Wednesday, April 4, 2012

மஞ்சள் சாகுபடி முறை


கடலூர் மாவட்டம் அடரியை அடுத்த கொளவாய் கிராமத்தில் அறுவடை செய்யப்பட்டுள்ள மஞ்சள்.
 

 
              நீர்வள, நிலவள திட்டத்தின்கீழ் கோமுகி நதி உபவடி நிலப் பகுதி விவசாயிகளுக்கு மஞ்சள் பயிர் சாகுபடிக்கு அரசு 65% மானியமாக வழங்குகிறது.
 
இதுகுறித்து கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் அருட்செந்தில் தெரிவித்தது:
 
             தமிழகத்தில் உள்ள 63 ஆற்றுப்படுகை பகுதியில் பாசனப் பரப்பை அதிகப்படுத்தும் வகையில் உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு அரசு நீர்வள, நிலவள திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி கோமுகி நதி பாயும் கடலூர், விழுப்புரம், சேலம் மாவட்டப் பகுதிகளில் மஞ்சள் உற்பத்தியை அதிகப்படுத்தும் வகையில் அரசு 65 சதவீத மானியம் வழங்குகிறது.
 
நேர்த்தி முறைகள்: 
 
               நல்ல வடிகால் வசதியுள்ள, மணற்பாங்கான செம்மண், வண்டல் மண் ஆகியன மஞ்சள் பயிரிட ஏற்ற மண்ணாகும். களர் அல்லது நீர் தேங்கும் மண் நிலங்கள் மஞ்சள் பயிரிடுவதற்கு ஏற்ற மண் அல்ல.
 
நடவு வயல் தயாரிப்பு முறைகள்: 
 
              மஞ்சள் பயிரிடும் நிலத்தை உளி கலப்பையால் நன்கு உழவு செய்து இதை தொடர்ந்து சட்டிக் கலப்பை மூலம் உழுது, கொக்கி கலப்பை கொண்டு 3 முறை உழவு செய்யவேண்டும்.1 ஹெக்டேருக்கு 30 டன்கள் என்ற அளவில் தொழு உரம், சூப்பர் பாஸ்பேட் 281 கிலோ ஆகியவற்றை கலந்து அடி உரமாக இடவேண்டும். அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா இரண்டும் முறையே 10 கிலோ வீதம் 100 கிலோ தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும். வேப்பம் பிண்ணாக்கு அல்லது கடலைப் பிண்ணாக்கு ஒரு ஹெக்டேருக்கு 200 கிலோ என்ற அளவிலும், பெரஸ் சல்பேட் 30 கிலோ மற்றும் துத்தநாக சல்பேட் 15 கிலோ என்ற அளவிலும் அடி உரமாக இடுவது சிறப்பானதாகும். 4 அடி அகலமும், 1 அடி உயரமும் கொண்ட மேட்டுப் பாத்திகளை அமைத்து சொட்டுநீர்ப் பாசன பக்கவாட்டு இணை குழாய்கள் மேட்டுப் பாத்தியின் மையத்தில் இருக்குமாறு வைக்க வேண்டும். 
 
விதை ஊன்றுதல், நடவு இடைவெளி முறை: 
 
            மஞ்சள் பயிர் ஒரு ஹெக்டேருக்கு, நன்கு முதிர்ச்சியடைந்த ஆரோக்கியமான நோய்த் தாக்குதல் இல்லாத விதை மஞ்சள் 2,000 கிலோ தேவை. கிழங்குகளை அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஒவ்வொன்றும் 10 கிலோ என்ற அளவில் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்யவேண்டும்.விதை நடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக கார்பன்டாசிம், 1 கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் நனைத்து பின்பு உலர்த்தி நடவு செய்யவேண்டும். விதை ஊன்றுவதற்கு 8-12 மணி நேரம் முன்பாக மேட்டுப் பாத்திகளை சொட்டுநீர்ப் பாசனம் மூலம் முழுவதுமாக நனைக்க வேண்டும். விதைகளை மேட்டுப்பாத்தியில் 3 வரிசை முறையில் 60ஷ்45ஷ்15 செ.மீ. என்ற இடைவெளியில் 4 செ.மீ. ஆழத்தில் ஊன்ற வேண்டும். 
 
மஞ்சள் அறுவடை
 
         மஞ்சள் விதைத்த 9-வது மாதம் இலைகள் பழுத்து காய்ந்து மடியத் தொடங்கும்போது அறுவடை செய்ய வேண்டும். 1 ஹெக்டேருக்கு 7முதல் 9 டன்கள் வரை பதப்படுத்தப்பட்ட மஞ்சள் கிடைக்கும். இதுகுறித்து மேலும் தகவலுக்கு விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.
 

No comments: