Wednesday, March 13, 2013

நவீன தொழில்நுட்பம்(பயிறுவகைகள்)

நவீன தொழில்நுட்பம்(பயிறுவகைகள்)

          பல்வேறு பயிர்களுக்கான நீர் மேலாண்மை: பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் வறட்சி காலங்களில் பயிர்களுக்கான நீர் மேலாண்மை பற்றிய ஆராய்ச்சி ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் விளைவாக தானிய பயிர்களில் நீர்மேலாண்மை ஆய்வு முடிவுகள் விவசாயிகளுக்கு பயனளிக்கக்கூடியவை.
நெய்பயிர்:
        சம்பா பருவத்தில் பயிரிடப்படும் நெல் ரகங்களுக்கு 1200 மி.மீ. நீர் தேவைப்படுகிறது. இத்தருணத்தில் நடுத்தர வயதுடைய ஐ.ஆர்.20ஐக் காட்டிலும் 20 நாட்கள் முன்பாகவே அறுவடைக்கு வரக்கூடிய ஆடுதுறை 39 ரகத்தினை பயிரிடுவதால் குறைந்த நீர் தேவையில் நிலையான விளைச்சல் பெறலாம். சேற்று உழவின்போது "டிராக்டர்' அல்லது "பவர் டில்லர்' கேஜ்வீல் கொண்டு உழுவதன் மூலம் 20 சதம் வரை நீர் நிலத்தடியில் சென்று வீணாவதைத் தடுக்கலாம். நெல்லுக்கு தொடர்ந்து நீர் பாய்வதைத் தவிர்த்து பாய்ச்சிய நீர் மறைந்தவுடன் 5 செ.மீ. உயரத்திற்கு நீர் பாய்ச்சுவது போதுமானது. இது 5 நாட்கள் இடைவெளியில் அமையும்.

நெல்லில் முக்கிய நீர்த்தேவை பருவங்களை தூர் பிடிக்கும் பருவம், புடைப்பருவம், பூக்கும் பருவம், பால் பிடிக்கும் பருவம் போன்ற பருவங்களில் நீர் பாய்ச்சத் தவறினால் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது.

திருந்திய நெல் சாகுபடியில் நீர் மேலாண்மை: 2-2.5 செ.மீ. உயரம் நீர் கட்டி பின் மண்ணின் மேல்பரப்பில் லேசான கீறல் வெடிப்புகள் தோன்றியபின் மறுபடியும் அதே அளவு நீர் கட்டுதல், மேலும் உருளும் களைக்கருவியைக் கொண்டு நட்டபிறகு 10-12 நாட்கள் இடைவெளியில் 2.5 செ.மீ. நீர் வைத்து நடவு வரிசைக்கு இடையே உபயோகித்தல், இலை வண்ண அட்டையையும் பயன்படுத்தி பயிருக்குத் தேவையான போது மட்டும் 2.5 செ.மீ. நீர் வைத்து மேலுரமாக தழைச்சதை இடுவது அவசியமானது.
சோளம்:
           இறவைச் சோளத்திற்கு 500 மி.மீ. வரை நீர் தேவையுள்ளது. தொடர் வெப்பநிலைக்கேற்றவாறு வளர்ச்சி, பூக்கம் நிலைகளில் கோடைக்காலத்தில் 13-15 நாட்களுக்கு ஒரு முறையும் முதிர்ச்சிப் பருவத்தில் சுமார் 10-12 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சுவதால் 20 விழுக்காடு வரை நீரைச் சேமிக்கலாம். 4-5 இலைப்பருவம், பூக்கும்பருவம், மணி பிடிக்கும் பருவம் ஆகியவை நீர் தேவைப்பருவங்களாகும். ஊடுபயிராக பயறு வகைப் பயிர்களை பயிரிடுவதன் மூலம் நீர் பயன்படுத்தும் திறனை அதிகப்படுத்தலாம். மேலும் மண்ணிலிருந்து நேரடியாக ஆவியாகும் நீரின் அளவை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.
மக்காச் சோளம்:
       மக்காச் சோளத்திற்கு அதிகப்படியாக சுமார் 550 மி.மீ. நீர் தேவைப்படும். தட்பவெப்ப நிலைக்கேற்ப வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். முழங்கால் உயரம் பயிர்ப்பருவம், பூ வெளிவரும் பருவம், முடி பிடிக்கும்; முதிர்ச்சிப்பருவம் பயிரின் முக்கிய நீர்த்தேவைப் பருவங்களாகும்.
கம்பு:
    கம்பிற்கு 400 மி.மீ. நீர் தேவைப்படுகிறது. தட்பவெப்ப நிலைக்கேற்ப 10-12 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். தூர் பிடிக்கும் பருவம், பூக்கும் பருவம், கதிர் முற்றும் பருவம் ஆகியன முக்கிய நீர்த்தேவைப் பருவங்களாகும்.
கேழ்வரகு:
                 பயிரின் மொத்த நீர்த் தேவை 500 மி.மீ. ஆகும். வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சுவதன் மூலம் விளைச்சல் பாதிப்பில்லாமல் நீரை சிக்கனப்படுத்தலாம். பூக்கும் பருவம், கதிர் பிடிக்கும் பருவம் ஆகியன முக்கிய நீர்த்தேவை பருவங்களாகும்.
பயறு வகைகள்:
            குறுகிய வயதுடைய உளுந்து, பாசிப்பயறு ஆகியவற்றிற்கு 350 மி.மீ. வரை நீர் தேவைப்படுகிறது. ஆனால் சோயா மொச்சைக்கு மட்டும் 450 மி.மீ. நீர் வேண்டும். விதைப்பு, பூப்பு, காய் பிடிக்கும் பருவங்களில் நீர் பாய்ச்ச வேண்டும். பூக்கும் பருவம் பயிரின் முக்கிய நீர்த்தேவைப்பருவமாகும். (தகவல்: முனைவர் மு.முகமது யாசின், முனைவர் வெ.கி.துரைசாமி, வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பவானிசாகர்-638 451, போன்: 04295-240 244) -டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்
நன்றி:தினமலர்

முலாம் பழச் சாகுபடியில் கூடுதல் மகசூல்!

முலாம் பழச் சாகுபடியில் கூடுதல் மகசூல்!

        தோட்டக்கலை பயிர்கள் சாகுபடிக்கு ஏற்ற தட்பவெப்ப நிலை உள்ள பகுதிகளில் மா, வாழை போன்று முலாம் பழம் சாகுபடியிலும் நல்ல மகசூல் பெறலாம் என்று பாப்பாரப்பட்டியில் உள்ள வேளாண்மை அறிவியல் இணையத்தின் வேளாண் அலுவலர்கள் கூறினர்.

           இதுகுறித்து அவர்கள் கூறியது: தருமபுரி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்ய ஏற்ற தட்பவெப்ப நிலை உள்ளது. மா, வாழை போன்ற பயிர்களைப் போன்று நல்ல வருவாயைத் தரக்கூடிய முலாம் பழம் சாகுபடியில் விவசாயிகள் இப்போது அதிக ஆர்வம் செலுத்த தொடங்கியுள்ளனர். முலாம் பழம் சாகுபடியில் நவீனத் தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம் நோய், பூச்சித் தாக்குதல்களிலிருந்து பயிரைக் காப்பாற்றலாம்.
            நல்ல வடிகால் வசதி கொண்ட மணல்பாங்கான பகுதி முலாம் பழம் சாகுபடிக்கு ஏற்றது. அமில, காரத் தன்மை 6.5 முதல் 7.5 என்றளவில் உள்ள மண்ணில் நல்ல வளர்ச்சி இருக்கும். மிதமான வெப்பநிலை (23 முதல் 27 சென்டிகிரேட்), மிதமான ஈரப்பதம் கொண்ட கால நிலை முலாம் பழம் சாகுபடிக்கு உகந்தது. மழை, பனி இல்லாத அனைத்துப் பருவத்திலும் முலாம் பழம் சாகுபடி செய்யலாம்.
விதைப்பு, பராமரிப்பு முறை: சாதாரணமாக நேரடியாக விதைப்பு செய்தும், துல்லிய பண்ணைய முறையில் குழித்தட்டு நாற்றாங்காலில் நாற்றுகளை உற்பத்தி செய்தும் நடவு செய்யலாம். விதைப்பிற்கு ரகத்தைப் பொருத்து ஏக்கருக்கு 200 கிராம் முதல் 1 கிலோ வரை விதைகள் தேவைப்படும். துல்லிய பண்ணைய முறையில் ஏக்கருக்கு 6 ஆயிரம் நாற்றுகள் வரை தேவைப்படும்.
               விதைகளை கிலோவுக்கு 10 கிராம் என்றளவில் சூடோமோனாஸ் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். நடவு இடைவெளி 1.5 மீட்டருக்கு 45 முதல் 65 செ.மீ. என்ற அளவில் பராமரிக்க வேண்டும். அடியுரமாக ஏக்கருக்கு 5 டன் தொழு உரம், 16:14:12 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துகளை இட வேண்டும். மேல் உரமாக விதைத்து 30ஆவது நாள் 16 கிலோ தழைச்சத்து இட வேண்டும்.
          துல்லிய பண்ணைய முறையில் அடியுரமாக மணிச்சத்தை இட்டுவிட்டு, தழை, சாம்பல் சத்தை நீர்வழி உரப்பாசனமாக கரையும் உரங்களைப் பயன்படுத்த வேண்டும்.
           நடவு செய்த அல்லது விதைத்த 35ஆவது நாளில் நுண்ணூட்டக் கலவையை லிட்டருக்கு 5 கிராம் என்ற அளவில் தெளிக்க வேண்டும். இதன்மூலம் வடிவற்ற காய்கள், காய்களில் வெடிப்பு போன்று போரான் சத்துக் குறைபாட்டால் உண்டாகும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். மேலும், ஒரு வாரம் கழித்து பொட்டாசியம் சல்பேட் லிட்டருக்கு 5 கிராம் என்ற அளவில் தெளிப்பதால் பழங்களின் தரம் அதிகரிக்கும்.
            இதுமட்டுமல்லாது நெகிழி நிலப் போர்வை (பாலீதின் மூடாக்கு) அமைப்பதன் மூலம் களையால் உண்டாகும் பாதிப்பு குறையும். மேலும், பாசன நீரின் தேவையும் குறையும். கூடுதல் நன்மையாக பழங்கள் நிலத்தில் படுவதால் உண்டாகும் அழுகல் நோய், நிறமாற்றம் ஆகியவை தவிர்க்கப்படுகின்றன. இந்தப் பயிர் குறுகிய காலப் பயிர். ஆதலால், நெகிழி நிலப் போர்வை இடுவதன் மூலம், ஒரு பயிர் முடிந்தவுடன் அதிலேயே 2 அல்லது 3 பயிர்களைச் சாகுபடி செய்ய இயலும்.
பயிர்ப் பாதுகாப்பு: இந்தப் பயிரில் பழ ஈ தாக்குதல் ஏப்ரல் முதல் மே மாதத்திற்கு பின் அதிகமாகக் காணப்படும். கோடைக் காலத்தில் குறைவாகவும், மழைக் காலத்தில் அதிகமாகவும் இருக்கும். காய்களின் மேலுள்ள தோலைக் கிழித்து தாய் ஈ முட்டையிடும். முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள், காயின் சதைப் பற்றான பகுதியை உண்ணுவதால் அந்த இடத்திலிருந்து பழுப்பு நிறச் சாறு வடியும். புழுக்களால் தாக்கப்பட்ட பகுதி அழுகிவிடும். பாதிப்பு அதிகரிக்கும் போது காய்கள் உதிர்ந்துவிடும்.
                இவ்வாறு தாக்கப்பட்ட காய்களைச் சேகரித்து மண்ணில் குழியெடுத்து அழிக்க வேண்டும். தாக்குதல் உள்ள போது கொடி, கொடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர் பாய்ச்சி கூட்டுப் புழுவிலிருந்து வளர்ந்த ஈக்கள் வெளிவருவதைத் தடுக்க வேண்டும். கொடிகளுக்கு இடையே உள்ள பகுதியை நன்றாகக் கிளறி விடுவதன் மூலம் கூட்டுப் புழுக்களை கட்டுப்படுத்தலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் கார்பரில் 50 சதவீதம் நனையும் தூள் 2 கிராம் அல்லது பென்தோயேட் 2 மி.லி. அல்லது பென்தியான் 1.5 மி.லி. அல்லது கார்போசல்பான் 2 மி.லி. என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
பூசணிக்காய் வண்டு: கொடியின் வேர்ப் பகுதியையும், தண்டுப் பகுதியையும் மண்ணிலுள்ள புழுக்கள் தின்று சேதத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், இலைகள், பூக்கள், காய்களையும் தின்று சேதப்படுத்தும். செடியைச் சுற்றியுள்ள பகுதியில் மண்ணைக் கிளறி, செடி ஒன்றுக்கு 50 கிராம் கார்பரில் 50 சதவீத நனையும் தூள் அல்லது 5 கிராம் பிப்ரோனில் குருணை அல்லது 5 கிராம் கார்போபியூரான் குருணை மருந்தை இட வேண்டும்.
அசுவணிப் பூச்சித் தாக்குதல்: இலையின் அடிப் பகுதியில் இளம் மற்றும் வளர்ந்த பூச்சிகள் சாற்றை உறிஞ்சும். இதனால், இலைகள் சுருங்கி மடிப்புகளுடன் காணப்படும். கொடி வளர்ச்சி குன்றி காணப்படும். பூச்சிகள் தேனை கழிவாக வெளியேற்றுவதால், தாக்கப்பட்ட செடியில் எறும்பின் நடமாட்டம் காணப்படும். ஒரு லிட்டர் தண்ணீரில் அசிபேட் 1 கிராம் அல்லது தயோகிளோபிரிட் 1 மி.லி. என்றளவில் தெளிப்பதன் மூலம் இந்தப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
             இந்த பயிரில் சாம்பல் நோய், இலைப்புள்ளி நோய், இலைக் கருகல் நோய், பழ அழுகல் நோய், வாடல் நோய்த் தாக்குதலும் இருக்கும். மேற்கண்ட பூச்சித் தாக்குதல், நோய்த் தாக்குதலிலிருந்து பயிரைக் காத்து கூடுதல் வருவாய் பெறலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: வேளாண் அறிவியல் இணையம், பாப்பாரப்பட்டி, தருமபுரி மாவட்டம். மொபைல்: 99946 72204.

நன்றி:தினமணி

முட்டைக் கோஸ் – சத்துப்பட்டியல்

முட்டைக் கோஸ் – சத்துப்பட்டியல்

முட்டைக் கோஸ் - சத்துப்பட்டியல்
உருண்டு திரண்ட முட்டைக்கோஸ், சத்துக்கள் நிறைந்தது. சீனர்களின் சுறு சுறுப்புக்கு அவர்கள் தங்கள் உணவில் முட்டைக்கோஸை முக்கிய உணவுப் பொருளாக சேர்ப்பது ஒரு காரணம் எனலாம். உலகம் முழுவதும் விளையும் காய்கறிகளில் ஒன்றான முட்டைக்கோஸ் தன்னிடத்தில் அடக்கியுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்...
* பல அடுக்கு இதழ்களைக் கொண்டது முட்டைக்கோஸ். பச்சை, பழுப்பு, சிவப்பு என பல நிறங்களில் முட்டைக்கோஸ்கள் விளைகிறது.
* பச்சை முட்டைக்கோஸ் இணையற்ற சத்துக்கள் கொண்டது. குறைந்த கலோரி ஆற்றல் வழங்கக் கூடியது. கொழுப்பும் குறைந்த அளவே உள்ளது. 100 கிராம் முட்டைக்கோஸில் 25 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.
* தயோசயனேட், கார்பினால், லுடின், ஸிசாந்தின், சல்பராபேன், இசோதயோ சயனேட் போன்ற ரசாயன மூலக்கூறுகள் முட்டைக்கோஸில் உள்ளது. இவை பல்வேறு உடற்செயல்களில் பங்கெடுக்கின்றன. குறிப்பாக நோய் எதிர்ப் பொருட்களாக செயல்படுகின்றன. மார்பகம், தொண்டை, குடற் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படும். கெட்ட கொழுப்புகளான எல்.டி.எல். கொழுப்புகளை குறைக்கும்.
* முக்கியமான நோய் எதிர்ப்பொருளான 'வைட்டமின் சி', முட்டைக்கோசில் மிகுந்துள்ளது. 100 கிராம் கோஸில் 36.6 மில்லிகிராம் 'வைட்டமின் சி' கிடைக்கிறது. தொடர்ச்சியாக 'வைட்டமின் சி' உடலில் சேர்த்துக் கொள்வது அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும்.
* தீங்கு விளைவிக்கும் 'பிரீ-ரேடிக்கல்'களை சுத்தப்படுத்தும் தன்மை 'வைட்டமின் சி'-க்கு உண்டு. ஆக்சிஜன் பிரீ ரேடிக்கல்களை உறிஞ்சி அகற்றும் அளவை கணக்கிட்டால், 100 கிராம் பச்சை முட்டைக்கோசானது, 508 மைக்ரான் ரேடிக்கல்களை விரட்டி அடிக்கிறது. சிவப்பு முட்டைக்கோஸில் 2 ஆயிரத்து 252 மைக்ரான் அளவு ரேடிக்கல்களை சுத்தப்படுத்தும் சக்தி கிடைக்கிறது.
* வைட்டமின் பி-5, வைட்டமின் பி-6, வைட்டமின் பி-1 போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும் முட்டைக்கோஸில் நிறைந்துள்ளது. இவை உணர்வுக்கும், இதர உடற்செயல்பாட்டிற்கும் உறுதுணை செய்யக்கூடியவை.
* பொட்டாசியம், மாங்கனீசு, இரும்பு, மக்னீசியம் போன்ற தாதுஉப்புக்கள் முட்டைக்கோசில் உள்ளது. பொட்டாசியம் உடற்செல்கள் மற்றும் சருமம் வளவளப்புடன் இருக்க துணை செய்யும். இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பங்கெடுக்கும். மாங்கனீசு, நோய் எதிர்ப்பு நொதிகள் செயல்பட துணைக் காரணியாக விளங்கும். இரும்புத் தாது, சிவப்பு ரத்த செல்கள் உருவாக்கத்தில் பங்கெடுக்கிறது.
* முட்டைக்கோஸில் 'வைட்டமின் கே', நிறைய அளவில் உள்ளது. எலும்பு வளர்ச்சிதை மாற்றத்தில் இது பங்கெடுக்கும். அல்சீமர் மற்றும் நரம்பு வியாதிகளின் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றலும் 'வைட்டமின் கே' -விற்கு உண்டு.

Monday, March 11, 2013

மனித உடலும், தண்ணீரும்

தண்ணீரையும், மனித உடலையும் தனித்தனியாக பிரிக்க முடியாது. மனித உடலில் தண்ணீர் என்பது அவ்வளவு முக்கியமானது. தண்ணீர் தான் ஜீரணத்துக்கு உதவுகிறது. வியர்வையை வெளியேற்றுகிறது. உடலின் பல பகுதிகளுக்கு சத்துக்களை எடுத்துச் செல்கிறது.
உடலின் சேரும் திட மற்றும் திரவக் கழிவுனை வெறியேற்றவும், உடலின் வெப்பநிலையை ஒரே சீராக வைத்துக் கொள்ளவும் தண்ணீர் அவசியம். நமது உடலின் மொத்த எடையில் 60 சதவீதம் அளவிற்கு இருப்பது தண்ணீரில் தான். இதில் இருந்து 5 முதல் 10 சதவீதம் நீர் உடலில் இருந்து வெறியேறினாலே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
இதுவே 15 முதல் 20 சதவீதம் வரை தண்ணீர் இழப்பு ஏற்பட்டால் மரணம் வந்து சேரலாம். ஒரு மனிதன் சாப்பிடாமல் கூட சிறிது நாட்களை ஒட்டலாம். தண்ணீர் குடிக்காமல் 3 நாட்களுக்கு மேல் தாக்குபிடிக்கமுடியாது. உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கு ஒரு காதுகாப்பு போர்வை போலவும். மெத்தை போன்றும் தண்ணீர் செயாற்றுகிறது. உடலின் அனைத்து திசுக்களுக்கும் ரத்தத்தின் அடிப்படைக்கும் மூட்டு இணைப்புகளில் உள்ள திரவம்,தண்ணீர்,கோழைவடிதல் போன்றவற்றுக்கும் தண்ணீரே காரணமாக திகழ்கிறது.
உடல் உறுப்புகள் முறைப்படி செயல்படுவதற்கும் உராய்வு எண்ணெய் போன்று தண்ணீர் செயலாற்றுகிறது. நம்முடைய தோலை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்துக்கொள்வதற்கும் உடலில் உள்ள தண்ணீரே பங்காற்றுகிறது.
வயது முதிர்வடையும் போது தோலில் ஏற்படும் சுருக்கங்களுக்கு உடலில் உள்ள தண்ணீரின் அளவு குறைவதே காரணம். ஆகவே தான் பிறக்கும் குழந்தைகளின் உடல்களில் 75 முதல் 80 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருப்பதால் குழந்தைகளின் தோல் மென்மையானதாக காணப்படுகிறது.
அதுவே 65-70 வயதான முதியோருக்கு உடலில் தண்ணீர் 50 சதவீதமாக குறைவதால் சுருக்கங்கள் காணப்படுகின்றன. தண்ணீர் குறைவின் காரணமாகவே எலும்பு இணைப்புகளில் பாதிப்பு ஏற்படுவதும் முதுமையில் நிகழ்கிறது. மனித உடலுக்கு தினமும் சராசரியாக 6 முதல் 8 டம்ளர் வரையிலான தண்ணீர் கட்டாயம் தேவை.

மரமஞ்சள் மருத்துவக் குணங்கள்

இம்மரத்தின் பட்டை பருமனாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் மரப்பட்டை, இலை மருத்துவக் குணம் உடையது. இதன் இலைகள் கசப்புச் சுவையும், துணைச் சுவையாகக் கார்ப்புச் சுவையுடனும் இருக்கும். வறட்சித் தன்மையும் சூட்டை அதிகரிக்கச் செய்யும் தன்மையும் கொண்டது. ரணம், நீரிழிவு, அரிப்பு ஆகியவற்றைப் போக்கும் குணமுண்டு. தமிழகம் எங்கும் காடுகளில் காணப்படுகின்றது.
மஞ்சள் மருத்துவக் குணங்கள்
மர மஞ்சளின் பட்டையை எடுத்து விழுதாய் அரைத்து ரணங்களில் பூசி வர குணமாகும்.
மரமஞ்சளின் விழுதை நெல்லிக்காயளவு அரைத்து 100 மில்லியளவு பசுவின் கோமியத்துடன் கலந்து காலையில் குடித்து வர சிலேத்தும நோய்கள் குணமாகும்.
மர மஞ்சளை கைப்பிடியளவு எடுத்து சிதைத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி மீண்டும் குடிநீர் நன்றாகக் கெட்டிப்படும் வரை, காய்ச்சி சிறிது தேன் கலந்து முகத்தில் பூசிவர முகத்தில் வருகின்ற தோல் நோய்கள், நரம்புச் சிலந்தி குணமாகும்.
மரமஞ்சளின் சாறில் 200 மில்லியளவு எடுத்து சிறிது தேன் கலந்து 2 வேளை தொடர்ந்து 1 வாரம் குடித்து வர காமாலை குணமாகும்.
மரமஞ்சளை கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகக் காய்ச்சி, அத்துடன் சிறிது தேன் அல்லது அரிசி கழுவிய நீருடன் கலந்து 2 வேளை குடித்து வர வெள்ளை, பெரும்பாடு குணமாகும்.
மர மஞ்சளை இடித்து 10 கிராம் எடுத்து நூறு மில்லியளவு தண்ணீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மூலநோய், சுவையின்மை, கணநோய், கணக்காய்ச்சல், உட்காய்ச்சல் குணமாகும். காய்ச்சலுக்குப் பின்னர் காணப்படும் அயர்வு நீங்கும்.
மரமஞ்சளை நீர்விட்டு அரைத்து தலையில் பற்றிட உடல் சூடு தணியும். மர மஞ்சளை அரைத்து இரத்தம் கட்டிய வீக்கத்திற்கு மேல் பூச குணமாகும்.

மூட்டு வலியை குணப்படுத்த ஆயுர்வேத சிகிச்சை

தினசரி வாழ்க்கையில் நீங்கள் காலை எழுந்திருக்கும் போது முழங்காலை மடக்க முடியாமல் போய்விடுகிறதா? கால் தாங்கலாகத் தான் நடக்க வேண்டியிருக்கிறதா? கடந்த காலத்தில் இப் பிரச்சினை வந்து, தீர்ந்து தீர்த்து தற்போது உறக்கத்தில் யாரோ அழுத்துவது போன்ற உணர்வு வருகிறதா? நீங்கள் நோய் வாய்ப்பட்டிருக்கும் போது பாம்ஸ் மற்றும் தைலம், பாப்பிங் பில்ஸ் ஆகியவை உபயோகிக்கும் போது மட்டும் வலியிலிருந்து நிவாரணம் பெறுகிறீர்களா?

அனேகமாக நீங்கள் மூட்டு வலி நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்கிறார் மகாலிங்கபுரம் ஆயுர்வேத சிகிச்சை நிபுணர் டாக்டர் மகேஸ்வரராவ். பருவ கால மாற்றங்கள் நம் உடலில் சில குறிப்பிடும்படியான மாற்றங்களை ஏற்படுத்தும். குறிப்பாக மழைக்காலம் வந்தாலே பல்வேறு நோய்த் தொல்லைகள் வந்து விடும். மரத்துப்போன மூட்டு இணைப்பில் நடுக்கத்துடன் கால்தாங்கலாக நடக்க வேண்டிய நிலையும் மழைக்காலத்தில் வரும் மோசமான உடல் பாதிப்பாகும்.

உடலில் ரத்த வெள்ளையணுக்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு அரணாக இருக்கின்றன. நோய் எதிர்ப்பு செல்கள், நீண்ட நேரம் உடல் செல்களுக்கும், தீங்கிழைக்கும் மற்ற பொருள்களுக்குமிடையேயான வேறுபாட்டை அறிவதில்லை. இதனால் அவை உடல் செல்களை தாக்க ஆரம்பிக்கின்றன. முழங்கால் மூட்டிலுள்ள சவ்வு இதனால் வீக்கமடைந்து விறைப்பு தன்மை அடைந்து சிவப்பாக மாறும்.

இவற்றுடன் மூட்டு வலியும் ஏற்படுகிறது. மோசமான நோய் பாதிப்பினால் சில நேரங்களில் மூட்டுகள் செயலிழந்து விடுகின்றன. இந்நேரத்தில் இந்நோய் ஒன்றுக்கு மேற்பட்ட மூட்டுகளைப் பாதிக்கிறது. பெரும்பாலும் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு இந்நோய் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மனிதனுக்கு இயற்கையாகவே உற்பத்தியாகி வளரக் கூடியது நகம், முடி, மூட்டுகளுக்கு இடையே உள்ள சவ்வு. இவை மூன்றும் மனிதனின் வளர்ச்சிக்கு ஏற்ப வளரும் தன்மை உடையது. இதில் மிக முக்கிய பங்கு வகிக்கக் கூடியது சவ்வு. இது ஆயுர்வேதச் சொல்லில் ஆமா வாத்தா என்று அழைக்கப்படுகிறது. ஆமா என்றால் பித்தம். வாத்தா என்றால் வாயு என்றும் பொருள்படும்.

மூட்டு வலி வருவதற்கு மிக முக்கிய காரணம் மூட்டுகளுக்கு இடையே ஒரு வித எண்ணெய் திரவம் போன்ற ஒரு பொருள் இருக்கும். அவை மூட்டுகளின் செயல்பாடுகளுக்கு ஏற்ப அவையும் இணைந்து செயல்படும். இந்த வாயுவும், பித்தமும் ஒன்றோடு ஒன்று இணைந்து எண்ணெய் திரவம் போன்ற பொருளை அழித்துவிடும்.

இதன் காரணமாக மூட்டுகள் இரண்டும் ஒன்றுக்கொன்று உரசும். இதனால் மூட்டுகளுக்கிடையே தேய்மானம் ஏற்படுவதால் மனிதனுக்கு மிக கடுமையான மூட்டு வலி ஏற்படுகிறது. இந்த வலியில் இருந்து முழுமையாக விடுபடுவதற்கு பெரும்பாலானவர்கள் அப்போது சூழ்நிலையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு ஏதாவது தற்காலிக வலி நிவாரண மாத்திரைகளை உண்டு தப்பித்துக் கொள்கிறார்கள்.

இதன் காரணமாக கடுமையான மூட்டு வலியில் இருந்து முழுமையான நிவாரணம் அடைய அவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் மூட்டு வலியை தொடர்ந்து அடையும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

வழி முறைகள்.........

இந்த கடுமையான மூட்டு வலியில் இருந்து முழு நிவாரணம் பெற முடியும். அதற்கு முழுமையான தீர்வு காண முடியும். இதற்கு நாம் செய்ய வேண்டியது என்னவெனில் ஆயுர் வேத சிகிச்சை மூலம் முழு நிவாரணம் பெற முடியும். தொடர்ச்சியாக 3 மாதம் முதல் 6 மாதம் வரை மருந்து வகைகளை உண்டு வந்தால் இந்த கடுமையான மூட்டு வலியில் இருந்து 100 சதவீதம் முழு நிவாரணம் பெறமுடியும்.

தேய்ந்த மூட்டு சவ்வை புதியதாக உருவாக்க முடியும். ஆயுர்வேத மருந்து வகைகள் புதிய சவ்வை உருவாக்க வழி செய்கிறது. ஆயுர்வேத மாத்திரை மருந்துகளால் எவ்வித பக்க விளைவுகள் இல்லை. இதை சாப்பிடும் போது எவ்வித பத்திய முறைகளும் இல்லை என்கிறார் மகாலிங்கபுரம் அப்பல்லோ ஆயுர்வேதிக் சென்டர் டாக்டர் மகேஸ்வரராவ்.

மூட்டு வலி ஏற்பட காரணங்கள்.........

* கால்மூட்டி அடிக்கடி அழுத்தத்திற்கு உட்படுவதால் முட்டியை சுற்றியுள்ள கப் வடிவிலான சவ்வு காயமடைவது.

* முட்டியின் முன்பகுதியில் வலியிருக்கும். மாடிப்படி ஏறி இறங்கும் போது மற்றும் சாயும் போது வலியின் தன்மை அதிகரிக்கும். ஓட்டப்பந்தைய வீரர்கள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு இவை ஏற்படும்.

* எலும்பில் உள்ள திசுக்கள் கிழிவது அல்லது உடைவது. இதனால் முட்டியின் உள், வெளி பகுதிகளில் வலி ஏற்படுத்தும்.

* சுளுக்கு, மூட்டுக்களை முறுக்குவதால் எலும்புகளை இணைக்கும் தசைநார்களில் ஏற்படும் சிறு சிறு காயங்கள்.

*முட்டியின் சிப்பி இட மாற்றம் அடைவது.

* மூட்டுகளில் நோய் தொற்றுவது.

* மூட்டுகளில் ஏற்படும் காயங்களால் முட்டியினுள் இரத்த கசிவு ஏற்பட்டு வலியை அதிகப்படுத்தும்.

* இடுப்பில் ஏற்படும் குறைபாடுகள் அல்லது கோளாறுகள். இதனால் இடுப்பில் வலி ஏற்படும். இந்த வலி முட்டிப் பகுதிகளில் உணரப்படும். இடுப்பிலிருந்து முட்டி பகுதிக்கு செல்லும் கயிறு போன்ற அமைப்பில் காயம் ஏற்படுதல்.

* அதிக குளிர்ச்சி மற்றும் வெப்பமான கால சூழலில் இருத்தல்.

* குறிப்பிட்ட காலத்தில் மூட்டு இணைப்பு சவ்வு வளராமை மற்றும் சாதா ரணமாக முழங்கால் மூட்டுகள் மீது போர்த்தப்படாமை.

* வழக்கத்திற்கு மாறாக  அதிக உடல் எடை அதிகரிப்பு.

* மோசமான உடல் பாதிப்பு மற் றும் நீண்ட நாள் நோய் வாய்ப்பட்டிருத்தல்.

* ஏதாவதொரு எலும்பு மூட்டு தசையில் ரத்தம் உறைந்து விடு தல்.

*மூட்டு நோய்களை சாதாரணமாக வரும் வலியை வைத்து கண்டறியலாம். காலையில் விழிக்கும் போது அதிக வலியுடன் விறைப்பு தன்மை உடலிலிருந்தால் அதை நோய் அறிகுறி என அறியலாம். வயதானவர்கள் இதனால் அதிகம் இயங்க முடியாது. குளிர் காலங்களில் உடற்பயிற்சி மற்றும் நடக்கும் போது அதிக வலி ஏற்பட்டால் அது நோய் அறிகுறியாகும்.

வலியைக் குறைக்க உதவும் வழிகள்.........

வலியை அதிகப்படுத்தும் செயல்களை தவிர்த்து (உதாரணம்- பழுதூக்குதல்) ஓய்வாக இருந்தல். வலி ஏற்படும் இடத்தில் ஐஸ் கட்டிகளை வைக்கலாம். முதல் நாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 நிமிடங்கள் வரை ஐஸ் கட்டிகளை வைக்கவும். முதல் நாளுக்குப்பின் குறைந்தது ஒரு நாளில் நான்கு முறையாவது இப்படி செய்ய வேண்டும்.

கால் முட்டியினை முடிந்தவரை உயரமாக தூக்குவதனால் வீக்கங்களை குறைக்கலாம். மூட்டிகளின் கீழ் அல்லது இடையில் தலையணைகளை வைத்து உறங்கலாம். சுடு தண்ணீரில் 2 கிராம் உலர்ந்த இஞ்சியை கலந்து குடித்தல் மற்றும் மோர் உட்கொள்ளுதல் கபம் மற்றும் வாதத்தைக் குறைக்கும்.

இது செரிமான சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, மூட்டு இணைப்புகளின் வீக்கத்தைக் குறைக்கிறது. சுரைக்காய் போன்று கொடியில் காய்க்கும் கசப்பு காய்கள், வாடாமல்லிகை இலைகள், வேப்பிலைகள், பாகற்காய், கோதுமையில் தயாரிக்கப்பட்ட சப்பாத்தியுடன் பார்லி சேர்த்த உணவு பொருள், ஸ்டார்ச் நீக்கப்பட்ட அரிசி சோறு, கொள்ளு, பியஸ் ஆகியவை உணவு பொருள்களில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பால், தயிர், பன்னீர், பாலாடையுடன் கூடிய கரும்புச் சாறு குறிப்பாக வெல்லம், சர்க்கரை, பருப்பு, மீன் மற்றும் நறுமணப் பொருள் கொண்ட பொருள்களை உட்கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி (வாரத்தில் 4 நாள்களுக்கு 30-லிருந்து 40 நிமிடம் வரை நடக்க வேண்டும்) செய்தல் அவசியம். தினசரி வாழ்க்கையில் யோகா மேற்கொள்ள வேண்டும்.

ஒரு மேசை கரண்டி டில் ஆயில், ஒரு மேசை கரண்டி மாட்டு நெய், அரை மேசை கரண்டி இஞ்சி சாறு, அரை மேசை கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு கரும்பு சாறு ஆகியவை சேர்ந்த கலவை வாதத்தைக் குறைக்க உதவுவதோடு, எலும்பு மூட்டு இணைப்பில் வீக்கத்தையும் குறைக்கிறது.

இதற்கு மாற்றாக வெதுவெதுப்பான பாலுடன் ஒரு மேசை கரண்டி விளக்கெண்ணெய் கலந்து இரவில் குடிப்பதால் அதிக செரிமானத்தையும், வாதத்தையும் குறைக்கலாம். 5 கிராம் இஞ்சி கூழுடன் கூடிய ரோஸ்ட், சீரகம், கல் உப்பு, கருப்பு உப்பு, உலர்ந்த இஞ்சி பவுடர் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை வெண்ணெயுடன் சேர்த்து உட்கொள்ளுவதால் மூட்டு வலி மற்றும் முதுகு வலி ஆகியவற்றை வெகுவாகக் குறைக்கிறது.

போதுமான நெய் அல்லது எண்ணெய் சேர்த்து உணவு சமைக்கப்பட வேண்டும். பால், சோறு, மட்டன் சூப் மற்றும் இனிப்பு, புளிப்பு அல்லது உப்பு நிறைந்த சத்தான உணவுப் பொருள்களை உட்கொள்ள வேண்டும்

தாகம் தீர்க்கும் தண்ணீருக்கு விலை நிர்யணம் செய்யும் முயற்சியை தடுக்க வேண்டும்

கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி டெல்லியில் தேசிய நீர் வளத்துறை கவுன்சிலின் 6வது கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய நீர்க கொள்கை 2012 ஏற்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமை வகித்தார். கடந்த 2002ம் ஆண்டில் துவங்கி 10 ஆண்டுகளில் ஒரு வடிவத்தை பெற்றுள்ளது தேசிய நீர் கொள்கை. இதை சற்று  ஆழ்ந்து பார்த்தால் அது நேரடியாகவும் மறைமுகமாகவும் மாநிலங்களின் மீது அதிகாரத்தை செலுத்தும் போக்கை காணலாம். எப்படி மேலே படியுங்கள்:
1. அரசோ அல்லது அரசின் உள்ளாட்சி அமைப்புகளோ இனிமேல் குடிநீர், பாசன நீரை வழங்காது. இதை செய்யப்போவது தனியார் அல்லது  பன்னாட்டு வர்த்தக நிறுவனம்தான்.
2. மளிகை போல் தண்ணீரும் ஒரு வணிகப் பொருள். இது ஆறு நீர், நிலத்தடி நீர், பாசன நீர் என்று எதுவாக இருந்தாலும் விலை உண்டு.
3. வீட்டு பயன்பாடு, விவசாயம், தொழில் என்று தண்ணீர் பயன்பாட்டை நிர்வாகம் செய்ய தண்ணீர் ஒழுங்காற்று ஆணையம் அமைக்கப்படும்.
4. தண்ணீர் பயன்படுத்துவோர் சங்கங்கள் அமைத்து அவரவர்கள் தங்களுக்கு என்று ஒதுககீடு செய்யப்பட்ட தண்ணீரை  நிர்வகித்து கொள்ள வேண்டும்.
5. மின் கட்டணத்தை உயர்த்துவது, இலவச மின்சாரத்தை ரத்து செய்வது விவசாயத்துக¢கு பயன்படுத்தும் தண்ணீரை முறைப்படுத்துவதும் இதில் அடங்கும்.
6. இவற்றை எல்லாம் விட முக்கியமானது தண்ணீர் வினியோகத்தில் அரசு சேவை வழங்குபவர் என்ற நிலையிலிருந்து சேவையை ஒழுங்குபடுத்துபவர், தண்ணீர் மேலாண்மை நிறுவனங்களுககு தேவையான வசதிகளை வழங்குபவர் என்ற நிலைககு மாறும். இதன் மூலம் சொல்வது என்னவென்றால், தண்ணீர் வினியோக சேவை என்பது சங்கங்களுககோ அல்லது அரசு , தனியார் பங்கேற்பு நிறுவனங்களின் பொறுப்புக¢கு மாற்றப்படும்.
7. நிலச் சொந்தககாரர்கள் வீட்டுமனை உரிமையாளர்கள் தங்களது நிலப் பகுதியில் கிணறு தோண்டவோ, ஆழ்துளை குழாய் கிணறு தோண்டி நிலத்தடி நீரை எடுககவோ அவருக்கு உரிமை இல்லை.
8. தேசிய அளவிலும் மாநிலங்களுக¢கு இடையிலும் ஏற்படும் தண்ணீர் தொடர்பான பிரச்னைகளை விசாரித்து தீர்வு காண மத்திய அரசு நிலையான தண்ணீர் வழக்கு நடுவர் மன்றத்தை உருவாக்கும்.
9. நீர்க் கொள்கை பற்றிய மக்களின் கருத்துக்களை கடந்த பிப்ரவரி 28ம் தேதி வரை மத்திய அரசு இணையதளம் மூலம் பெற்றுள்ளது. இவற்றை பரிசீலித்த பின்னர் நீர்க்கொள்கை பற்றிய மசோதா தயாரிக்கப்பட்டு அமைச்சரவை ஒப்புதல் பெற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.     
உரிமையை பறிக்கலாமா: சமூக ஆர்வலர் பேராசிரியர் எம்.சுப்பிரமணியம் கூறுகையில், அரசியலமைப்பு சட்டம் மாநிலங்களுக்கு வழங்கிய உரிமையை பறிப்பதாக தேசிய நீர்க்கொள்கை உள்ளது. மாநிலங்களின் மீது அதிகாரம் செலுத்தும் நடவடிக்கைதான் இது. இது அமலுக்கு வந்தால், மாநிலங்களில் விவசாயம், தண்ணீர் பயன்பாடு ஆகியவற்றை மத்திய அரசு கட்டுப்படுத்தும். அதன்படியே செயல்பட வேண்டும். நாடு முழுவதும் உள்ள நதிகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், ஆழ்துளை கிணறுகள் உள்பட எல்லா நீர் ஆதாரங்களையும் அதன் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் எடுத்துக் கொள்ளும்.
பல்வேறு மாநிலங்கள் அடங்கிய கூட்டாட்சி தத்துவத்தில் நமது நாடு ஜனநாயக முறையில் செயல்படுகிறது. மாநிலங்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டால் அதை தீர்ப்பதற்கும் அரசியலமைப்பு சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் கொள்கை என்ற பெயரில் தண்ணீரை விலை வைத்து விற்கவும் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கவும் முயற்சிப்பதை தடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் சமூக கடமையாகும்.  தண்ணீருக்கு விலையா: தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தின் தலைவர் அ.வீரப்பன் கூறுவதென்ன: தண்ணீரை எந்தக் காலத்திலும் எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும் விற்பனை பொருளாக மாற்றி தனியாருக்கு தாரை வார்க்க அனுமதிக்கக் கூடாது. இது மக்களுக்கு செய்யும் அநீதி. அரசியலமைப்பு சட்டம் மாநிலங்களுக்கு வழங்கிய உரிமைகளை பறிக்காமல் வழிநடத்திச் செல்லலாம். அதைவிடுத்து தண்ணீருக்கு விலை நிர்ணயத்து பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் தாரை வார்த்துக் கொடுக்கும் முயற்சியை எந்த காலத்திலும் யாரும் அனுமதிக்கக் கூடாது. நமது நாடு, கிராமங்கள் நிறைந்த ஒரு விவசாய நாடு. தண்ணீருக்கு விலை நிர்ணயம் செய்தால், அது, விவசாயிகளின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டுவிடும். தாகம் தீர்க்கும் தண்ணீருக்கு விலை நிர்யணம் செய்யும் முயற்சியை தடுக்க வேண்டும்.