Monday, April 23, 2012

அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படி?-24-04-2012


குசேலன். இந்தப் பெயரைச் சொன்னதும் வறுமையில் வாடும் ஓர் ஏழையின் உருவம் உங்களை நினைவில் வருகிறதா? அதை உடனே மாற்றிக் கொள்ளுங்கள்.
காரணம், நீங்கள் நினைப்பதுபோல் குசேலர் எப்போதுமே ஏழையாகவே இருக்கவில்லை. உச்சகட்ட வறுமையில் பார்ப்பவர் உச்சுக் கொட்டும்படி இருந்த அவர், வசதிக்கும் வளமைக்கும் மாறி உச்சிவானைத் தொடும் உப்பரிகøயுடன் கூடிய மாளிகையில் உயர்வான செல்வந்தராகவும் வாழ்ந்தார்.
குசேலர் என்றாலே வறியவன் என்று அர்த்தம். அப்படிப்பட்டவர் பணக்காரராக மாறக் காரணம் அச்சுதன் சொன்ன அட்சயம் என்ற வார்த்தை.
ஆமாம், குசேலர் எடுத்துவந்த அவலை ஆவலுடன் தின்றுவிட்டு கிருஷ்ணர் சொன்ன அந்த வார்த்தைதான் குசேலருக்கு செல்வ மகளின் பார்வை கிடைக்கச் செய்தது.
“அட்சயம்’ என்றால் தேயாமல் வளர்வது என்று அர்த்தம். அட்சய திருதியை என்பதற்கு வளர்ச்சியை ஏற்படுத்தும் திருதியை தினம் என்பது அர்த்தம்.
எல்லத வருடமும்போல இதோ இந்த வருடமும் அட்சயதிருதியை வரப்போகிறது. (இந்த ஆண்டு, 24-04-2012 அட்சய திருதியை).
அன்றைய தினம் நீங்கள் தங்கம் வாங்கலாம், அல்லது வேறு ஏதாவது விலை உயர்ந்த பொருளை வாங்கலாம். சேமிப்பு ஏதாவது செய்யலாம். இதெல்லாம் உங்கள் வசதியைப் பெருக்கிக் கொள்ள உதவும். ஆனால், அவை நிலைக்க வேண்டுமானால் தெய்வத்தின் அருள் அவசியம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதுதான் அட்சய திருதியை விரதம்.
அட்சய திருதியை விரதத்தினை எப்படி கடைப்பிடிப்பது?
அன்றைய தினம் அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, பூஜை அறையில் கோலமிடுங்கள். அதன்மேல் ஒரு மணைப் பலகையைப் போட்டு மேலே வாழையிலை ஒன்றினை இடுங்கள். இலையின் நடுவே கொஞ்சம் பச்சரிசியைப் பரப்பி அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்குங்கள். (அதனுள் காசுகளைப் போடுவது, காசுகளைப் பரப்பி அதன் நடுவே கலசத்தினை வைப்பது எல்லாம் அவரவர் வழக்கப்படி செய்யலாம்).
கலசத்தின் அருகே ஒரு படி, ஆழாக்கு, அல்லது ஒரு டம்பளரில் நெல் நிறைத்து வையுங்கள். கலசத்திற்குப் பொட்டு, பூ வையுங்கள். லட்சுமி நாராயணர் படம் இருந்தால் அதனையும் வைத்து அலங்கரியுங்கள். பின்னர் குத்துவிளக்கினை ஏற்றி வையுங்கள். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழையிலையில் வலப்பக்கம் வையுங்கள்.
நீங்கள் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வையுங்கள். (விலை உயர்ந்த பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அட்சய திருதியை நாளில் எல்லோராலும் வாங்க முடிந்த பொருள் ஒன்று உண்டு. அதிக பலன் தருவதும் அதுதான். அதனை வாங்கி வைத்தாலே போதும் அஷ்டலட்சுமி கடாட்சம் உங்கள் வீடு தேடிவந்துவிடும். அது என்ன தெரியுமா? உப்புதான்).
முதலில் விநாயகரை வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும்படி பிரார்த்தியுங்கள். உங்களுக்குத் தெரிந்த விஷ்ணு-லட்சுமி, சிவன்-பார்வதி, குபேரன், துதிகளைச் சொல்லுங்கள். அல்லது கேளுங்கள். குசேலரி“ கதையை படிப்பது, கேட்பது, சொல்வதும் சிறந்தது. பின்னர் அவரவர் வழக்கப்படி தூப தீப ஆராதனைகள் செய்யுங்கள். இந்த பூஜையில் பாயசம் அல்லது சர்க்கரை கலந்த பால் நிவேதிப்பது சிறப்பானது.
அன்றைய தினம் மாலையில் சிவாலயம், பெருமாள் கோயில் என்று உங்களால் இயன்ற தலத்திற்குச் சென்று தரிசியுங்கள். அதன் பின்னர் மீண்டும் தூப தீப ஆராதனையை கலசத்துக்குச் செய்துவிட்டு, கலசத்தினை வடக்குப் பக்கமாக நகர்த்தி வையுங்கள் உண்ணாவிரதம் இருப்பது, எளிய திரவ ஆகாரம் மட்டும் உண்பது எல்லாம் அவரவர் வசதி, உடல்நலத்தைப் பொறுத்தது. கலசத்தினை நகர்த்துவது விரதத்தினை நிறைவு செய்துவிட்டதாக அர்த்தம். பயன்படுத்திய அரிசி, கலசத் தேங்காயை அடுத்த வெள்ளிக்கிழமையில் பூஜையில் உடைத்து பொங்கல் செய்யலாம். நெல்லை ஒரு முடிச்சாகக் கட்டி அரிசி வைக்கும் பாத்திரத்தில் வைத்துவிடுங்கள். காசுகளை என்ன செய்வது? அதுதான் உங்களுக்கே தெரியுமே... ஆமாம்... பீரோவில் வையுங்கள்.
அட்சய திருதியை நாளில் விரதம் இருப்பது, பூஜைகள் செய்வது, புதிய பொருட்களை வாங்குவது எல்லாவற்றையும் விட முக்கியமானது, தானமளிப்பதும், முன்னோர் கடன்களைச் செய்வதும்தான்.
இல்லாதோருக்கு உங்களால் இயன்ற அளவுக்கு உதவுங்கள். பெற்றோர் பெரியோரிடம் ஆசி பெறுங்கள். நீத்தார் கடன்களை அவசியம் செய்யுங்கள்.
அட்சய திருதியை நாளில் மட்டுமல்ல எல்லா நாளிலும் உங்கள் இல்லத்தில் அட்சயமாய் செல்வம் பெருகும். நிலைக்கும்!
- காசிவாசி குருஸ்ரீ காளிதாஸ் மகரிஷி

No comments: