Monday, June 11, 2012

உடல் மொழி! உலக மொழி!

உடல் மொழி! உலக மொழி!


லகம் முழுவதும் எவ்வளவோ மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால் யோசித்துப் பார்த்தால், `பாடி லாங்வேஜ்' எனப்படும் உடல் மொழிதான் உலகத்திற்கு பொதுவான மொழி.
ஒரு வெளிநாட்டுக்காரர் நம்மூர் அசுத்தத்தைப் பார்த்து அருவருப்படைகிறார் என்றால் அதை அவரது முகச்சுளிப்பே காட்டிவிடும். அதுதான் உடல் மொழி.
வேலைக்கான நேர்முகத்தேர்வில் வெல்வது முதல், மனங் கவர்ந்த காதலன், காதலியை ஈர்ப்பது வரை எல்லாவற்றிலும் உடல் மொழிக்கு முக்கியப் பங்குண்டு என்கிறார், உடல் மொழி நிபுணரான ஆலன் பீஸ்.
ஆலன் கூறும் சில ஆலோசனைகள்...

காதலியை கவர:

காதலியைக் கவர தோற்றம் முக்கியம். இதை வைத்துத்தான் ஒரு பெண் உங்களை சாதிக்கக்கூடியவரா, `ஏனோதானோ'வா என்று முடிவு செய்கிறாள்.
கால்களை அகட்டிய நிலையில் அமருங்கள். அது உங்கள் ஆண்மைத்தன்மையைக் காட்டும். மூன்று வினாடி நேரத்துக்கு ஒரு முறை உங்கள் முழங்கையைத் தொடுங்கள். அது உங்களை நோக்கி மற்றவர்களை ஈர்க்கவைக்கும்.

காதலனை ஈர்க்க:

உங்கள் தோற்றத்தில் கவனம் தேவை. உங்களின் உடை, உடம்பு, ஒப்பனை எல்லாமே கனகச்சிதமாக இருக்கட்டும்.
விழியோடு விழி பேசுங்கள். `அவர்' உங்களைப் பார்க்கும்போது அந்தப்புறமாகப் பார்க்காதீர்கள். உங்கள் விழிகள் அவருக்குள் ஒரு மாயாஜாலத்தையே நிகழ்த்தும்.
பேசிக்கொண்டிருக்கும்போதோ, பார்த்துக்கொண்டிருக்கும்போதோ உங்கள் விரல்களைப் பிணைக்காதீர்கள், கைகளைக் குறுக்காகக் கட்டாதீர்கள்.
பேசும்போது உங்கள் மணிக்கட்டின் உட்பகுதியைக் காட்டியபடி பேசுங்கள். அது பணிந்து போவதற்கான அடையாளம்.
ஓரளவு பழக்கமானவராக இருந்தால் அவரது கையின் கீழ்ப்பகுதியைத் தொடுங்கள். அது நெருக்கத்தின் அடையாளம். ஆண்கள் ரசிக்கும் விஷயம்.

இன்டர்வியூவில்:

இன்டர்வியூவிற்கு செல்லும் இடத்தில் உங்கள் வாகனத்தை நிறுத்தும்போதே தன்னம்பிக்கைத் தோற்றம் காட்டுங்கள். யாராவது உங்களைக் கவனித்துக்கொண்டிருக்கலாம். பலநேரங்களில், `பார்க்கிங்' பகுதியில் இருந்தே இன்டர்வியூ தொடங்கிவிடுகிறது.
வரவேற்பறையில் உட்கார வேண்டாம். நின்று கொண்டிருங்கள். அது உங்களைத் தன்னம்பிக்கையானவராகக் காட்டும்.
நேர்முகத்துக்காக காத்திருக்கும்போது கையில் `லேப்டாப்' மாதிரி ஏதாவது ஒன்றில் ஆழ்ந்திருங்கள். நேர்முகத்துக்கு அழைக்கப்படுகையில், `இதோ ஒரு நொடியில் முடிச்சுடறேன்' என்று அணைத்துவிட்டு எழுந்து செல்லுங்கள். சும்மா `தேமே' என்று இருக்க வேண்டாம்.
நேர்முகத் தேர்வு அறை நோக்கிச் செல்கையில் ஒரே சீரான வேகத்தில் நடங்கள். வேகம் சீரற்று இருப்பதாகத் தோன்றினால், இன்டர்வியூ அறைக்கு முன் ஒரு கணம் நின்று நிதானப்படுத்திக் கொள்ளுங்கள்.
நேர்முகத் தேர்வாளர்களுடன் சரியான விதத்தில் கைகுலுக்குங்கள். அவர்களை நெருங்கும்போதே குலுக்குவதற்காகக் கையை உயர்த்துங்கள். தள்ளுவதைப் போல கையை நீட்டாதீர்கள். எதிராளியின் அதே அழுத்தத்தைக் கொடுங்கள். கையை நேரே வைத்திருங்கள். (கை கீழ்ப்புறமாகப் பார்த்த மாதிரி இருப்பது ஆதிக்கத்தையும், மேல்புறமாகப் பார்த்தவாறு இருப்பது தாழ்மையையும் காட்டும்.)
உங்கள் நேர்முகத் தேர்வாளரை 45 டிகிரி கோணத்தில் பாருங்கள். நேருக்கு நேராகப் பார்ப்பது, மோதல் பாவத்தைக் காட்டும்.
கைகளைப் பற்றிக் கொண்டிருப்பது, உங்களின் பாதுகாப்பின்மையை எடுத்துக்காட்டும். கைகளை குறுக்காகப் போடுவது, நீங்கள் அமுக்கமானவர் என்பதன் அடையாளம். இரு கை விரல்களையும் ஒன்றோடு ஒன்று அழுத்தியவாறு பேசலாம். உள்ளங்கையை மேலே காட்டியவாறு பேசுவது, நம்பிக்கையை உணர்த்தும்.

பொய் அடையாளம்:

ஒருவர் பொய் சொல்வதை சில அடையாளங்கள் மூலம் கண்டுபிடித்துவிடலாம் என்கிறார் ஆலன்.
அவை...
பொய் சொல்பவர் தனது முகத்தைத் தொடுவார்.
ரத்தம் மூக்கை நோக்கிப் பாயும் என்பதால், மூக்கு பெரிதாகும். அதை அடிக்கடி தொட ஆரம்பிப்பார்.
`உண்மையைச் சொல்லணும்னா...' என்று ஒருவர் ஆரம்பித்தால், பொய் சொல்லப் போகிறார் என்று அர்த்தம்.
ஆண்களுடன் ஒப்பிடும்போது பொய்யைக் கண்டுபிடிப்பதில் பெண்கள் கில்லாடிகள். (பெண்கள்தானே தமது குழந்தைகளின் சமிக்ஞைகளை சரியாக அறிகிறார்கள்? எனவே தம் மனைவியிடம் பொய் சொல்ல முனையும் ஆண்கள், அந்த வேலையை போனில் வைத்துக்கொள்வது நல்லது!)
ஆலன் நிறைவாகக் கூறும் ஆலோசனை, புதியவர் ஒருவரைப் பற்றிய `பர்ஸ்ட் இம்ப்ரஷன்' 4 நிமிடங்களில் உருவாகிவிடுகிறது. பல வேளைகளில், பத்தே நொடிகளில் அந்த முடிவுக்கு வந்துவிட முடியும். எனவே அதற்குள் மற்றவர்களைக் கவர்ந்துவிட வேண்டும்.

No comments: