Monday, March 11, 2013

மரமஞ்சள் மருத்துவக் குணங்கள்

இம்மரத்தின் பட்டை பருமனாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் மரப்பட்டை, இலை மருத்துவக் குணம் உடையது. இதன் இலைகள் கசப்புச் சுவையும், துணைச் சுவையாகக் கார்ப்புச் சுவையுடனும் இருக்கும். வறட்சித் தன்மையும் சூட்டை அதிகரிக்கச் செய்யும் தன்மையும் கொண்டது. ரணம், நீரிழிவு, அரிப்பு ஆகியவற்றைப் போக்கும் குணமுண்டு. தமிழகம் எங்கும் காடுகளில் காணப்படுகின்றது.
மஞ்சள் மருத்துவக் குணங்கள்
மர மஞ்சளின் பட்டையை எடுத்து விழுதாய் அரைத்து ரணங்களில் பூசி வர குணமாகும்.
மரமஞ்சளின் விழுதை நெல்லிக்காயளவு அரைத்து 100 மில்லியளவு பசுவின் கோமியத்துடன் கலந்து காலையில் குடித்து வர சிலேத்தும நோய்கள் குணமாகும்.
மர மஞ்சளை கைப்பிடியளவு எடுத்து சிதைத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி மீண்டும் குடிநீர் நன்றாகக் கெட்டிப்படும் வரை, காய்ச்சி சிறிது தேன் கலந்து முகத்தில் பூசிவர முகத்தில் வருகின்ற தோல் நோய்கள், நரம்புச் சிலந்தி குணமாகும்.
மரமஞ்சளின் சாறில் 200 மில்லியளவு எடுத்து சிறிது தேன் கலந்து 2 வேளை தொடர்ந்து 1 வாரம் குடித்து வர காமாலை குணமாகும்.
மரமஞ்சளை கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகக் காய்ச்சி, அத்துடன் சிறிது தேன் அல்லது அரிசி கழுவிய நீருடன் கலந்து 2 வேளை குடித்து வர வெள்ளை, பெரும்பாடு குணமாகும்.
மர மஞ்சளை இடித்து 10 கிராம் எடுத்து நூறு மில்லியளவு தண்ணீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மூலநோய், சுவையின்மை, கணநோய், கணக்காய்ச்சல், உட்காய்ச்சல் குணமாகும். காய்ச்சலுக்குப் பின்னர் காணப்படும் அயர்வு நீங்கும்.
மரமஞ்சளை நீர்விட்டு அரைத்து தலையில் பற்றிட உடல் சூடு தணியும். மர மஞ்சளை அரைத்து இரத்தம் கட்டிய வீக்கத்திற்கு மேல் பூச குணமாகும்.

No comments: