது உலர்ந்த
நெல்லிக்கனியையோ அரைத்து மோரில் சேர்த்துப் பருகிய பின்பே சாப்பிடத்
தொடங்குகிறார்கள். நெல்லிக்கனி உடல் ஆரோக்கியம் தரும் ஊறுகாயாகவும்,
உலர்த்தி வைத்தும் பயன்படுத்த ஏற்றது.
No comments:
Post a Comment