Wednesday, March 13, 2013

நவீன தொழில்நுட்பம்(பயிறுவகைகள்)

நவீன தொழில்நுட்பம்(பயிறுவகைகள்)

          பல்வேறு பயிர்களுக்கான நீர் மேலாண்மை: பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் வறட்சி காலங்களில் பயிர்களுக்கான நீர் மேலாண்மை பற்றிய ஆராய்ச்சி ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் விளைவாக தானிய பயிர்களில் நீர்மேலாண்மை ஆய்வு முடிவுகள் விவசாயிகளுக்கு பயனளிக்கக்கூடியவை.
நெய்பயிர்:
        சம்பா பருவத்தில் பயிரிடப்படும் நெல் ரகங்களுக்கு 1200 மி.மீ. நீர் தேவைப்படுகிறது. இத்தருணத்தில் நடுத்தர வயதுடைய ஐ.ஆர்.20ஐக் காட்டிலும் 20 நாட்கள் முன்பாகவே அறுவடைக்கு வரக்கூடிய ஆடுதுறை 39 ரகத்தினை பயிரிடுவதால் குறைந்த நீர் தேவையில் நிலையான விளைச்சல் பெறலாம். சேற்று உழவின்போது "டிராக்டர்' அல்லது "பவர் டில்லர்' கேஜ்வீல் கொண்டு உழுவதன் மூலம் 20 சதம் வரை நீர் நிலத்தடியில் சென்று வீணாவதைத் தடுக்கலாம். நெல்லுக்கு தொடர்ந்து நீர் பாய்வதைத் தவிர்த்து பாய்ச்சிய நீர் மறைந்தவுடன் 5 செ.மீ. உயரத்திற்கு நீர் பாய்ச்சுவது போதுமானது. இது 5 நாட்கள் இடைவெளியில் அமையும்.

நெல்லில் முக்கிய நீர்த்தேவை பருவங்களை தூர் பிடிக்கும் பருவம், புடைப்பருவம், பூக்கும் பருவம், பால் பிடிக்கும் பருவம் போன்ற பருவங்களில் நீர் பாய்ச்சத் தவறினால் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது.

திருந்திய நெல் சாகுபடியில் நீர் மேலாண்மை: 2-2.5 செ.மீ. உயரம் நீர் கட்டி பின் மண்ணின் மேல்பரப்பில் லேசான கீறல் வெடிப்புகள் தோன்றியபின் மறுபடியும் அதே அளவு நீர் கட்டுதல், மேலும் உருளும் களைக்கருவியைக் கொண்டு நட்டபிறகு 10-12 நாட்கள் இடைவெளியில் 2.5 செ.மீ. நீர் வைத்து நடவு வரிசைக்கு இடையே உபயோகித்தல், இலை வண்ண அட்டையையும் பயன்படுத்தி பயிருக்குத் தேவையான போது மட்டும் 2.5 செ.மீ. நீர் வைத்து மேலுரமாக தழைச்சதை இடுவது அவசியமானது.
சோளம்:
           இறவைச் சோளத்திற்கு 500 மி.மீ. வரை நீர் தேவையுள்ளது. தொடர் வெப்பநிலைக்கேற்றவாறு வளர்ச்சி, பூக்கம் நிலைகளில் கோடைக்காலத்தில் 13-15 நாட்களுக்கு ஒரு முறையும் முதிர்ச்சிப் பருவத்தில் சுமார் 10-12 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சுவதால் 20 விழுக்காடு வரை நீரைச் சேமிக்கலாம். 4-5 இலைப்பருவம், பூக்கும்பருவம், மணி பிடிக்கும் பருவம் ஆகியவை நீர் தேவைப்பருவங்களாகும். ஊடுபயிராக பயறு வகைப் பயிர்களை பயிரிடுவதன் மூலம் நீர் பயன்படுத்தும் திறனை அதிகப்படுத்தலாம். மேலும் மண்ணிலிருந்து நேரடியாக ஆவியாகும் நீரின் அளவை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.
மக்காச் சோளம்:
       மக்காச் சோளத்திற்கு அதிகப்படியாக சுமார் 550 மி.மீ. நீர் தேவைப்படும். தட்பவெப்ப நிலைக்கேற்ப வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். முழங்கால் உயரம் பயிர்ப்பருவம், பூ வெளிவரும் பருவம், முடி பிடிக்கும்; முதிர்ச்சிப்பருவம் பயிரின் முக்கிய நீர்த்தேவைப் பருவங்களாகும்.
கம்பு:
    கம்பிற்கு 400 மி.மீ. நீர் தேவைப்படுகிறது. தட்பவெப்ப நிலைக்கேற்ப 10-12 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். தூர் பிடிக்கும் பருவம், பூக்கும் பருவம், கதிர் முற்றும் பருவம் ஆகியன முக்கிய நீர்த்தேவைப் பருவங்களாகும்.
கேழ்வரகு:
                 பயிரின் மொத்த நீர்த் தேவை 500 மி.மீ. ஆகும். வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சுவதன் மூலம் விளைச்சல் பாதிப்பில்லாமல் நீரை சிக்கனப்படுத்தலாம். பூக்கும் பருவம், கதிர் பிடிக்கும் பருவம் ஆகியன முக்கிய நீர்த்தேவை பருவங்களாகும்.
பயறு வகைகள்:
            குறுகிய வயதுடைய உளுந்து, பாசிப்பயறு ஆகியவற்றிற்கு 350 மி.மீ. வரை நீர் தேவைப்படுகிறது. ஆனால் சோயா மொச்சைக்கு மட்டும் 450 மி.மீ. நீர் வேண்டும். விதைப்பு, பூப்பு, காய் பிடிக்கும் பருவங்களில் நீர் பாய்ச்ச வேண்டும். பூக்கும் பருவம் பயிரின் முக்கிய நீர்த்தேவைப்பருவமாகும். (தகவல்: முனைவர் மு.முகமது யாசின், முனைவர் வெ.கி.துரைசாமி, வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பவானிசாகர்-638 451, போன்: 04295-240 244) -டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்
நன்றி:தினமலர்

No comments: