Saturday, June 30, 2012

விண்வெளியில் நிகழப் போகும் `மெகா’ மோதல்!


விண்வெளியில் நிகழப் போகும் `மெகா’ மோதல்!

நமது பூமி உள்ளிட்ட கிரகங்கள் அடங்கிய பால்வீதி மண்டலம், தனது அண்டை வீடான `ஆண்ட்ரமீடா கேலக்சி'யுடன் மோதப் போகிறது. இதனால் சூரியன் உள்பட நட்சத்திரங்கள் எல்லாம் அங்குமிங்கும் வீசியெறியப்படப் போகின்றன. பயப்படாதீர்கள், இதெல்லாம் நடப்பதற்கு 400 கோடி ஆண்டுகள் ஆகும்!
அமெரிக்காவின் பால்டிமோரில் உள்ள ஸ்பேஸ் டெலஸ்கோப் சயன்ஸ் இன்ஸ்டிட்யூட் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறும் தகவல் இது.
மேற்கண்ட இரு பிரபஞ்ச மண்டலங்களும் நேருக்கு நேராக மோதிக் கொண்டாலும், பூமியும், சூரியக் குடும்பமும் சேதம் அடையாது. மாறாக தற்போது இவை இருக்கும் இடங்களில் இருந்து இடப்பெயர்ச்சி அடையலாம். சூரியன் ஏதோ ஒரு மூலைக்கும், நட்சத்திரங்கள் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைக்கும் தூக்கியெறியப்பட அதிக வாய்ப்பில்லை என்றும் விண்வெளி விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
``பல நூறு கோடி ஆண்டுகளுக்குப் பின் விண்வெளியில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஊகமாகப் பேசப்பட்டு வந்தது. தற்போதுதான் நாம் ஒரு தெளிவான முடிவுக்கு வந்திருக்கிறோம்'' என்கிறார், மேற்கண்ட விண்வெளி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த சாங்மோ டோனி சோன்.
ஆண்ட்ரமீடா கேலக்சி, பால்வீதி மண்டலத்துடன் கடைசியில் மோதியபிறகு, மேலும் இருநூறு கோடி ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு மண்டலங்களும் இணைந்து ஒரே மண்டலமாகும் என்றும் சோன் கூறுகிறார்.
பால்வீதி மண்டலம், ஆண்ட்ரமீடா கேலக்சி இடையிலான நேருக்கு நேரான மோதல் எப்படியிருக்கும் என்பது குறித்த படங்களை `நாசா' வெளியிட்டிருக்கிறது.
இந்த விண்வெளித் தீபாவளியைக் காண நாம் இருக்கப் போவதில்லை என்பதுதான் வருத்தமாயிருக் கிறது!

No comments: